Thursday, September 19, 2013

தீயவர்களை அழிப்பதற்காகவே கண்ணன் பிறவி எடுத்தான்

பலருக்கு வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தீர்வு காண முடியாத சந்தேகங்கள் வருவதுண்டு. ஒருவர் தனது தாய்க்கோ, தந்தைக்கோ அவர்கள் உடல் நலம் குன்றிய நேரத்தில் வைத்தியம் செய்திருப்பார். சிகிச்சை பலனின்றி இறந்திருப்பார்கள். 5, 6 வருடங்களுக்குப் பின்னர் இவருக்கு சந்தேகம் வந்துவிடும். ஒருவேளை மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தால் தப்பியிருப்பாரோ அல்லது வேறு ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் காண்பித்திருக்கலாமோ என்று சந்தேகம் வரும். தீர்க்க முடியாது என்று தெரியும், ஆனாலும் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.
மகாபாரதத்தில் தருமருக்கு இப்படியான சந்தேகம் வந்தது. போர் முடிந்து தருமர் ராஜ்ய பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டார். அப்போது தான் சந்தேகம் வந்தது. இத்தனை உயிர்களை, அதிலும் நெருங்கிய உறவினர்களை கொன்று இந்த ராஜ்யத்தை அடைந்திருக்க வேண்டுமா? இதை விட காட்டிலேயே இருந்திருக்கலாமே என்று யோசிக்கத் தொடங்கினார்.
அப்போது நாரதர் தருமருக்கு சந்தேகம் தெளிவிக்கிறார். கௌரவர்களை கொல்ல வேண்டுமென தீர்மானித்தது நீயல்ல, கண்ணனே தீர்மானித்தான், கண்ணனே கொல்லச் சொன்னான், கண்ணனே கொலை செய்வித்தான். ஆகவே இந்தக் கொலைகளுக்காக நீ வருத்தப் படவேண்டியதில்லை. தீயவர்களை அழிப்பதற்காகவே கண்ணன் பிறவி எடுத்தான். உங்களை (பாண்டவர்களை) அவன் கருவியாக பயன்படுத்தினான். அவ்வளவே.
நடந்ததை நினைத்து வருத்தப் படுவதோ, அல்லது சந்தேகம் கொள்வதோ தேவையற்றது. எல்லாம் இறைவன் கட்டளைப் படியே நடக்கிறது என்பதை தெளிந்தோமானால் மனசில் சங்கடம் இல்லை, சஞ்சலம் இல்லை.
இதற்காக ஒருவரை துன்பப் படுத்திவிட்டு கடவுள் தான் என்னை கருவியாக்கி அப்படி செய்வித்தார் என்று யாரும் விதண்டா வாதம் பண்ணக்கூடாது.

No comments:

Post a Comment