Wednesday, May 7, 2014

பாவம் செய்யத் தூண்டுவது எது?

பாவம் செய்யத் தூண்டுவது எது?

நன்மை எது தீமை எது என்பதை சாதாரண அறிவுள்ள மனிதன் கூட அறிவான். நல்ல செயல்களால் நன்மையும் தீய செயல்களால் தீமையும் விளையும் என்பதையும் அவன் அறிவு அவனுக்கு உணர்த்துகிறது. ஆனால் செயல் என்று வர...ும் போது தினசரி வாழ்க்கையில் தீய செயல்களில் சர்வ சாதாரணமாக அவன் ஏன் ஈடுபடுகிறான்? அவன் அறிவையும் மீறி அவனைத் தீய செயல்களில் ஈடுபடத் தூண்டுவது எது என்ற யதார்த்த கேள்வி அர்ஜுனன் மனதில் எழுகிறது.

அர்ஜுனன் கேட்கிறான். “வார்ஷ்ணேயா (விருஷ்ணி குலத்தில் பிறந்த கிருஷ்ணா), மனிதன் தானாக விரும்பாவிட்டாலும் பலாத்காரமாக ஏவப்பட்டவன் போல பாவம் செய்கிறானே! அவனை அப்படி பாவம் செய்யத் தூண்டுவது எது?”

இந்தக் கேள்வி நம் மனதிலும் எழாமல் இருக்க முடியாது. கர்ம யோகத்தின் மிக உயர்ந்த கருத்துகளைப் படிக்கும் போது இவையெல்லாம் உண்மை என்ற உணர்வு நம்முள் ஏற்பட்டாலும் அர்ஜுனனைப் போல நம் மனதிலும் குழப்பத்துடன் அந்தக் கேள்வி எழுகிறது. “படிக்க எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. உண்மை என்றும் தோன்றுகிறது. ஆனால் நடைமுறை என்று வருகையில் நம்மால் அப்படி இருக்க முடிவதில்லையே. அதற்கு எதிர்மாறாக அல்லவா நாம் பெரும்பாலும் நடந்து கொள்கிறோம். அது எதனால்?”

ஸ்ரீகிருஷ்ணர் இதற்குப் பதிலளிக்கிறார்.

“அது தான் காமமும் கோபமும். அது ரஜோ குணத்திலிருந்து உண்டாவது. அது எல்லோரையும் பாவம் செய்யத் தூண்டுவது. மனிதனின் பரம விரோதி அது தான் என்பதை அறிந்து கொள்.

புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.

ஆசை என்னும் காலாக்னியானது ஞானியின் அறிவை சூழ்ந்து கொண்டு அன்றாட விரோதியாக உள்ளது.

புலன்கள், மனம், அறிவு ஆகியவையே காமத்தின் இருப்பிடம். அது ஞானத்தை மறைத்து மனிதனை ஆட்டிப்படைத்து மயக்கத்தில் ஆழ்த்துகின்றது.”

காமம் என்ற சொல்லைத் தமிழில் பொதுவாக ஒரு குறிப்பிட்ட உணர்விற்கு நாம் பயன்படுத்தினாலும் இங்கு அந்த சொல் ஆசை என்ற விரிவான அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய எல்லாத் தவறுகளுக்கும் ஆரம்பம் ஆசையில் இருந்து தான் ஆரம்பமாகிறது. சாங்கிய யோகத்தில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படி சென்று முடிகிறது என்று ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியதைப் பார்த்தோம்.

சரி என்று தோன்றுவதை நடைமுறைப்படுத்த முடியாமல் தவறை நோக்கிச் செல்லும் நம் வாழ்க்கை முறைக்கு ஆசையும் அதன் மூலமாக வரும் கோபமும் தான் காரணம் என்றும், அதனால் அதுவே நம் உண்மையான விரோதி எனவும் ஸ்ரீகிருஷ்ணர் மறுபடியும் கூறுகிறார்.

உண்மையான ஞானம் நம்முள் ஒளிர்கிற போது மிகத் தெளிவாக இருக்கிறோம், எந்தப் பிரச்னையும் இல்லை. ஞானம் மறைந்திருக்கும் போது தான் ஆசை தலையெடுக்கிறது. ஆசை வந்து விட்டாலோ அதனுடன் அத்தனை பிரச்னைகளும் கூடவே வந்து விடுகின்றன. ஞானத்தை மனிதனின் ஆசாபாசங்கள் மறைத்து விடுகின்றன.

இங்கு ’புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப் பட்டிருக்கிறது’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் உதாரணம் ஆழ்ந்த பொருள் கொண்டது. இந்த உதாரணங்கள் முறையே மனிதர்களின் சத்வ, ரஜோ, தாமச குணாதிசயங்களுக்கு ஏற்ப சொல்லப்பட்டிருக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால் சத்வ குணம் நற்குணங்கள், அமைதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ரஜோ குணம் சுறுசுறுப்பானது என்றாலும் அது ஆசை, பரபரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. தமோ குணம் அறியாமை, சோம்பல், ஜடத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்த மூன்று குணங்களுமே ஞானத்தை மறைக்கும் தன்மை உடையவை. இம்மூன்று குணங்களையும் கடந்தால் மட்டுமே ஞானம் சாத்தியம். இந்தக் குணங்கள் இருக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் அவை ஞானத்தை மறைத்துக் கொண்டே இருக்கும்.

புகையினால் நெருப்பு மூடப்பட்டிருப்பது சத்வகுணம் உள்ளவர்களுக்கான உதாரணம். புகை மறைத்தாலும் இடையிடையே தீயின் ஜுவாலைகளும் தெரியாமல் இருப்பதில்லை. இந்த மறைத்தல் அரைகுறையானது. இடையிடயே ஞானமும் ஒளிரும். அதே நேரத்தில் புகையும் மறைக்கும். சத்வ குண ஆசைகள் உயர்ந்தவையாக இருந்தாலும் அவையும் ஞானத்திற்கு அவ்வப்போது ஒரு திரையே.

அழுக்கினால் கண்ணாடி மூடப்பட்டிருப்பது ரஜோ குணத்தவர்களுக்கான உதாரணம். அழுக்கு அதிகமாக கண்ணாடியில் மண்டிக் கிடக்குமானால் உருவம் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அது மிக மங்கலாகவும், தெளிவில்லாமலும் இருக்கும். இங்கு ஞானம் சத்வ குணத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மறைக்கப்படுகிறது.

கருப்பையினால் கரு மூடப்பட்டிருப்பது தாமச குணத்திற்கான உதாரணம். இங்கு ஞானத்தைக் காண வாய்ப்பே இல்லை. வளர்ச்சி அடையும் வரை ஞானம் மறைந்த நிலையிலேயே இருக்கும்.

காற்று வீசி புகையை விலக்கினாலும், இயல்பாகவே புகை குறைந்தாலும் தீயைப் பார்க்க முடிவது போல சத்வ குணத்தவருக்கு ஞான தரிசனம் எளிதில் கிடைக்கலாம். அழுக்கைத் துடைத்து நீக்கினால் மட்டுமே கண்ணாடியில் தெளிவாகக் காண முடிவது போல முயற்சி எடுத்தால் மட்டுமே ரஜோ குணத்தவருக்கு ஞானத்தைக் காண முடியும். வளர்ச்சி பெற்று கருப்பையிலிருந்து வெளிவரக் காலம் எடுத்துக் கொள்வது போல் தாமச குணத்தவருக்கு மேலும் அதிக காலம் தேவைப்படுகிறது. அவர்கள் வளர்ச்சி அடைந்து பக்குவம் பெற்றுத் தயாரான பின்னரே அவர்கள் ஞானமடைய முடியும்.

தீயின் இயல்பு சுடுவது. எல்லாவற்றையும் அறிந்தவனே ஆனாலும் அவன் ஆசை என்னும் தீயினால் சூழப்பட்டால் துன்பம் என்ற சூடுபட்டே ஆக வேண்டும். எனவே அன்றாடம் அவனை சூழக்கூடிய ஆசை என்னும் தீயை விரோதியாக எண்ணி அதனிடம் ஞானி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆசை ஆரம்பத்தில் சேருமிடம் புலன்கள். புலன்களைக் கட்டுப்படுத்தி வைத்திரா விட்டால் அங்கு ஆசைகள் அடைக்கலம் சேரும். புலன்வழிச் செய்திகளில் மனம் மயங்கி நிற்கும் போது ஆசைகள் மனத்தையும் ஆட்கொள்கின்றன. புலனின்பத்தில் ஈடுபட்டு அதன் நினைவுகள் குறித்த சிந்தனைகள் அறிவிலும் அதிகமாகப் பதியுமானால் ஆசைகள் அறிவையும் ஆட்கொள்கின்றன. இப்படி புலனிலிருந்து அறிவு வரை ஆதிக்கம் செய்ய முடியும் போது ஆசைகள் நம் அறிவை மறைத்து விடுகின்றன.

சரி, இந்த ஆசையின் ஆதிக்கத்திலிருந்து எப்படித் தான் மீள்வது? அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் வழி சொல்கிறார்.

”நீ புலன்களைக் கட்டுப்படுத்து. பின்னர் ஞானத்தையும், பகுத்தறிவையும் அழிக்கும் இந்தக் காமம் என்ற பாவியை நீ ஒழித்து விடு.

புலன்கள் நுட்பமானவை தான். ஆனால் அவற்றை விட மனம் நுட்பமானது. மனத்தைக் காட்டிலும் அறிவு மிகவும் நுட்பமானது. அறிவைக் காட்டிலும் ஆன்மா மிக நுட்பமானது.

தோள்வலி மிக்கவனே! அறிவைக் காட்டிலும் மிக நுட்பமான ஆத்மாவை அறிந்து, மனதை ஆத்மசக்தியால் அடக்கி, காமம் என்னும் கொடிய விரோதியை அழித்திடுவாயாக!”

ஆசையின் ஆரம்ப நுழைவிடமான புலன்களைக் கட்டுப்படுத்தி கவனமாக இருந்தால் அதுவே ஆசையை ஒழிக்க மிக சுலபமான வழி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

புலன்கள், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கும் மனிதனிடம் உள்ளன. புலன்களை விட அதிகமாக மனமும், மனதை விட அதிகமாக அறிவும், அறிவை விட அதிகமாக ஆன்மாவும் சக்தியிலும், நுட்பத்திலும் உயர்ந்தவை.

ஐன்ஸ்டீன் மிக அருமையாகக் கூறுவார். “ஒரு பிரச்னையை உருவாக்கிய நிலையில் இருந்து கொண்டே அதனைத் தீர்த்து விட முடியாது”. அது முற்றிலும் உண்மை. அதிலேயே உழன்று கொண்டிருக்கையில் தீர்வும் தெரியாது, தீர்க்கும் சக்தியும் இருக்காது. அதைத் தீர்க்க வேண்டுமானால் அதை விட மேம்பட்ட, அதிக நுட்பமான உணர்வு நிலைக்குச் சென்றால் மட்டுமே தீர்வுக்கு வழி சுலபமாகத் தெரியும், தீர்த்து வைக்கும் சக்தியும் கிடைக்கும்.

எனவே ஆசை புலன்கள், மனம், அறிவு என்ற மூன்றையும் ஆட்கொண்டு நமக்கு விரோதியைப் போல சதா துன்பத்தில் ஆழ்த்தி வருவதால் அந்த விரோதியை அந்த மூன்றுக்கும் மேற்பட்ட ஆத்ம ஞானத்தால் மூன்றையும் அடக்கி ஆசையை அழித்து விடச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

No comments:

Post a Comment