Sunday, September 1, 2013

ஸ்ரீகிருஷ்ணர் செய்த மாயம்

ஸ்ரீகிருஷ்ணர் ஐந்து வயதுக் குழந்தையாக யசோதையிடம் ஆயர்பாடியில் வளர்ந்து வந்த போது தெருவில் ஒரு மூதாட்டி மூங்கில் கூடையில், நாவல் பழங்களை நிரப்பி விற்றுக் கொண்டிருந்தாள். `கைப்பிடி அரிசி கொடுத்தால், ஒரு பிடி பழங்கள் தருவேன்' என்று அந்த மூதாட்டி கூறினாள்.

இதை கேட்ட குழந்தை கண்ணன், வீட்டுக்குள் சென்று கையில் ஒரு கைப்பிடி அரிசி எடுத்து வந்தான். ஆனால் மூதாட்டியிடம் வருவதற்குள்ளாகவே, மண்ணில் அரிசி சிந்தி விட்டது.

உலகத்துக்கே படியளக்கும் அந்தக் குழந்தை, மூதாட்டியைப் பரிதாபமாகப் பார்த்து `பழம் தா' என்று கேட்க, ஏழை மூதாட்டியும் அன்பு கொண்டு, தன் இரு கைகளாலும் நாவல் பழங்களை அள்ளிக் கொடுத்து விட்டு, சிதறிய அரிசியைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு குடிசைக்குத் திரும்பினாள்.

குடிசைக்குத் திரும்பியவுடன் தன் கூடையை மூதாட்டி பார்த்தாள். அப்போது, அதிலிருந்த மொத்த அரிசியும் கிருஷ்ணரின் மாயத்தால் பொற்காசுகளாக மாறியிருந்தது.

நண்பனுக்கு சேவை :

எல்லாரும் கண்ணனின் திருவடிகளை வணங்குவார்கள். ஆனால் கண்ணன் ஒரு பக்தரின் கால்களை தடவியே கொடுத்துள்ளான். அந்த பாக்கியம் பெற்றவர் குசேலர். இப்போதெல்லாம் ஏழைகளை, நண்பனாக ஏற்றுக்கொள்ளவே தயங்குகின்றனர்.

ஆனால் கண்ணன் அப்படியல்ல. எப்போதோ தன்னுடன் படித்த ஏழை குசேலரை அவன் மறக்கவில்லை. தன்னைக்காண குசேலர் வந்துள்ளார். எனத்தெரிந்ததும், கண்ணன் தன்படுக்கையில் இருந்து எழுந்து ஓடோடிச்சென்று வரவேற்றான்.

இத்தனைக்கும் அவன் துவாரகாபுரிக்கு மன்னன். குசேலரின் திருவடியை வணங்கினான். `கால்கள் தேய இவ்வளவு தூரம் நடந்து வந்தாயா?' எனக்கேட்டு, "உனது திருவடிகள் இவ்வளவு தூரம் நடந்ததால் காய்த்துப்போய் விட்டதே!'' என்று சொல்லி அவற்றை வருடினான். கண்ணணின் அன்பைக் கண்ட குசேலர் மெய்மறந்து போனார். இப்படிப்பட்ட நண்பனிடம் தனக்கென எதுவும் கேட்காமலேயே திரும்பினார் குசேலர்.

No comments:

Post a Comment