Wednesday, November 27, 2013

ஆலயங்களும் தெய்வீகக் கலைகளும்


 
 
ஆலயங்களும் தெய்வீகக் கலைகளும்
---------------------------------------------------
ஸ்ரீமஹாசுவாமிகளின் கீதோபதேசம்

இ ரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனிஸ் அப்போது நம் ஜனங்கள் எவ்வளவு ஸத்துக்களாக வாழ்ந்தார்கள் என்பதைக் கூறியிருக்கிறார்கள். ''இந்திய மக்களுக்குப் பொய்யே சொல்லத் தெரியாது;தெருவில் போட்டுக் கிடக்கிற பணத்தைக் கூட எடுத்துச் செல்லமாட்டார்கள்'என்றெல்லாம் மெகஸ்தனிஸ் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் காலத்து ஜனங்களில் மனஸு மாதிரியே இப்போதும் இருக்கக் கூடாதா என்று ஆசையாக இருக்கிறது!

அன்றைக்கு அவர்கள் அவ்வளவு உயர்வாக இருந்ததற்குக் காரணம் என்ன?இன்று நாம் இவ்வளவு தாழ்ந்து போய்விட்டதற்குக் காரணம் என்ன?அந்தந்தக் காலத்தின் சூழ்நிலையே அந்தந்த மனப்பான்மைக்கும் காரணமாக இருக்கிறது. பழங்காலத்தில் பொது ஜனங்கள் எல்லாரும் கோவிலுக்குப் போனார்கள். அங்கே அவர்களுக்கு நல்வழி கூறுவதற்காக மகாபாரதம் முதலிய ஸத் கதைகள் நடைபெற்றன. இதற்காகவே ராஜாங்கத்தில் மானியம் தரப்பட்டு வந்தது. நாடகம், கூத்து எல்லாம் கூடத் தெய்வ சம்பந்தமாகவே இருந்தன. தங்கள் தொழிலைச் செய்வது, ஆலயத் தரிசனம், ஸத் கதை, சிரவணம் இவற்றுக்கே மக்களின் பொழுது சரியாக இருந்தது. இதனால் யோக்கியர்களாகவே இருந்தார்கள். இப்போது ஜனங்களைக் கவர்ந்திழுப்பதற்கு என்ன என்னவோ ஆபத்துக்கள் எல்லாம் வந்துவிட்டன. தர்மத்துக்கு விரோதமான படக்காட்சிகள், கதைப் புஸ்தகங்கள் எல்லாம் அதிகமாக வந்து விட்டன. ஜனங்கள் இதற்கிடையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது பலவிதமான அரசியல் கட்சிகள் வேறு புத்தியைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. எங்கேயும் சஞ்சலம், அதிருப்தி, யோக்கியதைக் குறைவு, லஞ்சம் இவை அதிகரித்து விட்டன.

பழைய காலத்தில் ராஜாவின் மானியத்துடன், பாரதம் முதலான ஸத் கதைதள் நடந்த போது;தலைமுறை தத்துவமாக அது செழித்து வளர்ந்தது?இப்போது ஹரிகதை, உபந்நியாசம் செய்கிறவர்கள் தங்கள் தலைமுறையோடு போகட்டும் என்று நினைக்கிறார்கள். அதேபோல் அர்ச்சகர்கள் தங்கள் தலைமுறையோடு அர்ச்சனைத் தொழில் போகட்டும் என்று எண்ணுகிறார்கள். முன்பு அரசர்கள் தெய்வ பக்தியை வளர்த்து எங்கு பார்த்தாலும் சாஸ்திரோக்தமாக ஆலயங்கள் கட்டியதால் ஆகம சாஸ்திர வித்வான்கள், சிற்பிகள், ஸ்தபதிகள் ஆகியோர் வம்சாவழியாக சுபிட்சமாக வாழ்ந்தனர். இன்றைய சூழ்நிலையிலோ இவர்கள் யாவரும் தங்ளோடு இந்தத் தொழில் தொலையட்டும் என்று நினைக்கும்படியாகி விட்டது. ஈஸ்வர சம்பந்தத்துடனேயே ஆயிரம் காலப் பயிராக வளர்ந்த நாட்டுக் கலைகளும் இப்போது மங்குகின்றன. திரௌபதி அம்மன் கோயிலில் உடுக்கடித்து பாரதம் சொல்கிறவன், கரகம் ஆடுகிறவன், அரிச்சந்திரன் கூத்துப் போடுபவன் எல்லாரும் அடுத்த தலைமுறையை இந்தத் தொழிலில் பழக்க வில்லை. நாட்டுக் கலைஞர்களுக்கு முன்பு ராஜாங்க மானியம் கிடைத்து வந்தது?இப்போது ' பழைய கிராமப் பண்பாடு ' ( Folk Culture ) என்று பெரிதாகப் பேசினாலும் ஏதோ அவ்வப்போது மந்திரி மார்களே அந்த மாதிரி விஷேம் போட்டுக்கொண்டு கிராமிய நடனக்காரர்களோடு ஃபோட்டோ எடுத்துக்கொண்டு பத்திரிகையில் பிரசுரமாகிறது. தவிர இந்தக் கலைஞர்களுக்கு மானியம் மாதிரி எதுவும் இல்லாமல் கலைகளும் நசிக்கின்றன.

கோயில்களும் அவற்றைச் சேர்ந்த இந்தக் கலைகளும் ஓங்கி வளர்ந்த நாளில் தேசம் எப்படி இருந்தது என்று மெகஸ்தனிஸ் சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறான். இவை எல்லாம் மங்கிப் போயிருக்கிற இன்றைக்குத் தேசம் எப்படி இருக்கிறது என்பதை பிரத்யக்ஷமாகவே பார்க்கிறோம். எங்கே பார்த்தாலும் பொய்யும், சஞ்சலமும், கலப்படமும், அதர்மமும் மிகுந்து விட்டன!

இவை நிவிருத்தியாக வழி ஒன்றுதான்;பழைய காலத்தைப் போலக் கோயில்களைச் சமூக வாழ்வின் மத்திய ஸ்தானமாக்கி விட வேண்டும். அன்றுபோல் இப்போதும் தெய்வ சம்பந்தமான பழம் கலைகளை வளர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment