Thursday, July 3, 2014

தாயா? தந்தையா? சிந்தித்து செயல்பட்ட சிரகாரி!

தாயா? தந்தையா? சிந்தித்து செயல்பட்ட சிரகாரி!

‘பதறாத காரியம் சிதறாது’ என்பது முன்னோர் வாக்கு. ஆனால் இன்றைய உலகில், எங்கும் பதற்றம்; எதிலும் பதற்றம்! அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும்; அதுவும் எப்படி?

இப்போதே அனுபவித்துவிட வேண்டும்! இதற்கு நேர்மாறாக யாரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் போதும்; உடனே தக்க பதிலடி கொடுக்க வேண்டும்; பழிவாங்க வேண்டும்’ என்று துடிக்கிறது மனது. கணப் பொழுதில் அவசரப்பட்டு, ஆத்திரத்துக்கு ஆட்படுகின்றனர் பலரும்! இதனால் வாழ்க்கையே வீணாகிப் போகும் அவலத்தை எவரும் அறிவதே இல்லை.

பொறுமை மற்றும் நிதானத்தை வலியுறுத்தி பீஷ்மர் சொன்ன கதையைப் பார்ப்போமா?

”சிரகாரி! சிரகாரி! சீக்கிரம் வா”- கத்திக் கூப்பிட்டார் முனிவர். தந்தையின் குரல் கேட்டதும் ‘இதோ வந்துவிட்டேன்’ என்று ஓடோடி வந்து நின்றான் சிரகாரி.

அங்கே… கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்த முனிவர், ”மகனே! என்னுடைய பேச்சை நீயாவது கேள். உன் தாயாரின் போக்கு அறவே பிடிக்கவில்லை! அவளைக் கொன்று விடு! நான் வெளியில் சென்று வருவதற்குள், காரியத்தை முடித்திருக்க வேண்டும் நீ!” – சொல்லிவிட்டு விறுவிறுவெனச் சென்றார்.

இதைக் கேட்டு பதைபதைத்தான் சிரகாரி. ‘என்ன செய்வேன்…’ என்று தவித்து மருகினான்.


‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.’ ஆனால், பெற்ற தாயை அல்லவா கொல்லச் சொல்கிறார் தந்தை?! தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பதை மறந்து விட்டு, தாயையே கொல்வதா?’ என்று கலங்கினான்.

சிரகாரி வாலிபன்தான்; ஆனாலும் இளமையின் வேகத்துக்கு வயப்படாமல், எதையும் நிதானமாக சிந்தித்து செயலாற்றுபவன்! எனவே சிந்தனையில் ஆழ்ந்தான் சிரகாரி!

‘நான் பூமியில் பிறப்பதற்கு, தாயும் காரணம்; தந்தையும் காரணம். இந்த இருவரில் நான் எவர் பக்கம் சேருவது?’ என்று குழம்பினான். அவனுடைய மனதுள் தந்தையின் பெருமைகள் வரிசை கட்டி நின்றன.

‘நமக்கு சகல வித்தைகளையும் சொல்லிக் கொடுப்பவர் தந்தை. எனவே தந்தையே தலைசிறந்த குருவாகிறார். பிள்ளைக்கு எல்லாமாக இருக்கக்கூடியவர் தந்தை; ஆகவே, அவருடைய சொல்லை மீறக் கூடாது. அவர் சொன்ன சொல்லை ஆராயக் கூடாது. பிள்ளை செய்த அனைத்துப் பாவங்களுக்கும், அந்தப் பிள்ளையானவன், தந்தையை மகிழ்ச்சிப்படுத்துவது ஒன்றுதான் உண்மையான பரிகாரம்! தந்தையின் திருப்தியில், எல்லா தேவதைகளும் திருப்தி அடைகின்றனரே!’ என்று சிரகாரி, தந்தையின் பெருமைகளை எண்ணினான்.

அடுத்த விநாடியே, தாயாரின் முகமும் அவள் பெருமைகளும் நினைவுக்கு வந்தன!

‘இந்த உலகில் அனைவரும் பிறப்பதற்கு ஆதாரம் தாயார்தான்! துன்பப்படும் ஜீவன்களுக்கு துன்பத்தைப் போக்கி, அனைவருக்கும் சுகத்தையும் நிம்மதியையும் தருபவள் இவள். எத்தனை உறவுகள் இருந்தும்கூட தாயார் இல்லையெனில் அந்தக் குழந்தை அனாதைதான்! வயோதிகத்தை அடைந்தாலும்கூட ஒருவனுக்கு ஒரு குறையும் இன்றி அரவணைப்பவள் தாயார்; பேரன், பேத்திகள் எடுத்து, நூறு வயதை அடைந்தவனாக இருந்தாலும்கூட தாயாரும் அருகில் இருந்து விட்டால், அவன் இரண்டு வயதுக் குழந்தையாகி விடுவான்! தாயார் இருக்கும் வரை ஒருவன் குழந்தை; அவள் இறந்த பின்னரே கிழவனாகிறான். முக்கியமாக… தந்தையை நமக்கு அறிமுகம் செய்பவளே தாய்தானே?! எனவே தாயைக் கொல்வது மகா பாவம்’ என்று தாயாரின் பெருமைகளை யோசித்தான்.

அதே நேரம், முனிவருக்குள்ளும் அமைதி; தெளிவு! ‘அடடா! என்ன பாதகம் செய்துவிட்டேன்? மனைவி என்பவள், இல்லத்தில் முடங்கியபடியே வீட்டுக் கவலைகளால் சூழப்பட்டவளாயிற்றே! இவளைப் பாதுகாக்க வேண்டிய நானே படுகொலை செய்யச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேனே! துயரக் கடலில் மூழ்கி விட்ட நான் எப்படி கரையேறுவேன்? எதையும் ஆராய்ந்து செயல்படும் சிரகாரி அவளைக் கொன்றிருப்பானா?!’ என்று மனம் நொந்த முனிவர், ஆஸ்ரமம் நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தார்; பதற்றத்துடன் சிரகாரியை அழைத்தார்.

தன்னுடைய தாயாருடன் வந்த சிரகாரி, தந்தையை வணங்கினான். மனைவியைக் கண்ட முனிவர், மானசீகமாக அவளிடம் மன்னிப்பு வேண்டினார்; மகனை அப்படியே ஆரத் தழுவிக் கொண்டார்.

அவசரமோ பதட்டமோ இன்றி சிந்தித்து செயல்பட்ட சிரகாரியின் செயலால் அந்தக் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

ஆம்! ஆத்திரத்தையும் அவசரத்தையும் புறக்கணித்து, பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடித்தால் துயரங்களில் இருந்து தப்பலாம்!

No comments:

Post a Comment