Friday, September 27, 2013

நவகுஞ்சரம்
மாவீரனான அர்ஜுனனுக்கு முன் அந்த விசித்திர பிராணி தோன்றியது – சேவல் தலை, மயில் கழுத்து, எருதின் திமிலுடன் கூடிய உடல், சிங்கத்தின் கம்பீரமான இடை,... பாம்பு வால். யானைக் கால், மான் கால், புலிக் கால் என்று மூன்று கால்களுடனும், ஒரு மனிதக் கையுடனும் அது நின்றுகொண்டிருந்தது. இது ஒரு அரக்கன் தான் என்று முடிவுகட்டி விட்ட அர்ஜுனன், தாக்குதலுக்காகத் தன் வில்லை எடுக்கையில் இன்னொரு விஷயத்தைக் கவனித்தான். அந்தப் பிராணி தன் கையில் தாமரை மலரை ஏந்தி இருந்தது.
உடனே அர்ஜுனன் என்ன பிராணி இது என்று யோசிக்கத் தொடங்கினான். ஒரு குறிப்பிட்ட ஜந்து என்று சொல்ல முடியாமல் இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று சேர்ந்து இருந்தது அது. இயற்கையின் சிருஷ்டியில் இப்படி ஒரு பிராணியும் இருக்குமா என்ன? இது போன்ற ஒரு மிருகத்தை இது காறும் அவன் கண்டதில்லை. ஆனால் அப்படிக் காணாததாலேயே அது இல்லை என்று ஆகிவிடாது என்று அவன் மனம் சொன்னது. , “எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல் நன்றாகப் பேசுகிறாய் நண்பா!” என்று ஆரம்பிக்கும் தனது உயிர் நண்பனான கிருஷ்ணனின் உபதேசத்தை எண்ணிப் பார்த்தான். “மனித மனம் ஒரு எல்லைக்குள் அடங்குவது, ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது” என்பதை நினைவுகூர்ந்தான். தன் வில்லைக் கீழே வைத்து விட்டு, விழுந்து வணங்கினான்.

மனித பிரக்ஞையில் கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியாத சாத்தியங்கள் தெய்வீகப் பிரக்ஞையில் உண்மையாகவே இருக்கக் கூடும். ஒன்பது உயிர்வகைகளின் அம்சங்களையும் உள்ளடக்கிய அந்தப் பிராணியின் பெயர் நவகுஞ்சரம் (Navagunjara). இந்த ஞானத்தை அர்ஜுனனுக்கு வழங்குவதற்காகவே எழுந்தருளிய தெய்வ வடிவம் அது!

ஒரிய மொழியில் சரளா தாஸர் எழுதிய மகாபாரதத்தில் மேற்சொன்ன கதை வருகிறது. (நன்றி: Indian mythology: tales, symbols, and rituals from the heart of the Subcontinent - By Devdutt Pattanaik, Imprint: Inner Traditions, Bear & Company)
 

No comments:

Post a Comment