Thursday, November 7, 2013

முயற்சியாலும் வைராக்கியத்தாலும் மேன்மையடைய வேண்டியதுதான்

மனிதனுக்கு படைப்பின் இரகசியங்களை வெளிப்படுத்தும்விதமாகவே இறையாற்றல் மற்ற எல்லாவற்றையும் படைத்திருக்கிறது. ஆராய்ந்து பார்க்கும் மனவலிமை உள்ளவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து உண்மையை உணர்ந்து உலகுக்கும் சொல்வார்கள். சில வேளைகளில் ஒரே விஷயத்தைக் குறித்து இரு வேறு ஞானிகள் இரு வேறு கருத்துக்களை முன் வைப்பார்கள். அது அவரவர் அனுபவங்களாலும்,அறிவின் திறத்தாலும் ஏற்படும் மாறுதல்களே தவிர, கூர்ந்து கவனிப்போமேயானால் அந்த இரு வேறு கருத்துகளுக்கும் காரணமாக அமைந்த விஷயத்தின் சூக்குமமாக விளங்கும் அடிப்படைப் பொருள் ஒன்றாகவே இருக்கும். மறுபிறவி இல்லை என்று சொல்லும் நிறை ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆயினும் இந்த பூமியின் இயக்கம் கூட மறுபிறவியை நிருபிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. படைக்கப்பட்ட எந்தப் பொருளும் அழிவதில்லை. உருமாறுகிறது அவ்வளவுதான். சக்தி கூட வேறொரு சக்தியாகத்தான் மாறுமேயல்லாது அழியாது. ஆக ஜடப் பொருளானாலும், இயக்கும் சக்தியே ஆனாலும் அழிவது என்பது இல்லை.
கடல் நீர் ஆவியாகிறது, மேகமாகி மழையாகப் பொழிகிறது, நதியாகிக் கடலில் கலக்கிறது. இந்த சுழற்சி நடந்து கொண்டே இருக்கிறது. இது போலவே எல்லா விஷயங்களிலும் நடைபெறுகிறது. பூமி சுழன்று கொண்டே இருக்கிறது. கோள்கள் சுழல்கின்றன. காலம் சுழல்கிறது இப்படி காணும் எல்லா விஷயங்களும் சுழற்சி முறையில் இயங்குவதை காண முடிகிறது. இதே கோட்பாடுதான் மறுபிறவிக் கொள்கையிலும் காணப்படுகிறது. மழை பொழியும் போது பூமியில் விழும் நீரானது அந்த மண்ணின் தன்மையை தன்னோடு சேர்த்துக் கொண்டு இயற்கைத் தன்மையில் இருந்து மாறுபடுவது போல, ஆன்மாவும் தன் வினைகளால் ஏற்படும் அழுக்குகளால் பரமாத்மாவில் நின்று விலகி நிற்கிறது. அந்த அழுக்குகள் இல்லாத போது அது எங்கும் நீக்கமற நிரம்பி நிற்கும் பேரான்மாவில் கலந்து விடுகிறது. மற்ற வஸ்துகளுக்கு மனம் இல்லாத காரணத்தால் அவை தத்தம் மூல வஸ்த்துக்களோடு கலக்கும் போது மலங்கள் கரைந்து இயற்கைத் தன்மையை அடைந்து விடுகின்றன. ஆனால் மனிதனுக்கு மனம் என்ற ஒன்று இருப்பதினாலும்,அந்த மனதில் வினையெனும் அழுக்குகள் படிந்து விடுவதாலும், அவைகள் மனிதனை பரமாத்மாவில் கலக்கத் தடையாக நிற்கின்றன. அந்த வினைகளெனும் அழுக்குகள் மேலும் மேலும் எண்ணங்களையும், வினைகளையும் உருவாக்கி பரமாத்மாவோடு இணைய வேண்டும் என்கிற உணர்வையே எழாமல் செய்து விடுகின்றன. அதனால் தான் யோகிகள் வினைகள் மற்றும் எண்ணங்கள் இல்லாத நிலையைக் கை கொண்டு இறையாற்றலை சிறுகச் சிறுகப் பற்றிப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக வினைகளை அறுத்து, எண்ணங்களை தவிர்த்து மனதின் இயக்கமற்ற நிலையில் இறையாற்றலோடு தங்கள் ஆன்மாவை இணைத்துக் கொள்வார்கள்.
எவ்வளவு தான் முனைப் போடு தவம் செய்தாலும் மனம் ஒருமைப்பட்டு நிலையில் நீடித்திருக்காமல் நழுவிக் கொண்டே இருக்கும். எனினும் விடாமுயற்சியோடுமீண்டும் மீண்டும் ஒருமைப்பாட்டு நிலைக்கு மனதைக் கொண்டுவர கடுமையான பயிற்சியை மேற் கொள்வார்கள். இதையே சாதனை என்பார்கள். இதில் அனுபவம் பெற்றவர்களே ஸமாதி என்கிற மன ஒருமைப்பாட்டு நிலையில் நிலைத்திருக்கும் வல்லமையைப் பெற்றுத் திகழ்வார்கள். இந்த கடுமையான பயிற்சியின் போது மனம் ஒருமைப்பாட்டு நிலையை சிலச் சில வினாடிகள் அடையும் பொழுதெல்லாம் இறைநிலையில் இணைவதும் நழுவுவதுமாக இருந்து வரும். அப்படி இணைந்து இணைந்து நழுவி வரும் பொழுதெல்லாம் ஆன்மாவின் மனதில் படிந்திருக்கும்சஞ்சிதம் என்கிற கர்ம வினைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டே வரும். அது எவ்வாறெனில், கடலில் ஒரு உப்பு பொம்மையையோ அல்லது ஒரு மிட்டாயையோ முக்கி முக்கி எடுத்துக் கொண்டே இருந்தோமானால் எப்படி அது முழுவதுமாகக் கரைந்து காணாமல் போய் விடுமோ, அது போல வினைகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வர வர மனமானது எண்ணமற்ற நிலைக்குத் தகுதி அடைந்து கொண்டே வரும். ஏனென்றால் இந்த சஞ்சிதம் என்கிற வினைகளே சம்ஸ்காரங்கள் என்று சொல்லக் கூடிய செயல்களைத் தூண்டும் எண்ணங்களாக ஆழ்மனதில் இருந்து எழுந்து கொண்டே இருப்பவை. அவ்வாறு பல பிறவிகளாகத் தொடர்ந்து வரும் சஞ்சித கர்மங்கள் குறையக் குறைய மலங்கள் நீங்கிக் கொண்டே இருக்கும். முற்றிலும் அழுக்கு நீங்கிய மனமானது களிம்பு நீங்கிய பாத்திரத்தைப் போலப் பிராகாசித்து ஒளிரும். அப்போது இந்த ஆன்ம ஜோதியானது அருட்பெருஞ் ஜோதியாகிய பரஞ்ஜோதியில் கலந்து விடும்.
அதிக நேரம் தவத்தில் திளைத்திடுவதால்ஆகாமியம் எனப்படுகின்ற இந்தப் பிறவியில் ஏற்படும் புதிய வினைகள் குறைந்து விடும். எனவே புதிய வினைகள் சேராது. செயல்பாடே இல்லாமல் அமர்ந்து விடுவதால் இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்கென்று கொண்டு வந்த பிராப்த கர்மங்கள் என்ற வினைகளும் சஞ்சிதத்தோடு கூட கரைந்து கொண்டே வரும். சஞ்சிதம் என்பதே இது வரை எடுத்த எல்லாப் பிறவிகளிலும் செய்த வினைகளின் தொகுப்பாகும். ஒரு உண்மையான குரு பார்வையாலேயே நம் சஞ்சிதங்களை போக்கி விட முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்கு நாம் முற்பிறவியில் தவசீலராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறாயின் அது நடக்கும். இல்லாதவர்கள் தன் முயற்சியாலும் வைராக்கியத்தாலும் மேன்மையடைய வேண்டியதுதான்.

1 comment: