Sunday, March 30, 2014

வினை

வினை இந்து தத்துவங்கள் குறிப்பிடும் பிறவிக்குக் காரணமான விடயமாகும். அதாவது, ஒருவர் செய்யும் செயல்களே வினை என்று அறியப்படுகின்றது. அவரவர் செய்யும் செயல்களின் தன்மைகளுக்கேற்ப நல்வினை, தீவினை என கணிக்கப் பெறுகின்றன. நல்வினை செய்தவர் நற்பிறவியை அல்லது சொர்க்கத்தினையும், தீவினை செய்தவர் இழிவான பிறவியை அல்லது நரகத்தினையும் அடைவர் என்று இந்து இலக்கியங்கள் கூறுகின்றன.
உபநிடதங்கள் நல்வினை நெய்தவன் நல்ல கர்ப்பையிலும், தீவினை புரிந்தோர் நாய், பன்றி, சூத்திரர் முதலான இழிவான கர்ப்பையிலும் சென்று பிறப்பர் என்று கூறுகின்றனக.
பௌத்த தத்துவங்களும் வினை பற்றிக் குறிப்பிடுகின்றன. பௌத்தத்தில் கம்மா என இவை அழைக்கப்படுகின்றன.
வினைகளைத் துறக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால், ஒரு கட்டத்தில் எண்ணம் கூட வினைதான் என்றும் சொல்கிறீர்கள். எண்ணாமலும், எந்த வித செயலையும் செய்யாமலும் ஒரு மனிதன் எப்படி இந்த உலகில் வாழ முடியும் ? ஒரு வேளை யோகிகள் வேண்டுமானால் அப்படி வாழ்ந்து விடக் கூடும். நம்மைப் போல சராசரி மனிதர்கள் அப்படி வாழ முடியாதே ? பிறகு என்றுதான் வினைகளைக் கடப்பது ? எப்போதுதான் உண்மையை உணர்ந்து மேன்மையை அடைவது ? என்று ஒரு தோழி அருமையான கேள்வியை முன் வைத்தார்கள். வினைகளைக் கடப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சாத்திமில்லாத விஷயமாகும். இந்த மொத்த பிரபஞ்சமும் இயங்கி வினை புரிந்து கொண்டேயிருக்கும் போது, அதிலுள்ள நாம் மட்டும் எப்படி எந்த வித வினையும் புரியாமல் உயிர் வாழ முடியும் ? இதற்கு வியாஸ பகவான் மகாபாரதத்தில் கீதை மூலமாக விளக்கம் தருகிறார். அதாவது செயல்களைத் துறப்பது, செயல்களைச் செய்வது இந்த இரண்டுமே மனிதனை முக்திக்கு இட்டுச் செல்பவைதான். இதில் செயல்களைத் துறப்பதை விடச் செயல்களைச் செய்வதே விரைவில் மேன்மையடையச் செய்யும் என்கிறார்.
இது என்னடா இது புதுக் கதை. வினையற்று இரு, வினைகளைக் கடந்து விடு என்றெல்லாம் சொல்லி விட்டு, இப்பொழுது வினைகளைச் செய்பவன்தான் விரைவில் மேன்மையடைவான் என்று சொல்கிறாரே என்று மனதில் கேள்வி எழத்தான் செய்யும். இங்கே இவ்வளவு சௌகரியங்கள் இருந்தும் அத்தியாவசியத் தேவைகளை அடைவதே போராட்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் துறந்து வனத்தில் போய் இருக்கும் துறவி வினையாற்றாமல் எதையும் அடைய முடியாதே ? என்றெல்லாம் பல விதமான கேள்விகள் எழுவது நியாயம்தானே. துறவு என்பது என்ன ? இன்ப, துன்பங்கள் என்ற பற்றுகளைப் பந்தங்களைத் துறப்பது. விருப்பு வெறுப்புகளைக் கடப்பது . இதுவே துறவுக்கான கோட்பாடு. அதாவது ஒரே நாளில் எல்லாவற்றையும் துறந்து விட்டு வினையற்று யாராலும் இருக்க முடியாது. ஆனால், ஒரு வினை செய்யப்படும் போது அதன் தொடர்ச்சியாக மேலும் வினைகளையும், எண்ணங்களையும், துக்கங்களையும் உருவாக்குகிறது என்றால், அதைத் துறக்க வேண்டும் என்பதே நுட்பம். வினைகளை வளரவொட்டாமல் வேரறுக்கும், மனதை அமைதிப்படுத்தும் விதமான, சாத்வீகமான வினைகளையே செய்ய வேண்டும் என்பதே துறவுக்கான கோட்பாடு.
எனவே முதலில் செயல்பட வேண்டும். அதன் மூலமாக மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு உடலிலுள்ள புலன்களையும் வசப்படுத்த வேண்டும். அதன் மூலமாக உலகம் முழுவதும் ஆன்மாவாக விளங்குபவனே தன்னுள்ளும் ஆன்மாவாக விளங்குகிறான். அவன் வேறு நாம் வேறு அல்ல என்றத் தெளிவைப் பெற வேண்டும். இந்தத் தெளிவை ஒருவர் பெற்று விட்டார் என்றால், அவர் செயல்கள்களும், நோக்கமும் எப்படிப்பட்டதாக இருக்கும் ? செயலுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதாக இருக்கும் ? தெளிவடைந்த யோகியின் செயலானது பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுவதாக இருக்காது. அதில் சுயநலம் துளியும் இருக்காது. அவருக்கும், அவருடைய செயலுக்குமான பந்தம் தாமரை இலைக்கும், தண்ணீர்க்குமிடையே உள்ள பந்தத்தை ஒத்ததாகவே இருக்கும். எனவேதான் வியாஸர் இந்த துறவு நிலையை கர்ம யோகம் என்கிறார். இந்த யோக நிலையை அறிந்து உணர்ந்து கடைபிடிப்பவர் எதையும் தான் செய்யவில்லை என்றுதான் எண்ணுவார். அவர் பார்பார், தொடுவார், கேட்பார், உண்பார், நடப்பார், நிற்பார், ஓடுவார், மூச்சு விடுவார், தூங்குவார் எல்லாம் செய்வார். ஆனால் , இவையனைத்தையும் உடல்தான் சரிவரச் செய்கிறது, தான் செய்யவில்லை என்றே எண்ணுவார்.
இப்படிச் செயல்களோடு பந்தப்படாத மனநிலையில் உள்ளவரோடு வினைகள் பாதிப்பை விளைவிப்பது இல்லை. தாமரை இலையில் எப்படித் தண்ணீர் ஒட்டுவதில்லையோ அப்படி அவர் வினைகள் மனதில் பதிவதில்லை. எனவே வினைத் தொடர்ச்சி என்பது அவருக்கில்லை என்பது கோட்பாடு. உள்முகமாக விளங்கி வினைகளோடு பந்தங்களை உருவாக்கிக் கொள்வது மனம்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கான காரணம் பலன் மீது கொள்ளும் பற்றே. பலன்களைப் பற்றிக் கருத்தில் கொள்ளாதவருடைய மனமானது செயல்களைப் பற்றுவதில்லை. அவரைப் பொருத்தவரை உடல், மனம், அறிவு மற்றும் ஐம்புலன்கள் மீது பற்று வைக்காமல், ஆத்மாவில் மறைந்திருக்கும் முன் வினைப்பதிவுகளை களைவதற்காகவே செயல்களைச் செய்வார். இப்படி கர்மத்தையே யோகமாகக் கொண்டவர் பலன் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆதலால் அவர் மனம் எப்பொழுதும் தெளிந்த நீரோடை போல் சலனமற்று அமைதியாக விளங்குகிறது. எனவே தெளிந்த நீரோடையில் எப்படி ஆழத்தில் உள்ள பொருட்கள் தோன்றுகின்றதோ, அதுபோல தெளிவடைந்த அமைதியான மனதில் ஆழ்மனமான ஆத்மா பிரிதிபலிக்கிறது. உள்ளுக்குள் இருக்கும் ஆன்மாவை உணர்ந்து அதில் திளைத்தவர், வெளி உலகக் காரியங்களில் பற்றில்லாமல் அழிவே இல்லாத சுகத்தை அனுபவிப்பவராக வாழ்வார். பிரம்மத்தில் கலந்து பிரம்மமாகி விட்டவரை எந்த வினைகளும் தொடர்வதில்லை. அவர் எப்பொழுதும் பரிசுத்மானவராகவே விளங்குவார்.

No comments:

Post a Comment