Friday, February 14, 2014

சிவாச்சாரியர்கள் தரும் வீபூதி!

சிவாச்சாரியர்கள் தரும் வீபூதி!

சிவாச்சார்யார்கள் வீபூதி தரித்தவர்கள் சிவபெருமானின் அருளை {பரையின் பராசக்தி வண்ணமாக} வீபூதி வடிவில் அன்பர்களுக்கு அளிப்பவர்கள். அவர்களுக்குரிய பொருட்களில் வீபூதிப்பை என்கிற பொக்கனமும் ஒன்று. அதை மாந்தோலால் செய்திருப்பர். இந்நாளில் பட்டுத் துணியால் ஆன பையை வைத்திருக்கின்றனர். தில்லை தீக்ஷிதர்கள் வெள்ளியாலான சம்புடத்தை வைத்திருக்கின்றனர்.

ஒழுக்கமும், மேன்மையும் கொண்டவராகவும் சிவபெருமானைத் தொட்டு பூசிக்கும் பேறு பெற்றவர்களாகிய சிவாச்சார்யார்களைச...் சிவமாகவே பாவித்து வணங்கி அவர்களிடம் பிரசாதமாக விபூதி பெற்றுக் கொள்வது வழக்கம்.

சிவபெருமானே அடியவர்களுக்குச் சிவாச்சாரியார் வடிவில் சென்று திருநீறு அளித்ததைப் பலருடைய வரலாற்றில் காண்கிறோம். அதிலொன்றை இங்கே காண்போம்.

திருவிடைமருதூரில் வடக்கே உள்ள தலம் திருவிசைநல்லூர். இங்கு ஸ்ரீதர ஐயாவாள் என்னும் பரம சிவபக்தர் வாழ்ந்து வந்தார். இவருக்காக கங்கை இவருடைய தோட்டத்துக் கிணற்றில் பொங்கி வந்து அருள் பாலித்ததாக வரலாறு கூறுகிறது. இவர் தினமும் திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமியை வணங்கி ஊருக்குத் திரும்புவது வழக்கம். ஒருசமயம் கடும் மழை பெய்து காவிரியின் வெள்ளம் பெருகெடுத்து ஓடியது. அவரால் பூசைக்கு வர முடியவில்லை. உள்ளம் வருந்திச் சோர்ந்தார்.

அவ்வேளையில் சிவாச்சாரியார் அங்கே வந்தார். கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்திருந்தார். அவர் ஸ்ரீதர ஐயாவாளிடம் புஷ்பத்தை அளித்து விபூதி அளித்தார். அதைப்பெற்றுக் கொண்ட ஐயாவாள் மகிழ்ச்சி அடைந்தார். ஆச்சார்யார் ஈரத்தை மாற்றிக்கொள்ள புதிய துணிகளை அளித்ததுடன் ஒரு சால்வையை அவருக்குப் போர்த்தினர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர் விடைப்பெற்றுக்கொண்டார்.

மறுநாள் வெள்ளம் வடிந்தது. ஐயாவாள் கோயிலுக்கு வந்தார். இரவு தமது இல்லத்திற்கு வந்த சிவாச்சார்யாரைக் கண்டு முதல் நாள் இரவு தமது இல்லத்திற்கு வந்து வீபூதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். அதற்குச் சிவாச்சார்யார் தாம் கடும் மழையால் வெளியே வரவில்லை என்று கூறினார். அதைக் கேட்ட ஐயாவாள் வந்தது யாராக இருக்கலாம் என எண்ணியவாறே அவ்விடம் விட்டுக் கோயிலுக்குள் சென்றார்.

ஆலயத்துள் சென்று அவர் மகாலிங்க ஸ்வாமியை வழிபட்டார். முதல் நாள் இரவு தாம் சிவாச்சாரியாருக்குப் போர்த்திய சால்வை சிவலிங்கத்தின் மீது இருக்கக் கண்டார். மனம் உருகி வழிபட்டார். வந்தவர் சிவபெருமானே என உணர்ந்தார். கடும் மழையில், காவிரியில் வெள்ளம் புரண்டு ஓடும் போது எப்படி சிவாச்சார்யார் தமது வீட்டிற்கு வந்திருக்க முடியும்? என நாம் யோசிக்கவில்லியயே அப்படி யோசித்திருந்தால் வந்தவர் சிவபெருமானே என்பதை அறிந்து சிக்கெனப் பிடித்திருக்கலாமே என எண்ணி பெருமானின் கருணையை வியந்தார்.

இப்படி அனேகருக்குச் சிவபெருமான் சிவாச்சாரியார் வடிவில் சென்று விபூதி அளித்து அருள்பாலித்ததைக் காண்கிறோம்.

சிதம்பரத்தில் அன்றைய தினத்தில் பூசை செய்யும் தீக்ஷிதரை நடராஜராகவே போற்றி அவரிடமிருந்து வீபூதி பெற்றுக்கொள்கிறனர். இதற்கு முறைக்காரர் வீபூதி என்று பெயர்.

No comments:

Post a Comment