Friday, June 20, 2014

கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!

உயிருக்கு போராடிய கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!

மகாபாரதப் போரில் பலசாலியான கர்ணன் வீழ்ந்துவிட, கௌரவர்கள் தோல்வியைத் தழுவினர். பாண்டவர்கள் பாசறையில் வெற்றிக் கொண்டாட்டம். எல்லை மீறிய உற்சாகம். குதூகலத்தில் பாண்டவர்கள் திளைத்திருந்தனர். ஆனால், ஸ்ரீகிருஷ்ண பரமாத் மாவின் முகத்தில் மட்டும் சோகத்தின் சாயல். பாண்டவர்கள் திகைத்தனர். அர்ஜுனன் அவரை நெருங்கி, ‘‘கிருஷ்ணா, உன் முக வாட்டத்துக்கு காரணம் என்ன?’’ என்று கேட்டான்.

துயரம் கவ்விய முகத்துடன் அவனை ஏறிட்ட ஸ்ரீகிருஷ்ணர், ‘‘தனஞ்சயா… பராக்கிரமசாலியும், தலைசிறந்த கொடையாளியுமான ஒருவன், இன்று வீழ்ந்து விட்டானே… அதை நினைத்து வருந்துகிறேன்!’’

‘‘ஓ… அந்த கர்ணனைப் பற்றிக் குறிப்பிடு கிறாயா?’’& மேற்கொண்டு பேசப் பிடிக்காதவ னாக முகத்தைத் திருப்பிக் கொண்டான் அர்ஜுனன். அவன் மனத்தைப் படம் பிடித் துக் காட்டியது போல் பேசத் துவங்கினார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா: ‘‘தனஞ்சயா… நான் அளவுக்கு அதிகமாக கர்ணனைப் புகழ்வதாக நீ நினைக்கிறாய். அது தவறு. இப்போதே கிளம்பு. போர்க்களத்துக்குப் போகலாம்!’’

‘‘என்ன, போர்க்களத்துக்கா? இப்போது எதற்கு?’’

‘‘கர்ணன் இன்னும் இறக்கவில்லை. போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கும் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது அர்ஜுனா! இந்த இக்கட்டான சூழலிலும்கூட அவனது கொடைத் தன் மையின் சிறப்பைக் காணலாம்! அதற்காகவே உன்னை அழைத்தேன்.’’

அர்ஜுனன் சம்மதித்தான். இருவரும் கிளம்பினர்.

யுத்த பூமி. பிணங்களும் எலும்புகளும் அம்புத் துண்டுகளும் நாற்புறங்களிலும் சிதறிக் கிடக்க… எங்கு பார்த்தாலும் மாமிசமும் உதிரமும் கலந்த சேறு. குற்றுயிரும், குலையுயிருமாக ஆங்காங்கே சிலர் வேதனையுடன் விழுந்து கிடக்க… பிணம் தின்னும் நரிகளின் ஆட்சி, அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

‘‘அர்ஜுனா, நீ இங்கேயே நில்! நான் மட்டும் செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே நடப்பதை கவனி!’’

அர்ஜுனனுக்கு ஆணை பிறப்பித்துவிட்டு, தான் ஒரு வயோதிக அந்தணர் வேடமிட்டுக் கொண்ட கிருஷ்ண பரமாத்மா, சுற்றுமுற்றும் பார்வையைச் சுழல விட்டவாறே உரத்த குரலில், ‘‘ஏ கர்ணா…. கொடை யாளி கர்ணா! எங்கே இருக்கிறாய்?’’ என்றவாறு கையில் ஊன்றுகோலைத் தாங்கி, தள்ளாடியவாறு நடந்து சென்றார். கண்கள் செருக, வாயினின்று குருதி பெருக்கெடுத்து வழிந்தோட… உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், சதைப் பிண்டமாகத் தரையில் மூர்ச்சித்துக் கிடந்த கர்ணன், குரல் வந்த திசை நோக்கி பலவீனமான குரலில், ‘‘சகோதரா…. தாங்கள் எங்கே இருக்கிறீர்கள்? தங்களின் குரலை மட்டுமே என்னால் கேட்க முடிகிறது!’’ என்று பதைபதைத்த கர்ணனின் முன்பாக புன்னகையுடன் நின்றார் அந்தணர் வடிவிலிருந்த கண்ணன்.

‘‘அழைத்தது நான்தான் கர்ணா. மிகுந்த நம்பிக்கையுடன் உன்னை நாடி வந்துள்ளேன்!’’

‘‘என்னவென்று கூறுங்கள் பெரியவரே!’’ ஈனசுரத்தில் முணுமுணுத்தான் கர்ணன்.

‘‘கர்ணா, உன்னைப் பற்றி நான் நன்கு அறிவேன். எந்தச் சூழ்நிலையிலும் உன் நாவிலிருந்து ‘இல்லை’ என்ற சொல் வந்தது கிடையாது! ஆகவேதான் உன்னை நாடி வந்தேன். இப்போது எனக்கு இரண்டு கடுகளவு தங்கம் வேண்டும்… அவ்வளவே!’’


அவரது வார்த்தைகள் கேட்டு தர்மசங்கடமாகப் புன்னகைத்தான் கர்ணன். ‘‘பெரியவரே! இரண்டு கடுகளவு என்ன… வேண்டிய அளவுக்குப் பொன்னும் பொருளும் பெற்றுச் செல்லலாம். ஆனால்…’’ _ கர்ணனின் குரலில் லேசான தயக்கம்.

மறு கணம் அவனை எரித்து விடுவது போன்று ஏறிட்டார் அந்தணர். ‘‘கர்ணா… என்ன தயக்கம்?’’

‘‘கோபம் வேண்டாம் பெரியவரே! நான் கூறுவதைச் சற்றுப் பொறுமையாகக் கேளுங்கள். நீங்கள் இக் கணமே எனது இல்லத்துக்குச் சென்று, என் மனைவியிடம் கேட்டு பொன்னையும் பொருளையும் பெற்றுச் செல்லுங்கள்!’’

உடனே அந்தணரின் முகம் கோபத்தில் சிவந்தது. ‘‘என்ன… உனது இல்லத்துக்குச் செல்வதா? இதோ பார் கர்ணா! கொடுக்க விருப்பமில்லையென்றால் இல்லை என்று சொல். எதற்காக என்னை அலைக் கழிக்கிறாய்?’’

அந்தணரது வார்த்தைகள் கேட்டுப் புழுவாகத் துடித்தான் கர்ணன். ‘‘அபசாரம்… அபசாரம்! என்ன வார்த்தை கூறி விட்டீர். உங்களுக்கு இப்போது தங்கம் தானே வேண்டும்… இதோ, இக்கணமே தருகிறேன். என் பற்களில் சிறிது தங்கம் வைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து அதை எடுத்துக் கொள்ளுங்கள்!’’

பரபரத்த கர்ணனை வெறுப்புடன் ஏறிட்டார் அந்தணர். ‘‘என்ன தைரியம் உனக்கு! ஓர் அந்தணனி டம் போய், மனிதனின் பல்லைப் பிடுங்கிக் கொள் என்கிறாய். வெட்கமாக இல்லை உனக்கு?’’

கர்ணனுக்கு தர்மசங்கடமான நிலைமை. எதுவும் தோன்றாமல் சுற்றுமுற்றும் பார்வையைச் சுழல விட்டவனின் கண்களில் ஒரு சிறு கல் தென்பட்டது. அவன் மூளையில் ‘பளிச்’ சென்று ஒரு மின்னல். தன் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தைச் செயல்படுத்தும் விதமாக, மிகவும் சிரமப்பட்டுத் தன் உடலை அந்தக் கல் இருக்கும் இடத்துக்கு இழுத்துச் சென்று, அதன் மீது பல்லை வைத்து இழுத்தான் கர்ணன். அடுத்த கணம் பற்கள் உடைந்தன. முக்கி முனகியவாறு அந்தத் தங்கப் பற்களைக் கையில் எடுத்துக் கொண்ட கர்ணன், அவரை நோக்கி, ‘‘பெரியவரே! இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்’’ என்றான்.

ஆனால், அந்தணரோ சீறி னார். ‘‘சேச்சே! ரத்தத்தில் தோய்க் கப் பெற்ற, புனிதமற்ற இந்த எலும்பையா பெற்றுக் கொள்ளச் சொல்கிறாய்?’’


பரிதாபமாக ஏறிட்டான் கர் ணன். எப்படியாவது அந்தத் தங் கத்தை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. அதற்குண்டான அடுத்த முயற்சியில் இறங்கினான் அவன். தன் இடுப்பில் செருகப் பட்டிருந்த கத்தியை வெகு சிரமப்பட்டு உருவிய அவன், பின்னர் அதன் உதவியால் பற்களிலிருந்து தங்கத்தை மட்டும் சுரண்டி எடுத்து அவரிடம் நீட்டினான்.

ஆனால், அவரோ கண்கள் சிவக்க கோபத்துடன், ‘‘அக்கிரமம்! ஒருக்காலும் இதைப் பெற்றுக்கொள்ள மாட்டேன்!’’ என்றார். என்ன செய்வதென்று புரி யாமல் நிலைதடுமாறிய கர்ணனின் கண்களில் சற்றுத் தொலைவிலிருந்த அவனது வில் தென்பட்டது. வெகு சிரமப்பட்டுத் தன் உடலை அதன் அருகே இழுத்துச் சென்று மிகுந்த பிரயாசையுடன் தன் தலையால் அழுத்தி, வில்லில் பாணத்தைப் பொருத்தி வருணாஸ்திரத்தைப் பிரயோகித்தான். அதிலிருந்து உண்டான மழையால் அவன் கையிலிருந்த பற்களில் ரத்தம் சுத்தமாக நீங்கப் பெற்று, இப்போது பளிச்சிட, அதைப் பணிவுடன் அவரிடம் நீட்டினான் கர்ணன். ‘‘பெரியவரே! இப்போது பெற்றுக் கொள்வதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையே?’’ _ மூச்சு வாங்கப் பேசினான் கர்ணன்.

வயோதிக அந்தணர் உருவிலிருந்த கிருஷ்ண பர மாத்மா குறுநகை புரிந்து மௌனம் சாதித்தார்.

‘‘பெரியவரே…’’ _ கலங்கிய கண்களுடன் ஏறிட்ட கர்ணனின் எதிரே கிருஷ்ண பரமாத்மா, சங்கு& சக்ர& கதாபாணியாக வெண்பட்டும், நவரத்தின அணிமணி மாலைகளும் பிரகாசிக்க, மலர்ந்த முகத்துடன் காட்சியளித்தார். அங்கே வயோதிக அந்தணரைக் காண வில்லை. அனந்தனின் ஆனந்த தரிசனத்தால் பூரித்துப் போன கர்ணனுக்கு, சந்தோஷத்தில் பேச நா எழவில்லை. குழந்தை போல் விம்மி விம்மி அழுதவாறு அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டான். அவனது பக்தியில் பெருமிதம் கொண்ட கிருஷ்ண பரமாத்மா தம் திருக்கரத்தை கர்ணனின் சிரம் மீது வைத்து, ‘‘அன்பனே, உனது கொடைத் தன்மையை மெச்சினோம். வேண்டிய வரங்களைக் கேள்!’’ என்று திருவாய் மலர்ந்தார்.

இப்போது சாவதானமாக பதில ளித்தான் கர்ணன். ‘‘ஹே பிரபோ… பரமதயாளா! மூவுலகுக்கும் அதிபதி யான, பரம கருணா மூர்த்தியான தாங்களே என் உயிர் பிரியும் இந்த வேளையில் இங்கு வந்திருக்கும் போது எனக்கு வேறு என்ன வரம் வேண்டும்!’’

கர்ணனின் உயிர் கண்ணபிரானின் திருவடிகளில் தலையை வைத்தவாறு பிரிந்தது. தொலைவில் நின்று கொண்டிருந்த அர்ஜுனனைத் தன் கருணை ததும்பும் விழிகளால் நோக்கினார் கிருஷ்ண பரமாத்மா. அந்த அர்த்தபுஷ்டியான பார்வையின் வீரியத்தைத் தாங்க முடியாமல் அர்ஜுனனின் தலை அனிச்சையாகக் குனிந்தது.

No comments:

Post a Comment