Saturday, April 5, 2014

ஸுபாஷிதங்கள்

சமஸ்கிருதத்திலே "ஸுபாஷிதம்'ன்னா என்ன தெரியுமா? அதைத் தெரிஞ்சுகிடறதுக்கு முன்னாடி ஒரு சமஸ்கிருத ஸ்லோகம்
ஒன்றைக் கேளுங்கோ!
""அஷ்டா தச புராணானாம் வியாசேன கீர்திதம்!
பரோபகார: புண்யாய பாபாய பரிபீடனம்''
இதற்கு என் குருவிடம் பொருள் கேட்டேன்.
அவர் சொன்னது: ""வியாச முனிவர் பதினெட்டு புராணங்களிலும் இரண்டே இரண்டு தார்மீக சிந்தனைகள் அல்லது கட்டளைகளை வலியுறுத்தி இருக்கிறார்.. மக்களுக்கு சேவை செய்தால் நமக்கு புண்ணியம் கிடைக்கிறது; தொல்லை கொடுத்தால் நமக்கு பாவம் சேருகிறது.....
""ஆஹா..உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் பொருந்தும் விஷயம் இது அல்லவோ....'' என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, குரு தொடர்ந்தார்.
""இந்த மாதிரி ஸ்லோகங்களைத் தான் "ஸுபாஷிதங்கள்' என்று சொல்வார்கள். "ஸு' என்றால் "நல்லது' "பாஷிதா' என்றால் "பேசப்படுவை. இரண்டையும் சேர்த்து "நன்கு பேசப்படுவை' அல்லது "நல்மொழிகள்' என்று சொல்லலாம். இவை மிகவும் உள்ளார்ந்த நீதிநெறி அறிவுரைகளையும், புத்திமதிகளையும் நமக்கு அளிக்கின்றன....
மேலும் நமக்கு சரியான செயல்களை செய்ய வழிகாட்டுகின்றன. உதாரணத்திற்கு ஒரு ஸுபாஷிதம் பார்க்கலாம்,'' என்றவர்
மேலும் தொடர்ந்தார்.
""பிரிய வாக்ய பிரதானேன சர்வே துஷ்யந்தி மானவா:!
தஸ்மாத் ப்ரியம் ஹி வக்தவ்யம் வசனே கா தரித்ரதா!!''
இதன் பொருளைக் கேளுங்கள். "பிரியமான வார்த்தைகள் பேசுவதால் எல்லோரும் சந்தோஷம் அடைகிறார்கள். எனவே, ஆசையுடனும் அன்புடனும் பேசும் வார்த்தைகளுக்கு ஏன் குறைவு இருக்கவேண்டும்?'
நம்முடைய கோபத்தை குறைக்க இந்த ஒரு ஸ்லோகத்தை நினைவில் வைத்துக்கொண்டாலே போதுமே....! கோபமெல்லாம் பஞ்சாக பறந்து போய் விடாதா என்று தோன்றியது.
இந்த மாதிரி எல்லா விஷயத்தைப் பற்றியும் வேண்டிய அளவுக்கு நம் கையிலே ஸுபாஷிதங்கள் இருக்கின்றன. ஸுபாஷிதங்களை பற்றி சிந்திப்பதாலும், உபயோகப்படுத்துவதாலும், நமக்கும், மற்றவர்களுக்கும் நன்மை கிடைக்கும். இறக்கை இல்லாமலே நாம் பறக்க ஆரம்பிக்கலாம். நம்முடைய நீதி வாழ்க்கை தொடர்ந்து நீடிக்க மற்றும் நாம் நல்ல உயர்ந்த குணமுடைய
மனிதர்களாக மாறுவதற்கும் ஸுபாஷிதங்கள் வழிகாட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

No comments:

Post a Comment