ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்?
(பாடல் ‘தனிப்பாடல் திரட்டு’ புத்தகம்) சிறப்பாக கவி எழுதும் ஆற்றல் படைத்த ஒருவர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் எ...ப்பொழுதும் சிவபெருமானைப் பற்றியே பாடல்களைப் பாடி வந்தார். அவருக்கு தமிழரின் கடவுள் கொள்கையும் செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) பற்றியும் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆகையால் அவர் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாமல் பரம்பொருளைப்பற்றியே எழுதி வந்தார். அவரை மடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் கூடினர். அவர்களுள் ஒருவர், “அப்பா புலவனே நம்மைப் படைத்தவன் நான்முகன். அவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமோ, அவனைப்பாடாமல் அழிப்பவனைப் பாடுகிறாயே’ என்றார். மற்றொருவர் “படைத்ததை விடப்பா! இந்த உலகத்தில் நம்மைக் காப்பாற்றிக்கொண்டு இருப்பவர் திருமால்தானே! அவரைப் பாடவேண்டாமா. அவர்தானே முக்கியம்” என்றார். இப்படிப் பலரும் பேசிக்கொண்டிருக்கையில் அவர் தம் மனதுக்குள் எண்ணிக் கொண்டார். “இவர்கள் தவறாக இப்படி எண்ணிக் கொண்டிருக்கிறார்களே, தொழிற்கடவுள் களையெல்லாம் பரம்பொருளாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களே. இவர்களை அந்த ஈசன்தான் காப்பாற்ற வேண்டும். படைத்தல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்பவனே அந்த ஈசன்தான். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு ஆட்களை பணி செய்ய நியமித்துள்ளான். அந்தத் தொழில் செய்பவர்களை கடவுளின் தொழிலைச் செய்வதினால் அவர்களை “தொழிற்கடவுள்” என்ற அடைமொழி கொடுத்து அழைத்தனர். அதைப் புரிந்து கொள்ளவில்லையே இவர்கள். படைக்கும் தொழிலைச் செய்பவனால் காக்கும் தொழிலைச் செய்யமுடியாது. அதே போல் காக்கும் தொழிலைச் செய்பவனால் படைத்தலையும் அழித்தலையும் செய்ய முடியாது. அவர்களது அதிகாரங்கள் எல்லாம் எல்லைக்குட்பட்டவை” இப்படி அவர் சிந்தனை செய்து கொண்டிருக்கையில் கூடியிருந்தவர்கள் அவரைப்பார்த்துக் கிண்டலாக “என்னப்பா சிவனடி சேர்ந்துவிட்டாயோ” என்று அவரை உலுக்கினர். சுதாரித்துக் கொண்ட அவர் “இவர்களுக்கு பக்குவம் என்று வருமோ அன்றுதான் இவர்கள் பரம்பொருளை உணர முடியும், இவர்களிடத்தில் நாம் சண்டையிடக் கூடாது” என்ற எண்ணங்கொண்டவராய் பின்வரும் பாடலைப் பாடினார். செப்பரிய தமிழ்களெல்லாம் அரியயனே முதலான தேவர்க் கோதி ஒப்புவிக்க அறியாமல் அரனிடத்தே வளைத்துவளைத் துரையா நின்றேன் மைப்பரவை தருவிடமும் ஆடரவும் நீறும்என்பும் அன்பாய்க் கொண்டார் அப்பெருமை உடையவரென் புன்கவியும் பொறுப்பரென அறிந்து தானே பொருள்:- இயற்றுவதற்கு அருமையான பாடல்களையெல்லாம் நான்முகன், திருமால் முதலிய தொழிற் கடவுளர்களைப்பாடி, அவர்களுக்குச் சமர்ப்பிக்கத் தெரியாமல், பரம்பொருளான சிவபெருமானிடத்தே மட்டும் சுற்றிச் சுற்றி அவற்றை ஓதுவாயினேன். ஏனெனில் கருங்கடல் கொடுத்த நஞ்சையும், ஆடுகின்ற பாம்பையும் சாம்பலாகிய திருநீற்றையும் இழிவான எலும்பு மாலையையும் விருப்பமாய்க் கொண்டவராகிய பெருந்தன்மையுடைய சிவபெருமான் என்னுடைய இழிவான பாட்டையும் ஏற்றுக் கொள்வார் என்ற எண்ணத்தினால்தான்
No comments:
Post a Comment