Saturday, June 14, 2014

ஆலய பணி செய்பவர்களுக்கு எத்தகைய புண்ணியம் கிடைக்கும்

அவன் ஒரு மிகப் பெரும் செல்வந்தன். வட்டிக்கு பணம் விடுவதை தொழிலாக கொண்டவன். அநியாய வட்டிக்கு பணத்தை கொடுத்தும் பொருட்களை அடகு பிடித்தும் வாழ்ந்து வந்தான். அவனிடம் ஈவு இரக்கம் என்பதையே எதிர்பார்க்க முடியாது. சரியான நேரத்தில் கடனை திருப்பி கொடுக்காதவர்களை அவமானப்படுத்துவது.

அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்வது என்பது போன்ற அவனது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இதன் காரணமாக பலரின் சாபத்துக்கும் அவன் ஆளானான். கோவிலுக்கு அவன் அடிக்கடி சென்று வந்தான். அது பக்தியால் அல்ல. கோவிலில் அவன் செல்வத்துக்கு கிடைக்கும் மரியாதைக்காக மட்டுமே.

இந்த நிலையில் செல்வந்தனின் மனைவி கருவுற்றிருந்தாள். பிரசவம் எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்கிற நிலை. ஏழைகளை வயிறு எரியச் செய்த பெரும் பாவத்தின் காரணமாக, செல்வந்தனின் மனைவிக்கு குழந்தை பிறக்கக் கூடாது என்ற விதி இருந்தது. ஒரு நாள் தனது வட்டிக்கடையில் அமர்ந்து கணக்கு பார்த்துக்கொண்டிருந்தான் செல்வந்தன்.

அப்போது அவன் மனைவிக்கு பிரசவ வலி வந்துவிட்டதாக தகவல் வந்தது. உடனே வீடு நோக்கி விரைந்தான். விதிப்படி கருவில் இருக்கும் குழந்தையின் உயிரை கவர எம தூதர்கள் செல்வந்தன் இல்லம் வந்தனர். செல்வந்தன் வீட்டிற்கு செல்லும் வழியில் சிவாலயம் இருந்தது. அந்த ஆலயம் கும்பாபிஷேகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது.

ஊர் மக்கள் கூடி திருப்பணி செய்து கொண்டிருந்தனர். கோவிலுக்கு பின்னே இருக்கும் சிறிய குறுகலான பாதையில் சென்றால் வீட்டுக்கு சீக்கிரம் சென்றுவிடலாம் என்பதால், செல்வந்தன் அந்த குறுகலான பாதையில் நடந்தான். அப்போது ஏணியில் நின்றபடி கோவில் மதில் சுவரில் ஒருவர் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார்.

அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்துவிட்டது. மேலே நின்றவர், அந்தப் பக்கம் சென்ற செல்வந்தனிடம், ‘ஐயா! தர்மபிரபு! கொஞ்சம் அந்த மட்டையை எடுத்து கொடுங்கள்’ என்றான். தர்மபிரபு என்ற வார்த்தையில் அவன் மனம் குளிர்ந்ததால், மட்டையை எடுத்து ஏணியில் சில படிகள் ஏறி மேலே இருந்தவரிடம் கொடுத்து விட்டு தன் வழி நோக்கி நடந்தான்.

செல்வந்தன் மனைவிக்கு பிறக்க இருந்த குழந்தையின் உயிரைப் பறிக்க எம தூதர்கள் தயாரானபோது, சிவ தூதர்கள் அங்கு தோன்றி அவர்களை தடுத்தனர். ‘குடமுழுக்கிற்காக தயாராகும் சிவாலயத்திற்கு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்த ஒரு அடியவருக்கு, இவர் மிகச் சிறிய உதவி ஒன்றை செய்துள்ளார்.

அதன் மூலம் அந்த புண்ணியத்தில் லட்சத்தில் ஒரு பங்கு இவருக்கு சேர்ந்துவிட்டது. இவரது குழந்தையின் உயிரை கவரக்கூடாது என்பது ஈசனின் ஆணை. மேலும் அருகிலிருந்து சுகப் பிரசவத்திற்கு அருள்புரியும்படி இறைவன் கட்டளையிட்டுள்ளார். எனவே நீங்கள் போகலாம்’ என்று கூறினர்.

எம தூதர்கள் திரும்பிச் சென்றனர். கோவில் சுவரில் வண்ணம் பூசும் மட்டையை எடுத்து கொடுத்ததற்கே, இப்படி ஒரு பலன் என்றால், ஒவ்வொரு ஆலயத்திலும் உழவாரப்பணி செய்பவர்களுக்கு எத்தகைய புண்ணியம் கிடைக்கும் என்பதை நினைத்துபாருங்கள். 

No comments:

Post a Comment