ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 16
இனி நாம் மகாலட்சுமி வைபவம் பற்றி ஆனந்திப்போம்.
யாருடைய வைபவம் பற்றி யார் பேச வேண்டும் என்ற தகுதி முதலில் நிர்ணயிக்கப்பட வேண்டும். யாரும் யாருடைய வைபவம் பற்றியும் பேசிவிட முடியாது. உலகத்திலுள்ள ஒருவரைப் பற்றி பேசினால் கூட, அவரைப் பற்றி பேச ஒரு தகுதி வேண்டும் என்று நாம் சொல்லிக் கொள்கிறோம். அப்படியானால், தாயார் மகாலட்சுமியைப் பற்றி பேச எந்தளவுக்கு தகுதி வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த தகுதி நமக்கு இருக்கிறதா என்றால் அது கேள்விக்குரிய விஷயம் தான்.
பொதுவாக பகவத் (தெய்வ) விஷயத்தில் நாம் அறிந்தது மிகக்குறைவே. அதிலும் பகவானைப் பற்றியதை விட பிராட்டியின் வரலாறு நமக்கு தெரியவே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். நம் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதவர் ஸ்ரீமன் நாராயணன். அவருடைய பெருமையை இவ்வளவு.. அவ்வளவு என்றெல்லாம் வரையறுத்துக் கூற முடியாது. அப்படியிருக்க அவரது பிராட்டி பற்றி நமக்கு என்ன தெரியும்! இன்னும் சொல்லப்போனால். மகாலட்சுமி தாயாருக்கே கூட அவளைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்பது தான் மிகவும் ஆச்சரியமான விஷயம்.
பகவான் எல்லாம் தெரிந்தவர், எல்லா சக்திகளும் உடையவர் என்று நாம் சொல்கிறோம். இதுபற்றி கூரத்தாழ்வானுக்கு ஒருமுறை சந்தேகம் வந்து விட்டது.
""உன்னைப் பற்றி உலகத்தார் இப்படி இரண்டு விஷயம் சொல்கிறார்களே! இது உண்மை தானா?'' என்று அவரிடமே கேட்டு விட்டார். ஒரு நாத்திகன் இப்படி கேட்டால் அதில் வியப்பில்லை. ஆஸ்திகர்களே இப்படி கேட்டால், பகவானால் எப்படி பதில் சொல்ல முடியும்?
ஆனால், எதற்காக அப்படி கேட்டார் என்பதற்கு விளக்கம் கேளுங்கள்.
பகவானுக்கு எல்லாம் தெரியும் என்றால், பிராட்டியாரின் பெருமை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால், பிராட்டியின் பெருமைக்கு ஒரு எல்லை இருக்கிறது என்று அர்த்தமாகி விடுகிறது. பிராட்டியாரின் பெருமைக்கோ எல்லை இல்லை என்பதே உண்மை. இருக்கிற ஒன்றைப் பற்றி பேசினால் தான் அதில் அர்த்தமுண்டு. அப்படி பேசுபவன் தான் ஞானி. இல்லாத ஒன்றைப் பற்றி பேசினால், அவனைப் பைத்தியம் என்றுதான் முடிவு கட்ட முடியும். தாயாரின் பெருமைக்கு எல்லை இருக்கிறது என்றால் அதுபற்றி பேசலாம். இல்லை என்றால் பேச முடியாது.
முயலுக்கும், குதிரைக்கும் கொம்பு இருக்கிறது என்று நான் பேசினால், என்னை ஞானி என்பீர்களா!
பைத்தியம் என்பீர்களா! எது கிடையாதோ அதைப்பற்றி பேச வேண்டும் என்கிற அவசியம் ஞானிக்கு கிடையாது. பிராட்டியின் வைபவத்துக்கு எல்லை இல்லை எனும் போது. அதுபற்றி பகவானுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் அவனுக்கு இல்லை என்றாகி விடுகிறது. உபநிஷத்துகளும் அவளது வைபவத்துக்கு எல்லை இல்லை என்கின்றன. பிராட்டியைப் பற்றி பேசினால், முதலில் ஆனந்தப்படுவது பெருமான் தான். அவளது வைபவம் பற்றி சொல்லிமாளாது.
மழை நீர் கடலில் கொட்டுகிறது. அதனால் கடலுக்கு என்ன லாபம்? மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் கடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அது பரந்து விரிந்து தான் கிடக்கும். ஆனால், கடலில் பொழிவதால் மழைக்குத் தான் பெருமை. "கடலோடு, நான் என்னை சம்பந்தப்படுத்திக்கொள்கிறேனே' என்று மழை பெருமைப்பட்டுக் கொள்ளும்.
அதுபோல, தாயாரின் வைபவம் பற்றி பேசினால் நம் நாக்கிற்கு நல்லது. எத்தனையோ அழுக்கான அருவருப்பான விஷயங்களை இந்த நாக்கு பேசுகிறது. அந்த நாக்கைச் சுத்தப்படுத்த அவளது வைபவம் பற்றி பேசிக் கொள்ளலாம். ""சரி...உம்மைப் போல் அதுபற்றி பேசுபவர்களுக்கு நாக்கு சுத்தமாகும். எங்களுக்கு என்ன லாபம்?'' என்று கேட்பீர்கள். அதைக் காதால் கேட்கிறீர்களே! உங்கள் காதுகளுக்கு நல்லது. ஏனெனில், இந்த காது எத்தனையோ கெட்டதுகளையும் கேட்கிறது. அதைச் சுத்தப்படுத்த இந்த நல்லது தேவை.
மகாலட்சுமி என்பவள் யார்? அந்த பிராட்டிக்கு பூதேவி, பூதேவி, நீளாதேவி என்ற மூன்று நிலைகள் உண்டு.
ஸ்ரீ.. வைஷ்ணவம், திரு..மால் அடியார்கள் என்பதில் உள்ள ஸ்ரீ, திரு என்பதெல்லாம் தாயாரையே அடையாளம் காட்டுகிறது.
தாயாரைப் பிரிந்து பகவான் இருப்பதே இல்லை. ஆழ்வார்கள் பாசுரம் பாடும் போது, "திரு..மால்' என்றே பாடுகிறார்கள். எங்காவது "மால்' என்று பாடினால், அவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். நாம் திருமண்காப்பு (நாமம்) இடும் போது கூட, ஸ்ரீசூர்ணத்தையும் சேர்த்தே இடுகிறோம்.
பகவான் பற்றி எத்தனை எத்தனை சூக்தங்கள் உள்ளதோ, அந்தளவுக்கு பிராட்டிக்கு இல்லை. விஷ்ணு சூக்தம், நாராயண சூக்தம், சமகங்கள் என்று எத்தனையோ பகவானுக்கு உண்டு. தாயாருக்கோ ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, சிரக்ஷா, மேதா என்று குறிப்பிட்ட சில சூக்தங்களே உள்ளன. வேதாந்த தேசிகன் பகவானைப் பற்றி 28 சூக்தங்கள் இயற்றினார். ஆனால், அதில் நாச்சியாருக்கு ஒன்றே ஒன்று தான் உண்டு. ஆழ்வார்கள் 100 பாசுரம் பாடினால், அதில் ஒன்றே ஒன்று தான் பிராட்டியைப் பற்றி இருக்கும்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது, இது ஓரவஞ்சனையோ என்றே தோன்றுகிறது. பராசர பட்டரும் பூர்வ சதகம், உத்தர சதகம் என்று 120 ஸ்லோகங்கள் வீதம் எழுதினார். ஆனால், தாயாருக்கு 60, 65 ஸ்லோகங்கள் தான் இருக்கிறது. ஆளவந்தார் 60 ஸ்தோத்திர ரத்தினம் பாடியும் தாயாருக்கு குறைவாகவே இருக்கிறது. இதைப் பார்க்கும் போது, தாயாருக்கு வைபவம் குறைவோ என்று தோன்றுகிறது.
இவ்வாறு குறைவாக இருக்க காரணம் என்ன?
ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 17
சாமான்ய நிலையில் இருக்கும் ஒருவரைப் பற்றி அறிமுகப்படுத்தச் சொன்னால் ஐந்து நிமிடத்தில் அவரைப் பற்றி எடுத்துச் சொல்லலாம். ஆனால், தகுதியில் உயர்ந்தவர்களைப் பற்றி எளிதாகச் சொல்லி விட முடியாது. எடுத்துச் சொல்வதற்கும் தகுதி முக்கியம்.
வசிஷ்டமகரிஷி இங்கு வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவரைப் பற்றி என்னிடம் பேசச் சொன்னால், நான் அவரை நமஸ்கரித்து விட்டு அமர்ந்து விட வேண்டியது தான். அவர் என்ன சாமான்யமானவரா? மகரிஷி... மகானுபாவர்...
அவரைப் பற்றி எதையாவது தவறாகச் சொல்லி விட்டால் எனக்கு "அசடு' என்ற பட்டம் வந்து விடும். இதனால் தான் வேதமும், ஏற்றம் மிக்கவளான பெரிய தாயாரை , "இவள் பிராட்டி' என்று மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு நின்று கொண்டது.
பிராட்டியைப் பற்றி பேசாததற்கு, அவளின் பெருமைக்கு எல்லை இல்லாததே காரணம். தாயாரின் பெருமையை எடுத்துச் சொல்லும் "ஸ்ரீசூக்தம்' வேதத்தின் பாதமாகப் போற்றப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமத்தின் கடைசிப்பகுதியான லட்சுமி தந்திரத்தில் ஸ்ரீசூக்தம் இடம் பெற்றுள்ளது. இந்த மந்திரம் எப்படி பிறந்தது? இந்திரனே லட்சுமி தாயாரிடம் வேண்டுவதாக இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது. அதில் முதல் ஸ்லோகம், ""ஸ்ரீதேவி தாயாரின் அருளை எனக்கு பெற்றுக் கொடுப்பாய்' என்று பெருமாளிடம் வேண்டுவதாக உள்ளது.
ஓம் நமோ நாராயணாய, சரம ஸ்லோகமான "மாம் ஏகம் சரணம் வ்ரஜ' (நான் ஒருவனே சரணடையத்தக்கவன்) இந்த இரண்டிலும் தாயாரின் சம்பந்தம் இல்லை. அதனால், இந்த இரண்டையும் விட நடுமந்திரமான துவய மகாமந்திரத்தில் மட்டும், தாயாரின் சம்பந்தம் இருப்பதால் ஏற்றம் மிக்கதாக விளங்குகிறது. ஆளவந்தார் சதுஸ்லோகியில் (நான்கு ஸ்லோகங்களில்) தாயாரின் பெருமையைப் போற்றுகிறார்.
வேதாந்தம் பற்றி பல நூல்கள் எழுதிய ராமானுஜரும் பெரிய பிராட்டியின் மகத்துவத்தை உலகிற்கு தெரியப்படுத்தினார். ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரத்தன்று நம்பெருமாள் பெரியபிராட்டியோடு ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளும் போது, பெரியபிராட்டியை முன்னிட்டுக் கொண்டு, பெருமாளிடம் சரணடையும் படி வழிகாட்டினார்.
கூரத்தாழ்வான் பாடிய பஞ்சஸ்தவத்தில் பிராட்டியைப் பற்றி பத்து ஸ்லோகங்கள் உள்ளன. பராசர பட்டர் "ஸ்ரீ குணரத்ன கோசம்' பாடி தாயாரை போற்றியுள்ளார். "தாயாரின் ரத்தினமான குணங்களைப் போற்றும் பேழை' என்பது இதன் பொருள். வேதாந்ததேசிகன் "ஸ்ரீஸ்துதி'யில் தாயாரின் பெருமையை அழகாகச் சாதிக்கிறார். இந்த மகாலட்சுமி யார்? இப்படி சட்டென்று கேட்டால் உடனே சொல்ல முடியாது. சம்பிரதாயப்படி அவள் யார் என்பதை பிரமாணத்துடன் தான் சொல்ல வேண்டும்.
பெருமாளை விட்டு, அவள் எப்போதும் பிரிவதில்லை, உயிர்களுக்கு அருள்புரியும்படி பெருமாளிடம் வேண்டுபவள் அவள். இதனை "புருஷகாரம்' என்று சிறப்பிப்பர். "ஸ்ரீமந்நாராயணன்' என்று பெருமாளுக்கு அடையாளம் தருபவளே பிராட்டி தான்.
(ஸ்ரீ என்றால் லட்சுமி) திருமாலின் அடையாளமாக சங்கு, சக்கரம், துளசிமாலை, பீதாம்பரம் என்று எத்தனையோ சொல்லலாம். ஆனால், இவற்றை எல்லாம், நாம் கூட தாராளமாக அணிந்து கொள்ளலாம். லட்சுமியை மார்பில் தாங்குவதால் "திருவறுமார்பன்' என்று பெருமாள் பெயர் பெறுகிறார். அதற்கு "சொரூப நிரூபக தர்மம்' என்று பெயர். எந்த குணத்தை விட்டு விட்டால் ஒரு பொருள் தன் அடையாளத்தை இழக்குமோ, அந்த குணமே சொரூப நிரூபக தர்மம். விளக்கு என்றால் ஒளியும், விசிறி என்றால் காற்றும், புஷ்பம் என்றால் வாசனையும் அதன் தர்மமாக இருக்கிறது. பெருமாளின் திருமார்பில் பிராட்டியார் இருப்பது தான், அவரின் அடையாளமாக இருக்கிறது. ஸ்ரீமந்நாராயணன் என்று எழுதும்போது கூட, "ஸ்ரீ' யாகிய தாயாருக்கும் நாராயணனாகிய பெருமாளுக்கும் இடையில் சின்ன இடைவெளி கூட விடாமல் சேர்த்தே எழுத வேண்டும். ஏனென்றால் தாயார் எப்போதும் பெருமாளைப் பிரியாமலே இணைந்தே இருக்கிறாள்.
பிரளய வெள்ளம் எங்கும் பெருக்கெடுத்து ஓடியது. ஆலிலையில் சிறு பாலகனாக கண்ணன் கால் கட்டை விரலை வாயில் வைத்து சுவைத்தபடி அதில் மிதந்து வந்தார். அங்கிருந்த மார்க்கண்டேய மகரிஷி, "சிறுகுழந்தை இப்படி வெள்ளத்தில் மிதக்கிறதே' என்று ஆச்சரியத்ததுடன் நின்றார். "பிள்ளாய் நீ யார்?' என்று கேட்டார். பெருமானோ வாயே திறக்கவில்லை. கண்ணால் ஜாடை மட்டும் காட்டினார்.
அவருடைய கையோ மார்பில் இருக்கும் ஸ்ரீவத்சத்தைக் காட்டியது. அதுதான் லட்சுமி வசிக்கும் இடம். "ஸ்ரீவத்ஸ பீட மகாலட்சுமி' என்று அவளுக்குப் பெயர் இதனால் தான். நாராயணனுக்கு ஒரே அடையாளமே "ஸ்ரீ'யோடு எப்போதும் சேர்ந்திருப்பது தான். பிரம்மத்திற்கு அகந்தையாக அவள் இருக்கிறாள். "அகந்தை' என்ற சொல்லை "ஆணவம்' என்று தவறாக நாம் பயன் படுத்துகிறோம். இங்கு "நானாகிற தன்மை' என்று பொருள். பெருமாளின் குணமாக லட்சுமி இருக்கிறாள். அவருக்கு ஒளியாக தாயார் இருக்கிறாள்.
உலகில் அறிந்ததை விட அறியாத விஷயங்களே அதிகமாக இருக்கிறது. . உலகியலுக்கு இது பொருந்துவதை விட, பகவத் (தெய்வ) விஷயத்திற்கு மிகவும் பொருந்தும். நமக்கு இந்த கருத்து பொருந்துவது சரி. ஆனால், பெருமாளுக்கும் இது பொருந்துமா? மகாலட்சுமியின் கல்யாண குணத்தை அவரால் எப்படி அறிய முடியாமல் போனது? அவர் "ஸர்வக்ஞனாக' (எல்லாம் அறிந்தவராக) இருக்கிறார். அவர் "ஸர்வசக்தனாகவும்' (எல்லா ஆற்றலும் பொருந்தியவராகவும்) இருக்கிறார். ஆனால், இந்த இரண்டு குணங்களும் பெற்றும் தாயார் விஷயத்தில் அது பொருந்தவில்லையே ஏன்?
பெருமாள் தாயாரின் வைபவத்தை முற்றிலும் தெரிந்தவர் என்று சொன்னால், அவளின் கல்யாண குணங்களுக்கு எல்லை உண்டு என்றாகிவிடும். பெருமாளுக்கு தெரியாது என்று சொன்னால், எல்லாம் அறிந்தவர் என்ற சிறப்பு இல்லாமல் போய்விடும்.
ஆனால், வேதம் எப்படி சொல்கிறது தெரியுமா? தாயாரின் கல்யாண குணத்தின் எல்லையை நீர் (பெருமாள்) தெரிந்து வைத்திருக்கவில்லை. இருந்தாலும் உமது "ஸர்வக்ஞன்' என்ற பெருமைக்கு ஒரு குறையும் இல்லை என்று பெருமாள், தாயார் இருவருக்கும் பெருமை சேர்க்கிறது.
சாமான்ய மனிதர்களான நாம், நமக்குத் தெரிந்தவரை ஏதோ தாயாரைப் பற்றிச் சொன்னாலும், அதைக் கேட்பதில் பெருமாளுக்குத் தான் ஆசை அதிகம். அதைக் கேட்டு , பெருமாளின் முகம் தாமரையாக மலர்கிறது. அதைக் கண்டு தாயாரும் மகிழ்கிறாள். அவர்கள் இருவரின் மலர்ந்த முகங்களை தரிசிப்பதில் தான் நமக்கு ஆனந்தம். அந்த ஆனந்தத்தை அடைவது தான் நம் கடமை.
ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 18
பெரிய பிராட்டி என அழைக்கப்படும் திருமகளே (லட்சுமி) பெருமாளுக்கு அடையாளம். கோயில்களில் திருமார்பு நாச்சியார் என பெருமாளின் மார்பில் இவள் இருப்பாள். பக்கத்து நாச்சியாராக அவருக்கு அருகிலும் இருப்பாள். தனிக்கோயில் நாச்சியாராகவும் வீற்றிருப்பாள். ஆனால், பெருமாளுக்கு இப்படி தனித்தனி சந்நிதிகள் இருக்காது. பெருமாள் நிஜம் என்றால், அதன் நிழல் தான் தாயார். பெருமாள் எங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் தாயார் நிழல் போல தொடர்கிறாள். முக்தி பெற்ற உயிர்களை வைணவத்தில் "நித்யசூரிகள்' என்று குறிப்பிடுவர். இந்த நித்யசூரிகளுக்கெல்லாம் தலைவியாக இருப்பவள் பெரியபிராட்டி தான்.
நிஜம், நிழல் இரண்டில் எதற்கு மதிப்பு அதிகம் என்று கேட்டால் எல்லோரும் நிஜத்திற்குத் தான் என்று பதில் சொல்வர். ஆனால், மரம் நிஜமாக நம் கண்முன் நிற்கிறது. ஆனால், வெயிலுக்கு ஒதுங்குபவர் மரத்தடிக்குச் சென்று, "அம்மாடி! இப்ப தான் குளிர்ச்சியா இதமா இருக்கு!'' என்று சொல்லுவார் அல்லவா? அதுபோல, பெருமாளை நேராக அனுபவிக்க முடியாது. நிழல் போல இருக்கிற பிராட்டியே நமக்கு அருளை வாரிக் கொடுக்கிறாள்.
கட்டித் தங்கத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
அந்த தங்கத்தை ஆபரணத்தங்கமாக மாற்றி விட்டால் நாம் வேண்டிய ஆபரணமாக்கி அணிந்து கொள்கிறோம். பெருமாள் கட்டித் தங்கமாக இருக்கிறார். பிராட்டியே ஆபரணத்தங்கம். தாயாருக்குத் தான் பிள்ளைகளின் கஷ்டநஷ்டம் தெரியும். நமக்காக பெருமாளிடம் அருள்புரிய வேண்டிக் கொள்கிறாள். தாயாரின் சம்பந்தத்தால் தான் பெருமாளுக்கு ஏற்றம், பெருமை எல்லாமே. அப்படியானால், பெருமாள் தாயாருக்கு தாழ்ந்தவரா? என்று கேட்டால், அவர் ஸ்வதந்திரர் அதாவது யாருக்கும் அடிமை இல்லாதவர். நவரத்தினங்களின் ஒன்றான மாணிக்கத்திற்கு மதிப்பு அளிப்பது அதன் ஒளி. அதுபோல, பெருமாளுக்கு ஒளியாக இருந்து தாயாரே அவரை விளங்கச் செய்கிறாள். ஒளி எப்போதும் தனித்திருக்காமல் அதோடு ஒன்றியிருப்பது போல, தாயாரும் பெருமாளை ஒன்றியே இருக்கிறாள்.
சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு கட்டம்.
அதாவது, ஒருசமயம் வேதாந்தங்கள் எல்லாம் ஒன்று கூடி, யார் பரம்பொருள் (தெய்வம்) என்று விவாதம் செய்தன.
உலகத்திற்கு மூலமுதற்காரணம் யார் என தத்துவஆராய்ச்சியில் இறங்கின.பிரம்மா, ருத்ரர், இந்திராதி தேவர்கள் என ஒவ்வொருவரின் நெஞ்சத்தை அடைந்த வேதாந்தங்கள், "யார் பிரம்மம்?' என அறிய முற்பட்டன. திருமாலின் மார்பில், திருமகளின் பாதச்சின்னம் இருப்பதைக் கண்டு ஸ்ரீமந்நாராயணரே மூலமுதற்பொருள் என உணர்ந்தன.
யமுனை ஆற்றங்கரையில் மரத்தின் மீதமர்ந்து கண்ணன், தீர்த்தத்தை (தண்ணீர்) தன் காலால் அடித்தபடி ஊஞ்சலாடிக் கொண்டிருந்த அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அந்த அழகைக் கண்ட திருமகளுக்குத் தானும் அதுபோல ஆனந்திக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. திருமகளும், திருமாலின் மார்பில் இருந்தபடி, ஊஞ்சல் போல அசைத்து மகிழ்ந்தாள். அவள் பாதத்தில் கிடக்கும் குங்குமமும், குங்குமப்பூவும் அவளின் திருவடிகள் பட்டு தெறித்தன. திருமாலின் கருத்த மேனியில் சிவப்பான வட்டமாக கோலமிட்டது போல அது இருந்தது. வேதாந்தங்கள் ஒன்றுகூடி, திருமாலின் நெஞ்சத்தில் இந்த காட்சியைக் கண்டு "இவரே பரம்பொருள்' என்ற முடிவுக்கு வந்தன.
திருமங்கையாழ்வார் திவ்யதேச யாத்திரையாக, தேரெழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலுக்கு வருகிறார். எம்பெருமானின் அழகில் ஈடுபட்டு 40 பாசுரங்கள் பாடினார். "திருநெடுந்தாண்டகம்' என்னும் அப்பாசுரத்தில், "திருவுக்கு திருவாகிய செல்வன்' என்று பெருமாளைக் குறிப்பிடுகிறார். மரியாதையாக ஒருவரை அழைக்க வேண்டுமானால், ஸ்ரீமான், திருவாளர், "திரு' என்றெல்லாம் அடைமொழி கொடுக்கிறோம். உண்மையில் திருவுடையாக இருப்பவர் பெருமாள் தான். அவரே " ஸ்ரீதேவி நாச்சியாருக்கே "ஸ்ரீ' யாக இருக்கிறார்.
கங்கை,யமுனை தீர்த்தங்களில் நீராடச் சென்றால் அந்த ஜலபிரவாகத்தில் மீன்கள் துள்ளி விளையாடும். அதை நாம் தொட்டுப் பார்த்தால் "வழவழ' என நீரின் தன்மையைப் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். மீன் தண்ணீருக்குள்ளே இருப்பதால் நீரின் தன்மை உண்டாகி விட்டது. அதுபோல, பெருமாளின் நெஞ்சம் மட்டுமில்லாமல், திருவடி முதல் திருமுடி வரை எங்கு தொட்டாலும் திருமகளின் சம்பந்தம் இருக்கும்.
வருணதேவனின் பிள்ளையான பிருகுவுக்கு ஒருசமயம். "பிரம்மம் (தெய்வம்) எது?' என்ற சந்தேகம் எழுந்தது.
தந்தையிடமே கேட்டு விடலாம் என கருதிய பிருகு, தந்தையின் திருவடியை வணங்கி, "பிரம்மம் எது?' என்று கேட்டபோது, வருணனும், ""எதனிடத்தில் உலகம் உருவானதோ, எதை உலகைக் காக்கிறதோ, எதில் உலகம் ஒடுங்குகிறதோ அதுவே பிரம்மம்'' என்று உபதேசித்தார். இதே கருத்தை கம்ப நாட்டாழ்வாரும், ""உலகம் யாவையும் தாமுள ஆக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர்'' என்று குறிப்பிடுகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் செய்யும் அந்த பரம்பொருள் நாராயணரே.
ஸ்ரீதேவி தாயாரை மார்பிலே கொண்டிருக்கும் பெருமாள், ஏன் இந்த உலகை உற்பத்தி செய்தார் தெரியுமா? உயிர்கள் எல்லாம் மோட்சகதியை அடைய வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், அதற்கு யாராவது முயற்சித்தார்களா?
குருக்ஷேத்திரத்திலே மனம் குழம்பிய அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் நேரில் வந்து 700 ஸ்லோகங்களில் கீதையை உபதேசித்தார். ஆனால், "ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே' என்று சொல்லி, அர்ஜூனன் கூட, பெருமாளைச் சரணடைய முன்வரவில்லை. இந்த பூவுலக வாழ்வை முடித்து விட்டு, பஞ்ச பாண்டவர்கள் எல்லோரும் செய்த தர்மத்தின் பயனால் சொர்க்கத்தையே அடைந்தனர். ஆச்சார்ய மார்க்கமாக நல்ல குருவின் உதவியோடு தான் நாம் மோட்ச கதியை அடைய முடியும். அதற்கு ஸ்ரீதேவியைத் தன் மார்பிலே தாங்கியிருக்கும் நாராயணரின் திருவடிகளை, இளமைப்பருவத்தில் இருந்தே கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.
என்ன அழகான உவமை. மீண்டும் கீழே கொடுக்கிறேன்.
(நிஜம், நிழல் இரண்டில் எதற்கு மதிப்பு அதிகம் என்று கேட்டால் எல்லோரும் நிஜத்திற்குத் தான் என்று பதில் சொல்வர். ஆனால், மரம் நிஜமாக நம் கண்முன் நிற்கிறது. ஆனால், வெயிலுக்கு ஒதுங்குபவர் மரத்தடிக்குச் சென்று, "அம்மாடி! இப்ப தான் குளிர்ச்சியா இதமா இருக்கு!'' என்று சொல்லுவார் அல்லவா? அதுபோல, பெருமாளை நேராக அனுபவிக்க முடியாது. நிழல் போல இருக்கிற பிராட்டியே நமக்கு அருளை வாரிக் கொடுக்கிறாள். )
ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 19
பிரம்மாவுக்கு நான்கு முகம். இவை ரிக்,யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கும். வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டு, பிரம்மா படைத்தல் தொழிலைச் செய்கிறார். பிரம்மமான திருமால், இந்த பிரபஞ்சத்தைப் படைத்தார். பிரம்மாவுக்கு வேதம் பிரமாணம்! ஆனால், பிரம்மத்துக்கு, வேதமா பிரமாணம் என்றால் அது தான் இல்லை.
திருமகளாகிய லட்சுமியின் புருவநெறிப்பே(புருவத்தை வளைத்தல்) அவருக்கு பிரமாணம். மேல்நோக்கி லட்சுமி நெறித்தால் மேலான உயிர்களும், கீழ்நோக்கி நெறித்தால் கீழான உயிர்களும் உலகில் பிறக்கின்றன. படைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதும் அவளே. படைத்து முடித்ததும் ஏற்படும் ஆயாசம், களைப்பைத் தீர்ப்பவளும் அவள் தான். அவளுடைய குளிர்ந்த பார்வையால் திருமாலின் களைப்பு நீங்கி விடும். அப்போது மகிழ்ச்சிக்களிப்பில் திருமால் கூத்தாடி மகிழ்வார்.
கணவனுக்கு கட்டுப்பட்டு, மனைவி செயல்படுவது தானே வழக்கம். ஆனால், இங்கு தாயார் அமர்ந்த நிலையில் இருந்து கட்டளையிட, அதற்கு ஏவல் செய்ய காத்திருக்கிறார் பெருமாள். ஆனால், பிரம்மமாகிய திருமாலை விட்டுப் பிரியாதவளாகவும், சைதன்ய சொரூபமாகவும்(அறிவு நிலை), சிருஷ்டி பிரமாணமாகவும், அவருக்கு ஒளியாகவும் இருப்பவள் தாயாரே. சூரியனை விட்டு ஒளி எப்படி தனித்து இருப்பதில்லையோ, அதுபோல பிராட்டி பெருமாளை விட்டு, தனித்து எப்போதும் இருப்பதில்லை.
சம்சாரக் கடலில் தத்தளிக்கும் உயிர்கள் அனைத்திற்கும் லட்சியமாக திகழ்பவள் லட்சுமி. பாவத்தைத் தொலைத்து பெருமாளின் திருவடியில் எப்படி உயிர்களைச் சேர்ப்பது என்ற ஒரே சிந்தனை தான் பிராட்டிக்கு. இந்த லட்சியத்தை முன்னிட்டே அவள் இயங்குகிறாள்.
பிரதிவாதி பயங்கர அண்ணன் சுவாமி எழுதிய வேங்கடேச சுப்ரபாதம் "மாதஸ் தஜகதாம் மதுகைடபாரே..... என்று லட்சுமியை போற்றித் துதிக்கிறது. வேங்கடேச பிரபத்தி, வேங்கடேச ஸ்தோத்திரம், வேங்கடேச மங்களம் ஆகிய துதிகளும் பிராட்டியை முன்னிட்டு தான் தொடங்குகிறது. ஆழ்வார்கள் பாசுரமும், "கோலத்திருமா மகளோடு' என்று, திருமால் உயிர்களைக் காக்கும் சிறப்பை போற்றுகின்றன. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உயிர்களை "திரு'வுடன் சேர்ந்தே பெருமாள் பாதுகாக்கிறார். ஏதோ கடமைக்காக இதைச் செய்யவில்லை. உகந்து உயிர்களைக் காப்பதாகச் சொல்கிறார்கள் ஆழ்வார்கள். விருப்பத்தோடு பணியைச் செய்தால் தான், அதில் ஈடுபாடு இருக்கும்.
பிரணவ மந்திரமான "ஓம்' என்பது அ, உ, ம் ஆகிய மூன்று எழுத்துக்களின் சேர்க்கை. இதில் "அ' என்பது பரமாத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் எழுத்து. "ம்' என்பது ஜீவாத்மா. பரம்பொருளாகிய பரமாத்மாவுக் கும், உயிர்களாகிய ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பே ஓங்காரம். "அ' என்னும் அகரம் உயிரெழுத்துகளில் முதன்மையானது. பரம்பொருளான திருமாலே இந்த பிரபஞ்சத்தில் முதன்மையானவர். அகரம் என்பதற்கே "ரட்சிப்பவன்' (காப்பவன்) என்று தான் பொருள். பெருமாள் இதையே (காத்தல் தொழில்) செய்கிறார்.
காத்தல் என்றால் என்ன? விரும்பாததை போக்க வேண்டும். இஷ்டப்படுவதை தர வேண்டும். பெருமாள், ஜென்மம், பிறவி, மரணம், பாடு, கர்மா,சரீரம் என்ற வேண்டாதவற்றைப் போக்குகிறார். நாம் விரும்பக்கூடிய திருவடி மோட்சத்தைத் தருகிறார். ஆனால், நமது விருப்பு, வெறுப்பு மாறிக்கொண்டே இருக்கிறது. குளிரில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சால்வையை போர்த்திக்
கொள்கிறோம். ஆனால், கோடையில் யாரும் சால்வையை விரும்புவதில்லை. பத்ரிகாசிரமத்தில் பெருமாளைத் தரிசிக்கச் சென்றால் கடுங்குளிரை உணர முடிகிறது. அதைச் சமாளிக்க சால்வை தேவைப்படுகிறது. மீண்டும் ரயிலைப் பிடித்து நாக்பூர் வந்ததும் வெயிலின் தாக்கம் ஆரம்பித்து விடும். சின்ன வயதில் இருந்த சந்தோஷம், வயதான காலத்தில் மாறி விடுகிறது. குழந்தைகள் பாகற்காய், வேப்பம்பூ போன்ற கசப்பான பொருட்களை விரும்புகிறார்களா என்றால் அறவே கிடையாது. ஆனால், வயதாகும் போது இவையெல்லாம் உடல்நிலை கருதி தேவை என்பதை உணர ஆரம்பிப்பார்கள். விருப்பும் வெறுப்பும் மனிதனுக்கு மாறிக் கொண்டே இருக்கக் கூடியது.
சம்சார பந்தத்தில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு பிறவி, மரணம், வினைப்பயன் போன்ற விரும்பத்தகாதவை எத்தனையோ இருக்கின்றன. இதை போக்கி மோட்சம் என்னும் விரும்பக்கூடியதை திருமால் அருள்புரிகிறார். நம்மை இந்த விதத்தில் தான் அவர் ரட்சிக்கிறார். அதற்கு துணைநிற்பவள் பிராட்டியே. அவளது இயற்கை குணமாகிய கருணையால் இதை மேற்கொள்கிறாள்.
ஆண்டாள் திருப்பாவையின் 19வது பாசுரத்தில், ""குத்துவிளக்கெரிய....' என்று தொடங்கும் பாசுரத்தில் "தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்' என்று ஒரு கேள்வி கேட்கிறாள். தத்துவம் என்பது சொரூபத்தையும், தகவு என்பது குணத்தையும் குறிக்கும். ""கண்ணா! எங்களுக்கு அருள்புரியாவிட்டால் அது உன் சொரூபத்திற்கோ, குணத்திற்கோ பொருந்தாமல் போய்விடுமே!'' என்கிறாள் ஆண்டாள். நப்பின்னையும் கண்ணனோடு துயில் கொண்டிருக்கிறாள். அவளிடம் ஆண்டாள்,
""மைத்தடங்கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்' என்று கேட்பதும் இதே பொருளில் தான். இதைக் கேட்டு நப்பின்னையோடு கண்ணன் வந்து வாயில் கதவைத் திறந்து ஆய்ப்பாடிப் பெண்களை அழைத்துச் செல்கிறான்.
காப்பதற்கு மட்டுமில்லை! திருமால் வஞ்சனை செய்தாலும், தாயாரே காரணம். நம்மாழ்வார் கண்ணனை நினைத்து தவிக்கிறார். அவரால், அவனைப் பிரிந்து இருக்க முடியவில்லை. எப்போதும் கண்ணனின் நினைவு. அதனால், அமைதிக்காக தாமிரபரணி கரைக்குச் செல்கிறார். அங்கு அலை மீது ஆடியபடி நாரை ஒன்று இருப்பதைப் பார்க்கிறார். அதனிடம், "மடநாராய்! உன்னையும் திருமால் வஞ்சித்து விட்டானா? அவனைப் பிரிந்ததால் இப்படி வெளுத்து பசலை நோய் வந்து விட்டதே'' என்று கேட்கிறார். ரட்சிக்க மட்டுமில்லாமல், வஞ்சிப்பதாக இருந்தாலும், மால் தனித்து வராமல் லட்சுமியை அழைத்துக் கொண்டு செல்வநாரணனாகத் தான் வரவேண்டும் என்கிறார் ஆழ்வார்.
இந்த பெயர்களுக்கு என்ன அர்த்தம்?
அயோத்தி மன்னர் தசரதர், புத்திரகாமேஷ்டி யாகத்தில் கிடைத்த பாயசத்தை தன் துணைவியரான கோசலை, கைகேயி, சுமித்திரைக்கு வழங்கினார். மூவரும் கருவுற்றனர். நான்கு குழந்தைகள் பிறந்தனர். (சுமித்திரைக்கு இரட்டைக் குழந்தை) குலகுரு வசிஷ்டர், குழந்தைகளுக்கு ஜாதகம் கணித்து பெயரிட்டார். அவர்கள் பிறந்த நேரத்தின் அடிப்படையில், எப்போதும் ஆனந்தமாக இருப்பவன் என்னும் பொருளில் கோசலையின் பிள்ளைக்கு "ராமன்' என்று பெயர் வைத்தார். எதையும் தாங்குபவன் என்னும் பொருளில் "பரதன்' என கைகேயியின் குழந்தைக்கு பெயரிட்டார். வலிமையும், அழகும் மிக்கவன் என்னும் பொருளில் "லட்சுமணன்' என்றும், "எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்' என்னும் பொருளில் "சத்ருகனன்' என்றும் சுமித்திரையின் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டினார்.
ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 20
ராமாயணத்திலே லட்சுமி பிராட்டியாரின் வைபவம் அழகாக வர்ணிக்கப்படுகிறது. அதை அனுபவிக்கும் முன், பிராட்டியின் இன்னும் சில குணங்களைப் பற்றிச் சொல்கிறேன்.
பெருமாளின் ஒரு கண் கும்பகர்ணனையும், ராவணனையும் பார்க்கிறது. இன்னொரு கண் விதுரன், சஞ்சயன் போன்ற மகாத்மாக்களையும் காண்கிறது. ஒரு பக்கம் சண்டைக்காரர்கள், இன்னொரு பக்கம் ரசிகத்தன்மை. இவ்வாறு, அவர் ரசிக்கக் கற்றுக் கொண்டது பிராட்டியிடத்தில் தான். ஸ்ரீமகாலட்சுமி தாயார் பள்ளியில் படித்த ஒரே மாணவன் பெருமாள் மட்டும் தான்.
அவள் பெருமாளிடம் நம்பிக்கையுடன் பேசுவாள்.
நம்மிடம் நம்பிக்கையில்லாமல் பேசுவாள். பெருமாளுக்கும், பிராட்டிக்கும் ஒருவர் மீது ஒருவர் வைத்த நம்பிக்கையின் அளவு சமமானது. ஆயர்பாடியில் நந்தகோபன் வீட்டில் நந்தகோபன், யசோதை, கண்ணன் ஆகியோர் வரிசையாகப் படுத்திருப்பார்கள். இதில் நடுவில் இருப்பவள் யசோதை. அவளது ஒரு கை நந்தகோபன் மீது இருக்கும். இன்னொரு கை, கண்ணன் படுத்திருக்கும்
தொட்டில் மீது இருக்கும். கட்டிலுக்கும், தொட்டிலுக்கும் பாலமாக இருப்பவள் அவள். அதுபோல் ஜீவாத்மா என்ற தொட்டில் கயிறு லட்சுமி பிராட்டியின் ஒரு கையில், பரமாத்மா என்கிற திருமால் மீது ஒரு கை. இந்த இருவரையும் இணைக்க அவள் முயற்சி செய்கிறாள்.
ஓம்காரத்தின் நடுவிலும் அவள் தான் இருக்கிறாள். "ஓம்' என்பதை அகரம், உகரம், மகரம் (அ,உ, ம) என்று பிரிப்பர். இதில் அகரம் என்பது பரமாத்மா. உகரம் லட்சுமி தாயார். மகரம் ஜீவாத்மா.
பரமாத்மாவையும், ஜீவாத்மாவையும் சேர்த்து வைக்க அவள் பாடுபடுகிறாள். ஜீவாத்மா செய்த பாவத்தால் பரமாத்மா கோபமாக இருக்கிறார். இந்த கோபத்தையும், பாவத்தையும் அவள் நடுவில் இருந்து மாற்றுகிறாள். உபதேசம் மூலம் இருவரையுமே திருத்தப் பார்ப்பாள். திருத்த முடியாவிட்டால், தன் பார்வை கடாட்சத்தால் இருதரப்பையும் திருத்தி விடுவாள்.
புருவத்தை நெளிப்பாள், கண்ஜாடை காட்டுவாள்...! இதை நமது லவுகீக வாழ்வுடன் ஒப்பிடக்கூடாது. லட்சுமி தாயார் இப்படியெல்லாம் செய்து தானா பரமாத்மாவைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று நம் சாமானிய வாழ்க்கையைக் கொண்டு கணக்கு போட்டு விடக்கூடாது.
கங்கைக்கரையில் பரிசல் இருக்கும். அக்கரைக்கு கொண்டு விடச்சொல்லி கரையில் வைத்து கூலி பேசினால், பரிசல்காரன் ""இஷ்டப்பட்டதைக் கொடுங்க!'' என்று சொல்லி ஏற்றி விடுவான். நடு ஆற்றிற்கு போன பிறகு தான். ""உங்களுக்கு நீச்சல் தெரியுமா?'' எனக் கேட்பான். அப்போது, அவனது கேள்வியைப் புரிந்து கொண்டு கூலி நிர்ணயமாகும். நீச்சல் தெரியும் என்றால் ஒரு கட்டணம். தெரியாது என்றால் இன்னொரு கட்டணம். அப்போது, அவன் கேட்டதைக் கொடுத்து தான் ஆக வேண்டும்.
அதுபோலத் தான் தாயாரும்! பெருமாள் அவளது பார்வையில் மயங்கிக் கிடக்கும் போது, அவள் ஜீவாத்மாவை கரைத்தேற்றுவது குறித்து பேசுவாள். நம் உலக வழக்கில், கணவனிடம் மனைவி இப்படி கேட்பது என்பது, ஏதாவது சுயநலம் கருதி! ஆனால், ஜீவாத்மாக்களின் நன்மை கருதி, தாயார் பெருமாளிடம் கேட்கிறாள். இதை தேக ரீதியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆத்மா, பரமாத்மா சம்பந்தம் என்று எண்ண வேண்டும். பரமாத்மாவிடம் அழகையும், ஜீவாத்மாவிடம் அருளையும் காட்டி அவள் திருத்துவாள்.
இப்போது, ராமாயணம் பக்கம் திரும்புகிறேன்.
ராமன் காட்டுக்குப் புறப்பட்டு விட்டான். சீதாதேவி உடன் வருவேன் என்கிறாள். ராமன் ஒத்துக்கொள்ளவில்லை.
உடனே சீதை,""உங்கள் மாமனார் மாமியாரிடம் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்,'' என்று வேகமாக ஒரு வார்த்தையை விட்டாள்.
அதோடு விட்டாளா! புருஷோத்தமனாகிய பகவானைப் பார்த்து, ""நீங்கள் என்னைக் காட்டுக்கு அழைத்துச் செல்லாவிட்டால், "ஆண் உடை உடுத்திய பெண்ணுக்கு என் பெண்ணைக் கொடுத்து ஏமாந்தோமே' என்று என் தந்தை ஜனகர் வருத்தப்படுவார்,'' என்றாள்.
அவ்வளவு தான்! இவளை அழைத்துக் கொண்டு போவதைத் தவிர வேறு வழியில்லை என்று ராமன் முடிவு செய்து விட்டார்.
அதோடு விட்டாளா! ""நீங்கள் காட்டுக்குப் போக வேண்டும் என்ற விஷயம் உங்களுக்கு இன்று தான் தெரியும். ஆனால், எனக்கு என் ஐந்து வயதிலேயே தெரியும். என் அப்பா, என் ஜாதகம் குறித்து ஜோதிடரிடம் பலன் பார்த்தார். நான் குணவானுக்கு வாழ்க்கைப்படுவேன், சக்கரவர்த்திக்கு வாழ்க்கைப்படுவேன், பெரிய நாட்டுக்கு ராணியாவேன்... என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந் தவர்...ஆனால்... என்று இழுத்தார்.
அந்த "ஆனால்' என்பது இடிவிழுந்தாற் போல் இருந்தது. ஏனெனில், "இவள் வனவாசம் போக வேண்டும்' என்றும் இருக்கிறது என்றார். எனவே, நான் அப்போதே காட்டுக்குப் போக மூட்டை கட்டி வைத்து விட்டேன். நான் ஏற்கனவே கிளம்பி விட்டேன். நீர் வேண்டுமானால், பின்னால் வாரும்,'' என்று சொல்லாக்குறையாக கிளம்பி விட்டாள் அவள்.
இந்த சமயத்தில் லட்சுமணன் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான்.
""நானும் உன்னோடுவருவேன் அண்ணா,'' என்றான்.
""நீ இங்கிருந்து தாயார்களையும், தந்தையையும் கவனித்துக் கொள்,'' என்றார் ராமபிரான்.
அவனோ, ""அண்ணா! நீங்கள் சீதாபிராட்டியாரிடம் பேசிக்கொண்டிருந்த போது, என்னை அழைத்துச் செல்வதாக சொன்னீர்களே!'' என்றான்.
""அப்படி ஏதும் நான் சொல்லவில்லையே!'' என்ற ராமபிரானிடம்,""அண்ணா! நீங்கள் பிராட்டியாரிடம் பேசும் போது, பரதனை உன் கூடப்பிறந்த தம்பியாக நினைத்துக் கொள் என்றீர்கள். சத்ருகனனை பெற்ற மகன் போல் பார்த்துக் கொள்ள சொன்னீர்கள்.
கவுசல்யாவை தாயார் போலும், தசரதரை தந்தை போலும் கவனித்துக் கொள்ளச் சொன்னீர்கள். என்னை எப்படி நினைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதுவும் பிராட்டியிடம் சொல்லவில்லையே! இதிலிருந்தே புரிந்து கொள்ள மாட்டேனா! என்னை நீங்கள் அழைத்துச் செல்லப் போகிறீர்கள் என்று!'' என்று கேட்டான்.
ராமபிரானிடம் பதில் இல்லை.
எனவே, ரொம்பப் பெரியவர்கள் பேச்சில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களது பேச்சை பிறர் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் கழுத்தில் கத்தி வைக்குமளவு கூட அந்த பேச்சின் தன்மை போய் விடும். இருந்தாலும் ராமன் மறுத்தார். லட்சுமணனோ சீதாராமரின் திருவடிகளைப் பிடித்து, தன்னையும் அழைத்துச் செல்ல ஒப்புதல் பெற்றான்.

No comments:
Post a Comment