Monday, October 21, 2013

புலால் உணவை மறுப்பீர்களாக

நாம் எவ்வளவு சொன்னாலும் குழந்தைகள் கேட்காமல் அடம்பிடிக்கும். முற்போக்கு சிந்தனையுடையவர்கள் கூட தங்கள் குழந்தைகளை சமாளிப்பதற்காக பூச்சாண்டி மற்றும் பேய்க் கதைகளை சொல்லி பயமுறுத்தி சமாளிப்பார்கள்.அது போல மிருகங்களை கொன்று தின்பதை தடுப்பதற்காகவும், சில தத்துவங்களை தனக்குப் பின்னால் வருகிறவர்கள் புரிந்து கொள்வதற்காகவும் தெய்வ வடிவங்களோடு விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களை வாகனங்களாகவோ, ஆபரணங்களாகவோ..., அருகில் இருப்பது போன்றோ காட்டினார்கள். ஆனாலும், கொன்றால் பாவம் தின்றால் போச்சி என்று சொல்லி தின்பவர்கள் தின்று கொண்டுதான் இருக்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் கொல்பவர் யாரென்றே தெரியாத நிலையில் எல்லோரும் தின்று கொண்டுதான் இருக்கிறார்கள். கேட்டால் நாங்கள் கொல்லவில்லையே ? என்பார்கள். இன்று நேற்றல்ல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பும் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள். அப்படி சொல்பவர்களுக்காகவே வள்ளுவப் பெருந்தகை

''தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும் விலைபொருட்டால் ஊன்தருவார் இல்'' என்கிறார்.

சமீபத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்கிற போது அதில் புலால் உண்பவர்கள் இறந்த பிறகு யமப்பட்டினத்தில் உள்ள நரகத்தில் கொண்டு போய் நிறுத்தி, புலால் உண்டவர்களின் உடல் தசையை அறுத்து அவர்களையே தின்னச் சொல்லி சாட்டையால் அடித்து துன்புறுத்துவார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது கொன்றால் பாவம் தின்றால் போகும் என்றால், தன் தசையையே தான் தின்றால் தான் பிற உயிர்களைக் கொன்ற பாவம் தீரும் என்பது. இது உண்மையா, பொய்யா என்று ஆராய்வதை விட ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று சிந்தித்தோமானால், தின்னாதே என்று சொன்னால் கேட்க மாட்டான், எனவே பயமுறுத்துவதற்காகக் கூடச் சொல்லியிருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம். நாம் தமிழன் என்று சொல்லி மார்தட்டிக் கொண்டு வள்ளுவருக்குச் சிலை வைத்து வணங்குவதோ, அவர் புகழைப் பேசுவதோ பெரிதல்ல. அவர் கூறிய குறளைக் கற்று உணர்ந்து அதில் கூறிய படி நடப்பதுதான் சிறப்பு. அப்படிப் பார்த்தோமானால் வள்ளுவப் பெருந்தகையை உண்மையான மனதோடு மதித்துப் போற்றுபவன் புலால் உண்ணமாட்டான். ஏனென்றால், புலால் மறுத்தலை அவர் ஆணித்தரமாக எடுத்தியம்பியிருக்கிறார்.

கங்கையில் படிந்திட்டாலும்
கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில் வந்த ஞான
சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்குல்போல் கோடி தானம்
வள்ளலாய் வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன்
போய் நரகு (அ)டைவன் அன்றே !

என்று எச்சரிக்கிறார் வள்ளலார். இன்றைய சூழலில் புலால் உண்ண வேண்டும் என்று மருத்துவர்களே சொன்னாலும், அதனால் தீமை அதிகமாகவே இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். சிலர் கேட்பார்கள், தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறதே அவற்றை உண்டால் மட்டும் பாவமில்லையா ? என்று. தாவரங்களின் காய்கனிகளை நாம் பறிப்பதால், அந்தத் தாவரங்கள் அழிந்து போவதில்லை. மேலும் ஒரு இலையை நாம் பறித்தால் பத்து இலை தளிர்த்து வளரும். அவ்விதம் இயற்கை அதனை வடிவமைத்து படைத்திருக்கிறது. ஆனால், உணவுக்காக ஒரு உயிரைக் கொன்றோமானால் அது மீண்டும் உயிர் பெறாது இறந்து போய்விடுகிறது. இன்னும் சிலர் பால் பசுவின் இரத்தம் தானே ? அதை மட்டும் குடிகலாமா ? என்று கேட்பார்கள். நல்ல விபரம் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள் பாலை முழுவதுமாக கன்றைக் குடிக்க விட்டோமானால் அது வயிறு முட்டக் குடித்து இறந்து விடும். சரி, ஓரளவு குடித்தவுடன் கன்றை பிரித்து விடுவோமேயானால் தாய்க்கு பால் கட்டிக் கொண்டு வலி ஏற்பட்டு அவதிப்படும். எனவே கன்றை இரண்டு மடுவில் குடிக்க விட்டு மீதமுள்ள பாலையே நாம் கறந்து உபயோகப்படுத்த வேண்டும். இதுவே முன்னோர்கள் வகுத்த வழிமுறை.

ஆதி காலங்களில் வனங்களில் எண்ணெய் கிடைக்காத காரணத்தினால் மிருகங்களை வேட்டையாடி அவற்றின் சதையை அறுத்து யகங்களில் போட்டு வேள்விகள் செய்திருக்கிறார்கள். அந்த மிருகங்களின் தசையில் உள்ள கொழுப்பினால் தீ நன்றாக எரியும் என்று அப்படிச் செய்ய்திருக்கிறார்கள். ஆனால், பிற்காலங்களில் தானியங்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் முறை வந்த பிறகும் அதே செயலைச் செய்து வந்த போது புத்த பிரான் வந்து எதிர்ப்பு தெரிவித்து, உண்மையை விளக்கிய போது அந்த செயல் கை விடப்பட்டது. மேலும் புத்தரும் புலால் உண்பதை கடுமையாக எதிர்த்திருக்கிறார். எனவே

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன் புண்அது உணர்வார்ப் பெறின்.

என்ற குறளின் பொருளை உணர்ந்து, புலால் என்பது மற்றொரு உயிரின் புண் என்பதை மனதில் கொண்டு புலால் உணவை மறுப்பீர்களாக

No comments:

Post a Comment