தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்!!
சேக்கிழாரைப் போன்று புலமை நுட்பம் கொண்டவர்கள் வெகு அரிது. அதனால்தான் அவரை ...தெய்வ என்ற அடைமொழியைச் சேர்த்து தெய்வச் சேக்கிழார் என்று கூறுகிறார்கள். அவரின் கவிதைத் திறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு:- நம் எல்லோருக்கும் மனுநீதிச் சோழனின் கதை தெரியும். மனுநீதிச் சோழன் முன்னால், கன்றை இழந்த மாடு ஒன்று ஆராய்ச்சி மணியை அடித்துவிட்டு நிற்கிறது. இது எதற்காக மணி அடிக்கிறது என்று மந்திரியைக் கேட்கிறான். மந்திரி பிரதானிகள் எல்லாம் காரணத்தைக் கூறுகிறார்கள். அந்தக் காரணம் என்னவென்று உங்களுக்கு எல்லாம் தெரியும். “உன்னுடைய பிள்ளை தேரோட்ட அந்த தேர்க்காலில் என்னுடைய கன்று சிக்கி அடிபட்டு இறந்துவிட்டது” என்பதை அந்தப் பசு சொல்லாமல் சொல்லிக் கண்ணீர் உகுக்கிறது. அதைச் சொல்ல வந்த சேக்கிழார். அவ்வுரை கேட்டவேந்தன் ஆவுறு துயரம் எய்தி வெவ்விடம் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்கிங் கிவ்வினை விளைந்த வாறென்(று) இடருறும் இரங்கும் ஏங்கும் செவ்விதென் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான். என்று பாடுகிறார். எப்படிச் சொல்கிறார் பாருங்கள்! இவ்வினை வந்தவாறு என்னென்று இடருறும், இரங்கும், ஏங்கும் . . . முதலில் ஆவுறு துயரம் எய்தி என்று கூறினார். பசுவினுடைய துயரத்தை மனுநீதிச் சோழன் எய்தினானாம். பொதுவாக வழக்காற்றிலே சொல்வோம். “ஒரு தலைவலிக்கு இந்தப் பாடு படுத்துகிறாயே”. அதற்கு பாதிக்கப்பட்டவன் சொல்வான் “என்ன பெரிய தலைவலின்னு நீ சொல்லலாம். தலைவலியும், வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியும்” என்று. இப்ப பசுவினுடைய துயரத்தை முழுதாக மனுநீதிச் சோழன் அனுபவித்தால் தான் அவனுக்கு அந்த துயரத்தின் அளவு தெரியும். மனுநீதிச் சோழன் அந்தப் பசுவின் துயரத்தை முழுதாக எய்தினானா? ஆமாம்! எய்தினான் என்கிறார் சேக்கிழார். எப்படி? மனுநீதிச் சோழன் அந்தப் பசுவின் துயரத்தை எய்தி அந்தப் பசுவாகவே மாறிவிட்டானாம். பசுவோ அஃறிணை; எனவே பசுவாகவே மாறிவிட்ட மனுநீதிச் சோழன் செயல்களை அஃறிணைச் சொற்களாகவே கூறி அவனது உண்மை நிலையைக் காட்ட இடருறும், இரங்கும், ஏங்கும் என்று கூறினார் சேக்கிழார். இடருறுவான், இரங்குவான், ஏங்குவான் என்று கூறினாரில்லை. சிறிது நேரத்தில் தெளியும் என்றவர் தெளிந்தவுடன் அவன் ம்றுபடியும் மனுநீதிச் சோழனாகி விட்டதால் உயர்திணைச் சொல் வைத்து அடுத்து என்ன செய்வது என்று தேறான் என்றார். இப்படி ஒரு புலவரை ஈரேழு உலகத்திலும் பார்க்க முடியாது! வேறு எந்தப்புலவனும் இந்த நுட்பத்தைக் காட்டுந் திறனை எட்டிப் பார்க்க நினைத்துக் கூட பார்க்க முடியாது. திருமந்திரச் சிந்தனைகள் –-நூலில் இருந்து ஒரு சிறு பகுதி..குருபிரான் 'சித்தாந்த கவிமணி','சகலாகம பண்டிதர்','செந்தமிழ் வேள்வி சதுரர்' 'மு.பெ.சத்தியவேல் முருகனார்' B.E.,M.A.,M.Phil.,அவர்கள்.
No comments:
Post a Comment