பணிவு - வாழ்வை உயர்த்தும் பண்பு
சிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் கூட எளிதில் நல்ல வேலை , அந்தஸ்து என உயர்ந்த நிலைக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் எளிதில் கிடைக்கிறது.
வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை உற்று நோக்கினால் அவர்களுகிடையே ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம் பிரதானமாக பணிவு என்னும் குணம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்.
ஒருவன் தன் தலை முடியைத் தானே தூக்கி தன்னை மேலே உயர்த்திக்கொள்ள முடியாது. சுற்றியுள்ளவர்கள் தான் அவனது பணிவால் ஈர்க்கப்பட்டு பணிவுடைய ஒருவனை தனக்கு மேலே தூக்கி இருத்துவார்கள்.
இங்கே பணிவு என்று குறிப்பிடுவது தற்பெருமை இன்றி அடக்கமாக இருப்பதாகும். அடிமையாகவோ சுயமரியாதையின்றி இருப்பதோ அல்ல. பிறரது சுய மரியாதையை தாக்காமல் இருப்பது. காக்காய் பிடித்தல் முகஸ்துதி எல்லாம் பணிவு ஆகாது இது ஏமாற்று. தீமைகளுக்கு பணிவதும் கூடாது.
மற்றவர்களை புண்படுத்தாத, பிறரை மதிக்கும் பிறர் உணர்வை புரிந்து கொண்டு நடக்கும் பணிவு ஒருவரை லிப்டில் உயரே போவது போல் வாழ்வில் உயரச்செய்யும். மற்றவர்கள் படிப்படியாகக் கஸ்டப்பட்டுத் தான் ஏற வேண்டும். ஓசையை யாரும் விரும்ப மாட்டார்கள். மெல்லிய இசை தான் மனதை மயக்கும்.
பெற்றோர் பேச்சு கேட்கும் பணிவுள்ள பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாசம் கிடைக்கிறது. அவர்கள் தேவைகள் கேட்காமலேயே நிறைவேற்றப்படுகிறது. அதுவே பள்ளியிலும் தொடர்கிறது . ஆசிரியர்கள் அடிப்பதில்லை. சிறப்பாக கவனித்து பாடம் சொல்லிக்கொடுகிறார்கள். பாராட்டுகிறர்கள். அதிக மார்க் வாங்குகிறார்கள். பணிவு நல்ல நட்பை தருகிறது, எளிதில் வேலை கிடைக்க உதவுகிறது. பணி உயர்வுக்கு பிறரிடமிருந்து சிபாரிசு பெற்றுத்தருகிறது. போட்டிகள் பொறாமைகள், எதிர்ப்புகள், தடைகள் எதுவும் இருக்காது.
மற்றவர்கள் கருத்துக்கு எதிர் கருத்தை கூட பணிவுடன் சொல்லும்போது அதற்கு நிச்சயம் அங்கீகாரமோ கவனிப்போ இருக்கும். இனிமையாக் பேசுதலும் பிறர் நலனில் அக்கறை காட்டுதலும் எப்போதும் நமக்கு பல மடங்காகத் திருப்பிக் கிடைக்கும். திறமையான பாய்மரக்கப்பல் மாலுமிகள் காற்றின் சக்தியைக் கொண்டே காற்றுக்கு எதிர் திசையில் கூட கப்பலை செலுத்த கூடியவர்கள்.
அதிகமான கல்வி, புகழ், பதவி, அதிகாரம், செல்வம் நம்மிடம் சேர்ந்தால் அதைக் கொண்டு பிறர் பயன் பெறும் வரை தான் நமக்கு உயர்வு. மாறாக அது தரும் செருக்கால் மற்றவர்களது உணர்வுகள் காயப்படும் போது நாம் நாம் கீழ் நோக்கி செல்லத் தொடங்குகிறோம். அப்படி பிறர் நோகும் படி மமதையில் வாழ்பவர்கள் கீழே விழ நேர்ந்தால் அவன் கதி மாட்டிக்கொண்ட பிக் பாக்கட் கதி தான்.
அறிவை , அதன் பலனை பிறருக்கு பகிர்ந்து கொள்ளாத அறிவாளிகளை யாரும் மதிப்பதும், விரும்புவதுமில்லை. யாருக்கும் பயன் படாத பணத்தை காக்கும் பணக்காரனைப் பற்றி தெரிந்து கொள்ள திருடனைத் தவிர யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. புகழ் வரும்பொது தன்னடக்கத்தை பேண வேண்டும். புகழ் மமதையை தருமானால் மமதை விரைவில் அந்த புகழை அழித்து விடும்.
கல்வியும் சிந்தனையும் ஒருவனுக்கு சாபக்கேடாக கூட மாறலாம். கல்வியும் சிந்தனையும் ஒருவனை, அவனது உலகத்தை விரிவு படுத்துகிறது. அதோடு சேர்ந்து அவனது ஈகோவும் அதாவது "தான்" என்ற அகந்தையும் வளர்கிறது. பிறருக்கும் அவனுக்கும் இடையே முதலாளி தொழிலாளி போன்ற இடைவெளி அதிகரிக்கிறது. தனித்தனி தீவுகளாக மாறுகிறார்கள். இதனால் தான் கற்றவர்கள் ஒத்துப்போவதில்லை. படித்தவர்கள் தான் அதிகம் விவாகரத்து செய்கிறார்கள். கற்றவர்கள் தான் அதிகம் குழம்புகிறார்கள். உதாரணம் பாருங்கள் நாட்டு வைத்தியத்தில் எல்ல நோயும் வாதம், பித்தம், கபம் என்பதில் அடங்குகிறது. ஆங்கில மருத்துவத்தில் இதற்கு எத்தனை பிரிவுகள் தேவைப்படுகிறது. ஒரு கணினியியல் இன்று எத்தனை பிரிவுகளில் அறியப்படுகிறது. எத்தனை வித லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன.
பிறர் பேச்சை காது கோடுத்து கேட்பதும் பணிவு தான். தன்னடக்கம் உடையவனது அதிகாரம் மந்திரக்கோல் போன்றது. பணிவுள்ளவன் தான் சிறந்த தலைவனாக முடியும். அரசு இயந்திரத்தின் பல் சக்கரங்கள் பலருக்கும் பதவி மட்டும் தான் அடையாளம். அதிகார போதையில் பொதுமக்களிடம் பணிவின்றி நடந்து கொண்டவர் பலரும் பதவி போன பின் கிழிந்த துணி தரை துடைக்க போவது போல் ஆகி விடுகிறர்கள். ரவுடிகள் வாழ்வின் பிற்பகுதியில் அனாதை பிணமாகிறார்கள்.
சில பெரிய வியாபார ஸ்தாபனங்களில் முதலாளியே கஸ்டமர்களை கும்பிட்டு வரவேற்பார்கள். அல்லது அதற்கென்றே தனி ஆள் நியமித்திருப்பார்கள். அவர்கள் போடும் கும்பிடுகள் தான் அந்நிறுவனத்தின் மூல தனம். வாடிக்கையாளர்களை மதிக்காத எந்த கம்பனியும் உருப்பட்டதில்லை. customer is always right என்பதும் இது தான்.
தன்னைச் சுற்றித்தான் உலகம் எனும் மாயையை ஒழித்து, உலகத்தில் தான் ஒரு பாகம் எனும் அகந்தயற்ற நிலை மிக உயர்வான நிலை. எதையும் நாம் கொண்டுவரவில்லை, எதையும் எடுத்துச் செல்லப்போவதுமில்லை. எதையும் புதிதாகஅறிகிறோம் அன்றி எதையும் நாம் உருவாக்கி விடவும் இல்லை. நம் உலகத்தில் தான் மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். பூமி சுழல்வதை நிறுத்தும் சக்தி நமக்கில்லை பின் ஏன் அகந்தை?
No comments:
Post a Comment