குருபக்தியால் உயர்ந்த மாணவன்
பக்தியில் மூன்று நிலைகள் இருக்கின்றன. தெய்வ பக்தி, அடியார் பக்தி, குரு பக்தி. இந்த மூன்றிலும் குருபக்தி உயர்ந்து நிற்கிறது. தெய்வத்திடம் செய்த பாவத்தை குருவிடம் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் குருவிற்கு செய்த பாவத்தை தெய்வத்திடம் போக்கிக்கொள்ள முடியாது.
அத்தகைய குருபக்தியில் சிறந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அயோத தவுமியர் என்ற தவமுனிவர், பல மாணவர்களை ஒன்று சேர்த்து குருகுலம் நடத்தினார். பலதரப்பட்ட மாணவர்கள் அந்தக் குருகுலத்தில் பயின்று வந்தனர். அந்த மாணவர் குழுவில் பாஞ்சால தேசத்து மன்னனின் மகனும் ஒருவன்.
‘ஆருணி’ என்ற பெயர் கொண்ட அந்த மாணவன், அனைத்து கலைகளிலும் திறமை பெற்றவனாக திகழ்ந்தான். அவன் குருவிடம் மிகுந்த பக்தி கொண்டவனாக இருந்தான். ஒரு நாள் குருநாதர் அரசகுமாரனை அழைத்தார். ‘ஆருணி! நமது குரு குலத்துக்குச் சொந்தமான வயலில் தண்ணீர் பெருகிப் பயிரை அழிக்கின்றது.
ஆகையால் நீ சென்று, தண்ணீர் பாயும் வாய்க்கால் மடையை அடைத்து வா!’ என்று கட்டளையிட்டார். ‘அரசகுமாரனான நான் போய் மடையை அடைத்து வருவதா?’ என்ற எண்ணம் அவனிடம் தோன்றவில்லை.
பெருஞ்செல்வத்தில் பிறந்து வளர்ந்தவன், வயல் வேலையை பற்றிக் கவலைப்படாமல், குருநாதரின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். வயலுக்குப் போய், புல்லுடன் கூடிய களிமண்ணை வெட்டி, வெட்டி மடையில் இட்டுத் தண்ணீரைத் தடுக்க முயற்சி செய்தான்.
அவன் மடையை அடைக்க அடைக்க, அது அடைபடாமல் உடைந்து கொண்டே இருந்தது. காலையில் அவன் தொடங்கிய இந்தப் பணி, மாலை வரைக்கும் தொடர்ந்தது. அவனால் இன்னும் மடையை அடைக்க முடியவில்லை. தனது இயலாமையை எண்ணி மிகவும் வருந்தினான். உடலும், உள்ளமும் சோர்ந்து போனது.
‘குருநாதரின் கட்டளையை நிறைவேற்ற முடியாத நான் இன்னும் உயிருடன் இருக்க வேண்டுமா?’ என்ற எண்ணம் கூட ஆருணிக்குத் தோன்றியது. இருப்பினும் சிறிது நேரம் சிந்தித்தான். அவனுக்கு அந்த சிந்தனை தோன்றியது.
‘குருநாதர் இட்ட கட்டளையை நிறைவேற்ற என் உடம்பையே அர்ப்பணிக்கிறேன்’ என்று கூறியபடி, வாய்க்காலில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீரை எதிர்த்து மடையில் படுத்து விட்டான். அன்று இரவு குருநாதர் விளக்கின் முன் அமர்ந்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
எப்போதும் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் ஆருணியைக் காணவில்லை. திகைத்துப் போன துறவி, மற்ற மாணவர்களிடம், ‘உயர்ந்த குணம் படைத்த ஆருணியை எங்கே?’ என்று கேட்டார். ஒரு மாணவன், ‘சுவாமி! அவன் காலையிலேயே வயலுக்கு மடை அடைக்கச் சென்றான்.
திரும்ப வரவில்லை’ என்றான். துறவி, தீவட்டியை எடுத்துக் கொண்டு மாணவர்கள் சூழ வயலுக்குச் சென்றார். அங்கு எங்குத் தேடியும் ஆருணியைக் காணவில்லை. பின்னர் அன்புடன், ‘ஆருணி! ஆருணி!’ என்று அழைத்தார்.
ஆருணி தண்ணீரில் இருந்தபடி, ‘குருநாதா! அடியேன் தண்ணீருக்குள் படுத்திருக்கிறேன்’ என்றான். அயோத தவுமியர், ‘அன்புடையவனே! எதற்காக தண்ணீரில் படுத்திருக்கின்றாய்!’ என்று கேட்டார். ஆருணி கூறலானான்.
‘குருவே! நான் காலை தொடங்கி மாலை வரை மடையை அடைத்தேன். மடை அடைபடவில்லை. உங்கள் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு, நானே மடையில் படுத்துவிட்டேன். என்னைத் தாண்டுவதற்கு அஞ்சி, தண்ணீர் தேங்கி நின்று விட்டது.
அதனால் அடியேன் மடையில் படுத்திருக் கிறேன்’ என்று கூறினான். அவனுடைய குருபக்தியையும், அவனைத் தாண்ட அஞ்சி நிற்கும் தண்ணீர்த் தேக்கத்தையும் கண்ட அனைவரும் அதிசயித்துப் போயினர். குருநாதர், ‘ஆருணி! எழுந்து வா!’ என்று கட்டளையிட்டார்.
ஆரணி தண்ணீரைப் பிளந்து கொண்டு வந்தான். அதனால் அவன், ‘உத்தாலகன்’ என்று பெயர் பெற்றான். உத்தாலகன் என்பதற்கு தண்ணீரைப் பிளந்தவன் என்று பொருள்.
அயோத தவுமியர், ஆருணியை தன் அருட்கண்ணால் பார்த்து, ‘உனக்கு சகல கலைகளும் சித்தியாகுக! நீ மெஞ்ஞானச் செல்வத்தைப் பெற்று மேன்மையுடன் விளங்குவாய்’ என்று அருளாசி வழங்கினார்.
No comments:
Post a Comment