விரதம்: மனித உடம்பு என்பது ஒரு மரமானால் அதற்குப் பல ஆற்றல் தரும் வயிற்றுப் பகுதியே வேராகும் என்பர் சிலர். வயிறில்லாத மனிதன் இல்லை. “வயிறோ ‘ஒருநாள் உணவை நீக்கு...’ என்றால் நீக்காது. ‘அந்த உணவை இரு நாள்களுக்கும் மொத்தமாக ஏற்றுக் கொள்’ என்றால் ஏலாது” என்பது அவ்வைப்பாட்டியின் வாக்கு. எனவே அளவான உணவே வயிற்றுக்கு ஏற்றது. மேற்சொன்ன அளவான உணவையும் உண்ணாமல் வெற்று வயிறுடன் இருப்பதே விரதம் என்பார்கள். இதையே உண்ணாவிரதம், உண்ணாநோன்பு என்றும் சொல்வார்கள். ஒன்றையும் பருகாமலும், உண்ணாமலும் இருப்பது முதல் நிலை. இது விதி. துளசி தீர்த்தம், வில்வ தீர்த்தம், சங்கு தீர்த்தம் முதலிய புனிதத் தீர்த்தங்களையும், பால், மோர், இளநீர், நீர் ஆகியவைகளை மிகவும் சோர்வாக இருக்கும் பக்ஷத்தில் அருந்தி விட்டு இருப்பது இரண்டாம் நிலை. மிகவும் சோர்வாக இருந்தால் “பலகாரம்” சாப்பிடலாம். வடமொழியில் ‘பல’ என்றால் ‘பழம்’ என்பது பொருள். அதாவது, சில பழங்களை அல்லது பழத்துண்டுகள் சிலவற்றைச் சாப்பிடுவது மூன்றாம் நிலை. இதுவும் விதிவிலக்கில் வருகிறது. (கவனிக்க: சிலர் பலகாரம் என்றால் சிற்றுண்டி என்று பொருபடும்படி எடுத்துக் கொள்கின்றனர், இது தவறு) இதற்கு எடுத்துக்காட்டாக நாம் விதுரநீதியில் வரும் விரதத்திற்குண்டான எட்டு விதிவிலக்குகளைப் பார்க்கலாம்(கவனிக்க: விதுரநீதி மகாபாரதத்தின் ஒரு பகுதி. விதுரர் திருதராஷ்டிரருக்கு கூறிய உபதேசங்களின் தொகுப்பு இது) ”விரதங்களை மேற்கொள்ளும் போது நடுவில் 1)தண்ணீர், 2)மூலிகை, 3)பழம், 4)பால், 5)நெய் ஆகிய ஐந்தைச் சாப்பிட்டாலோ, 6)புரோகிதர் கூறுவது போல நடந்து கொண்டாலோ, 7)குருவின் கட்டளைப்படி ஏதேனும் வேலை செய்தாலோ அல்லது மருந்து சாப்பிட்டாலோ விரதத்திற்கு முறிவாக கருதப்படுவதில்லை”.
No comments:
Post a Comment