Monday, September 9, 2013

விநாயகசதுர்த்தி

இன்று விநாயகசதுர்த்தி நன்நாளாகும். இறைவழிபாட்டு முறைமைகளில் மிகவும் இயல்பானது, இலகுவானது விநாயக வழிபாடு. ‘ஓம்’ காரம் எனும் பிரணவ மந்திரத்தின் சாரமாகவும் சாயலாகவும், விநாயகருடைய உருவம் போற்றப்படுகிறது. பல இடங்களிலும், இது இந்துக்களின் சமய வழிபாடாக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் சில பகுதிகளில் இது பெரும் கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மாதம் ஆவணியில் அமாவாசைக்கு பிறகு (வளர்பிறை) சதுர்த்தி திதி அன்று வருவது தான் விநாயகர் சதுர்த்தி. விநாயகர் எளிமையானவர். அவரை வழிபடலாம். அவரை மனதால் நினைத்தாலே போதும் ஓடி வந்து அருள் தருவார். விநாயகர் சதுர்த்தி அன்று அவரை எப்படி, எப்போது வழிபடலாம் என்று காணலாம். விநாயகர் பூஜை நடத்த விரும்புபவர்கள் மண்ணினால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்க வேண்டும். ஏனென்றால், அது தான் கரைப்பதற்கு எளிதாக இருக்கும்.

விநாயகர் சதுர்த்தி திதி தொடங்கிய பின்னரே விநாயகர் சிலையை வாங்க வேண்டும். சிலையை வாங்கப் போகும் முன்பு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு சிலையையும், பூஜை சாமான்களையும் வாங்கி வர வேண்டும். பிள்ளையாரை வாங்கி வரும் முன்பு வீட்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விநாயகர் பூஜை நடக்கும் இடத்தில் சுத்தம் செய்த மரப்பலகையை வைக்க வேண்டும். அதில் பச்சரிசி மாவினால் கோலமிடுங்கள். நுனியுடன் கூடிய வாழை இலையை பலகையின் மீது விரிக்க வேண்டும். அப்போது இலையின் அடிப்பகுதி (வெட்டப்பட்ட பகுதி) நமக்கு இடதுபுறம் இருக்கும்படி போட வேண்டும். அதன்பின் முனைமுறியாத பச்சரிசியை மூன்று கையளவு எடுத்து இலையில் பரப்ப வேண்டும். அதில் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி (உ) வரைய வேண்டும். அதன் கீழே ‘ஓம்’ எழுத வேண்டும். அந்த பச்சரிசி மீது நாம் வாங்கி வந்த பிள்ளையாரை வைக்க வேண்டும். பின்னர் மலர்களால் அலங்கரிக்கலாம். அவருக்கு பிடித்தமான எருக்கம்பூ, அருகம்புல் இடம்பெறுவது நல்லது. குங்குமம் சந்தனம் இட வேண்டும்.காகிதத்தால் செய்யப்பட்ட அலங்கார குடையையும் வைக்கலாம்.

பிள்ளையாரின் நாபியில் (தொப்புளில்) ஒரு ரூபாய் நாணயம் வைக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் தங்க காசு வைக்கலாம். அதன் பின் விநாயகருக்கு பூஜையை தொடங்கலாம். விநாயகருக்கு பிடித்தமான அவல், பொரி, கொழுக்கட்டை போன்றவற்றை படைக்கலாம். பூஜைக்கு உகந்த நேரத்தை காலண்டரில் பார்த்து (சதுர்த்தி திதி தொடங்கும் நேரம்) அதன் பின்னர் பூஜையை நடத்த வேண்டும். பூஜையின் போது சாமபிராணி புகைகாட்டி பத்தி பொருத்தி விநாயகர் துதி பாடலை பாடலாம்.

விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்ட பொருளை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழலாம். பூஜைக்கு பயன்படுத்திய விநாயகர் சிலையை நிரந்தரமாக வீட்டில் வைக்கக் கூடாது. அது வீட்டில் இருக்கும் வரை தினமும் பூஜை செய்ய வேண்டும். அந்த சிலையை விநாயகர் சதுர்த்தி நடந்த நாளிலிருந்து 1,3,5,7,9 வது நாளில் கரைக்கலாம். கரைக்கும் போது பிள்ளையாருக்கு அணிவிக்கப்பட்ட பூணுலையும், தொப்புளில் வைக்கப்பட்ட காசையும் எடுத்து விட வேண்டும்.

மேலும் கரைக்கும் போது “மஞ்சள் மூர்த்தி மகாராஜா அடுத்த ஆண்டு வா ராஜா” என்று கூறி கரைக்க வேண்டும். பிளளையாரை கரைக்க செல்லும் போது எந்த இடத்திலும் நிற்கக் கூடாது. பிள்ளையாரின் நாபியில் வைத்த நாணயம் புனிதமானது. அதை பூஜை அறையில் வைத்து வணங்கி வந்தால் லட்சுமி அருள் கிடைக்கும்.

No comments:

Post a Comment