Friday, April 4, 2014

லட்சுமி அசுரரை விட்டு விலகியதற்கு காரணம் என்ன ?

** “ லட்சுமி அசுரரை விட்டு விலகியதற்கு காரணம் என்ன ? “ என்று தருமர் வினவினார். லட்சமி அசுரரை விட்டு விலக காரணங்களை இந்திரனுக்கு கூறியதைப் பிஷ்மர் கூறுகிறார்
ஒருமுறை இந்திரன் லட்சுமியை சந்தித்தான். முறைப்படி பூஜைகள் செய்து, பின் பணிவுடன் “ நீங்கள் எவ்விடத்தில் வாசம் செய்வீர்கள்? “ என வினவினான்.
லட்சுமி கூறுகிறாள்..
“ நான் வெற்றியை விரும்பும் வீரனிடத்தில் எப்போதும் வசிப்பேன். எப்போதும் பிறர்க்கு கொடுக்கும் இயல்புள்ள மனிதனிடம் வசிப்பேன். முன்னர் உண்மையான தருமத்தை அசுரர்கள் மேற்கொண்டதால் அவர்களிடம் சில காலம் தங்கியிருந்தேன். காலப்போக்கில் அவர்களது போக்கு விபரீதமாக இருந்த காரணத்தால் அவர்களை விட்டு நீங்கி உன்னிடம் வந்தடைந்தேன். “ என்றால்.
" தேவி எக்குணத்தைக் கண்டு அசுரர்களிடமிருந்து விலகினீர் " என்று இந்திரன் வினவ, ஸ்ரீதேவியான லக்ஷ்மி கூறுகிறாள்....
“ அறவோரிடத்தும், துணிவு மிக்கோரிடத்தும், மோட்ச மார்க்கத்தில் செல்லும் மேலோரிடத்தும் நான் எப்போதும் விரும்பியிருப்பேன். ஒரு காலத்தில் அசுரர்கள் தான தருமங்களில் சிறந்திருந்தனர். பெரியோர்களிடம் தொடர்புள்ளவர்களாகவும், அடக்கம் மிக்கவர்களாகவும் இருந்தனர். சத்தியம் தவறாதவர்களாகவும், முயற்சியுடையவர்களாகவும், சுற்றத்தை காப்பவராகவும் இருந்தனர். அவர்களிடம் பொறாமை இல்லாதிருந்தது.
பிறர் பொருளை கவரும் எண்ணம் இல்லாதிருந்தனர். பிறர் துன்பம் கண்டு மனம் இரங்கி உதவும் எண்ணம் உடையவர்களாக இருந்தனர். நேர்மை, பக்தி, புலனடக்கம் இவற்றில் சிறந்திருந்தனர். வேலைக்காரரிடம் அன்பாக இருந்தனர். அமைச்சர்களின் ஆலோசனையைக் கேட்டு தக்கவாறு செயல் பட்டனர். தகுதியறிந்து தானம் அளித்தனர். உண்ணாவிரதமும் தியானமும் மேற்கொண்ட தவச்சீலர்களாக விளங்கினர். இரவில் அதிக நேரம் உறங்குவதில்லை. அதிகாலை எழுந்து விடுவர். மங்களகரமான பொருளையே முதலில் காண்பார்கள்.
பகலில் ஒரு போதும் அவர்கள் உறங்குவதில்லை. ஆதறவற்றவர்களையும் முதியோர்களையும் கவனமாகப் பார்த்து கொண்டனர். பயத்தால் நடுங்கியவர்களுக்கும், நோயால் துன்புற்றவர்களுக்கும் ஆறுதல் கூறி ஆதரவு அளித்து வந்தனர். குரு பக்தி மிகுந்தவர்களாக திகழ்ந்தனர். இது போன்ற நற்குணங்கள் அவர்களிடம் இருந்த வரை நான் அவர்களிடம் இருந்தேன்.
பிறகு படிப்படியாக அவர்களிடம் இந்த நற்குணங்கள் விலக கண்டேன். தரும மார்க்கத்தனின்று அவர்கள் நழுவினர். காம வயப்பட்டு திரிந்தனர். தரும உபதேசம் செய்யும் சாதுக்களைக் கேலி செய்தனர். பெரியோர்களை அலட்சியம் செய்தனர். பிள்ளைகள் தாய் தந்தையரை மதிப்பதில்லை. அவர்களின் பேச்சை மீறினர். பகைவருக்கு அடிமையாகி வெட்கமின்றி அவர்களை புகழ்ந்து பேசலாயினர். பொருள் மீது ஆசை அதிகமாயிற்று. பேராசை தருமத்தை தகர்த்தெறிந்தது. கணவன் பேச்சை மனைவி கேட்பதில்லை. மனைவியை கணவன் பொருட்படுத்தவே இல்லை. அதுமட்டு மின்றி அவர்களை அடித்துத் துன்புறுத்தினர்.
மாதா, பிதா, குரு, சான்றோர் ஆகிய மேலோர்கள் அசுரரின் நிந்தனைக்கு ஆளாயினர். தான தருமங்களை செய்ய தவறினர். பசித்தவர்க்கு ஒரு பிடி சோறு வழங்கவும் அவர்கள் தயாராக இல்லை. சிறுவர்களையும், முதியோரையும் காப்பாற்றும் எண்ணம் இல்லாமல் போயிற்று. பசுக்களை காப்பாற்ற தவறினர். கன்றுகளுக்கு தேவையான பால் இல்லாமல் எல்லாவற்றையும் அவர்களே கறந்து குடித்தனர். சோம்பல் மிக்கவராயினர். சூரியன் உதயமான பின்னரும் அவர்கள் கண் விழிப்பதில்லை. இரவு, பகல் எப்போதும் ஒவ்வொரு வீட்டிலும் கலவரமே காணப்பட்டது. தூய்மை என்பது எங்கும் இல்லை. இந்நிலையில் அந்த அசுரர்களை விட்டு நான் விலகி உன்னிடம் வந்து சேர்ந்தேன் “ என்றால்.
லட்சுமியின் இப்பேச்சை கொண்டு அந்த மாமகளின் கருணை வேண்டுவோர் எப்படி நடநுக் கொள்ள வேண்டும்..எப்படி நடந்துக் கொள்ளக் கூடாது என்பதை உணரலாம் என்றார் பீஷ்மர்.
அடக்கத்தின் மேன்மை
=======================
** அடக்கத்தின் மேன்மைப் பற்றி பீஷ்மர் உரைக்கிறார்.
ஆகம பயிற்சி மிக்க சான்றோர்கள் எல்லாரும் அடக்கம் ஒன்றே மனிதனை நல்ல நிலைக்கு உயர்த்தும் என கூறுகின்றனர். அடக்கம் உடையவன் தான் செயலின் பயனை அடைய முடியும். அடக்கம் உடையவனிடத்தில் தான் எல்லா நற்பண்புகளும் நிலையாக தங்கியிருக்கின்றன. மன அடக்கமின்றி எப்போதும் அலைபாயும் நெஞ்சத்தவரால் எந்த செயலையும் செய்ய முடியாது. எந்த ஒரு நற்பண்பையும் தொடர்ந்து காப்பாற்ற முடியாது. நல்லொழுக்கம் என்பதே அடக்கத்தின் மீது எழுப்பப்படும் மாளிகைதான். அடக்கம் உடையவனை யாவரும் போற்றுவர். அடக்கத்தின் மற்றொரு பெயர் தூய்மை. அடக்கம் உள்ளவன் பழி, பாவங்ககுக்கு அஞ்சி நடப்பான். மன அடக்கம் உடையவனால் எதையும் ஆழ்ந்து சிந்திக்க முடியும். சிந்தனைக்கு பிறகு அவன் செய்யும் செயல்களில் பழுது இராது. பயன் இருக்கும். எதையும் நினைத்து பார்த்து பார்த்து செய்வதால் செய்யும் செயலில் முழுமை இருக்கும். வினை முடித்த செம்மல் உள்ளத்தோடு இரவில் அவனால் நிம்மதியாக உறங்க முடியும். அவன் உற்சாகத்துடன் கண் விழிப்பான்.
ஒருவன் காக்க வேண்டிய நற்பண்புகளில் அடக்கமே தலை சிறந்தது ஆகும். அடக்கம் சிதறினால் வேறெந்த நற்பண்புகளையும் ஈட்ட முடியாது. அது மட்டுமன்று, அடக்கம் இல்லாதவனிடத்தில் படிப்படியாக தீய பழக்க வழக்கங்கள் வந்து சேரும். பொறாமை முதலில் மனதில் குடியேறும். அந்த பொறாமை ஆசையை தோற்றுவிக்கும். அந்த ஆசை நிறைவேறாவிட்டால் மனதில் கோபம் தோன்றும். கோபம் உள்ளவன் கடும் சீற்றத்திற்கு ஆளாவான். அவனிடமிருந்து நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது.
மன அடக்கம் இல்லையெனில் நாவடக்கமும் இல்லாமல் போகும். நாவடக்கம் இல்லையெனில் பகை உருவாகும். நண்பர்கள் நெருங்க மாட்டார்கள். காண்பவர் பேய் என ஒதுங்கிச் செல்வர். மனமும், சொல்லும் அடங்கவில்லை யென்றால் செயலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அடக்கமில்லாதவன் செயலில் நன்மையை காண முடியாது. மன அடக்கம் உடையவனிடம் எல்லா நற்பண்புகளும் தேடி வரும். அவன் எப்போதும் அமைதியாக இருப்பான். எதிலும் முயற்சி உடையவனாக திகழ்வான். அவனிடம் சினம் இராது. நேர்மை இருக்கும். அடக்கம் உள்ளவன் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பான். சிறிதளவே பேசுவான். அதுவும் சத்திய வாக்காக இருக்கும். அடக்கம் உடையவன் ஒரு போதும் பிறரை குறை சொல்ல மாட்டான். பொய் உரைக்க மாட்டான். பிறரின் புகழை மட்டுமே கூறுவான். அடக்கம் உடையவன் தன்னை பிறர் பழித்தாலும், பாராட்டி புகழ்ந்தாலும் இரண்டையும் சமமாகவே கருதுவான். இத்தகைய மனநிலை எளிதில் கிடைப்பதன்று. கிடைத்தால் அவனை யாரும் போற்றி மகிழ்வர். தேவரும் வந்து பணிவர்.
பெரிய லாபத்தில் மகிழ்ச்சியும், பெரிய நஷ்டத்தில் வருத்தமும் கொள்ளாமல் இருப்பது அடக்கம் உடையவன் இயல்பாகும். அடக்கம் உடையவனால் எளிதில் சாத்திர ஞானம் பெறமுடியும். ஞானவானிடம் பொறுமை, சத்தியம், கொடைத்தன்மை ஆகியவை வந்து அமையும். மிகுந்த காமம், சினம், தற்புகழ்ச்சி, பொய் ஆகியவை கெட்ட புத்தியுள்ளவரிடம் நிரந்தரமாக குடியிருக்கும். அடக்கம் உடையவன் இவற்றை தன்னிடம் நெருங்க விடமாட்டான். அடக்கம் உடையவன் பூமிக்கு அணிகலன் ஆவான். அவனிடம் இருந்து எல்லா நற்குணங்களும் ஒளி வீசும் என்று கூறி முடித்தார்.
** முதுமை, இறப்புகளைத் தடுப்பது எப்படி? என தருமர் வினவ பீஷ்மர் சொல்கிறார்
இத்தகைய வினாவை ஜனகர், பஞ்சசிகர் என்னும் முனிவரிடம் ஒரு சமயம் வினவினார். அதற்கு அம்முனிவர் “ மூப்பையும், மரணத்தையும் யாராலும் தடுக்க இயலாது. எந்த உயிரினமும் இவற்றிலிருந்து தப்ப முடியாது. சென்ற பகல்களும், இரவுகளும், வாரங்களும், மாதங்களும், ஆண்டுகளும் திரும்பி வருவதில்லை. நிலையில்லாத காலம் எல்லாவற்றையும் நிலையில்லாததாகச் செய்து விடுகிறது. உயிரினங்கள் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படுவது போலக் காலமானது எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது.
கல்லும், மண்ணும், மரமும் கூட காலப்போக்கில் தம் தன்மையை இழந்து விடுகின்றன. காலமாகிய வெள்ளத்தினின்று யாரும் தப்பி கரையேற முடியாது. அழிவைச் சந்தித்தே ஆக வேண்டும். மனைவியோடும், மக்களோடும், உறவினரோடும் உண்டான தொடர்பு ஏதோ வழிப்போக்கரிடம் ஏற்படும் தொடர்பு போன்றது. இத் தொடர்பு பிறவிதோறும் இதே உறவு முறைகளோடு தொடர்வதில்லை. உயிர் எந்த நாட்டிலோ, எந்தக் காட்டிலோ, எந்த நதியிலோ, எந்த மலையிலோ எத்தகைய பிறவி எடுக்கும் என யாராலும் கூற முடியாது. கர்மவினைக்கேற்ப காலம் உயிர்களை பல்வேறு இடங்களில் பல்வேறு பிறப்புகளில் தள்ளிவிடுகிறது. அவற்றின் ஆயுள் முடியும் காலத்தில் மரணம் அவற்றை அழித்துவிடுகிறது. மூப்பும், மரணமும் செந்நாய்களைப் போல வலிமையுள்ளவற்றையும், சிறியனவும் பெரியனவுமான எல்லாவகை உயிர்களையும் விழுங்கி விடுகின்றன. எந்த நேரத்திலும் மரணம் என்பது உறுதி. உயிரினங்களின் வாழ்க்கை தன்மை இவ்வாறு இருக்கும் போது பிறப்புக்காக மகிழ்ச்சியடைவதும், இறப்புக்காக வருந்துவதும் ஏன்?
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தோர், வாழ்க்கை இனிது என மகிழவும் மாட்டார்கள். துன்பமானது என இகழவும் மாட்டார்கள். உண்மைநிலை இப்படி இருக்க நீ ஏன் மனவருத்தம் கொள்கிறாய்? நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்ல போகிறேன்? என்று ஏன் ஏக்கம் கொள்கிறாய்? சுவர்க்கத்தை கண்டவர் யார்? நரகத்தைக் கண்டவர் யார்? அப்படி அவற்றைப் பார்த்தவர்களை நாம் பார்த்ததில்லை. எனவே, வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நல்ல கதி கிடைக்க வேண்டுமாயின் தான தருமங்களை செய்வாயாக “ என பஞ்சசிகர் ஜனகரிடம் கூறியதாக பீஷ்மர் உரைத்தார்.
பிறப்பும் இறப்பும் அனைவருக்கும் பொதுவான ஒன்று. எனவே முதுமையை பற்றியும், இறப்பை பற்றியும் கவலை வேண்டாம் என்பதை அறிந்துகொள்வோம்.

No comments:

Post a Comment