Sunday, December 15, 2013

பக்தியின் மகத்துவம்!

கடவுளின் மீதும், வேதங்களின் மீதும் அளவற்ற நம்பிக்கை கொண்டவன் மண்டலீகன். இளவரசனான அவன் வனத்தில் சந்தித்த முனிவரை பணிந்து வணங்கி, 'எந்த முறையில் இறைவனை வணங்குவது நல்லது?' என்று கேட்டான். 'மண்டலீகா! அது அவரவர் மனப்பக்குவத்தை பொறுத்தது. பார்க்கும், உணரும் பொருளில் எல்லாம் கடவுள் உண்டு.

உனக்குள் இறைவனை நிறுத்து. எப்போதும் உனக்குள் மணி ஒலிக்கட்டும். அர்ச்சனை, ஆராதனை, அலங்காரம் நடக்கட்டும். அதைவிட பெரிய பக்தி எதுவுமில்லை'என்றார். முனிவரின் சொற்கள் மண்டலீகனின் நெஞ்சில் ஆழப்பதிந்தன. அவன் அரண்மனையிலும், எங்கினும் பார்ப்பவர்களிடம் எல்லாம் இறைவனைக் கண்டான்.

யாராவது வெறுப்பு காட்டினால், 'அறுசுவைகளில் ஒன்றுதானே கசப்பும்' என்றும், யாரேனும் கோபம் கொண்டால், 'காரமில்லாத உணவு சுவை கூட்டாதே! என்றும் ஒவ்வொன்றுக்கும் மனதில் புதிய விளக்கம் சொல்லிக் கொண்டான். அனைவருக்கும் நல்லவனாக இருந்தான். அன்பை செலுத்தினான். மக்கள் நலம் பேணினான்.

மண்டலீகனின் பெற்றோர் அவனுக்கு திருமணம் செய்து வைத்து, தவம் புரிய காட்டிற்கு சென்றனர். மண்டலீகனின் மனைவி சுலக்ஷனா இறைவன் மீது பக்தி மிக்கவள். எப்போதும் பூஜை, ஆராதனை, திருவிழா, அபிஷேகம், தான தர்மம் என்று தொண்டும் பக்தியுமாக இருந்தாள்.

அவளுக்கு கணவன் இதில் எல்லாம் கலந்து கொள்வதில்லையே, பாராட்டுவதில்லையே என்ற குறை இருந்தது. இதுபற்றி அவனிடம் ஒருநாள் கேட்டாள். அதற்கு மண்டலீகன், 'குடிமக்களின் நன்மையே மன்னனின் ஆராதனை! நாட்டின் அமைதியே பெரிய பக்தி' என்று கூறினான்.

ஒரு நாள் இரவு ஆழ்ந்த உறக்கத்தில்... ராமரின் பட்டாபிஷேகத்தை கனவில் கண்டு களித்தான் மண்டலீகன். ஆனந்த மிகுதியில், 'என் பிரபுவே! ராமச்சந்திர மூர்த்தி, ரகுபதே' என்று மெய்மறந்து வாய்விட்டு கூவினான், கைகள் கூப்பியபடி இருந்தன. கண் விழித்த சுலக்ஷனா, தன் கணவனின் பக்தியைக் கண்டு பூரித்துப் போனாள்.

மறுநாள், 'சுவாமி! என் நெடுநாள் பிரார்த்தனை நிறைவேறியது. தாங்கள் கனவிலாவது வாய்விட்டு இறைவனை துதித்தீர்களே!' என்று கூறினாள் சுலக்ஷனா. அதைக் கேட்டதும் திடுக்கிட்டான் மண்டலீகன். இவ்வளவு காலமும், நெஞ்சத்தில் பூட்டி வைத்திருந்த தாரக நாமத்தை அலட்சியமாக வெளியே விட்டு விட்டேனே!

கனவு மயக்கத்தில் உளறி விட்டேனே! ராமா! எங்கே போனாய்? இதோ உன்னுடன் வருகிறேன்' என்றவன் சரிந்து விழுந்தான். ஒரு ஜோதி கிளம்பி வானில் மறைந்தது. பிரமை பிடித்தவள் போல் ஆகிவிட்டாள் சுலக்ஷனா!. 'ஐயோ! என் கணவர், ராம நாமத்தை உச்சரித்தாலே இறைவன் வெளியே வந்து விடுவான் என்று நம்பும் அளவுக்கு ஈடற்ற பக்தரா?.

என் அகந்தையால் அவருக்கு பக்தியே இல்லை என்று தவறாக அல்லவா நினைத்திருந்தேன். இறைவா! அரை கணமேனும் உன்னை நான் அன்புடன் ஆராதனை செய்திருந்தால், என்னையும் என் பதியுடன் சேர்த்து விடு' என்று உருக்கமாக பிரார்த்தித்தாள்.

மறுகணமே அவள் உயிரும் பிரிந்தது. உள்ளத்தில் கோவில் கட்டி, மனதால் இறைவனை வணங்கி, அபிஷேக, ஆராதனை செய்து துதிப்பதும் பக்திதான். பக்தனுக்கும், தனக்குமான அந்த உறவை இறைவன் உணர்ந்து கொள்வான். வேறு எவரும் அறியத் தேவையில்லை. 

No comments:

Post a Comment