Monday, May 19, 2014

மாயையைக் கடப்பது எப்படி?

மாயையைக் கடப்பது எப்படி?

முன்பே சத்துவ ராஜஸ தாமஸ குணங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்திருக்கிறோம். மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்ள பார்ப்போம்.
...
நம் வேதாந்திகள் மனோதத்துவ சாஸ்திரத்தில் கரை கண்டவர்கள். அவர்கள் மனிதனின் மனநிலைகளை இந்த மூன்று பிரிவாகப் பிரித்திருக்கிறார்கள்.

சத்துவ குணம் சாந்தமயமானது. நற்குணங்களை உடையது. ஆன்மீகம் மற்றும் மேலான விஷயங்களில் ஆர்வம் உள்ளது.

ரஜோ குணம் ஆசை மயமானது. அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தேவையான துடிப்பும், வேகமும், உழைப்பும் கொண்டது. இங்கு நன்மை தீமைகளின் கணக்குகள் இல்லை. விருப்பு வெறுப்புகளின் அடிப்படையாகக் கொண்ட துடிப்பான மனநிலையே இங்கு பிரதானம்.

தாமஸ குணம் சோம்பல் மயமானது. ஆசைகள் இருந்தாலும் துடிப்போ வேகமோ இல்லாதது. தானாக எல்லாம் நடந்து விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது. எல்லா இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டே சும்மா இருந்து கொள்வதே சுகம் என்று இருப்பது.

நாம் யாரேயானாலும் அந்த மூன்றில் ஏதாவது ஒரு பிரிவில் நிரந்தரமாய் இருந்து விடுவது மிக அபூர்வம். ஆனால் மூன்று குணங்களிலும் மாறி மாறி சஞ்சரித்துக் கொண்டே இருப்போம். ஒரு சமயம் சத்துவ குணத்தில் இருக்கின்ற நாம், முக்கிய உலகியல் தேவைகள் ஏற்படும் போது சடாரென்று ரஜோ குணத்திற்கு மாறிவிடக் கூடும். வேறொரு சமயம் சோம்பலின் பிடியில் சிக்கி தமோ குணத்தில் தங்கி, செயல்புரியவும் மனமில்லாமல் இருக்கக் கூடும். சூழ்நிலைகள் மாறுகையில் மறுபடி மாறவும் கூடும்.

இப்படி இந்த மூன்று வகை குணங்களில் தான் இறைவன் தன் மாயையின் வலையைப் இவ்வுலகில் பின்னி இருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் சொல்வதைப் பார்ப்போம்.

சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம் என்னிடமிருந்தே பிறந்தன. அவை என்னுள் இருக்கின்றன. ஆனால் நான் அவற்றுள் இல்லை.

இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய் இருக்கின்றது. இம்முக்குணங்களுக்கு மேற்பட்டவனும், அழியாத இயல்பும் கொண்ட என்னை உணராதிருக்கிறது.

எதுவும் நமக்குள்ளே இருப்பதற்கும், அதற்குள்ளே நாம் இருப்பதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. முன்னதில் நாம் எஜமானனாக இருக்கிறோம். கட்டுப்பாடு நம்மிடம் இருக்கிறது. பின்னதில் நாம் அடிமையாகி விடுகிறோம். அது நம்மைக் கட்டுப்படுத்தி வைத்து விடுகிறது. இந்த நுணுக்கமான விஷயத்தைப் புரிந்து கொண்டால் நிறைய பிரச்னைகளில் இருந்து நாம் நீங்கி விடுகிறோம். இங்கு ஸ்ரீகிருஷ்ணரும் சூட்சுமமாக அதைப் புரிய வைத்து விடுகிறார்.

உலகமென்னும் நாடக மேடையில் வேஷம் ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் நாம் இந்த முக்குணங்களின் பிடியில் மயங்கிக் கொண்டிருக்கிறோம். சிரிப்பு, சந்தோஷம், தேடல், ஓட்டம், துடிப்பு, வெறுப்பு, துக்கம், ஆசை, விரக்தி, சோம்பல் என பலப்பல உணர்வுகளில் மாறி மாறி சஞ்சரித்து அலைக்கழிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறோம். எதிலும் நிரந்தரமில்லை. எதிலுமே திருப்தியுமில்லை. பல நேரங்களில் எல்லாமே போதும் போதும் என்றாகி விடுகிறது. இதிலிருந்து மீளத்தான் என்ன வழி?

ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்:

இந்த முக்குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யார் எல்லாம் சரணடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.

இது இறைவனுடைய மாயை. இந்த மாயப் பெருங்கடலைக் கடக்க வேண்டுமென்றால் இறைவனைச் சரணடைவது தான் ஒரே வழி. இதையே தான் திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார்:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இதையே வினோபாவும் அழகாகச் சொல்கிறார். “பிரஹதாரண்யக உபநிடதத்தில் பேரிகை உதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரே பேரிகையில் இருந்து வெவ்வேறு நாதங்கள் எழுகின்றன. சிலவற்றைக் கேட்க நடுக்கமாய் இருக்கிறது. சிலவற்றைக் கேட்டதுமே துள்ளி குதிக்கத் தோன்றுகிறது. இந்த எல்லா பாவங்களையும் வெல்ல வேண்டுமானால் நாம் பேரிகை வாசிப்பவனைக் கையில் போட்டுக் கொள்ள வேண்டும். அவன் நம் வசமானதும் எல்லா நாதங்களும் நமக்குக் கட்டுப்பட்டு விடும். அதைத் தான் பகவான் ‘என்னைச் சரணடைபவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்’ என்று சொல்கின்றார்.

மெய்ஞானம் என்பது மனதைக் கடந்தது. மனதைக் கடக்காத வரையில் மெய்ஞானம் சாத்தியமில்லை. எண்ணங்கள் நின்று போகும் அற்புத கணத்தை ஒரு கண நேரமாவது உணர்ந்தவர்களுக்கு அது புரியும். அந்த ஒரு கண நேரத்தில் நமக்குக் சத்திய தரிசனம், ஒரு பேரின்ப அனுபவம் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதது. மனமும் மௌனமாகும் அற்புத தருணம் அது. அதுவே பிரபஞ்சத்துடன், இறைவனுடன் நேரும் சந்திப்பு.

ஒரு கண நேர அனுபவமே இந்த அளவு சிறப்பு என்றால் பின் ஏன் நாம் அதைத் தொடர்வதில்லை. மறுபடியும் மாயை தன் குணங்கள் என்னும் வலையில் நம்மைப் பிடித்து இழுத்துக் கொள்வதால் தான். நான் என்ற ஈகோ போகும் வரை இந்த முக்குணங்களின் கைதிகள் தான். நான் என்ற ஈகோ போய் இறைவனை சரணடையும் போது தான் முக்குணங்களின் பிடி விலகி அந்த இறைசக்தியுடன் நாம் ஒன்றுபடுகிறோம்.

அப்படி சரணடைய விடாமல், இறைசக்தியுடன் ஒன்றுபட விடாமல் தடுப்பது எது? அறியாமை தான். அடுத்ததாக அதையும் விளக்குகிறார்:
மாயையினால் அறிவிழந்தவர்களும், அசுரத் தன்மை உடையவர்களும், மனிதர்களில் தாழ்ந்தவர்களும், இழிவான செயல்களைச் செய்பவர்களுமான அறிவிலிகள் என்னை சரணடைவதில்லை.

மாயையின் உயிர்நாடியே அறியாமை தான். முழுமையான சிந்தனையும், அப்படி சிந்தித்து முடிவுக்கு வருதலும் மாயையில் இல்லை. அரைகுறை சிந்தனைகள், அரைவேக்காட்டு முடிவுகள் இருந்து அதையே முழுமை என்று நம்ப வைத்து தன் நாடகத்தை மாயை நடத்தும்.

சரணடையாதவர்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் அடையாளம் காட்டும் மனிதர்கள் எல்லாரும் அவரே சொல்கிற மாதிரி அறிவிலிகள் தான். அசுரத்தன்மை உருவாவதும், தரம் தாழ்ந்து நடப்பதும், இழிவான செயல்களைப் புரிவதும் எல்லாமே மாயையின் செயலால் சரியான அறிவின் வழிகாட்டுதல் இல்லாமல் போவதால் தான். அது தன் இருள் மிகுந்த வழிகளிலேயே ஒருவரை பயணிக்க வைக்கும். எத்தனை தான் கஷ்டப்பட்டாலும் அதிலிருந்து விலகி ஒளி உள்ள பாதைக்கு வர விடாது. இருட்டில் கற்பனைகளுக்கு இடம் உண்டு, பொய்யான முடிவுகளுக்கும் வழியுண்டு. ஒளியிலோ எல்லாம் தெள்ளத் தெளிவாகத் தெரியும் போது கற்பனைக்கு இடமேது. தவறான முடிவுகளுக்கு வாய்ப்பேது?

ஒளிமயமான இறைவனை அண்டி, மாயையின் பிடியில் இருந்து விலகி நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்வோமா?

No comments:

Post a Comment