Monday, July 29, 2013

விஷ்ணுவின் ராம, கிருஷ்ண அவதாரத்தைப் போல பிற அவதார வழிபாடு அதிகமாகவில்லையே ஏன்?

* விஷ்ணுவின் ராம, கிருஷ்ண அவதாரத்தைப் போல பிற அவதார வழிபாடு அதிகமாகவில்லையே ஏன்?
சத்தியம், தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணு எடுத்தது ராம, கிருஷ்ண அவதாரம். மனிதனாகவே வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமர். தெய்வமாகவே மண்ணில் வாழ்ந்தவர் கிருஷ்ணர். வாழ்வில் எல்லா துன்ப அனுபவமும் ராமருக்கு உண்டானது. சந்தோஷமே வாழ்க்கை என துன்பத்தையும் கண்டு சிரித்தவர் கிருஷ்ணர். எனவே தான், இந்த இரண்டு அவதாரங்களையும் வணங்கும் வழக்கம் மக்கள் மத்தியில் அதிகமாகி விட்டது.

** ராமபிரான், சிவபிரான் என கடவுளைப் "பிரான்' என சொல்வது ஏன்?
புனிதவதி, கோவை

""இறைவன் கோயிலில் மட்டுமே இருப்பதாக எண்ணக்கூடாது. நம் உள்ளத்திலே
பிரியாது இருக்கிறார். உயிர்களாகிய நம்மை விட்டு பிரியாமல் இருப்பதால் தான் "பிரான்' என இறைவனை அழைக்கிறோம். எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் இறைவன் இருக்கின்றான்'' என்கிறார் வாரியார்.

கருட புராணத்தை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது ஏன்?
இறந்த பிறகு உடலில் இருந்து பிரியும் உயிரின் பயணத்தைப் பற்றியும், அந்த உயிர் செய்த பாவங்களினால் படும் கஷ்டத்தையும், இறந்த உயிருக்குச் செய்யவேண்டிய காரியங்களுக்கான காரணத்தையும் கூறும் நூல் கருடபுராணம். இதனால், வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது எனச் சிலர் கூறி வழக்கிலும் உள்ளது. இறந்த வீட்டில் காரியம் நடக்கும் நாட்களில் இதைப் படிப்பது விசேஷம்.

* மற்ற கிரகப்பெயர்ச்சியின் போது அந்தந்த கிரகத்தை வணங்கும்போது, குருபெயர்ச்சியின் போது மட்டும் குருவை வணங்காமல் தட்சிணாமூர்த்தியை வணங்குவது ஏன்?
பெயர்ச்சியாவது நவக்கிரகத்திலுள்ள தேவகுரு. குருவுக்கே குருவாக விளங்கும் லோக குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தேவகுருவையும் வழிபட்டதோடு, சிவனையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் இதை பின்பற்றுகிறோம்.

ருத்ராட்சத்தை எந்த வயது முதல் அணியலாம்?
ஏழு வயது முதல் அணியலாம். விபூதி பூசி ஐந்தெழுத்து மந்திரத்தைத் தெரிந்து ஜெபம் செய்யக்கூடிய வயதும் அது தான். எல்லோரும் கட்டாயம் இதைப் பின்பற்றினால் மக்களிடையே பண்பாடு அதிகரிக்கும்.

கோவில், ஆலயம் இரண்டும் வெவ்வேறு பொருள் கொண்டவையா?
கோவில் என்பது கோ+ இல் என்பதாகும். "கடவுள் வாழுமிடம்' என்பது இதன் பொருள். ஆன்மா லயிக்கும் இடம் "ஆலயம்'. தன்னுணர்வு அற்ற நிலையில், உயிர் கடவுளோடு இரண்டறக் கலந்து லயிக்கும் இடமே கோவில்.

பிரம்மோற்ஸவம் என்பதன் விளக்கம் /* கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாதா

** பிரம்மோற்ஸவம் என்பதன் விளக்கம்
கோயில்களில் பன்னிரண்டு மாதங்களிலும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு மாதம் உற்ஸவம் கொண்டாடப்படுகிறது. உதாரணமாக சித்திரை உற்ஸவம் மதுரையிலும், கார்த்திகை உற்ஸவம் திருவண்ணாமலையிலும் என கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை விழாக்கள் நிகழ்கின்றன. இதில் முக்கியமான நிகழ்ச்சி சுவாமி பவனி. கடவுளே பக்தர்களைத் தேடி வந்து அருள்புரிவதாக அர்த்தம். நல்ல மழை பெய்து உலகம் சுபிட்சமாக இருக்கவேண்டியே கோயிலில் திருவிழாக்கள் நிகழ்கின்றன. உலகில் உயிர்களைப் படைப்பவர் பிரம்மா. தாம் படைத்த அனைத்து உயிர்களும் நலமாய் வாழ, ஒவ்வொரு ஊரிலும் பிரம்மாவே உற்ஸவம நடத்துவதாக ஐதீகம். பத்து நாட்களுக்குக் குறையாமல் கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை இது நடத்தப்படும். பிரம்மா நடத்தும் உற்ஸவம் பிரம்மோற்ஸவம் எனப்பட்டது.

* வீட்டிற்கு வெளியே பிள்ளையார் சிலை வைத்து வழிபடுவது ஏன்?
தெருக்குத்தல், கோபுரக்குத்தல் போன்ற இடங்களில் வீடுகட்டுவது கூடாது. அப்படி செய்தால் வளர்ச்சி இருக்காது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வீடு கட்டி விட்டால், வாசலில் பிள்ளையார் சிலை வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி செய்தால் குத்தல் தோஷம் நீங்கிவிடும்.

* கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாதாமே ஏன்?
நீறில்லா நெற்றி பாழ்; கோயில் இல்லா ஊர் பாழ்'என்பது முதுமொழி. நெற்றியில் திருநீறு அணியாதவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. கோயில் இல்லாத ஊரில் சுபிட்சம் இருக்காது என்பது இதன் பொருள். யாரிடமும் சொல்ல முடியாத கஷ்டங்களை மனதில் வைத்துக் கொண்டு திண்டாடுபவர்கள் சுவாமியிடம் முறையிட்டு மன அமைதி பெறுவதே கோயில்களுக்கு செல்வதன் நோக்கம். இயற்கை சீற்றங்களில் இருந்தும் காக்கக் கூடிய வகையில் கோயில்கள் கட்டப்படுகின்றன. இதுபோன்று மனிதவள, விஞ்ஞான, மருத்துவரீதியாக கோயிலின் அவசியம் பற்றி எவ்வளவோ சொல்லலாம். இதனாலேயே கோயில் இருக்கும் பகுதியில் குடியிருக்குமாறு சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

தேய்பிறையில் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா?
தேய்பிறை நாட்கள் சுத்தமாக வேண்டத்தகாதது அல்ல. ஒரு சிலர் தவறாகப் பிரச்சாரம் செய்ததால் வந்தவினை இது. தேய்பிறை சப்தமி வரை உத்தமம்- இதுமுதல்நிலை. தசமி வரை மத்திமம், இது இரண்டாம்நிலை. சதுர்த்தசி வரை அதமம்,இது மூன்றாம்நிலை. தவிர்க்க முடியாத சூழலில் மூன்றாம் நிலையிலும் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம்.

பழைய காமாட்சி விளக்கைப் புதுப்பித்து விளக்கேற்றலாமா?
உடையாமல் இருந்தால் தாராளமாகச் செய்யலாம். பழையதை புதுப்பித்து வழிபாட்டில் பயன்படுத்துவது வழக்கில் உள்ள ஒன்று தான்.

சூரியன் அஸ்தமிக்கும்(மறையும்) போது சூரிய வழிபாடு செய்யலாமா?

கோயிலில் பின்னமாக (சிதிலமடைந்த) உருவம் கொண்ட தெய்வச்சிலையை வணங்கலாமா?
தெய்வச் சிலையின் உருவத்தை மூன்றுவகையாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். அவை அங்கம், உபாங்கம், பிரத்யங்கம். கை, கால் விரல்கள், ஆயுதங்கள், கிரீடம் ஆகியவை பிரத்யங்கம். இவற்றில் பின்னமிருந்தால் தோஷமில்லை. தொடர்ந்து வழிபாடு செய்து கும்பாபிஷேகத்தின் போது சரிசெய்து கொள்ளலாம். கை,கால்கள், தலை முதலியன உபாங்கம். இவற்றில் பின்னம் ஏற்பட்டால் உடனே சரிசெய்து பிராயச்சித்த கும்பாபிஷேகம் செய்த பிறகே வழிபட வேண்டும். முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, தொடை முதலியன முக்கிய அங்கங்கள். இவற்றில் சரிசெய்ய முடியாத பின்னம் ஏற்பட்டால் வேறு விக்ரஹம் தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இந்த விதிகள் பொதுவானவை. சுயம்புவாக தோன்றிய தெய்வச் சிலைகளுக்கு இது பொருந்தாது. எவ்வளவு பின்னம் ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு வழியில் சரிசெய்து வழிபாட்டைச் செய்ய வேண்டும்.


* திருமணமான பெண்கள் கட்டாயம் மெட்டி அணிய வேண்டுமா?
ஆம்! திருமண சடங்குகளில் ஒன்றான அம்மி மிதிக்கும்போது இந்த மெட்டி அணிவிக்கப்படும். கணவனும், மனைவியும் கற்பு நெறி தவறாமல் வாழ்வதாக உறுதியேற்றுக் கொள்ளவே இந்த சடங்கு நடத்தப்படுகிறது. உச்சித்திலகம், திருமாங்கல்யம், மெட்டி ஆகியவை மணமான பெண்களின் மங்கல அணிகலன்களாகும்.

சூரியன் அஸ்தமிக்கும்(மறையும்) போது சூரிய வழிபாடு செய்யலாமா?
த.
சூரியநமஸ்காரம் செய்பவர்கள் சூரிய உதயத்தின்போது தான் செய்ய வேண்டும். அஸ்தமிக்கும்போது சூரிய நமஸ்காரம் என்பது கண்கெட்ட பிறகு செய்வதைப் போன்றது. சந்தியாவந்தனம், அனுஷ்டானம் செய்பவர்கள் மூன்றுவேளையும் சூரியவழிபாடு

நமசிவாய, சிவாயநம இரண்டில் எது சிறந்தது?

 நமசிவாய, சிவாயநம இரண்டில் எது சிறந்தது?
பஞ்சாட்சர மந்திரம் ஸ்தூலம், சூட்சுமம் என்று இரண்டு வகைப்படும். நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம். சிவாயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம். ஆரம்ப நிலையில் சமயதீட்சை பெற்றவர்கள் ஸ்தூல பஞ்சாட்சரமும், மேல்நிலை விசேஷ தீட்சை பெற்றவர்கள் சூட்சும பஞ்சாட்சரமும் ஜபம் செய்ய வேண்டும். எது சிறந்தது என்று கேட்பது தவறு. குருவிடம் உபதேசம் பெறுவது தான் முக்கியம். இரண்டுமே சகலநலன்களையும் தரவல்லவை.

* செவ்வாயின் அருளைப் பெற எப்படி வழிபட வேண்டும்?
செவ்வாய் கிழமையன்று செவ்வாய் கிரகத்திற்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் சிவப்பு வஸ்திரம், சிவப்பு அரளி சாத்தி அர்ச்சனை செய்து துவரம் பருப்பு சாதம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். துவரையை சிவப்புத் துணியில் முடிந்து இயன்ற அளவு பணம், வெற்றிலை, பாக்கு சேர்த்து தானமாகக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் செவ்வாயின் அருள்
பெறலாம்.

* நாகதோஷ பரிகாரமாக பூஜை செய்தால் பிரசாதத்தை என்ன செய்வது?
பரிகாரம் செய்யச் சொன்னவர்கள் இது பற்றிக் கூறவில்லையா? பிரசாதம் என்று வந்து விட்டால் எல்லாம் ஒன்று தான். பரிகாரம் செய்த பிரசாதம் என்பதால் தூக்கி எறிந்து விட முடியாது. நீங்களும் சாப்பிட்டு, பிறருக்கும் விநியோகம் செய்யுங்கள்.

* விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
வளர்பிறை சதுர்த்தி சாதாரண சதுர்த்தி. தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி. இப்படி மூன்றுவகையாக உள்ளது. வளர்பிறை சதுர்த்தியில் சாதாரணமாக விநாயகர் வழிபாடு செய்யலாம். சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து, இரவில் விநாயகரை வழிபட்டால் எல்லா செயல்பாடுகளிலும் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம். ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விநாயகரின் பிறந்தநாள் என்பதால் ஒட்டுமொத்தமாக எல்லாரும் கொண்டாட வேண்டும்.

* கோபுரம் படத்தை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?
தாராளமாக வழிபடலாம். திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சி, அண்ணாமலையார் படங்கள் கோபுரத்துடன் கூடியதாக கிடைக்கின்றன.

அஷ்டதிக்கு பாலகர் போற்றி துதி

அஷ்டதிக்கு பாலகர்
ஈசானியா போற்றி
வளம் தரும் குபேரனே போற்றி
உயிர் காக்கும் வாயு பகவானே போற்றி
பசுமை தரும் வருணனே போற்றி
அருள்மிகு நிருதி பகவானே போற்றி
தருமவான் மிருத்யூ போற்றி
சுப அக்னி பகவானே போற்றி
உயர்வைத் தரும் இந்திரனே போற்றி
காக்கும் பிரம்மஸ்தான பகவானே
போற்றி போற்றி போற்றி போற்றி

தை வீடு கட்டும் முன்பு உச்சரித்தால் நல்லது நடக்கும்

Friday, July 26, 2013

இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்??

இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்??

இந்து மதத்தில் பாம்புக்கும் பசுவுக்கும் தனி இடம். மற்ற விலங்குகள், பிராணிகளைவிட இந...்த இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம், பசுவைத் தெய்வமாக மதிக்கும் மதம் நமது இந்து மதம். இத்தனை மிருகங்களுக்கும் இல்லாத மரியாதை பசுவுக்கு மட்டும் ஏன் ? பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே தன் பாலைத் தருவதால் மட்டுமல்ல. பசு எதைச் சாப்பிடுகிறது ? மனிதன், நெல்லிலிருந்து பெறும் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுகிறான், நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொள்கிறது. எண்ணெயை நாம் உட்கொள்ள, மிச்சமிருக்கும் புண்ணாக்கை உட்கொள்கிறது பசு. ஆக, மனிதன் சாப்பிட்ட உணவின் இயற்கை மிச்சங்களைச் சாப்பிட்டு விட்டு, மனிதர்களைத் தன் குழந்தைகளாகவே கருதி பாலைக் கொடுக்கிறது. இப்படித் தன்னலம் கருதாமல் மனித வர்க்கத்துக்கு பாலைக் கொடுப்பதுடன், பசுவின் சாணம் வரட்டியாகவும் இன்றைய காலகட்டத்தில் கோபர் கேஸாகவும் அதாவது - எரிபொருளாக உதவுகிறது. பசுவின் சாணத்துக்கு (ஆண்டி - இன்பெக்ஷன்) குணம் இருப்பதாலேயே, வீட்டுத் தரைகளில் பசுவின் சாணம் வைத்து மெழுகும் பழக்கம் வந்தது. பசுவின் மூத்திரத்தில் அது சாப்பிடும் புல் வகைகளிலிருந்து கிடைக்கும் மருந்துச் சத்து இருப்பதால், பல மருந்துகள் தயாரிப்பில் கோமூத்திரம் இடம்பெறுகிறது..

அந்தக் காலத்தில் பஞ்சகவ்யம் என்ற ஆரோக்கிய மருந்துக் கலவை மிகப் பிரபலம். பசுவின் மூத்திரம் கலந்ததுதான் பஞ்சகவ்யம். அள்ளி அள்ளிக் கொடுக்கும் பசுவுக்கும், காமதேனு என்ற தெய்வ உருவமும் கொடுத்தார்கள் நம் முன்னோர். சாதுவான பிராணி, மென்மையான பிராணி பசு என்பதால் பரமசிவன் அமரும் வாகனம் பசுவாக இல்லாமல் காளையாக சித்தரிக்கப்பட்டது. இதில்கூட பசுவைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் நம் முன்னோர் குறிப்பாக இருந்தது புரியும். பசுவை மகாலட்சுமியின் அம்சமாகவே கருதியது, மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தில் பசுவின் பெரும்பங்கை மனதில் வைத்துதான்.

பாம்பை நாகம் என்ற தெய்வ வடிவாகவே வழிபட்டார்கள் நம் முன்னோர், மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார். பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். முருகனின் வாகனமான மயில்கூட வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருப்பது போல் அமைப்புண்டு. அது சரி, நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்து பாலையும் ஊற்றி; அதையும் தெய்வாம்சம் கொண்டதாக ஆக்கியதேன் ? ஒரு பக்கம் தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவும் தெய்வமாகிறது.

மறுபக்கம், அந்தப் பசுவின் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பையும் தெய்வமாக்கியது ஏன் ? இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள், அருமையான விடையைக் கூறியுள்ளார். மனித ஜென்மம் என்பது பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ-புண்ணிய விகிதாசாரம் வேறுபடலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை, புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை. இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும், தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள். அந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும், கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன். உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் ? என்று சொல்வது போல்தான் பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்தார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ? நல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி... கடவுள் ஒன்றுதான்

கற்பில் சிறந்தவள் மாதவியா கண்ணகியா?

கண்ணகியைக் காட்டிலும் கற்பில் சிறந்தவள் மாதவி என்பது உங்களுக்குத் தெரியுமா??.
************************************************
தமிழ் காவியங்களுள் தலைச் சிறந்த சிலப்பதிகாரத்தை அனைவரும் படித்திருப்போம்.ரசித்திருப்போம்.பலரின் கண்ணோடத்தில்,கற்புக் கரசி எப்போதும் கண்ணகி தான்.எனது பார்வையில் எனக்கு எப்போதும் மாதவி தான் கற்பில் தலைச் சிறந்த காவியத் தலைவி.

கண்ணகி தான் கற்பில் சிறந்தவள் என்று ஏன் நமக்குக் கூறப்பட்டது??
...
தவறான நீதி இழைத்தது அரசன் என்ற போதும், அவனை எதிர் கேள்வி கேட்டு தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபித்தாள்.பத்தினி பெண்கள் கோபமாய் பார்த்தால் பச்சை மரங்களும் பற்றி எரியும் என்ற கூற்றின் படி கண்ணகியின் கோபத்தில் மதுரையே எரிந்தது.எனவே கண்ணகியே கற்புக் கரசி என்றுச் சிலப்பதிகாரத்தை படித்து முடித்த நேரத்தில் முடிவு செய்துவிடுவோம்.

நம்மில் எத்தனைப் பேருக்கு மாதவி தான் அவளை விடச் சிறந்தக் கற்புக் கரசி என்பதுத் தெரியும்.

தான் தவறான நீதி தந்து ஒரு பெண்ணின் வாழ்வையே அழித்து விட்டோம் எனத் தெரிந்த அடுத்தகனமே பாண்டிய மன்னன் தன் மனைவியுடன் உயிர் நீத்தான் என்பதைத் தான் வரலாறு சொல்கிறது.அவன் இறப்பின் பின்னும் சினம் அடங்காமல் தான் கண்ணகி மதுரையை எரித்தாள் .அவளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒரு பெண்ணின் கோபம் அழிவில் முடியக் கூடாது என்பதைத் தான்.

பிறப்பால் கண்ணகி உயர்ந்த குலத்தில் பிறந்தவள்.நல்ல சூழலில் நல்ல பழக்க வழக்கங்களுடன் பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தவள்.அவள் வழி மாறியிருந்தால் தான் ஆச்சரியமே தவிர,அவள் கற்பில் சிறந்து இருந்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.


மாதவி பிறப்பால் தாசி குலத்தில் பிறந்து, தாசிகள் நிறைந்த இடத்திலேயே வளர்ந்தவள்."எந்த பிள்ளையும் நல்லப் பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே " என்ற கண்ணதாசனின் வரிகளைக் கூட பொய்யாக்கி விட்டால் மாதவி.மாதவியின் அன்னை வஞ்சக எண்ணம் கொண்டு மாதவிக்கே தெரியாமல் கோவலனின் சொத்துக்களை கண்ணகியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் பறித்தவள் என்று தான் சிலப்பதிகாரம் விவரிக்கிறது.அப்படி ஒரு அன்னையின் கைகளில் வளர்ந்த மாதவி உள்ளத்தாலும் உடலாலும் தூய்மையாக இருந்தது தான் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

மாதவியை எந்த ஒரு இடத்திலும் தவறு செய்தவளாகச் சிலப்பதிகாரம் வர்ணிக்கவில்லை.கோவலன் தன்னுடன் வாழ்ந்த போதும், அவனை கண்ணகியைச் சென்று பார்க்கும் படி வற்புருத்தியவள் மாதவி.கோவலன் அவளை நீங்கியதும் அவள் நினைத்திருந்தால் தாசியாக வாழ்ந்திருக்கலாம்.அவள் அவ்வாறுச் செய்யவில்லை. அவள் மனதாலும் உடலாலும் வாழ்ந்தது கோவலன் ஒருவனுடன் மட்டுமே.கோவலன் அவளை நீங்கி கண்ணகியுடன் இணைந்ததும்,அவள் அன்னை வஞ்சகமாய் பறித்த அனைத்துச் சொத்துக்களையும் மீட்டுத் தந்துவிட்டு, பௌத்த மத துறவியானவள் மாதவி.தாசி குலத்தில் பிறந்த ஒருத்தி வேறு ஒருவனை ஏற்க மனமில்லாமல் துறவியானது உங்களை ஆச்சரியப் பட வைக்கவில்லையா?? இப்போதுச் சொல்லுங்கள் பெண்மையில் சிறந்தவள் மாதவி அன்றோ?

ஆனால், இன்று வரை நம்மில் பலரும் கற்பின் வரலாற்று உதாரணாமாய் கண்ணகியைத் தான் சொல்கிறோமே தவிர, மாதவியை மறந்துவிட்டோம்.

இனிவரும் தலைமுறையினருக்குச் சிலப்பதிகாரம் கற்பிக்கப்படுமா என்றறியேன் நான்.ஒருவேளைக் கற்பிக்கப் பட்டால், மறக்காமல் மாதவியின் புகழ் உரையுங்கள்.தவறானச் சூழ்நிலையிலும், தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தப் போதும் மாறாத மனங்களே மண்ணில் சிறந்தவை.

Thursday, July 25, 2013

சொர்க்கவாசல்ஏன் திறக்கவில்லை?

கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு, தாமே விரும்பி சொர்க்கம் புக முடிவு செய்தார். அக்கினியை வளர்த்த மந்தபாலர், தன் இறுதி வேண்டுகோளைச் சமர்ப்பித்தார்: ‘‘ஏ அக்கினியே! எத்தனையோ முறை வேள்வித் தீ வளர்த்து, சமித்துக்களை ஆகுதியாகப் பெய்து உன்னை ஆராதித்திருக்கிறேன். இன்று நான் உன்னை வளர்ப்பது என்னையே ஆகுதியாக நீ ஏற்பதன் பொருட்டே. மனத்தாலும் முழு பிரம்மச்சாரியாக வாழ்ந்த என்னை ஏற்று என் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!’’

இவ்விதம் முழங்கிய அவர், நெருப்பில் சடாரெனக் குதித்தார். சக முனிவர்கள் சடசடவென அவர் உடல் எரிவதைப் பார்த்துக் கைகூப்பி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவரது ஆன்மா நட்சத்திரம் போல் ஒளி வீசியவாறு விண்ணில் பறந்தது. சொர்க்கத்திற்குச் சென்ற மந்தபாலர், சொர்க்க வாசல்முன் நின்றார். ஆனால் சொர்க்கத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கவில்லை. தடதடவென அதன் தங்கக் கதவுகளைத் தட்டினார். கதவைத் திறந்துகொண்டு உள்ளிருந்து வந்தான் ஒரு தேவன். ‘‘யார் நீங்கள்? என்ன வேண்டும்?’’ என்று அதட்டினான்.

‘‘நான் மகரிஷி மந்தபாலன். சொர்க்கம் புக வந்திருக்கிறேன், கதவைத் திறவுங்கள்’’ என்றார் முனிவர். தேவன் கடகடவென்று சிரித்தான். ‘‘மந்தபாலரே! சொர்க்கத்தின் கதவுகள் தட்டித் திறக்கப்படுவதல்ல; தானாய்த் திறந்தால்தான் உண்டு. நீங்கள் சொர்க்கம் புகத் தகுதியானவர் என்றால் இந்தக் கதவுகள் உங்களுக்காகத் திறந்து உங்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும். அப்படித் திறவாததால் உங்களுக்கு சொர்க்கம் புகத் தகுதி இல்லை என்றே பொருள்!’’

மந்தபாலர் வியப்படைந்தார். தவ சிரேஷ்டரான தனக்கு சொர்க்கம் புக அனுமதி கிடையாதா? தம் தவ வலிமையின் அர்த்தம்தான் என்ன? ‘‘தேவனே! தவத்தை அன்றி வேறெதையும் நான் செய்ததில்லை. ஏன் எனக்கு சொர்க்கம் மறுக்கப்படுகிறது?’’ தேவன் நகைத்தபடிச் சொல்லலானான்: ‘‘மந்தபாலரே! ஒவ்வோர் உயிரும் பூமிக்கு அனுப்பப்படும்போது படைப்பாற்றலுடன்தான் அனுப்பப்படுகிறது. பூமி தொடர்ந்து இயங்க வேண்டும் இல்லையா? படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வோர் உயிரின் அடிப்படைக் கடமை. இயற்கையிலேயே ஒருவருக்கு மக்கட் செல்வம் கிட்டவில்லை என்றால் அது ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒருவர் பிரம்மச்சரிய விரதம் பூண்டால் அதுவும் கூட ஏற்கக் கூடியதே.

ஆனால் எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் சொர்க்கம் புகத் தவம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பிரம்மச்சரிய விரதம் பூணுபவர்களை சொர்க்கம் விரும்புவதில்லை. படைப்பாற்றல் சக்தி அளிக்கப்பட்டும் தர்மநெறிப்படி வாழ்ந்து ஆனால் ஓர் உயிரைக் கூடப் படைக்காமல் சொர்க்கம் புக எண்ணுவது சரியல்ல. உங்களுக்கு இயற்கை வழங்கிய படைப்பாற்றலுக்கு நீங்கள் நியாயம் செய்யவில்லையே! உங்கள் வாரிசு என பூமியில் யாரையாவது காட்டுங்கள். உங்களுக்காக சொர்க்கத்தின் கதவுகள் இப்போதே திறக்கும்.’’

மந்தபாலர் திகைத்தார். இப்படியொரு கோணத்தில் தாம் எண்ணிப் பார்க்கவே இல்லையே என வருந்தினார். தம் தவ ஆற்றலால் தாம் மறுபிறவி எடுத்து தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்தால் அதன் பின் சொர்க்கக் கதவுகள் தமக்குத் திறக்குமல்லவா என்று யோசித்தார். தேவன், ‘‘ஒரு பிறவியின் தவ ஆற்றல் மறுபிறவிக்கும் தொடரும், மறுபிறவியில் அவர் தவம் ஏதும் நிகழ்த்த வேண்டாம், தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்து தம் இனத்தைப் பெருக்க உதவினால் அது போதும்’’ என்று விளக்கம் தந்தான். மந்தபாலர் தன்னை விரைவில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு சாரங்கப் பறவையாக உருமாறும்படி மனத்தில் சங்கல்பம் செய்துகொண்டார். அப்போதுதானே சீக்கிரத்தில் சொர்க்கம் வர முடியும்?

மறுகணம் மாபெரும் காண்டவ வனத்தில் ஒரு மரக்கிளையில் அந்த அழகிய சாரங்கப் பறவை போய் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது. இயற்கையின் நியதிப்படி, அது மறுபிறவி எடுத்த கணத்திலேயே அதன் முற்பிறவி நினைவுகள் மறைந்தன. அதே மரத்தின் கிளையில் சிறகுகளைத் தன் கூரிய அலகால் கோதிக் கொண்டு ஜரிதா என்ற ஒரு சாரங்கி அமர்ந்திருந்தது. அது, தான் அமர்ந்த மரத்தின் இன்னொரு கிளையில் உட்கார்ந்த சாரங்கத்தை வியப்போடு பார்த்தது. ஜரிதாவின் எழிலும் கனிவான பார்வையும் மந்தபால சாரங்கத்தைக் கிறக்கம் கொள்ள வைத்தன. அந்தப் பெண் பறவையிடம் மந்தபால சாரங்கத்திற்குத் தீராக் காதல் தோன்றியது.

மெல்ல மெல்ல அவற்றினிடையே காதல் வளர்ந்தது. அவை இல்லற வாழ்வை மேற்கொண்டு ஒரே கூட்டில் இணைபிரியாமல் வசிக்கலாயின. ஜரிதா நான்கு முட்டைகளை இட்டது. அவற்றை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதற்குள் அந்த இனிய இல்லற வாழ்வில் ஒரு விபரீதம்! லபிதா என்ற இன்னொரு சாரங்கி மந்தபால சாரங்கனை வட்டமிட்டது. அதனுடைய ஆண்மை நிறைந்த பேரழகு லபிதாவை மயக்கிக் கொள்ளை கொண்டது. லபிதா பறந்து சென்று அதன் அருகே அமர்ந்து எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தது.

 ‘‘யார் நீ? என்ன தேடுகிறாய்?’’ விசாரித்தது மந்தபாலம்.

  ‘‘உங்கள் அலகின் வளைவிலும் சிறகுகளின் அடர்த்தியிலும் என்னையறியாமல் என் உள்ளத்தைத் தொலைத்துவிட்டேன். அது இங்கே எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என்று தேடுகிறேன்!’’

 லபிதாவின் மயக்கும் கவிதை மொழி மந்தபாலத்தைக் காந்தம் போல் இழுத்தது. தன்னை வட்டமிட்ட லபிதாவின் அழகில் லயித்த மந்தபாலம் தேடிவந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. ஏற்கெனவே மணமாகி ஒரு மனைவியும் தனக்கு உண்டு என்பதையோ மனைவி இப்போது நான்கு முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறது என்பதையோ நான்கு ஆண் குஞ்சுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்பதையோ மந்தபாலம் எண்ணிப் பார்க்கவில்லை. காமம் அதன் கண்ணை மறைத்தது.

மனைவி ஜரிதாவிடம் ஏதொன்றும் கூறாமல் ஒருநாள் லபிதாவோடு இணைந்து, விண்ணில் பறந்து, தனியே இல்வாழ்வைத் தொடங்கின.

 ‘‘அப்பா எங்கே?’’ என்று கேட்டன அப்போது தான் உருப்பெறத் தொடங்கியிருந்த நான்கு ஆண் குஞ்சுகள்.

  ‘‘உங்கள் அப்பா மனிதர்களைப் பார்த்துக் கெட்ட பழக்கத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு விட்டார். போகட்டும், நம்மை மறந்தவர்களை நாம் நினைப்பது நம் சுயமரியாதைக்கு அழகல்ல. உங்கள் நால்வருக்கும் நானே இனித் தாயாகவும் தந்தையாகவும் இருப்பேன். வெளியே சென்று உங்களுக்குத் தேவையான உணவை நானே சம்பாதித்து வருவேன். நான் உணவு பெறுவதற்காகக் கூட்டை விட்டு வெளியே செல்லும்போது மட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!’’ என்றது, ஜரிதா. ஆண் குஞ்சுகள் மனம் தேறி தாய்ப்பறவை சொன்னதை ஏற்றுக் கொண்டன.

 ஒருநாள் திடீரெனக் காண்டவ வனத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இரண்டாம் மனைவி லபிதாவுடன் சுற்றிக் கொண்டிருந்த மந்தபாலம், நெருப்பைப் பார்த்துத் திகைத்தது. சரிவரச் சிறகு கூட முளைக்காத தன் நான்கு ஆண் குஞ்சுகளும் என்ன பாடுபடுமோ என்று அதன் தந்தை மனத்தில் கவலை எழுந்தது. ‘‘ஏ அக்கினியே! என் நான்கு மகன்களையும் நீ எரிக்காமல் காப்பாற்றுவாயாக!’’ என்று அது மனமாரப் பிரார்த்தனை செய்தது. அதன்முன் அக்கினி பகவான் தோன்றி, ‘‘மந்தபாலமே! உன் முற்பிறப்பில் உன் உடலையே எனக்கு ஆகுதியாக்கினாய். அந்த உன் தியாகத்தை மெச்சி உன் இப்பிறப்பில் உனது ஆண் குஞ்சுகளை நான் ஒன்றும் செய்யமாட்டேன்’’ என வாக்குக் கொடுத்து மறைந்தார்.

இதைக் கண்ட இரண்டாம் மனைவி லபிதா, ‘‘இன்னும் உனக்கு ஜரிதாவிடம் காதல் இருக்கிறது’’ என்று ஊடல்கொண்டு இன்னொரு மரக்கிளையில் தனியே போய் உட்கார்ந்து கொண்டது.

 அக்கினியின் வாக்குறுதி பற்றி ஏதும் அறியாத தாய்ப்பறவை ஜரிதாவைக் கலக்கம் கவ்வியது. அக்கினியிடமிருந்து இறகு சரிவர முளைக்காத பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது?

 குஞ்சுகள் பயத்தில் நடுநடுங்கின. ‘‘அம்மா! நீங்கள் தப்பித்துப் போங்கள். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் இருந்தால் வம்சம் விருத்தியாக வாய்ப்புண்டு. நாங்கள் நெருப்பிலேயே மடிந்தாலும் பரவாயில்லை!’’ என்றன.

 தாய்ப்பறவை ஜரிதா வேறு வழி
தெரியாமல் அழுதுகொண்டே விண்ணில் சுற்றிக்
கொண்டிருந்தது.

 மூத்த ஆண் குஞ்சான ஜரிதாரி, ‘‘வரப்போகும் கஷ்டத்தை முன்கூட்டியே உணர்ந்து கடவுளைப் பிரார்த்திப்பவனே புத்திசாலி. அவன் கடவுள் அருளால் கஷ்டத்தைக் கடந்துவிடுவான்!” என்றது. சாரி, ஸ்தம்பமித்திரன், துரோணன் ஆகிய பிற மூன்று குஞ்சுகளும் அதை ஆமோதித்தன. அண்ணனுடன் சேர்ந்து பிரார்த்திக்கத் தொடங்கின. ‘‘அக்கினி பகவானே! நீயே சூரியன். நீயே மழை தருபவன். உன்னாலேயே உயிர்கள் உண்ட உணவு ஜீரணமாகிறது. நாங்கள் இளம் குழந்தைகள். எங்களிடம் இரக்கம் காட்டு. எங்களை அழிக்காதே!’’

  இளம் குழந்தைகளின் மழலைப் பிரார்த்தனை அக்கினி பகவானைக் குளிரச் செய்தது. ‘‘உங்கள் தந்தைக்கு வரம் கொடுத்திருக்கிறேன். உங்களை அழிக்கமாட்டேன். உங்களுக்கென்று என்ன வரம் வேண்டும்?’’ என்று வெகு பிரியமாகக் கேட்டார்.

 ‘‘எங்கள் தந்தையை எங்களிடமிருந்து பிரித்த லபிதாவை நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் தந்தை எங்களுக்கு வேண்டும்!’’ என்றன அவை.
  அக்கினி பகவான் சிரித்துக் கொண்டே ‘‘அப்படியே நடக்கும்’’ என்று சொல்லி படபடத்துப் பாய்ந்தார். அதோடு, தனியே மரக்கிளையில் அமர்ந்திருந்த லபிதாவைப் போகிற போக்கில் அள்ளி விழுங்கிச் சென்றுவிட்டார்!

  தாய்ப்பறவை ஜரிதா அக்கினி அடங்கியதும் பாய்ந்தோடி வந்தது. சேதமில்லாமல் தன் குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் அவற்றை அரவணைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் அரற்றியது.
 அப்போது மந்தபாலமும் அங்கே வந்துசேர்ந்தது. மனைவி, பிள்ளைகளைக் கண்டு அழுதது. ஜரிதா கணவனை வெறுப்புடன் நோக்க, பிள்ளைகளோ பாசத்தோடு தங்கள் தந்தையிடம் சென்று அமர்ந்தன.
 ‘‘இந்தப் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் தான் அக்கினி பகவானிடம் வரம் கேட்டேன். அத்தோடு அந்த சாகசக்காரி லபிதாவை இப்போது முற்றிலுமாகத் தலைமுழுகி விட்டேன்! என்னை மன்னிக்கக் கூடாதா?’’ என்று உருகியது மந்தபாலம்.
 சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது ஜரிதா. குழந்தைகளுக்குத் தந்தை முக்கியமல்லவா; திருந்தி மன்னிப்புக் கேட்பவரை ஏற்பதுதான் தர்மமல்லவா என்று சிந்தித்தது. மெல்லப் பறந்துபோய்த் தன் கணவன் அருகில் அது அமர்ந்தபோது குழந்தைகள் அப்போதுதான் முளைக்கத் தொடங்கிய தங்கள் சின்னஞ்சிறு சிறகுகளை அசைத்து ஆர்ப்பரித்தன. ஜரிதாவின் முகத்தில் வெட்கம் படர்ந்த அழகை ரசித்தது மந்தபாலம்.
  மேலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்த அக்கினி பகவான் சிரித்துக் கொண்டார். முதல் மனைவியின் வாழ்வைக் கெடுக்கும் இரண்டாம் மனைவியை வாழ்க்கை நெருப்பு எரிக்கக் கடவது என்று அவர் விதி வகுத்தார்.
  காலப்போக்கில் மந்தபாலம் மூப்படைந்து தளர்ந்து உயிர் விட்டபோது அதன் ஆன்மா சொர்க்கம் நோக்கிச் சென்றது. என்ன ஆச்சரியம்! மந்தபால ஆன்மாவை வரவேற்க சொர்க்கத்தின் கதவுகள் தயாராய்த் திறந்திருந்தன. இரு தேவிகள் அந்த ஆன்மாவை வரவேற்கப் பூரண கும்பத்தோடு காத்திருந்தார்கள். இயல்பிலேயே வழங்கப்பட்ட படைப்பாற்றலுக்கு நியாயம் செய்த மந்தபால ஆன்மா அப்படித்தான் சொர்க்கத்தைச்
சென்றடைந்தது.

(கிளையில் அமர்ந்து குடும்பம் நடத்திய சாரங்கப் பறவை பற்றிய இக்கதை, மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக்கதை!)

வைகறை துயில் எழு’

 அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். ‘‘ஹுக்கும்! அங்கதான் ஒதைக்கிது! காலையில அலாரம் அடிக்கும்போது அதை அணச்சிட்டு, அதுக்கு அப்புறமா தூங்கற தூக்கம் இருக்கே! சொர்க்கம்.... அட! போங்க சார்! அதிகாலையில எழுந்திருக்கணுமாம். நடக்கற கதையா இது?’’ என்கிறீர்களா? அப்புறம் உங்கள் சௌகரியம்.

‘வைகறை துயில் எழு’ என்றார்கள் முன்னோர்கள். ஏன்? அதிகாலையில் சுற்றுப்புற சூழ்நிலை, காற்று முதலானவை எல்லாம் மிகவும் தெளிவாக இருக்கும். காற்று தூய்மையாக இருக்கும். அந்தத் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால் ஆரோக்கியம் கூடும். பொழுது விடிந்து போக்குவரத்து மிகுந்து விட்டதென்றால், சூரியனின் வெப்பம் பட்டுப் பல சக்திகள் ஆவியாகப் போய்விடும். போக்குவரத்து வாகனங்களின் நச்சுப்புகை, காற்று மண்டலத்தில் பரவி ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்புறம் தூய்மையான காற்றுக்கு எங்கே போவது? சமீபத்தில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். ‘தூய்மையான காற்று கிடைக்கும். ஒரு மணி நேரம் சுவாசிக்க 100 ரூபாய்’ என்று ஆக்ஸிஜன் நிலையமே வந்து விட்டதாம்! எங்கே போகிறோம்? ஆரோக்கியத்தை நாம் அடைய வேண்டுமென்றால், அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என நம் நலத்திற்காகவே சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.

அப்படி எழுந்திருக்கும்போதும், வலது பக்கமாகத் திரும்பி எழுந்திருக்க வேண்டும். இதற்கும் காரணம் உண்டு. நம் உடலில் இரண்டு விதமான காந்த வளையங்கள் இருக்கின்றன. (பள்ளி-கல்லூரிகளில் விஞ்ஞான பரிசோதனை கூடங்களிலோ, மருத்துவ நிலையங்களிலோ உடல் கூறினை விளக்கும் படத்தைப் பார்த்திருப்போம். அதில் இந்த வளையங்களைக் காணலாம்.) ஒன்று, காலில் இருந்து தலைக்கும், தலையிலிருந்து காலுக்கும் வலம் வந்து கொண்டிருக்கும். இரண்டாவது, இடது பக்கம் இருந்து முன் பக்கம் வழியாக, வலது பக்கத்திற்கும் வலது பக்கத்தில் இருந்து பின் பக்கம் வழியாக, இடது பக்கத்திற்கும் வலம் வந்து கொண்டிருக்கும். அந்த வளையங்களின் திசைக்கு ஏற்றபடி உடம்பு அசையும்போது வளையங்களின் சுருள்கள் இறுகும்.

அதற்கு எதிராக அசையும்போது, காந்த சுருள்கள் தொய்வடைந்து போகும். அதனால் உடம்பின் செயல்திறன் தளர்வடைந்து போகும். இதை, தற்போதைய விஞ்ஞானம் சொல்கிறது. ஏற்கனவே, இரவில் மும்முரமாகத் தொலைக்காட்சி பார்த்துவிட்டு, எத்தனை மணிக்குப் படுத்தோம் என்றே தெரியாது. காலையில் எழுந்திருக்கும்போது மிகவும் களைப்பாக இருக்கும். அதை ஏன் மேலும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்? காலையில் எழுந்திருக்கும்போது, அமைதியாக வலது பக்கமாகவே திரும்பி எழுந்திருக்கலாமே!  அடுத்து, படுக்கையில் இருந்து எழுந்து கையால் தரையைத் தொட்டு, ‘‘தாயே, பூமாதேவி, என்னை மன்னித்து, நான் செய்யும் அபராதங்களைப் பொறுத்துக்கொள்’’ என வேண்டி, கையால் தரையைத் தொட வேண்டும்.

இது எதற்காக? இரவு முழுவதும் உடலை நீட்டிப் படுத்திருந்தோம். உடம்பு சம நிலையில் இருந்தது. எழுந்தவுடன் காலால் தரையைத் தொட்டால் சக்தி வீணாகும். ஏனென்றால், படுத்திருந்த போது ரத்த ஓட்டமும் உடம்பின் செயல்பாடுகளும் வேறு. ஆகவே, எழுந்தவுடன் காலால் தரையைத் தொட்டால்... சக்தி பெருமளவில் கீழ்நோக்கிப் பாய்ந்து வீணாகும். கையால் தரையைத் தொட்டு நிமிரும்போது சக்தி மேல் நோக்கிப் பரவிப் பாய்ந்து நலம் தரும். இதை எண்ணியே காலையில் எழுந்ததும் கையால் தரையைத் தொட்டு, பூமாதேவியிடம் அபராத மன்னிப்புக் கேட்க வேண்டும் என வைத்தார்கள்.

முக்கியமான அடுத்தது -குளியல். குளியலுக்கென்று பலவிதமான விதிமுறைகள் உள்ளன. காலையில் வீட்டை விட்டு வெளியே போய், ஆறுகளிலோ, குளங்களிலோ அமிழ்ந்து குளிக்க வேண்டும். அப்படி முழுகிக் குளிப்பதன் மூலம் உடம்பில் உள்ள சூடு தணியும். குளிக்கும்போது, இரட்டை ஆடைகளுடன் குளிக்க வேண்டும். ஆடையில்லாமல் குளிக்கவே கூடாது. இரண்டு ஆடைகளுடன் நீராடும்போது (ஆறோ, குளமோ) ஒன்று தண்ணீரோடு போய் விட்டாலும், ஒன்றை வைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு கரையேறலாம். ஒற்றை ஆடையுடன் இருந்தால், மானம் போய்விடும்.

‘இதெல்லாம் அந்தக் காலத்துக்கு வேணா சரியா இருந்திருக்கலாம். அறைக்குள்ள அழுத்தமா தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு ஷவர்ல குளிக்கறபோது ஆடை எதுக்கு?’ என்று சிலர் எண்ணலாம். இன்னும் சிலர், ‘பாத்ரூம்ல ரெண்டு குவளை தண்ணி எடுத்து ஒடம்புல ஊத்திக்கிட்டுப் போறதை விட்டுட்டு, இப்படி குளிக்காதே, அப்படிக் குளிக்காதன்னு ஏம்ப்பா கண்டிஷன் போடறீங்க..?’ என்றும் நினைக்கலாம். முன்னோர்கள் சொன்ன தகவல்கள் அந்தக் காலத்தை விட இந்தக் காலத்திற்கு மிகவும் அவசியம், பொருத்தம் என்றும் சொல்லலாம். ஆற்றிலோ, குளத்திலோ குளிக்கும்போது ஏதேனும் ஆபத்து என்றால், யாராவது ஓடிவந்து காப்பாற்றுவார்கள். அதே குளியலறையில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஆடையின்றிக் குளிக்கும்போது ஆபத்து என்றால், யாராவது கதவை உடைத்துக் காப்பாற்றினால்தான் உண்டு. அப்போது, என்னவாகும்? புரிகிறதா?

இன்றைய காலத்தில் பலர், சீறிப்பாயும் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட்டை விட வேக வேகமாகக் குளித்துவிட்டு வந்து விடுவார்கள். குளிக்கப் போவதும் தெரியாது. வருவதும் தெரியாது. இரண்டு குவளை தண்ணீரை எடுத்து அரக்கப் பரக்க உடம்பில் பட்டும் படாததுமாக ஊற்றிக்கொண்டு வந்து விடுவார்கள். இவ்வாறு செய்வதால் உடம்பில் உள்ள சூடு தூண்டப்படுமே தவிர, ஒருக்காலும் சூடு தணியாது. விஞ்ஞானம் கூறும் உண்மை இது. ஆறு, குளங்களில் குளிக்கும்போது செய்ய வேண்டிய முக்கியமாக விஷயத்தை முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, அவ்வாறு குளிக்கும்போது நீருக்கடியிலிருந்து மூன்று கைப்பிடி மண்ணை எடுத்துக் கரையில் போட்டுவிட்டுக் குளிக்கச் சொல்வார்கள். இதனால் அந்த ஆறோ, குளமோ ஆழப்படும். அவற்றின் கரைகளும் பலப்படும். நீர் ஆதாரங்களைப் பராமரித்த முன்னோர்களின் அற்புதமான ஏற்பாடு இது.

அவர்கள் ஏற்றிக் கொடுத்த ஞான தீபங்களை அணையாமலாவது காப்பாற்ற வேண்டும். ஆம்! தீபங்கள் ஏற்றுவதிலும் பல நுணுக்கங்களை வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். விளக்கேற்றும்போது காலையில் சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்னாலும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு நாழிகை முன்னாலும் விளக்கு ஏற்ற வேண்டும். (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்.) இரவு போய், பகல் வரும்போதும், பகல் போய் இரவு வரும்போதும் சுற்றுப்புற சூழலில் நிகழும் சில மாற்றங்களால், விஷ அம்சங்களால் பாதிப்பு உண்டாகும். இந்தப் பாதிப்புகளைத் தடுக்கும் சக்தி, விளக்கில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களுக்கு உண்டு. இதை முன்னிட்டே அதிகாலையிலும் மாலையிலும் விளக்கு ஏற்றச் சொன்னார்கள் முன்னோர்கள்.
       
அடுத்தது கோலம் போடுவது. தர்ம சிந்தனை மிகுந்தவர்கள் நமது முன்னோர்கள். காலையில் எழுந்தவுடன் தர்மத்தில் ஈடுபட வேண்டும். தர்ம சிந்தனையைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே, கோலம் போடச் செய்தார்கள். கோலம் போடும்போது அரிசி மாவினால் போட வேண்டும். காரணம்? எறும்பு முதலான சின்னஞ்சிறு ஜீவராசிகள் உண்ண வேண்டும் என்பதற்காகவே. அரிசி மாவினால் போட்ட அந்தக் கோலத்தில் உள்ள சின்னஞ்சிறிய அரிசித் துகள்களை, எறும்புகள் இழுத்துச் சென்று உண்ணும். காலையில் எழுந்ததும், எவ்வளவு அழகாக நம்மை தர்மத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

‘‘என்னய்யா இது? சந்திர மண்டலத்திற்கு ராக்கெட் விடற இந்தக் காலத்துல போய், முன்னோர்கள் சொன்னார்கள்...அது, இதுன்னு சொல்லிக்கிட்டு!’’ என்று சிலர் நினைக்கலாம். சந்திர மண்டலம் என்ன? அதையும்  தாண்டி வேறு மண்டலத்திலேயே போய் உட்கார்ந்தாலும் சரி, ஆரோக்கியம் வேண்டும். அது இல்லாவிட்டால் என்ன செய்தும் பலன் இல்லை; எது இருந்தாலும் பலன் இல்லை. ‘நோயில்லா உடல் இருந்தால் நூறு வரை காதல் வரும்’ என்பார் கண்ணதாசன்.

பதினாறு பேறுகள் என்று பட்டியல் இட்டு வரிசைப் படுத்திய அபிராமி பட்டர், ‘அகிலமதில் நோயின்மை’ என்று ஆரோக்கியத்திற்குத்தான் முதல் இடம் தருகிறார். அப்படிப்பட்ட ஆரோக்கியத்தை நாம் அடைய வேண்டும் என்பதற்காக, முன்னோர்கள் செய்து வைத்த அற்புதமான செயல் அடுத்து வருகிறது.
வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது, கால்களை அலம்பிக்கொண்டு வரவேண்டும். இதற்காக, வாசலிலேயே ஒரு வாளியில் தண்ணீர் வைத்திருப்பார்கள். அதில் கால்களை நன்றாக அலம்பிக்கொண்ட பிறகே வீட்டிற்கு உள்ளே வரவேண்டும். ஏனென்றால், நமக்கு வரக்கூடிய நோய்களில் பெரும்பாலானவை கால்களின் மூலம்தான் வருகின்றன.

வெளியே நாம் போய்வரும்போது, ஏராளமான கிருமிகள், கால்களில் ஒட்டிக் கொள்கின்றன. நம் வீதிகளின் தூய்மையைப் பற்றி விவரிக்க வேண்டியது இல்லை. அப்படிக் கால்களில் ஒட்டிக்கொண்ட கிருமிகளுடன் வீட்டிற்குள் போனால் என்ன ஆகும்? அதனால்தான் கால்களைத் தூய்மை செய்து கொண்டு வீட்டிற்குள் நுழையச் சொன்னார்கள். என்ன சொல்லியும் நாம் சந்தேகத்திற்கு வாழ்க்கைப்பட்டவர்கள் அல்லவா? அதனால் அடுத்தக் கேள்வியைக் கேட்போம் என்று தெரிந்துதான் வாசற்படியில் மஞ்சள் பூசச் சொன்னார்கள். அரைத்த மஞ்சளை (மஞ்சள் தூளை) நீர்விட்டு நன்றாக குழைத்து, வாசற்படியிலும் பக்கவாட்டிலும் ஏறத்தாழ ஒன்றரை அடி உயரத்திற்கும் பூசி வைப்பார்கள். மஞ்சள் தலைசிறந்த கிருமிநாசினி.

மஞ்சள் பூசப்பட்ட வாசல் படிகளின் வழியே நாம் உள்ளே போகும்போது, நம்மை அறியாமல் மிச்சம் மீதி இருக்கும் கிருமிகளும் அழிந்து போய்விடும். இந்த உண்மையை அறியாமல் நாம் வாசல் படியில் மஞ்சள் நிற வண்ணத்தை அடித்து விட்டோம். இதற்கு முன்னோர்களா பொறுப்பு? இவ்வாறு அலட்சியப்படுத்தி நாம் ஒதுக்கிய மஞ்சளுக்கு, அமெரிக்கர்கள் காப்புரிமை பெற்றார்கள். மஞ்சளின் மகத்துவம் அறிந்தவர்கள் அவர்கள். பிற்பாடு வாதாடி, போராடி மஞ்சளுக்கான காப்புரிமையை நாம் மீட்டோம்.

மஞ்சளின் மகத்துவத்தை முழுவதுமாக உணர்ந்த முன்னோர்கள், நமது ஆரோக்கியத்திற்காகவே, வாசல் படியில் மஞ்சள் பூசவேண்டும் என்றார்கள். மஞ்சள் பூசப்பட்ட வாசற்படியைக் கடந்து, ஒவ்வொரு முறை நாம் போகும்போதும், கால்களில் உள்ள கிருமிகள் அழிந்து போகும். வீட்டுக்குள் நுழையுமுன்பாக மட்டுமல்ல, இரவில் படுக்கப் போகுமுன்னும் கால்களை நன்றாகக் கழுவிக் கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார்கள். கால்களில் ஈரம் இல்லாமல் துணியால் ஒற்றிவிட்டு, இறைவனை ஒருசில விநாடிகள் பிரார்த்தித்துவிட்டு, அதன் பிறகே படுக்க வேண்டும். இவ்வாறு செய்தவன் மூலம் பெரும்பாலான நோய்களைத் தவிர்க்கலாம். எப்படி? ஏன்? நம் கைகள் கண்ட இடங்களில் படுவதில்லை. ஆனால் கால்களோ, எல்லா இடங்களிலும் பதிகின்றன.

அப்படிப் பதியும்போது கால்களில் உள்ள பத்து நகக் கண்களின் மூலமாகக் கிருமிகள் நம் உடலில் நுழைகின்றன. வீட்டிற்குள்ளும் அங்கு, இங்கு என்று நடந்து அழுக்குகளைச் சேர்த்துக் கொண்டிருப்போம். அவற்றோடு இரவில் படுத்தால், அது நோய்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியதைப் போல ஆகிவிடும். அதைத் தடுக்கவே இரவில் படுக்கும்போது கால்களைத் தூய்மை செய்து கொண்டு, ஈரமில்லாத காலுடன் படுக்கச் சொன்னார்கள்

குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள்

சேற்றில் செந்தாமரை பூப்பதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பாற்கடலில் கள்ளிச் செடி முளைக்குமா? உயர்ந்த, நல்ல குலத்தில் மோசமானவர்கள் தோன்றுவார்களா? ஏன் தோன்ற மாட்டார்கள்? ஒருவன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவனவன் வளர்ந்த விதத்தினாலும் நண்பர்களின் சகவாசத்தாலும் தானே தவிர, பிறப்பில் என்ன  இருக்கிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். அவரவர் நடத்தை தானே அவரவரின் பண்பு நலனைத் தீர்மானிக்கிறது? அப்படித்தான் பிறந்தான் கௌதமன். மிக நல்ல குலத்தில் தோன்றியவன் தான். ஆனால் நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே மருந்துக்குக் கூட அவனிடம் நல்ல குணம் இருக்கவில்லை.

ஆனால் அவன் காலத்தில் ராஜதர்மன் என்ற பெயரில் ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்த கொக்கு. பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய பறவை அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் குலம். ஆனால் அவனை அவனது உயர்ந்த நற்குணங்களுக்காக வானவர்களும் கொண்டாடினார்கள். ஒரு மனிதன், ஒரு பறவை, ஓர் அரக்கன் என்ற இந்த மூன்று பாத்திரங்களை உள்ளடக்கி, நன்றியுணர்வின் பெருமையையும் விருந்தோம்பலின் மேன்மையையும் விளக்கி மகாபாரதம் ஓர் அழகிய கதையைச் சொல்கிறது: கௌதமன் வடிகட்டின சோம்பேறி. பிறரது உழைப்பில் வாழ்வதைத் தனது தர்மம் போல் கொண்டிருந்தான்.

தந்தை பெரிய பண்டிதர். அவர் கடின உழைப்பின் பேரில் சம்பாதித்த பணத்தில் உலகின் எல்லா சுகங்களையும் சந்தோஷமாக அனுபவித்தான். கணவனை இழந்த ஒரு பெண்ணின் மேல் அவனுக்கு மையல் வந்தது. அவளுடன் வாழ்க்கை நடத்தலானான். தந்தையான அந்தப் பண்டிதர், இவனது அட்டகாசங்கள் தாங்காமல், துயரவசப்பட்டு அந்தத் துயரக் கடலிலேயே மூழ்கிக் கரைசேர முடியாமல் ஒருநாள் மூழ்கிவிட்டார். தந்தை உழைப்பில் சொகுசாக வாழ்ந்துவந்த கௌதமனுக்கு, இப்போது சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேட்டையாடிப் பிழைக்கலானான்.  உயர்ந்த குலத்தில் பிறந்த அவன் உயிர்க்கொலை பாவம் என்பதைப் பொருட்படுத்தவில்லை. உயிர்களைக் கொல்வது அவனுக்கு ஒரு விளையாட்டுப் போல் இருந்தது. வெளியூரில் இருந்த அவன் தந்தையின் நண்பர் ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார். கௌதமனின் செயல்களைக் கண்டார். அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. ‘எப்பேர்ப்பட்ட தந்தையின் மகன் அப்பா நீ? உயிர்க்கொலை செய்யலாமா? ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்கப் பார்!’ என்று அவர் அன்போடு அறிவுறுத்தி விட்டுச் சென்றார்.

பூர்வ ஜன்ம நல்வினை காரணமாகவோ என்னவோ கௌதமன் மனம் அந்த அறிவுரை பற்றிச் சிந்தித்தது. சரி, உயிர்க்கொலையை விட்டுவிடுவோம் என்று முடிவுசெய்தான். வியாபாரம் பழக வேண்டுமானால் முதலில் ஏதாவது வியாபாரிகளின் கூட்டத்தோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ள வேண்டுமே? அந்த ஊருக்குத் தற்செயலாக வியாபாரிகளின் குழு ஒன்று வந்தது. அவர்கள் காட்டு வழியாக வேறெங்கோ சென்று கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுடனேயே நடக்கலானான்.

என்ன துரதிர்ஷ்டம்! கானகத்தில் மதம் பிடித்த யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தித் தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஓடினார்கள். கௌதமன் ஒரு மரத்தின் மேல் ஏறி நடுநடுங்கியவாறு இரவைக் கழித்தான். பொழுது விடிந்ததும் பார்த்தான், யானைக் கூட்டம் எங்கோ சென்றுவிட்டிருந்தது. வணிகர்கள் பலரும் காட்டு யானைகள் தாக்கியதால் உயிர் விட்டிருந்தார்கள். கௌதமனுக்கு உயிர் என்பது என்ன, வாழ்க்கை என்பது என்ன என்பன போன்ற கேள்விகள் மனத்தில் எழத்தொடங்கின.

அவன் மெல்ல நடந்து பக்கத்தில் அதிக அபாயம் இல்லாத நந்தவனம் போன்ற ஒரு காட்டுக்கு வந்துசேர்ந்தான். மரங்களில் பழுத்திருந்த கனிகளைப் பறித்து உண்டான். எங்காவது இளைப்பாற வேண்டும் எனத் தேடியபோது பிரமாண்டமான ஓர் ஆலமரம் தென்பட்டது. பறவைகளுக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த ஆலமர நிழல் தனக்கும் அடைக்கலம் தரட்டும் என்று எண்ணியவனாய் அதன் நிழலில் காலோய்ந்து படுத்து மெல்லக் கண்ணயர்ந்தான். சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய கொக்கு அவன் அருகே அமைதியாக உட்கார்ந்திருந்தது. அது தன் மாபெரும்  சிறகுகளால் அவனுக்குக் காற்று வரும்படி விசிறிக் கொண்டிருந்தது!

பறவையின் செயலைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த கௌதமன், ‘‘யார் நீ?’’ என்று அந்தக் கொக்கிடம் விசாரித்தான். அவனைப் பரிவோடு பார்த்தது கொக்கு. ‘‘ஐயா! என் பெயர் ராஜசிம்மா. இது நான் வசிக்கும் ஆலமரம். இந்த மரம் தான் என் வீடு. இதில் நான் கூடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்கிறேன். இந்த மர நிழலை நீங்கள் இளைப்பாறத் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிறீர்கள். விருந்தினரை மனம் கோணாமல் உபசரிக்க வேண்டியது தர்மமல்லவா? காற்றில்லாமல் உங்கள் நெற்றி முத்து முத்தாய் வியர்ப்பதை மேலிருந்து பார்த்தேன். அதுதான் கீழே இறங்கி வந்து சிறகுகளைக் கொண்டு உங்களுக்கு விசிறிக் கொண்டிருக்கிறேன். தங்கள் பெயர் என்னவோ? தாங்கள் எதன் பொருட்டாக இங்கு வந்திருக்கிறீர்கள்?’’ என்று அன்புடன் கேட்டது.

ஒரு கொக்கு மிகுந்த பண்போடு மதுரமாகப் பேசுவது கௌதமனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. ‘‘பறவைக் குலத்தைச் சேர்ந்த ராஜசிம்மா! என் பெயர் கௌதமன். நான் வறுமையால் வாடுகிறேன். பணமில்லாத கஷ்டம் என்னை வதைக்கிறது. எப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காதா என்று தான் எல்லா இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் இந்தக் கானகத்திற்கு வந்ததும் பணத்தைத் தேடித்தான்!’’ என்று பரிதாபமாக பதிலுரைத்தான்.
கொக்கு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பிறகு எதையோ கண்டுபிடித்தது போல் மலர்ச்சியுடன் சிரித்தது. பின் கௌதமனிடம், ‘‘கௌதமரே! நீங்கள் என் விருந்தினர் மட்டுமல்ல. இப்போது என் நண்பரும் ஆகிவிட்டீர். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டியது என் கடமை.

உங்கள் வறுமையை என்னால் போக்க முடியும். எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். விரூபாட்சன் என்பது அவர் பெயர். அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர். நற்பண்புகளின் மொத்த வடிவம் அவர். நாளை காலை புறப்பட்டு அவரிடம் செல்லுங்கள். என் நண்பர் நீங்கள் என்று சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையான செல்வத்தை அவர் தந்து உங்களை வழியனுப்புவார்’’ என்றது. கௌதமன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அரக்கன் விரூபாட்சனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டறிந்து அப்போதே புறப்பட்டுச் சென்று அரக்கனைச் சந்தித்தான். தன் நண்பனும் பறவையுமான கொக்கினால் அனுப்பப்பட்டவன் கௌதமன் என்றறிந்ததும் விரூபாட்சன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பொன்னும் மணியும் வாரிவாரிக் கொடுத்தான். அத்தனை செல்வத்தையும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்துகொண்டு திரும்பி வரும் வழியில் மீண்டும் ராஜசிம்மக் கொக்கைச் சந்தித்தான், கௌதமன். அவன் கொக்கு இருந்த இடத்திற்கு வருவதற்குள் இரவு தொடங்கிவிட்டது. கொக்கு அவனை அன்போடு வரவேற்றது. அவனுக்குச் செல்வம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தது. அன்றிரவு அவன் படுக்க மரத்திலிருந்து இலை தழைகளைப் பறித்து வந்து சுகமான படுக்கை தயாரித்தது. ‘‘இன்றிரவு இங்கேயே உறங்கிவிட்டு நாளை புறப்படுங்கள்!’’ என்று வேண்டிக்கொண்டது. கௌதமனை விலங்குகள் தாக்காமல் இருக்கச் சற்று தூரத்தில் நெருப்பு மூட்டியது. பின்னர் உறங்கும் கௌதமனின் அருகேயே தானும் படுத்து உறங்கத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்தான் கௌதமன். அருகே வெள்ளை வெளேர் என்று மாமிசக் கொழுப்புடன் சலனமற்று உறங்கும் அந்தப் பெரிய கொக்கைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். தொலைவில் நெருப்பு எரிவதையும் பார்த்தான். நாம் நம் ஊரை அடைய இன்னும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும். நாளைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவனுடைய பழைய கிராதக மனம் விழித்துக் கொண்டது. ‘உம்.. வேட்டையாடு. வேட்டையாடி வாழ்ந்தவன்தானே நீ?’ என்று அது அவனை உசுப்பிவிட்டது. தீய சக்திகளின் கட்டளைக்குப் பணிந்தவன்போல் அவன் திடீரென்று எழுந்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கொக்கை அள்ளி எடுத்தான். சடாரென அதை நெருப்பில் போட்டு அதன் மாமிசத்தை உரித்து எடுத்து மறுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, அதிகாலையில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வேகவேகமாக நடக்கலானான். இதைத் தேவலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரன் திகைப்பில் ஆழ்ந்தார். இப்படிக் கூட மனிதர்கள் நடந்துகொள்ள முடியுமா என்றெண்ணி அவர் விழிகள் கண்ணீர் உகுத்தன. நாள்தோறும் ராஜசிம்மக் கொக்கு ஒருமுறையேனும் பறந்து சென்று தன் அரக்க நண்பனான விரூபாட்சனோடு உரையாடி விட்டு வருவது வழக்கம். ‘என்ன இது?  ஓரிரு நாட்களாக கொக்கைக் காணோமே? அதுவும் கொக்கு என்னிடம் அனுப்பிய மனிதனான கௌதமன் அவ்வளவு நல்லவனாகத் தெரியவில்லை. கொக்கின் மனம் அதன் உடல்போல் வெளுத்தது. அது எல்லோரையுமே நல்லவர்களாக நினைக்கிறது. இந்த கௌதமன் அதைக் கொல்லாமல் இருக்க வேண்டுமே?’ என்று வேதனைப்பட்ட விரூபாட்சன் தன் படைவீரர்களை அனுப்பி கொக்கு குறித்து அறிந்துவரச் சொன்னான். கொக்கின் பிய்ந்த இறக்கைகளைத்தான் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

தன் நண்பன் கொக்கின் இறக்கைகளைக் கண்ட அரக்கனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘‘எங்கே அந்த கௌதமன்? பிடித்து வாருங்கள் அவனை!’’ என்று கர்ஜித்தான். கௌதமன் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டான்.

‘‘இவனை வெட்டி அந்த மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிடுங்கள்!’’ என்று உறுமினான் அரக்கன்.

‘‘அரசே! அவன் உடலை வெட்டுகிறோம். ஆனால் நன்றி கொன்றவனின் மாமிசத்தைச் சாப்பிடும் அளவு நாங்கள் கேவலமானவர்கள் அல்ல!’’ என்ற அரக்கர்கள் அவன் உடலை வெட்டினார்கள். காட்டு விலங்குகளிடம் அந்த உடல் எறியப்பட்டது.

‘‘இந்த நன்றி கொன்றவனின் மாமிசத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம்!’’ என்று விலங்குகள் அனைத்தும் விலகிச் சென்றன. தன் கொக்கு நண்பனான ராஜசிம்மனின் எஞ்சிய உடலை சந்தனச் சிதையில் வைத்துக் கண்ணீர் மல்க எரிக்க முற்பட்டான் விரூபாட்சன். அப்போது அங்கே தேவேந்திரன் தோன்றினார். ‘‘விருந்தோம்பலில் சிறந்த இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்!’’ என்று கூறி, அதற்கு உயிர் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மறுகணம் எரியூட்டப்படவிருந்த சந்தனச் சிதையிலிருந்து ராஜசிம்மக் கொக்கு சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது!

விரூபாட்சன் ஓடோடிச் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு அதன் சிறகுகளைக் கோதி விட்டான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தது, கொக்கு. தேவேந்திரன், ‘‘நட்பைப் போற்றும் என் அன்புப் பறவையே! உனக்கு ஒரே ஒரு வரம் தர விரும்புகிறேன்! நீ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள். செல்வமா? நீண்ட ஆயுளா? இன்னும் அழகிய உடலா? இனிமையான குரலா? சொல். உனக்கு வேண்டிய ஏதாவது ஒரே ஒரு வரத்தை மட்டும் கேள்!’’ என்று பரிவோடு சொன்னார்.

தேவேந்திரனைக் கம்பீரமாகப் பார்த்த ராஜசிம்மக் கொக்கு, ‘‘தேவேந்திரரே! என் விருந்தாளியும் நண்பனுமான மனிதன் கௌதமன் மீண்டும் உயிர் பிழைக்குமாறு தாங்கள் வரம் தரவேண்டும். நான் மறுபடி பிழைத்தது மாதிரி என்னைக் கொன்ற என் விருந்தினனும் பிழைக்க வேண்டும் என்பதே நான் கேட்கும் ஒரே வரம்!’’ என்றது. தேவேந்திரன் கொக்கின் அற்புதமான பண்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். வானுலகத்திலிருந்து எல்லாத் தேவர்களும் கொக்கின் மேல் பூமாரி பொழிந்தார்கள்.

மீண்டும் உயிர் பெற்று எழுந்த கௌதமன் கொக்கிடம் மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் உகுத்தபோது, கொக்கு அதன் சிறகுகளால் அவன் கண்ணீரைத் துடைத்து அவனை அணைத்துக் கொண்டது. விரூபாட்சனின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. குணம் பல நேரங்களில் குலத்தால் அமைவதில்லை. குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் என்ற உண்மையை மனித குலம் இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்துகொண்டது.
மனசாந்தி தரும் இந்தக் கதை மகாபாரதம் சாந்தி பருவத்தில் வருகிறது.

நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு கை தட்டினால் .........................

ஒரு குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். குரு சீடர்களுக்கு நற்போதனைகள் செய்வதுடன் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களும் கூறுவார். ஒரு நாள், சீடர்களில் ஒருவன், ‘‘குருவே! பக்தியில் முழுமையாக ஈடுபட என்ன செய்ய வேண்டும்? ஏகாந்த சித்தி ஏற்பட வேண்டுமானால் அதற்கு என்ன  வழியைக் கையாள வேண்டும்?’’ என்று கேட்டான். அவனைப் பார்த்து மெல்லச் சிரித்த குரு, ‘‘இறைவனிடம் பக்தி செலுத்த பல வழிகள் உள்ளன. அவரவர் மனப்பக்குவத்துக்கு ஏற்ப அந்தந்த வழி களில் முயன்றால் ஏகாந்த சித்தி ஏற்படும். மௌனமாக இறைவனை வழிபடுவது ஒரு முறை.

ஆனால், மனம் இறைவனிடம் ஒன்றாமல் சிதறுமானால், அதை அடக்க இன்னொரு வழி இருக்கிறது. அது கைகளைத் தட்டியபடி இறைவன் பாடல்களைப் பாடுவது. ஒரு மரத்தின் அடியிலிருந்து கை தட்டி னால் அம்மரக் கிளைகளில் இருக்கும் பறவைகள் நாலா பக்கங்களிலும் சிறகடித்துப் பறந்து போகும். அதைப்போல இறைவனின் லீலைகளையும் கரு ணையையும் பாடலாக பாடி  நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு கை தட்டினால் உன் மனத்திலுள்ள தீய சிந்தனைகளெல்லாம் அகன்றோடிவிடும்.  கைகளால் தாளம் போட்டுக் கொண்டே இறை நாம சங்கீர்த்தனம் செய். அப்போது உனக்கு ஏகாந்த சித்தி உண்டாகும்’’ என்று விளக்கினார்

ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:

ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:
1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.

நினைத்தது நிறைவேற, அனைத்து லாபங்களும் கிட்ட

காருண்யபூர்ணநயனே கலசோபிமாலே
பத்மாலயே மதுரகோமள வாக்விலாஸே
ஸத்பக்தகல்பலதிகே புவனைகவந்த்யே
ஸௌந்தர்யவல்லி சரணம் ப்ரபத்யே
(ஸௌந்தர்யவல்லி அஷ்டகம்)

பொதுப்பொருள்:

கருணை ததும்பும் கண்களைஉடையவளே, ஒளி மிகுந்த முத்துமாலையை அணிந்தவளே, தாமரை மலரில் வீற்றிருப்பவளே, வாக்கி னிலே இனிமையும் அழகும் கொண்டவளே, எளியவர்களான பக்தர்களுக்கு கற்பக விருட்சமாகத் திகழ்பவளே, உலகோர் அனைவராலும் வணங்கத்  தக்கவளே, சௌந்தரவல்லித் தாயே, நமஸ்காரம்.

(இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்தால் திருமகள் திருவருளால் நினைத்தது நிறைவேறி ஐஸ்வர்யம், வியாபார விருத்தி,  உத்தியோகத்தில் உயர்வு, சந்தான பாக்யம் என்று அனைத்துவித லாபங்களும் கிடைக்கும்.)

உயர் பதவி கிடைக்க

த்ரயாணாம் தேவாநாம் திரிகுண ஜநிதாநாம் தவ ஸிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹந மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந் முகுலித கரோத்தம்ஸ மகுடா: (ஸௌந்தர்யலஹரி-25)

பொதுப்பொருள்:

ஈசனின் மனைவியான தேவியே நமஸ்காரம். உன் திருவடிகளில் செய்யப்படும் பூஜை ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களால் தோன்றிய நான்முகன், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளால் செய்யப்படும் பூஜையாகும். உன் திருவடித் தாமரைகளைத் தாங்கும் ரத்ன சிம்மாசனத்தின் அருகில் கிரீடங்களுக்கு மேலாகத் தம் கைகளைக் கூப்பியபடி அவர்கள் மூவரும் நின்று கொண்டிருக்கிறார்கள். உன் திருவடிகளைப் பூஜித்தாலே அவர்களையும் பூஜித்ததாக ஆகிவிடுமன்றோ?

(இத்துதியை 45 நாட்கள் தினமும் காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து 1000 தடவை பாராயணம் செய்தால் முறைப்படி கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, தடங்கல்கள் எல்லாம் நீங்கி எளிதாகக் கிட்டும்.)

பஞ்சம், பட்டினியற்ற வாழ்வு பெற

மன்மாதா ஸஸிசேகரோ மம பிதா ம்ருத்யுஞ்ஜயோ மத்குரு:
ந்யக்ரோதத்ரும மூலவாஸாஸிகோ மத் ஸோதர: ஸங்கர:
மத்பந்துஸ்த்ரிபுராந்தகோ மம ஸகா கைலாஸசைலாதிப:
மத்ஸ்வாமீ பரமேஸ்வரோ மம கதி: ஸாம்ப: ஸிவோ நேதர:
(சாம்பசிவ த்யானம்)

பொதுப்பொருள்:

பிறைசூடிய பெருமானே, நீங்களே என் தாய். யமனை வென்ற ஈசனே, நீங்களே என் தந்தை. ஆலமரத்தடியில் அமர்ந்து தட்சிணாமூர்த்தியாக விளங்கும் நீங்களே எனக்கு ஆசான். உலகுக்கே மங்களம் செய்விக்கும் மகாதேவனே, நீங்களே என் சகோதரன். த்ரிபுர சம்ஹாரம் செய்த ருத்ரனே நீங்களே எனக்கு உறவினர். கயிலாய மலையின் அதிபரே, நீங்களே என் தோழர். பரமேஸ்வரனே, நீங்களே என் தெய்வம். அம்பாளின் கருணையும் சேர்த்து அருள்பாலிக்கும் உமாமகேஸ்வரா, எனக்கு உங்களைத் தவிர வேறு கதி இல்லை. என்னைக் காத்து, பஞ்சம், பட்டினியில்லாத வாழ்க்கையை அருள்வீராக.

(காசி விஸ்வநாதர் சந்நதியில் தினமும் அர்த்தஜாம பூஜையில் பாராயணம் செய்யப்படும் ஸ்லோகம் இது. இத்துதியை ஆனித்திருமஞ்சனம் அன்று  பாராயணம் செய்தால் எல்லா நன்மைகளும் பெருகும்.)

சகல மங்களங்களும் பெருக..

சகல மங்களங்களும் பெருக..

பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய
காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய
பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
ஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய
(மீனாட்சி ஸுந்தரேச்வர ஹாலாஸ்யநாத ஸ்தோத்திரம்)

பொதுப்பொருள்:

பக்தர்களுடைய மனக் கவலையைப் போக்கி அருள்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம். பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே, பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே, காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமாக கழுத்தை உடையவரே, பிர மதகணங்களுக்கு ஈச்வரரானவரே, மூவுலகங்களையும் படைத்தவரே, ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே, மீனாட்சி சுந்த ரேஸ்வரா, நமஸ்காரம்.

(ஒவ்வொரு சனிப் பிரதோஷத்தன்றும் இத்துதியை பாராயணம் செய்தால் சிவ அபசாரம் நீங்கி சகல மங்களங்களும்  பெருகும்.)

துர்தேவதைகள் தொல்லை விலக...

நீலம் துரங்கமதிரூட விராஜமாநா
நீலாம்ஸுகாபரணமால்ய விலேபநாட்யாம்
நித்ராபடேந புவநாதி திரோதநாநா
கட்காயுதா பகவதி பரிபாது பக்தாந்
(திரஸ்கரணீ ஸ்லோகம்)

பொதுப்பொருள்:

மகாவாராஹி தேவியின் ப்ரத்யங்க தேவியான திரஸ்கரணீ தேவியே, நமஸ்காரம். கைகளில் வில்லும் அம்பும் தரித்து, நீலநிற குதிரையில் ஆரோகணித்தவளே, புருவ மத்தியில் பார்வையைச் செலுத்தி தியானம் செய்யும் தோற்றம் கொண்டவளே, உறக்கப் போர்வையால் உலகத்தை  மறைப்பவளே, மகாமாயையாகவும் நித்ராதேவியாகவும் விளங்கி உலகை வசப்படுத்துபவளே, நமஸ்காரம். என்னைக் காத்தருள்வாய் அம்மா.

(இத்துதியை இரவு நேரத்தில் பாராயணம் செய்தால் துர்தேவதைகளினால் ஏற்படும் தொல்லைகள் நம்மை அண்டாது)

எல்லா ஆபத்துகளும் நீங்க, கண் திருஷ்டிகள் அகல...

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.
                      
பொதுப்பொருள்:  சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை  தரித்து உலகத்தைக்  காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்க ளைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்திரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.

(தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள்  அகலும்.)

எதிரிகளையும் நண்பர்களாக்க;

ஹனுமந் நஞ்ஜனீஸூனோ மஹாபலபராக்ரம
லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய
ஸ்ம்ருதமாத்ர ஸமஸ்தேஷ்டபூரக ப்ரணதப்ரிய
லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய
-ஹநுமந்லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்ரம்.

பொதுப்பொருள்:


ஆஞ்சநேயப் பெருமானே, அஞ்சனா தேவியின் புதல்வரே நமஸ்காரம். மிகுந்த பலத்தையும் எதிரிகளை எளிதாக வெல்லும் சக்தியை யும் கொண்டவரே, நமஸ்காரம். தங்களது வாலாகிய அஸ்திரத்தைப் பிரயோகித்து, என் எதிரிகளின் மனங்களை வீழ்த்தி அவர்களை என்னுடன் நேசம்  கொண்டவர்களாக மாற்றித் தாருங்கள். நினைத்த மாத்திரத்தில் கோரிய எல்லாவற்றையும் வழங்கி அருளும் ஆஞ்சநேயா, நமஸ்காரம். உம்மை  வணங்குபவரிடம் பேரன்பு கொண்டவரே, நமஸ்காரம்.

(இத்துதியை ஞாயிற்றுக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் எல்லாம் நண்பர்களாவார்கள்; கோரிய பிரார்த்தனைகளும் நிறைவேறும்.)

Wednesday, July 24, 2013

விநாயகருக்கு யானைமுகம் வந்த வரலாறு -கிருபானந்தவாரியார்

விநாயகருக்கு யானைமுகம் வந்த வரலாறு
--திருமுருக கிருபானந்தவாரியார்


 கயிலையங்கிரியில் ஒரு பாலுள்ள சித்திரமண்டபத்து அடியார்க்கருள் புரியுமாறு வேதங்கள் ஐயா என ஒங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியயராம் சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளினார்.

... அச் சித்திர மண்டபச் சுவர்களில் எழுதியுள்ள அழகிய ஓவியங்களைக் கண்டு உலவுங்கால், ஒரு பால் ஏழுகோடி மகாமந்திர சொரூபங்களும், அவைகளுக்கெல்லாம் முதலிய சமஷ்டி[(ஒன்றாயிருத்தல்)] 1, வியஷ்டி[(வெவ்வேறாயிருத்தல்)] 2 பிரணவ வடிவ மந்திர சொரூபங்களும், அதில் ஆண் யானை பெண் யானை வடிவங்களும் வரைந்திருக்க, அவற்றுள் சமஷ்டிப் பிரணவ வடிவமாகிய பெண் யானைச் சித்திரத்தின் மீது அகில சக அண்ட நாயகியாகிய அம்பிகையும், வியஷ்டி வடிவமாகிய ஆண் யானைச் சித்திரத்தின் மீது ஆலமுண்ட அண்ணலும் விழிமலர் பரப்பினர்.

அங்ஙனம் பார்த்தவுடன் கோடி சூரியப் பிரகாசத்துடனும், யானை முகத்துடனும், நான்கு புயாசலங்களுடனும், ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று விநாயகமூர்த்தி அவதரித்தனர்.

Monday, July 22, 2013

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.

குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
...
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.

‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’

‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம்.‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.

‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.

சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.

வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு -(குறள்)

Saturday, July 20, 2013

ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம் --தமிழ்

ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம்
தமிழ் கவியாக்கம்: கவிதாமணி,உபயபாஷா ப்ரவீண,
செந்தமிழ்க் கவிதைச் செம்மல்
(திரு.அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள்)
திருச்சிற்றம்பலம்
அங்கம் புளகமுற ஹரிமேனி தன்னை
அனுபவித்து அணி செய்நின்,ஒளிநிறைந்த,பார்வை
துங்கமுறும்,தம்மால,முகை தமையே,சார்ந்து
சுடரும்பெண் வண்டுகள் தாம் சூழ்ந்திருப்ப தொக்கும்
மங்களம்சேர் மகாலட்சுமி அனைத்து நல மெல்லாம்
வழங்கு திறல் நின் கண்படைத்து விளங்கு கின்றதம்மா
பொங்கு நலன் அத்தனையும் பொழிவது வேயாகப்
பொருந்துக நின் பார்வையது என்மீது தாயே. 1
நீலோத்பல மலருள் போய்வந்து மீண்டும்
நிறைகாணா தவிக்கின்ற பெண் வண்டைப் போல
மாலின்முக மண்டலத்தே நோக்கும் நின் விழிகள்
மயங்குவதும் ரசிப்பதுவும் ஆசை வெட்கம் துள்ள
பாலித்துத் தியங்குவதாய் பார்வையது கொண்டாய்
பாற்கடலின் திருமகளே நினது கடைப் பார்வை
சால்புடைய என்மீது தவழவிட வேண்டும்
சகல நலன் அப்பார்வை தந்துவிடும் தாயே. 2
அரிதுயிலும் முகுந்தனையே இமையால் நோக்கி
ஆனந்தப் பெருமிதப்பில் ஆழ்த்துகின்றாய் தாயே
வரிகாமன் வசம்பட்டு நின்கரு விழிகள் இரண்டும்
வட்டாடி நிலை புரண்டு இமையோடு சேர்ந்து
புரிசெவியின் அருகுவரை போய்வந்து மீண்டு
பூரித்து நீண்டு விட்டதென விளங்கும்
விரிவிழியின் கருணை நிறை ஒளி நிறைந்த பார்வை
வீழ்ந்தென்மேல் இன்பத்தில் ஆழ்த்துக என்னாளும். 3
திருமாலின் திருமார்பில் திகழ் துளபமாலை
தேவி நீ நோக்க இந்திர நீலமதாய் மாறும்
பெருமானின் விருப்பமதை நிறைவேற்றும் வலிமை
பெற்றுத் திகழ்கின்றது நின் ஒளி நிறைந்த பார்வை
திருமகளே கடைக் கண்ணால் எனை நோக்கு வாயேல்
திருவுடனே மங்கலங்கள் எனைச் சரணம் செய்யும்
பெருமனது கொண்டு கடைக்கண் அதனால் நோக்காய்
பேரின்பச் சுகமெல்லாம் எனைச் சாரட்டும் தாயே. 4
நீருண்ட மேகமெனத் திகழும் திருமாலின்
நெடிய திருமார்பதனில் கொடி மின்னலென்ன
சீருடனே விளங்கும் நின் திருவுருவம் தாயே
செய்தவத்தால் பிருகுமுனி நினைமகளாய்ப் பெற்றான்
பாருலக மெலாம் நின்னைத் தாயெனவே வாழ்த்தி
பக்தியுடன் தொழுகின்றார் நினது திருவுருவை
சார்ந்திட்டேன் நின்னடியைச் சகல நலமருள்
தாயே என்மீது கடைக் கண் வைப்பாய் நீயே. 5
மங்களங்கள் அத்தனையும் தங்குமிடம் எதுவோ
மாலுக்கே வலிமைதரும் பார்வையது எதுவோ
சிங்கநிகர் மதுவென்னும் தீயவனைச் செருக்கத்
திறம்படைத்த திருமாலின் செளலப்யம் எதுவோ
பொங்குமதன் மாலிடமே புகுந்ததுறை எதுவோ
பேரலை கொட்டும் சாகரத்தின் தவமகளே நின்றன்
தங்குமுக மண்டலத்தில் தவழும் திருப்பார்வை
தமியேன் என்மீது சிறுதுளி படட்டு மம்மா. 6
விளையாட்டாய் நின்பார்வை எவர்மீது படினும்
வியனுலக இன்ப நுகர் அமரேந்திரனு மாவான்
முளைமுரன் தனைசெகுத்த முகுந்தனும் நின்பார்வை
முழுவிழியின் திருஷ்டியினால் ஆனந்தத் துயிலாழ்ந்தான்
துளக்கமுறு நீலோத்பல மலர் மகுடம் போன்று
தூயநின் திருமுகத்தில் தோன்றும் கடைப் பார்வை
விளக்கமதாய் அரைப் பார்வை க்ஷண நேரமேனும்
வீழட்டும் என்மீது கருணை நிறை தாயே. 7
அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்
அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ!
இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்
இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ
உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப
ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை
விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க
வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தாயே. 8
சாதகப் புள்ளென நாளெல்லாம் தவித்தேன்
தரித்திரம் விஞ்சவே வாடினேன் பலநாள்
பாதகம் தாபம் தரித்திரம் துக்கமெல்லாமும்
பற்றிய எனைவிட்டு வெகுதூரமே ஓட
ஆதரவாம் கருணைக் காற்றினால் அசைய
அருள்பொழி மேகமாய் நின்கண்களெ விளங்கி
போதனை போல் பொன்மலை என்மீது நீ
பொழிந்திடு தாயே நின் கருணையாம் விழியால். 9
சிருஷ்டியிலே கலைமகளாய்த் திகழ்கின்றாய் தாயே
சீவர்களைக் காப்பதற்குத் திருமகளே யாவாய்
மருட்டுகின்ற அரக்கர்களை அழிக்கின்ற போது
மகா துர்க்காயென விளங்கும் வல்லபையும் நீயே
பெருகு பிறைச் சந்திரனைச் சூடுகின்ற பெம்மான்
பிரியபத்தினி பார்வதியாய் விளங்குபவள் நீயே
குரு விஷ்ணு பத்தினியே மூவுலக மெல்லாம்
கொண்டாடும் மகாலட்சுமி திருவடிக்கே சரணம். 10
வேதப்பிரம சொரூபமாக விளங்கும் தாயே சரணம்
விணையின் பயனை பகிர்ந்தளிக்கும் ஆதித்தாயே சரணம்
சோதி அழகுவடிவாம் ரதியே சுடரே தாயே சரணம்
தூயமங்கள குணங்கள் அமைந்த கருணைத் தாயே சரணம்
இதயத் தாமரை இருப்பிடமாக ஏற்கும் தாயே சரணம்
இதயசுத்தி வடிவாய்த் திகழும் சக்தித்தாயே சரணம்
உத்தமோ உத்தமன் பத்னியான லட்சுமித்தாயே சரணம்
உயர்ந்த பூரண சொரூபியான புஷ்டித் தாயே சரணம் 11
பங்கயத்தை யொத்த திருமுக முடையாய் சரணம்
பாற்கடலில் உதித்த திரு லட்சுமியே சரணம்
மங்களம் சேர்மதி அமுதம் உடன்பிறப்பாய் பெற்றாய்
மகிமை மிக்க நாராயணன் மனையரசி லட்சுமி சரணம் 12
தங்கத் தாமரை தன்னில் அமர்ந்த தாயே லட்சுமி சரணம்
தரணிக் கெல்லாம் தலைவியான தாயே திருவே சரணம்
மங்கள தயவே தேவர்க்கருளும் மகாலட்சுமி சரணம்
மகிமை மிக்க சாரங்கபாணி மனையரசி லட்சுமி சரணம் 13
மகரிஷி ப்ருகு முனியின் திருமகளே சரணம் சரணம்
மகாவிஷ்ணு மார்பில் திகழும் மகாலட்சுமி சரணம்
தங்க ஆசனம் தாமரை மீதில் தங்கும் தாயே சரணம்
தாமோதரனின் தர்மபத்னி லட்சுமித் தாயே சரணம் 14
சோதிவடிவே கமல நயனம் துலங்கும் தாயே சரணம்
செல்வம் சிருஷ்டி தலைவியான திருவே தாயே சரணம்
ஆதிதேவர் அனையர் போற்றும் அன்னை லட்சுமி சரணம்
ஆயர்நந்த குமரன் துணைவி அருளும் லட்சுமி சரணம் 15
தாமரைக் கண்கள் படைத்த தாயே செளபாக்ய நல்கும் தேவி
சகல மாந்தர் போற்றும் தாயே சாம்ராஜ்யம் நல்கும் தேவி
நேம புலன்கள் ஆனந்தம் பெறவே நெடிய பாபம் தீர்ப்பாய்
நிந்தன் திருவடி துதிக்கும் பாக்யம் நீயே எனக்குத் தருவாய் 16
கடைக்கண் பார்வை வேண்டியே நாளும் கைதொழுது பூசனை
புரிவோர்க்கு தமக்கு தடையிலாச் செல்வம் தருபவள் எவளோ
தயையே மிக்க தயாபரி எவளோ மடை திறந்தென்ன நல்வரங்கள்
நல்கும் மாயன் முராரியின் இதயத் தலைவி அடைந் திடற்கரிய
அன்னைநின் திருவடி அடைக்கலம் அம்மா அடக்கலம் போற்றி 17
கமல வாசினி கரக் கமலம் உடையாய் களப சந்தன மாலையும்
தரித்து நிமலவெண் துகில் மேனியில் தவள நிர்மல ஜோதியாய்
திகழ்பவள் நீயே அமல முகுந்தன் இன்னுயிர்த் தலைவி அலகில்
கீர்த்திகொள் மனங்கவர் செல்வி விமலையே நலன்கள்
எங்களுக் கருள்வாய் வேண்டினேன் தாயே அருள்புரி நீயே 18
தெய்வக் கங்கை நன்னீர் எடுத்து திசையானைகள் தங்கக்
குடத்தில் ஏந்திஉய்ய நீராட்டும் உடலே உடையாய் உலகத்
தாயே உலகைப் புரக்கும் தெய்வத் திருமால் மார்பில் திகழும்
திருவே பாற்கடல் தோன்றிய செல்வி மெய்யாம் நின்றன்
திருவடிச் சார்ந்தே வைகறை தொழுதேன் வாழ்வளிப் பாயே 19
கமலிநீயே கமலக் கண்ணன் காதலீ கருணை வெள்ளமே
பொழிந்திடும் திருவே கமலக் கண் பார்வைக் கேங்கி
இளைத்துக் கதறும் என்றன் துதியினைக் கேட்டு தமியேன்
நின்றன் தயையினுக் கேங்கும் தரித்திரன் தக்கான்
எனநீ கனிந்து சமயமறிந்து என்றனுக் கருள நின் தவளும்
கடைக்கண் வைப்பாய் என்மீதே 20
மறைகள் மூன்றின் வடிவாய்த் திகழும் வையகம் மூன்றுமே தொழுதிட
நின்றாய் முறையாய் இந்தத் தோத்திரம் தன்னைநின் முன்றில்
துதித்துப் போற்றுவோர் தமக்கு நிறைசெல்வம் கீர்த்தி, கல்வி
ஆரோக்யம் நிறைஆயுள் புத்தி சக்தியும் தந்து துறையெனப்
புலவோர் போற்றிடச் செய்யும் துணிவும் சக்தியும் தருவாய் தாயே. 21

Friday, July 19, 2013

மனிதனாய் பிறந்தவன் தனது முயற்சியை எப்போதுமே கைவிடக்கூடாது.

பரிமள நாட்டு மன்னன் பவளநிதிக்கு, பஞ்சமி என்ற மனைவி, குணாளன், மணாளன் என்ற மகன்கள் இருந்தனர். பளவநிதியை அடுத்து, குணாளன் அரசனானான். அண்ணன் அரசன் ஆனதில் தம்பி மணாளனுக்கு மகிழ்ச்சியே. ஆனால், மணாளனைப் பிடிக்காத சிலர், அண்ணன் குணாளனிடம், ""அரசே! உங்கள் தம்பி, உங்களைக் கொன்று விட்டு அரசபதவிக்கு வரத்துடிக்கிறார்,'' என்று வத்தி வைத்தனர். இதை நம்பிய குணாளன் தம்பியைக் கொல்லத் துடித்தான். இதையறிந்த தாய் பஞ்சமி, குணாளனுக்கு புத்திமதி சொன்னாள். அவன் கேட்பதாய் இல்லை என்பதால், இளைய மகனுடன் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டாள்.
அருகிலுள்ள மகத நாட்டை அடைந்த அவள், அங்கு இரக்கமனம் மிக்க ஒரு வயோதிக பிராமணரைச் சந்தித்தாள். தான், பரிமள நாட்டின் ராணியென்றும், தன் நிலை இப்படி ஆகிவிட்டது என்று பற்றியும் சொன்னாள். அவர், அவளுக்கு தன் வீட்டில் தங்கிக்கொள்ள இடம் கொடுத்தார்.
காலம் சென்றது. மணாளன் வனப்புமிக்க இளைஞன் ஆனான். அவனிடம், பக்கத்து வீட்டு பணக்காரப் பெண், தன் காதலை வெளிப்படுத்தினாள்.
""பெண்ணே! நீயோ பணம் படைத்தவள். நானோ பரமஏழை. உன் வீட்டார் நம் திருமணத்துக்கு சம்மதிக்கமாட்டார்கள். நான் வெளிநாடு சென்று பொருள் சேர்த்து வருகிறேன். அதன்பின் திருமணம் செய்யலாம். அதற்காக, இன்னும் சிலகாலம் பொறுத்திருப்பாயா?'' என்றான்.
அவளும் சம்மதித்தாள்.
வெளிநாட்டுக்கு பாய்மரக் கப்பலில் புறப்பட்டான் மணாளன். வழியில், கடும் புயல் வீச கப்பல் கவிழ்ந்தது. அவனுடன் சென்றவர்களைசுறாமீன்கள் சூழ்ந்து கடித்தன. தைரியம் மிக்க மணாளன், அவற்றிடமிருந்து தப்பி, ஒரு கட்டையைப் பிடித்துக் கொண்டு நீண்ட தூரம் மிதந்தான். சில நாட்கள் ஆகியும், கரை ஏதும் தெரிகிற வழியைக் காணவில்லை.
அப்போது, ஒரு தேவதை வானில் பறந்து கொண்டிருந்தாள். அவள் கடல்களில் மூழ்கும் முயற்சியாளர்களை பாதுகாக்கும் பணியில் கடவுளால் நியமிக்கப்பட்டவள். மணாளன் முன் தோன்றிய அவள், "" அடேய்! இதென்ன வீண் முயற்சி! நடுக்கடலில் விழுந்த நீ எங்கோ இருக்கும் கரையை நோக்கி இந்தக் கட்டையின் உதவியோடு போய் விடலாம் என நினைக்கிறாயே! இதுநடக்கிற காரியமா? அது மட்டுமல்ல! பசியால் களைத்திருக்கும் நீ, இன்னும் ஓரிருநாளில் இறந்து விடுவாயே!'' என்றாள்.
மணாளன் சிரித்தான்.
""தேவதையே! மனிதனாய் பிறந்தவன் தனது முயற்சியை எப்போதுமே கைவிடக்கூடாது. என்னோடு வந்தவர்கள் பயத்தாலும், முயற்சியின்மையாலும் இறந்தார்கள். அதுபோல், நான் இருக்கமாட்டேன். என்னால் ஆன முயற்சியைச் செய்வேன். முடிவைப் பற்றி எனக்கு கவலையில்லை,'' என்றான்.
அவனது வார்த்தைகள் அவளைக் கவரவே, ""இளைஞனே! உன் மனஉறுதியைச் சோதிக்கவே இப்படி கேட்டேன். உன்னைக் கரையில் சேர்க்கிறேன்,'' என்று கரையில் சேர்த்தாள்.
""அநியாயமாக, உன்னை விரட்டிய சகோதரனை வெற்றி கொண்டு, இழந்த நாட்டை மீண்டும் பெறுவாய்,'' என்று ஆசிர்வதித்தாள். மணாளனும் அவ்வாறே செய்து, தன்னை விரும்பிய பெண்ணையும் திருமணம் முடித்தான்.

பூக்கள் -- "பூ'க்"கல்'

மதுராவிற்கு ஒருமுறை மகரிஷி தயானந்தர் சொற்பொழிவாற்ற சென்றிருந்தார். அவர் மேடையில் ஏறியதும், சிலர் அவர் மீது சரமாரியாக கற்களை வீசினர். அவற்றில் பல அவர் மேல் விழுந்தன.இதற்காக மகரிஷி கோபப்படவும் இல்லை, அங்கிருந்து நகரவுமில்லை. புன்முறுவலுடன் வலியைத் தாங்கிக் கொண்டு, ""என் சொற்பொழிவைக் கேட்க வருகிற அவசரத்தில் பலருக்கு பூக்கள் கிடைக்கவில்லை போலும்! அதனால் தான் பூக்கள் "பூ'க்"கல்'லாக மாறி விட்டனவோ!'' என்று சொல்லி சிரித்தார். அத்துடன் கல் எறிந்தவர்களின் அன்புக்கு கட்டுப்படுவதாகவும் கூறினார்.
இதைக் கேட்டு கல் எறிந்தவர்கள் அவமானப்பட்டு போனார்கள்.
""இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
'' என்ற குறளுக்கேற்ப நடந்து கொண்டார் மகரிஷி.

பசியுள்ளவனிடம் ஆன்மிகம் மட்டுமல்ல... எதைப் பற்றி பேசினாலும் புரியாது.

ஒரு பிச்சைக்காரனை புத்தரின் சீடர் சந்தித்தார். அவனுக்கு தர்ம உபதேசம் செய்ய ஆரம்பித்தார். ""ஆசையை விடு, ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம்' என்று நீண்ட சொற்பொழிவை அவனிடம் நிகழ்த்தினார். பிச்சைக்காரனுக்கோ கடும் பசி. இவர் சொல்வதெல்லாம் அவன் காதில் ஏறுமா என்ன... அவன் பாதி மயக்கத்தில், ஏதோ கவனத்தில் இருந்தான்.
சீடருக்கு கோபம் வந்து விட்டது. அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
புத்தரிடம் சென்று, ""ஐயனே! நான் ஒரு பிச்சைக்காரனுக்கு நல்ல பல உபதேசங்களைச் செய்தேன். அவற்றை அவன் காதிலேயே வாங்கவில்லை. நான் கோபித்துக் கொண்டு வந்து விட்டேன்,'' என்றார்.
புத்தர் சீடரிடம்,""அவனை என்னிடம் அழைத்துக்கொண்டு வா,'' என்றார்.
சீடனும் பிச்சைக்காரனை தேடி அழைத்து வந்தார். புத்தர் அவனது நிலையைப் பார்த்தார். பல நாட்களாய் சாப்பிடாததால் பஞ்சடைத்த கண்களையும், ஒட்டிய வயிறையும் பார்த்த அவர், அவனுக்கு வயிறார உணவளித்து அனுப்பி விட்டார்.
சிடர் அவரிடம்,"அவனுக்கு உணவளித்தீர்கள். உபதேசம் ஏதும் செய்யவில்லை! ஏனோ!'' என்று கேட்டார்.
""சீடனே! அவனுக்கு முதல் தேவை உணவு. அதைக் கொடுத்து விட்டேன். இனி அவன் உபதேசம் கேட்க வருவான் பார்..'' என்றார்.
பசியுள்ளவனிடம் ஆன்மிகம் மட்டுமல்ல... எதைப் பற்றி பேசினாலும் புரியாது. இதனால் தான் அன்னதானத்திற்கு நம் முன்னோர்கள் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்...புரிகிறதா!

வாழ்க்கை என்பது வியாபாரம்

குசேலப்பட்டினம் நகரில் ஜாம்பவான் என்பவன், தனது தங்கை சுப்ரியாவுடன் வாழ்ந்து வந்தான். தங்கை என்றால் அவனுக்கு உயிர். அவள் எது கேட்டாலும், கடுமையாக உழைத்து சம்பாதித்து வாங்கிக் கொடுத்து விடுவான். ஒருநாள், அந்தப்பெண் தன் தோழிகளுடன் ஆற்றிற்கு நீராடச் சென்றாள்.
தோழிகள் ஆரவாரத்துடன் நீச்சலடித்து கொண்டிருந்தனர். சுப்ரியாவும், தோழி சுபாவும் ""அதோ...அக்கரை வரை நாம் செல்வோம்.
வெற்றி பெறுபவர் இன்னொருத்தியின் குடத்தை பரிசாக வைத்துக்கொள்ளலாம்,'' என்று பந்தயம் கட்டினர். மற்ற தோழிகள் நடுவராக இருக்க, சுப்ரியாவும், சுபாவும் மின்னல் வேகத்தில் ஆற்றைக் கடந்தனர். ஓரிடத்தில் சுழல் ஒன்று இருக்க, இருவரும் சிக்கினர். சுபாவின் நல்ல நேரம்...எப்படியோ சமாளித்து அதிலிருந்து தப்பி தள்ளி வந்து விட்டாள். சுப்ரியாவால் அதிலிருந்து மீள முடியவில்லை. சுழலுக்குள் அமிழ்ந்து போனாள். அவளது உயிர் பிரிந்து விட்டது.
தன் அன்புத்தங்கை மரணமடைந்த செய்தியறிந்து, ஜாம்பவான் அழுது புலம்பினான். தங்கை இல்லாத உலகம் அவனுக்கு சூன்யமாகவே தெரியவே, தற்கொலைக்கு முயற்சித்தான். சிலர், அவனைக் காப்பாற்றி அறிவுரை வழங்கினர்.
அந்த சமயத்தில் துறவி ஒருவர் அவ்வூருக்கு வந்தார். அவரிடம், தன் நிலையைச் சொல்லி அழுதான் ஜாம்பவான்.
""மகனே! நீ புத்தர் சொன்ன அறிவுரைகளைப் படித்ததில்லையா! உலகில் யார் தான் கடைசிவரை உயிர் வாழ முடியும். மனிதனால் எல்லாவற்றையும் அறிய முடியும்...ஒன்றே ஒன்றைத் தவிர! அதுதான் அவனது கடைசிநாள். மரணம் திடீரென்று வந்தே அவனை அழிக்கும். இதோ! புத்தர் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன். கவனமாய்க் கேள். ஆறுதலடைவாய்,'' என்றவர், புத்தரின் பொன்மொழிகளைக் கூறினார்.
""பழுத்த பழங்கள் மரத்திலிருந்து உதிர்வது போல், மனிதர்களும் இறந்து தான் போவார்கள். மரணத்திற்கு இளைஞன், முதியவன், படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அது எல்லாருக்கும் நிச்சயமானது. காலையில் நீ உன் தங்கையைப் பார்த்தாய், இப்போது அவள் இல்லை. எல்லா மனிதர்களின் நிலையும் அப்படித்தான். இதற்கு நீயும், நானும், உன் தங்கையும் விதிவிலக்கல்ல. அழுவதால் ஒருவரது உயிர் மீட்கப்படும் என்றால், எல்லாருமே அழ ஆரம்பித்து
விடுவார்கள். ஆனால், ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் இறந்தவர்கள் உயிர் பெறுவதில்லை. இறப்பும், பிறப்பும் இயற்கையானது. பிறப்பு, இறப்பு குறித்த நூல்களை நீ ஆழ்ந்து படிக்க வேண்டும். அவற்றிலுள்ள கருத்துகளை அறிந்து விட்டால், மரணம் பற்றிய பயம் இருக்காது. எனவே, நீ சென்றவளுக்காக கவலைப்படாதே. இருக்கிற உறவினர்களுக்காக வேலை செய்.
அவர்களைக் காப்பாற்று,'' என்றார்.
ஜாம்பவானின் மனதில் தெளிவு பிறந்தது.

நல்ல சொற்களே உன்னை பகவானிடத்தில் கொண்டு சேர்க்கும் பாதையாக அமையும்

பிறப்பில்லாத நிலை வேண்டும், கடவுளை அடைய வேண்டும் என்று ஒரு பாகவதர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.
கேட்டுக் கொண்டிருந்த ஒரு பக்தர் எழுந்து,""நீங்கள் சொல்வது சரி. பிறப்பற்ற நிலையை அடைய ஒரு வழியைச் சொல்லுங்களேன்!'' என்றார்.
""ஒரு கதையைக் கேள். சிங்கம் ஒன்று திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசிக்க ஆசைப்பட்டது. அது முதல் மலையில் நின்றது. ஏழாவது மலைக்கு தாவி விட்டால் வெங்கடாஜலபதியைப் பார்த்து விடலாம். அப்போது, ஒரு எறும்பு வந்தது. அதற்கும் ஏழுமலையானை தரிசிக்க ஆசை.
"சிங்கம் மலையைத் தாண்டி பகவானைப் பார்த்து விடும். என்னால் அது எப்படி சாத்தியம். நான் ஊர்ந்து சென்றால் பலநாட்கள் ஆகி விடுமே! வழியில், யாரும் மிதித்து விட்டால், மீண்டும் இன்னொரு பிறவி எடுத்து...'
இப்படி சிந்தித்த எறும்புக்கு "டக்'கென ஒரு யோசனை வந்தது. சிங்கத்தின் உடலில் ஒட்டிக்கொண்டால், அது தாவும் போது நாமும் ஏழுமலையைத் தாண்டி விடுவோம். அவன் தரிசனம் கிடைத்தால் பிறவிப்பிணி தீரும் என்று எண்ணியது. அதன்படியே செய்து தரிசனம் பெற்றது.
இதுபோலத் தான், நீயும் மகான்கள் நடத்தும் பிரார்த்தனையில் கலந்து கொள். அவரையே மானசீக குருவாக ஏற்றுக்கொள். அங்கே கேட்கும் நல்ல சொற்களே உன்னை பகவானிடத்தில் கொண்டு சேர்க்கும் பாதையாக அமையும்,'' என்றார்.

காட்டுக்குள்ளே திருவிழா

சீதாதேவி ராமனுடன் காட்டுக்குச் சென்றாள். அவர்கள் அத்திரி மகரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்தனர். அத்திரியின் மனைவி அனுசூயாவுக்கு சீதையைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அவளை வரவேற்று அன்போடு அணைத்துக் கொண்டாள்.
""சீதா! அரண்மனையில் இருந்து சுக சவுபாக்கியங்களை அனுபவிக்க வேண்டியவள் நீ. இப்படி கணவனோடு வந்து கஷ்டப்படுகிறாயே! அயோத்தியிலேயே இருந்திருக்கலாம் அல்லவா!'' என்று வாஞ்சனை யாகக் கேட்டாள். மகாராணியாக விளங்க வேண்டியவள், காட்டுக்குள் வந்து சிரமப்படுவது குறித்து அனுசூயாவுக்கு கண்ணீர் வராத குறை.
அப்போது சீதா சொன்னாள்.
""தாயே! நீங்களே இப்படி சொல்லலாமா! கணவனோடு இருப்பது தானே பெண்ணுக்கு அழகு! தாங்கள் தங்கள் கணவருக்கு சேவை செய்வதற்குத்தானே இங்கே தங்கியிருக்கிறீர்கள். உங்களை விட நான் என்ன மேன்மையான தியாகம் செய்து விட்டேன்,'' என்று கேட்டாள். (கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையே ஆட்டிப்படைத்தவள் அனுசூயா) சீதையை அனுசூயா பாராட்டினாள். அவளுக்கு பல ஆபரணங்களை அணிவித்து அழகு பார்த்தாள். அவளுக்கு தெரியும்! சீதையின் வடிவிலே வந்திருப்பது மகாலட்சுமியென்று! அவளது வாயாலேயே, மிதிலையில் சீதாராமருக்கு நடந்த கல்யாணம் பற்றி கேட்டாள். நாமெல்லாம், ஒரு பாகவதர் சொல்லித்தான் சீதா கல்யாணம் பற்றி கேட்டிருப்போம்.
அனுசூயாவோ, சீதையின் வாயாலேயே அதைக்கேட்டாள். கணவருக்கு சேவை செய்யும் பெண்களுக்கே இத்தகைய பாக்கியம் கிடைக்கும். அனுசூயா மிகுந்த பாக்கியசாலி. அந்த காட்டுக்குள் அன்றைய நாள், அவளுக்கு திருவிழா நாளாக அமைந்தது.

இந்த நேரமே நல்ல நேரம் தான்!

வாழ்க்கையில் நேரம் மிக முக்கியமானது. ஒன்றைச் செய்வதாக வாக்களித்து விட்டு, தாமதித்து செய்தால் உயிர் கூட போய்விடும் வாய்ப்புண்டு.
தசரதருடன் கைகேயி போர் ஒன்றுக்குச் சென்றாள். அந்தப் போரில் அவள் பல வகையிலும் அவருக்கு உதவினாள். தன் அன்பு மனைவியின் செயல்பாட்டினால் வெற்றி பெற்ற தசரதர், மகிழ்ச்சியில்,""கண்ணே! நீ என்னிடம் இரண்டு வரங்கள் கேட்கலாம். எதுவானாலும் தருவேன்,'' என்றார். அவள், ""இப்போது வேண்டாம்...பின்னால் பார்க்கலாம்,'' என்றாள்.
"பின்னால்' ..."பார்க்கலாம்' என்ற வார்த்தைகள் மனித வாழ்வுக்கு உகந்தவை அல்ல. அந்தந்த நேரத்தில் உரிய கடமையைச் செய்யாவிட்டால் கஷ்டம் தான் வரும். தசரதர் உடனே அவளை மடக்கி, ""அதெல்லாம் கிடையாது, இப்போதே ஏதாவது கேள்,'' என கட்டாயப்படுத்தி இருந்தால், அவள் மாளிகையோ அணிமணியோ வாங்கிக்கொண்டு அத்தோடு விட்டிருப்பாள். தசரதரின் தாமதத்தால் பிற்காலத்தில் ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. மகனைப் பிரிந்த தசரதரின் உயிர் பறிபோய்விட்டது. அதற்கெல்லாம் மேலாக மனைவியின் காலில் விழுந்து அழுது மானமும் போய்விட்டது.
எனவே, நல்ல நேரம் வரட்டும், பிறகு பார்க்கலாம் போன்ற வார்த்தைகளை உங்கள் அகராதியில் இருந்து எடுத்து விடுங்கள். இந்த நேரமே நல்ல நேரம் தான்!

நமக்கு என்ன தகுதியைக் கொடுத்திருக்கிறானோ, அதற்கேற்ப செயல்படுவதே வெற்றியளிக்கும்

ஒரு காட்டுப்பன்றி தற்பெருமை மிக்கதாக இருந்தது. காட்டிலுள்ள மரங்களைப் பார்த்த அந்தப் பன்றி, ""இந்த மரங்கள் எவ்வளவு உயரமாக இருக்கின்றன. இவற்றைப் போல என்னால் வளர்வதென்பது முடியாத காரியம். ஆனால், இந்த மரங்களை என்னளவுக்கு குறுக்கி விட்டால் என்ன என்று கணக்குப் போட்டது. ஒவ்வொரு மரத்தின் மீதும் தாவிக்குதித்து மேலே ஏறி, கிளைகளின் மீது நின்று அவற்றை ஒடித்துத்தள்ள முயன்றது.
கிளைகள் வளைந்ததே தவிர ஒடியவில்லை. பன்றிக்கோ கடும் கோபம். இந்த மரங்கள் இங்கே நின்றால் தானே உயரம் பற்றிய கவலை! இவற்றின் மீது முட்டி மோதினால் மொத்த மரங்களும் சாய்ந்து போகுமே என்று முட்ட ஆரம்பித்தது. மரம் சாயுமா என்ன! பன்றிக்கு தான் உடம்பெல்லாம் காயம். ரத்தம் வழிந்தது.
ஒரு கட்டத்தில், தன் முயற்சியில் தோல்வியுற்று, ரத்தம் அதிகமாக வெளியேறி பன்றி இறந்தே போனது. இது மாதிரி தான், யாரைப் பார்த்தாலும் அவர்கள் கருத்துக்கு எதிர்கருத்து பேசி, தங்கள் மூக்கை உடைத்துக் கொள்பவர்களாய் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும், யாரைப் பார்த்தாலும் மோதல் என்ற போக்கை கைவிடுங்கள். அவர்களைப் போல உயர வேண்டும் என்பதற்காக பொறாமையுடன், நீங்களும் செய்ய முயலாதீர்கள். கடவுள் நமக்கு என்ன தகுதியைக் கொடுத்திருக்கிறானோ, அதற்கேற்ப செயல்படுவதே வெற்றியளிக்கும்.

வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது

வாழ்க்கையே சலித்துப் போனது அந்த இளைஞனுக்கு!
""எப்போ பார்த்தாலும் உளியை எடுத்துக்கிட்டு "டங்! டங்!' என்று பாறையைக் குடைஞ்சிட்டு இருக்கோமே! இதை வைச்சு பெரிசா என்ன சாதிச்சுட்டோம்'' என்று வருந்தினான்.
உளிபட்ட பாறையிலிருந்து ஒரு பெண்தேவதை வெளிப்பட்டது.
அதை இளைஞன் வணங்கினான். அவனுக்கு நினைத்த வடிவெடுக்கும் மந்திரத்தை அந்த தேவதை உபதேசித்தது. ""மகனே! இந்த அபூர்வ சக்தி ஒருவாரம் மட்டும் உனக்கிருக்கும். அதற்குள், நீ என்ன நினைத்தாலும் சாதிக்கலாம். ஆனால், ஏழாவது நாளில் நீ என்னவாக இருக்கிறாயோ, அதுவே ஆயுள் முழுவதும் நீடிக்கும். அதனால் சிந்தித்து செயல்படு,'' என்று சொல்லி மறைந்தது.
சந்தோஷக் களிப்பில் தலைகால் புரியாமல் கூத்தாடினான் இளைஞன்.
சுட்டெரிக்கும் வெயிலில் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
""இப்படி வெந்து நொந்து போறதுக்கு பதிலா நானே சூரியனா இருக்கப்போறேன்,'' என்று நினைத்து மந்திரம் சொன்னான்.
என்ன ஆச்சர்யம்! கணப்பொழுதில் சூரியனாக வானமண்டலத்தில் பிரகாசிக்கத் தொடங்கினான். மகிழ்ச்சியும், தலைக்கனமும் அதிகரித்தது.
"இனி ஒருவனும் தன்னை அசைக்க முடியாது' என்று சந்தோஷப்பட்டான்.
ஒரிரு நாளில் சூறைக்காற்று வீசத் தொடங்கியது. வானத்தில் கருமேகம் கூடியது. சூரியனின் பிரகாசத்தை மேகம் மறைத்தது.
"சூரியனை மறைக்கிறப்போ மேகம் தானே உசத்தி. அப்போ இப்பவே மேகமா மாறிடப் போறேன்'' என்று தேவøதையை தியானித்து மந்திரத்தை ஜெபித்தான்.
மேகமாக மாறிய இளைஞன், உல்லாசமாக வானத்தில் மிதந்து திரிந்தான். மேகத்திலிருந்து மழையைக் கொட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினான்.
நினைத்தபடியே மழைநீராக மாறி வெள்ளமாய் பெருக்கெடுத்தான். மரம், செடி, கொடி என ஒன்றையும் விடாமல் இழுத்துக் கொண்டு சென்றான். . ஆனால், ஒரு பெரியபாறை மட்டும் அவன் எவ்வளவு முயற்சித்தும் சிறிதும் அசையவே இல்லை.
""இந்த பாறைக்கு தான் எவ்வளவு பலம். பெருமழையில் கூட அசையாமல் நிற்கிறதே'' என்ற எண்ணினான். மந்திரம் ஜெபித்து தானும் பாறையாக மாறினான்.
அப்போது அரண்மனைச்சிற்பி சேவகர்களுடன் அந்தப் பகுதிக்கு வந்தார்.
புதிய பாறையைப் பார்த்த சிற்பி, உளியால் தட்டிப்பார்த்தார். ""இந்தக்கல் நல்லா வேலைக்காகும்,'' என்று தெரிவித்தார். திறமை மிக்க அந்த சிற்பியைக் கண்டதும், ""ஜடம் போல பாறையா இருக்கிறதை விட சிற்பியா இருந்தா அழகான சிலை வடித்து மகிழலாம்'' என்று
முடிவெடுத்தவனாய் மந்திரம் ஜெபித்தான்.
பழைய படி தானும் சிற்பியாக மாறினான்.
தேவதை அவன் முன் தோன்றி,""மகனே! இன்றோடு ஒருவாரம் முடிந்து விட்டது. நீ இனி சிற்பியாகவே இருந்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்து,''என்று வாழ்த்தியது.
இருக்கிற வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்த சிற்பி, தன் வேலையை மகிழ்வுடன் கவனிக்க ஆரம்பித்தான்.

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

இதோ ஒரு இனிமையான கவிதை! இந்தக் கவிதையை இளவயதில் பள்ளியில் படிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. என்ன கவிதை அது!
""செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே
சக்தி பிறக்குது மூச்சினிலே''
பாரதியார் எழுதிய இந்தப்பாடல், ஒரு காலத்தில் மூன்றாம் பரிசு தான் பெற்றது. "ஆச்சரியமாக இருக்கிறதே!' என்பவர்கள் தொடருங்கள்.
சென்னையில் ஒரு இலக்கிய அமைப்பினர் கவிதைப்போட்டி அறிவித்தனர். முதல்பரிசு ரூ.300, இரண்டாம் பரிசு ரூ.200, மூன்றாம் பரிசு ரூ.100. பாரதியாரின் நண்பர்கள்,""பாரதி! நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டால், நீங்களே முதல் பரிசு பெறுவீர்கள். உங்கள் பாட்டுக்கு ஏது எதிர்பாட்டு?'' என்று தூண்டினர்.
பாரதியாரும் நண்பர்களுக்காக ஒப்புக்கொண்டார். கவிதை அனுப்பப்பட்டது. அந்தக் கவிதை தான் மேற்கண்ட பாடல்.
இலக்கிய அமைப்பினர், பாரதியின் கவிதைக்கு மூன்றாம் பரிசு அறிவித்தனர்.
நண்பர்கள் கொதித்துப் போய் பாரதியிடம் வந்தார்கள்.
""பார்த்தீர்களா! தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற கவிதைகளில் எந்தச் சுவையும் இல்லை. இருப்பினும், அவற்றை முதல் இரண்டு பரிசுகளுக்கு தேர்வு செய்துள்ளனர். உங்கள் பாட்டு உயர்வானதாய் இருந்தும் ஒதுக்கி விட்டார்களே!'' என்றனர்.
பாரதி அமைதியாக,""அவர்கள் யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என முடிவு செய்திருந்தார்களோ, அவருக்கு அதைக் கொடுக்க கையாண்ட குறுக்கு வழியே இந்தப் போட்டி. இதை பெரிதுபடுத்தாதீர்கள்,'' என பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டார்.
அன்று மூன்றாம் பரிசு பெற்ற பாடல், இன்று முதல்தரமாக மக்கள் நெஞ்சில் நிற்கிறது. மற்ற பாடல்களை எழுதியவர்கள் பற்றியோ, அந்தப் பாடல்கள் பற்றியோ இதுவரை சிறு தகவல் கூட இல்லை.

உழைப்பவரையே உயர்மக்கள் விரும்புவர்

மன்னர் வருவதைக் கேள்விப்பட்ட மக்கள், அவரைக் காண கிளம்பினர். அன்று யாரும் வேலைக்குச் செல்லவில்லை. தங்களுக்கு, மன்னர் ஏதாவது பணம் கொடுப்பார் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. உழைப்பில் நம்பிக்கை கொண்ட ஒரு மூதாட்டி மட்டும், நார்க்கூடை முடைந்து கொண்டிருந்தாள். அப்போது ஒருவன் அவள் வீட்டைக் கடந்து சென்றான்.
""பாட்டி, ராஜா வாராருன்னு அடுத்த ஊரே கோலாகலமா கூடி நிக்குதே! நீ மட்டும் ஏன் போகலை?'' என்றான்.
""உழைச்சா தான் என் மனசுக்கு மகிழ்ச்சி. வேலையை பாரமா நினைக்கிற சோம்பேறிக தான், ராஜாவைப் பாத்தா ஏதாவது கிடைக்குமுனு போயிருப்பாங்க,'' என்று சொல்லி படபடத்தாள்.
வாய் விட்டுச் சிரித்த அந்த வழிப்போக்கன் பாட்டியிடம், அரசு முத்திரையிட்ட தங்க மோதிரத்தை நீட்டினான். வந்திருப்பவர் நாடாளும் அரசன் என்பதை அறிந்த அவள் எழுந்து நின்று மரியாதை செய்தாள்.
""அம்மா! என்னைப் பாக்கப் போனவர்கள் திரும்பி வந்ததும், உழைச்சுப் பிழைக்கிற என்னைத் தரிசிக்க ராஜாவே வீட்டுக்கு வந்தார் என்று சொல்லுங்கள். முத்திரை மோதிரத்தை ஊராரிடம் காட்டுங்கள்,'' என்றார்.
ராஜா படாடோபத்துடன் வருவார் என்று காத்து நின்ற மக்கள், அவர் சாதாரண உடையில் வந்து சென்றதை அறிந்து ஏமாந்தனர். பாட்டிக்கு அவர் அளித்த சன்மானம் பற்றி அறிந்தனர். உழைப்பவரையே உயர்மக்கள் விரும்புவர் என்ற உண்மையை உணர்ந்தனர்

எல்லா உயிர்களும் இறைவடிவமே

பண்டரிபுரத்தில் சாதுக்கள் ஒன்றுகூடி "பாண்டுரங்கா பண்டரிநாதா' என்று ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர். மறுபுறம் ஏகாதசி விரதம் முடிந்து, துவாதசி பாரணைக்காக (உணவுக்காக) சப்பாத்தி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
சப்பாத்தியில் விட்ட நெய்யின் மணம் காற்றில் பரவியது.
ஒரு கருப்பு நாய் சப்பாத்தியை முகர்ந்தபடி சமையல்கட்டிற்கு வந்தது. மற்ற சாதுக்கள் தங்கள் அருகில் வந்த நாயை அடித்து விரட்டினர். அந்த நாய், பாண்டுரங்கனின் அடியவரான நாமதேவர் அருகில் வந்தது. அவர் சுட்டு வைத்த சப்பாத்தியை கவ்விக் கொண்டு வேகமாக வெளியேறியது. நாமதேவர், தன் அருகில் இருந்த நெய்க்கிண்ணத்தை தூக்கிக் கொண்டு அதன் பின்னால் ஓடினார்.
நாயின் வாயிலிருக்கும் சப்பாத்தியை பறிக்கத் தான் நாமதேவர் ஓடுகிறார் என்று எண்ணிய சாதுக்கள் சிரித்தனர்.
நாமதேவரோ, நாயைப் பிடித்து இழுத்து, கழுத்தைக் கையால் அரவணைத்தபடி, ""நெய் இல்லாமல் சாப்பிட்டால் சப்பாத்தி ருசிக்காதே! இதோ நெய்யையும் சேர்த்து சாப்பிடு'' என்று சப்பாத்தியில் நெய்யைத் தடவினார்.
அப்போது நாய் பேசியது. ""நாமதேவா! நான் தான் பாண்டுரங்கன். நாயின் வடிவில் வந்துள்ளேன்,'' என்றது. கண்ணீர் பொங்க நாமதேவர் கைகளைக் குவித்து வணங்கினார். எல்லா உயிர்களும் இறைவடிவமே என்ற உண்மையை சாதுக்கள் உணர்ந்து கொண்டனர்

மக்கள் சேவையே மகேசன் சேவை


தர்மபுர அரசன் மகேந்திரனின் புதல்வி செல்வபிராட்டி. அழகில் தேவதை. தினமும் அதிகாலையே எழும் பழக்கமுள்ளவள். நீராடி, திருநீறு அணிந்து, குங்குமமும் பூவும் சூடி சிவபெருமானை வழிபடுவாள். ஆறு மணிக்குள் பிரார்த்தனை முடிந்து விடும்.
அந்த குணவதி சிவனிடம்,""பெருமானே! நான் உன்னிடம் பெரிய கோரிக்கை ஒன்றை வைக்கப் போகிறேன். எனக்கு வாய்க்கும் கணவன் மிகுந்த குணவானாகவும், தர்மசிந்தனை உள்ளவனாகவும், உன்மேல் பக்தி கொண்டவனாகவும் இருக்க வேண்டும்,'' என்றாள்.
அவளது கோரிக்கையை சிவன் ஏற்றிருப்பார் போலும்! மணிவண்ணன் என்னும் இளவரசன் அவளுக்கு கணவனாக அமைந்தான். குணத்தில் தங்கம். அவளோடு அதிகாலையே எழுந்து, சிவவழிபாடு செய்வான். தன் அன்புக்கணவன் குறித்து செல்வபிராட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனை கண்ணுக்கும் மேலாக வைத்து, அவன் சொன்னதுசரியோ... தவறோ... அதை அப்படியே ஏற்று பத்தினி தெய்வமாய் வாழ்ந்தாள்.
ஒருமுறை, அவர்கள் பள்ளியறைக்கு சென்ற போது, வேலைக்காரி அங்குள்ள பஞ்சணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். இருவருமே அதிர்ந்தனர். செல்வப்பிராட்டி அவளை எழுப்பினாள். அவள் திடுக்கிட்டு எழுந்து, அரசரையும், ராணியையும் கண்டு மிரண்டாள். பயத்தில் உடல் நடுங்கியது.
""ஏனடி இதில் படுத்தாய்?'' மணிவண்ணன் அதிகாரமாய் கேட்டான்.
""மகாராஜா! எனக்கு பல பிரச்னைகள். உறங்கி பல நாட்களாகிறது. வீட்டில் இருப்பது ஒரு கிழிந்த பாய். அதிலுள்ள கோரை என் உடலை ஆங்காங்கே கிழிக்கும். தரையில் படுத்தால் உடைந்த மணல்துகள்கள் வருத்தும். மனப்பிரச்னையோடு உடல் பிரச்னையும் சேர்ந்ததால் தூங்கி பல நாட்களாகி விட்டது. இன்று படுக்கையறையை சுத்தம் செய்ய வந்தேன். அசதியில் இதில் சாய்ந்தேன். எப்படியோ தூங்கி விட்டேன். அதற்கு இதன் சொகுசு கூட காரணமாக இருக்கலாம். எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள், ஏற்றுக்கொள்கிறேன்,'' என்றாள்.
செல்வப்பிராட்டி அவளை அனுப்பி விட்டாள்.
சற்றுநேரத்தில், யாரோ ஒரு துறவியை காவலர்கள் அடிக்கும் சத்தம் கேட்டது. மன்னன் விசாரித்தான்.
""ராஜா! இவர் தாங்கள் சாப்பிட்டு தூக்கிஎறிந்த பழத்தோலை எடுத்து சாப்பிட்டார். அதனால் அவரை உதைக்கிறோம்,'' என்றனர்.
அப்போது துறவி,""ராஜா! பழத்தோல் சாப்பிடும் எங்களுக்கே இவ்வளவு அடி என்றால், இதையெல்லாம் சாப்பிடுமளவு ஆட்சி நடத்தும் உங்களுக்கு எவ்வளவு அடி கிடைக்கப் போகிறதோ!'' என்று சொல்லி சிரித்தார்.
மணிவண்ணனுக்கு சுரீர் என்றது.
செல்வப்பிராட்டி அவனிடம்,""அன்பரே! அவர் சொல்வது உண்மை. கஜானாவில் <உறங்கும் பணத்தை ஏழைகளின் தேவைக்கு செலவழிப்போம். உண்ண உணவும், படுக்க பாயும் கூட தராமல் நாம் ஆட்சி நடத்துவதில் பயன் என்ன! அந்த துறவி சொன்னது போல் நமக்கு தெய்வ சந்நிதியில் தண்டனை உறுதி தானே! அதிகாலையே எழுந்து தெய்வத்தை வணங்கினால் போதாது. தெய்வத்துக்குப் பிடித்தமான தர்மச் செயல்களை செய்து மக்களை வாழ வைக்க வேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை,'' என்றாள்.
அன்று முதல் அவர்கள் மக்களின் நன்மைக்காக திட்டங்களை செயல்படுத்தினர்

குருவநம்பி

மண்பாண்டத் தொழிலாளியான குருவநம்பி என்பவர் வீட்டில் ஏழுமலையானின் மண்சிலை இருந்தது. அந்த சிலைக்கு மண்ணில் செய்த பூக்களால், அவர் அர்ச்சனை செய்து வந்தார். அவரது நிஜபக்தி காரணமாக, வீட்டுச்சிலை முன் விழுந்த மலர்கள், திருப்பதி கோயிலில் இருந்த ஏழுமலையான் முன்னாலும் விழுந்தன. இதைக் கண்ட அர்ச்சகர் அதிசயத்துடன், தொண்டைமான் சக்கரவர்த்தியிடம் தெரிவித்தார். விஷயமறிந்த மன்னர், குருவநம்பியைக் காண வந்தார். மண்மலர்கள் சுவாமி முன் விழக்காரணமாக இருந்த தன்னை மன்னர் தண்டித்து விடுவாரோ என பயந்த குருவநம்பி, கையிலிருந்த தண்டத்தால் தலையடித்துக் கொண்டு உயிர் துறந்தார். தொண்டைமானும் மனம் வருந்தி தன் உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றபோது, பெருமாள் காட்சியளித்து குருவநம்பிக்கு உயிர் கொடுத்தார். திருப்பதி மலையில், அலிபிரி வழியாக மலைக்குச் செல்லும் சோபனமார்க்கத்தில் (பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் மலைப்பாதை) குருவநம்பி வாழ்ந்த "குருவமண்டபம்' உள்ளது

கடவுளை அறியாதவன் எதற்கு சமம்?

கங்கைக்கரையோரம் ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.
திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில், நாய்கள் வேகமாகக் குரைத்தன. குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது. அந்த நாயைச் சுற்றிக்கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன. முன்பற்கள் தெரிய ஆக்ரோஷமாக நாய்கள் குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை. வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க வேண்டும் என்பதிலேயே அதன் கவனம் இருந்தது.
இதைக்கண்ட ராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம், ""இந்த நாயிடமிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள்?,'' என்றார்.
ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள்.
ஒரு சீடர், ""நாய்களின் இயல்பு இதுதானே. மற்ற நாய்கள் பார்த்திருக்க ஒரு நாய் தின்று கொண்டிருக்கும்,'' என்றார்.
""வலிமை தான் எப்போதும் ஜெயிக்கும். வலிய நாய் ஜெயித்து விட்டது அவ்வளவே,'' என்றார் மற்றொருவர்.
""எதிலும் முந்தியவர்க்கே முதன்மை. முரட்டுநாய்எலும்பை எடுப்பதில் முந்திக் கொண்டது,'' என்றார் மூன்றாமவர்.
விவேகானந்தரோ தத்துவரீதியாக இந்த காட்சியை விவரித்தார்.
""நாய் அமைதியாக உணவைச் சுவைப்பது போல, கடவுளை அறிந்த ஞானிகளும் அமைதியில் ஒன்றி விடுவார்கள். உணவு கிடைக்காத மற்ற நாய்கள் குரைப்பதைப் போல, கடவுளை அறியாதவர்கள் மட்டுமே, அவரைப் பற்றி எதையாவது பிதற்றிக் கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல் ஆரவாரம் செய்வார்கள்,'' என்றார்.

ஏழைகள் இல்லாத நாடு

மகாபலி சக்கரவர்த்தி விஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்டு பாதாள லோகத்துக்கு அனுப்பப்பட்டார். அந்த உலகின் அரசனானான் மகாபலி. ஒருமுறை தர்மரும் கிருஷ்ணரும் பாதாள லோகம் வந்தனர்.
அவர்களுக்கு தங்கத்தட்டில் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. ஏவலர்கள் தாராளமாக அறுசுவை உணவை இருவருக்கும் வழங்கினர். சாப்பிட்டு முடித்ததும் தட்டைக் கழுவி அங்கேயே வைத்தனர். ஏவலர்கள் அவர்களிடம், ""ஐயா! எங்கள் நாட்டில் ஒருவருக்கு கொடுத்ததைத் திரும்பப்பெறும் வழக்கமில்லை. இவற்றை நீங்களே எடுத்துச் செல்லுங்கள்,'' என்றார்கள்.
பின், அவர்கள் மகாபலியைச் சந்தித்தனர். தர்மர் தான் செய்யும் தர்மம் பற்றி மகாபலியிடம் சொன்னார். ""மகாபலி! நான் தினமும் 500 பேருக்கு அன்னதானம் கொடுப்பது வழக்கம்,'' என்று பெருமையடித்தார்.
""அப்படியா! உங்கள் நாட்டில் அவ்வளவு ஏழைகள் இருக்கிறார்களா? இங்கே இருப்பதை சாப்பிட ஆள் தேடினாலும் கிடைக்கமாட்டேன் என்கிறது,'' என்றான் மகாபலி.
தர்மருக்கு முகத்தில் ஈயாடவில்லை.

வால்மீகி

ரத்னாகரர் என்பவர் திருடி பொருள் சேர்த்தார். ஒருமுறை காட்டு வழியே வந்த ஏழு ரிஷிகளை மறித்தார்.
அவர்களில் ஒரு ரிஷி""அப்பனே! பொருள் வேண்டியா எங்களைத் தடுத்தாய். உணவு கூட அன்றாடம் கிடைத்தால் தான் உண்போம். இல்லாவிட்டால் பட்டினி கிடப்போம். எங்களிடம் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? அது சரி...எதற்காக திருடுகிறாய்?'' என்று கேட்டார். ""சுவாமி! என் குடும்பம் பெரியது. அவர்களுக்கு உணவிடவே திருடுகிறேன்,'' என்றார் ரத்னாகரர்.
""குடும்பம் பெரிது என்பதற்காக திருடுவது பாவமல்லவா! உன்னிடம் பொருளை இழக்கும் குடும்பங்கள் விடும் சாபம், உன்னை ஏழேழு ஜென்மத்திற்கும் தொடர்ந்து வந்து வருத்துமே!'' என்ற முனிவர்களிடம்,"" நான் என்ன தான் செய்ய!'' என கேட்டார் ரத்னாகரர்.
""ரத்னகரா! நீ உனக்கு சேரும் பாவத்தை உன் குடும்பத்தினருக்கு பங்கிட்டு தருவதாகச் சொல். அவர்கள் பதில் சொல்வதைப் பொறுத்து முடிவெடு'' என்றார்கள்.
ரத்னாகரரும் அவ்வாறே செய்ய, குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். தன்னை பணத்துக்காக மட்டுமே தன் குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனர் என்று உணர்ந்தவர் திருட்டுத் தொழிலை விட்டு விட்டார்.
ரிஷிகள் மூலம் "ராம' மந்திரத்தை உபதேசம் பெற்று தவமிருந்தார். புற்று அவரை மூடியது.
"வால்மீகம்' என்றால் "புற்று'. அதனால் "வால்மீகி' என்ற பெயர் பெற்று ராமாயண காவியத்தை எழுதும் பாக்கியம் பெற்றார்.

ஆன்மிக கதை

கொளுத்துற வெயில், நா வறட்டும் தாகம். எங்காவது போய் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்ற கட்டாயம்...'' என்று யோசிக்கிற வேளையில், ஒரு நண்பனின் வீடு எதிர்ப்படுகிறது. நிம்மதி...அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என நுழைந்தாயிற்று.
நண்பன் ஆபீசுக்கு போயிருந்தான். அம்மா தான் இருந்தார்.
""வாடா செல்வம்! என்ன இந்த நேரத்துலே! உன் பிரண்ட் ஆபீஸுக்கு போயிருப்பான்னு உனக்கு தெரிஞ்சிருக்குமே!''
""இல்லம்மா! நானும் ஆபீஸ் வேலையாத்தான் வெளியே வந்தேன். வெயில் தூக்கிடுச்சு. தாகமா இருக்கு! தண்ணீர் கொடுங்கம்மா!''
""அஞ்சே அஞ்சு நிமிஷம் பொறு,'' என்றார் அம்மா.
""அம்மா! நா வறளுது. தண்ணீர் கொடுங்க!'' என்றவனிடம், மீண்டும் அம்மா,""செல்வம்! வெளியே இருந்து வீட்டுக்குள் வர்றவங்க, உடனே தண்ணீர் குடிக்கக்கூடாதுன்னு உனக்கு தெரியுமில்லையா. அதனால் தான் கொஞ்சம் பொறுக்கச்சொல்றேன்,'' என்றவர்
அதற்கான காரணம் தெரியுமா?'' என்றார்.
""அம்மா! எங்க சயன்ஸ் டீச்சர் சின்ன வயசிலே சொல்லிக்கொடுத்தது ஞாபகமிருக்கு! வெளியிலே இருக்கிற வெப்பநிலையும், வீட்டுக்குள் இருக்கிற வெப்பநிலையும் மாறுபடும். அதே போல காற்றழுத்தமும் மாறுபடும். நம்ம உடம்பு அதற்கேற்றாற் போல் தயார் செய்துக்க கொஞ்ச நேரம் எடுக்கும். அதற்குள் தண்ணீர் குடித்தால் தலைவலி, காய்ச்சல், தோல் பிரச்னைகள் கூட வருமுன்னு சொன்னாரு!''
""பின் ஏன் அவசரப்படுறே! நீ சொன்னது அறிவியல் காரணம். நான் எங்க காலத்தைச் சொல்றேன்! பெரியபுராணம் எழுதினாரே சேக்கிழார். அவர் திங்களூரில்(தஞ்சாவூர் அருகில்) அப்பூதி அடிகள் அமைத்த தண்ணீர் பந்தல் பற்றி சொல்லியிருக்கார்!
அந்த தண்ணீர் பந்தல் இப்போது வெட்டவெளியில் அமைக்கப்படும் தண்ணீர் பந்தல் போல் இல்லை. வெயிலில் வருபவர்கள் ஓலைக்கூரையின் கீழ் நின்று சற்று ஆசுவாசப்படுத்திய பிறகு, தண்ணீர் குடிக்கும் வகையில் இருந்தது. தாமரை மலர்கள் நிறைந்த குளம்போல குளிர்ச்சியாய் இருந்ததாம் அந்தப் பந்தல்,'' என்ற அம்மாவிடம்,""அம்மா... இப்ப நம்ம பேச்சிலேயே அஞ்சு நிமிஷம் கழிஞ்சாச்சு! இனியாச்சும் தண்ணீர் கொடுப்பீங்க இல்லியா!'' என்று சிரித்த செல்வத்திடம் அம்மா மண்பானை நீரைக் கொடுத்தார்.

அன்பு கொடுத்தது! ஆசை கெடுத்தது

ஒருவியாபாரி, மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த துறவியைக் கண்டார். அவரது, திருவோட்டில் ஒரு நாணயத்தை சப்தமில்லாமல் வைத்து விட்டு புறப்பட்டார். அன்று வியாபாரம் மளமளவென நடந்தது. பாக்கி பணம் தானாகவே கிடைத்தது. இதற்கு துறவியின் சக்தி தான் காரணம் என்று எண்ணினார்.
மறுநாளும் அதே துறவியின் திருவோட்டில் காசு போட்டார். வியாபாரம் படுஜோர். இப்படியே பலநாட்கள் தொடர்ந்தது. வருமானம் பெருகியது. பணக்காரராகி விட்டார். பணம் சேர்ந்தாலும், தன் வசதிக்கு காரணமாக கருதிய துறவியை அவர் மறக்கவில்லை. துறவியும், வியாபாரியைக் காணும் நேரமெல்லாம் மெல்லிய புன்னகை செய்வார்.
வியாபாரியும் வணக்கம் தெரிவித்து விட்டு நாணயத்தை ஓட்டில் இடுவார். ஒருமுறை கூட இருவரும் பேசியதில்லை. ஒருநாள் வியாபாரி வரும் போது, துறவியைக் காணவில்லை. அக்கம்பக்கத்தில் அவரைப் பற்றி விசாரித்தார். ஒருவருக்கும் தெரியவில்லை. சோர்வுடன் நடந்தார்.
வழியில் அவர் கண்ட காட்சி ஆச்சரியத்தைத் தந்தது. துறவி, இன்னொரு வயதான துறவியின் காலில் விழுந்து ஆசி பெறுவதைப் பார்த்தார். வியா பாரிக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை. துறவி வயதான தன் குருவிடம், ""குருவே! உங்கள் ஆசியால் எல்லாம் நன்றாக நடக்கிறது,'' என்றார்.
இதைப் பார்த்த வியாபாரி, ""அடடா... இந்த சின்ன துறவிக்கே இவ்வளவு சக்தி இருக்கிறதென்றால், அவருக்கு ஆசி கொடுக்கும் பெரிய துறவிக்கு எவ்வளவு சக்தியிருக்கும். இவருக்கு நாம் காசு போட்டால், லட்சாதிபதியாக இருக்கிற நாம் கோடீஸ்வரராகி விடலாமே என கணக்கு போட்டார்.
மறுநாள், தங்க நாணயத்துடன் புறப்பட்டார். திருவோட்டில் அதை போட்டு வணங்கினார். வியாபாரத்தைக் கவனிக்க கடைக்குப் புறப்பட்டார். அன்று அரசு அதிகாரிகள் வரிஏய்ப்பு செய்ததாகக் கூறி சோதனைக்கு வந்தனர். அதனால், வியாபாரமே நடக்கவில்லை.
"" ஐயையோ! பெரிய துறவி பற்றி தப்புக்கணக்கு போட்டு விட்டோமே! நஷ்டம் வந்து விட்டதே!'' என வருந்தினார். வயதான துறவியிடம் சென்று நடந்ததைக் கூறினார்.
அவரோ, "" அன்பு கொடுத்தது! ஆசை கெடுத்தது!'' என்று சொல்லிச் சிரித்தார்.
""மகனே! நீ அந்த துறவிக்கு அன்பினால் காசு கொடுத்தாய். அதுவே, உனக்கு பன்மடங்காக திரும்ப கிடைத்தது. இப்போதோ, பேராசையால் காசு போட்டாய். கடவுளும் நஷ்டத்தை பரிசாக அளித்து விட்டார். அன்பின் உன்னதத்தை இனியாவது உணர்ந்து கொள்,'' என்றார்.வியாபாரி இரண்டு துறவிகளிடமும் மன்னிப்பு கேட்டார்.

Thursday, July 18, 2013

அலையின் தொடர்பு :

அலையின் தொடர்பு :

தூய்மையான நல்எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றது. அதேபோன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள். வாழ்த்து உங்கள் மனதில் ஆழப்பதிந்துவிடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்கு தீமை நினைத்து சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்கு சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றி பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும் மனதிற்கும் பாதிப்பு செய்துவிட்டுத் தான் மற்றவரை சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.
...
நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது. நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்து பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

Wednesday, July 17, 2013

பாலஸ்தாபனம்


பாலஸ்தாபனம்

 

பாலஸ்தாபனம் செய்யப்பெறும்போது மூல பிம்பத்திலிருந்து கும்பத்தில் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து, பின் கும்பத்திலிருந்து பாலபிம்பத்தில் ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்பெறுவார். இதையேபாலஸ்தாபன கும்பாபிஷேகம்என்பர். பாலஸ்தாபன காலத்திற்கு ஏற்ப கத்தி, கண்ணாடி, சித்திரம், பாதுகை, ஆயுதம், மரச்சிலை, கல்லுருவம் ஆகியவற்றை பாலபிம்பமாகப் பயன்படுத்திப் போற்றி வழிபடுவர். நினைத்தவுடன் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்து விட்டு பின்னர் திருப்பணிகள் நடைபெறத் தாமதிக்கின்றனவே என்று கவலை கொள்ளாது முறைப்படி இறைவனிடம் அநுக்ஞை பெற்று திருப்பணிக்கான சகல ஆயத்தங்களையும் செய்துகொண்டு, கோயில் திருப்பணிக்காக ஒரு குழுவையும் நியமித்து, அதனை செவ்வனே இயங்க வழிசெய்து இத்தனையாம் நாளில் கும்பாபிஷேகம் செய்வது (நாலு மாதத்தில் கும்பாபிஷேகம் செய்வது) என்று முடிவு செய்துகொண்டு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்தால், விரைவாகத் திட்டமிட்டு பணிகளை நடாத்தி கும்பாபிஷேகம் செய்ய வாய்ப்பாயிருக்கும்.

நான் அறிந்த வரையில் சில முக்கிய ஆலயங்களில் கும்பாபிஷேக நாளை நிர்ணயம் செய்த பின்னரே பாலஸ்தாபனம் செய்கின்றனர். பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது. ஏனெனில் ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காகவாம்