சித்திரநேமி
ஒரு சமயம் பார்வதியும் பரமசிவனும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். ஆட்டத்தின் முடிவில் இருவரும் தாங்களே ஜெயித்ததாக வாதம் செய்தனர். சித்திரநேமி என்ற கணதேவனை நீதிபதியாக வைத்து யார் வெற்றி பெற்றார் என கேட்டனர். பரமசிவன்தான் வென்றார் என அவன் கூறினான். கோபம் கொண்ட பார்வதிதேவி, ஏ சித்திரநேமி! நீ பொய் உரைத்ததால் குஷ்டரோகி ஆவாய், என சாபமிட்டாள். இதைக்கேட்ட ஈசன், தேவி! சித்திரநேமி எப்போதும் பொய் உரைக்கமாட்டான். அவன் உண்மையின் காதலன். அவசரப்பட்டு அவனுக்கு சாபம் கொடுத்துவிட்டாயே, என வருத்தத்துடன் சொன்னார். சித்திரநேமி மீது மனம் இரங்கிய தேவி, எப்போது அழகிய நீர் தடாகத்தில் புண்ணியமும் புனிதமும் நிறைந்த ஒரு விரதத்தை தேவமாதர்கள் அனுஷ்டிப்பார்களோ, அந்த நாளில் உன் மீதான சாபம் விலகும், என்று கூற, சித்திரநேமி அதிர்ச்சியோடு மயங்கி விழுந்து விட்டான். அவன் விழித்துப் பார்த்தபோது தேவியின் சாபத்தின்படியே குஷ்டரோகியாய் இருந்தான். அனைவரும் அவனை துரத்தினர்.
பல இடங்களில் சுற்றித்திரிந்த சித்திரநேமி, ஒரு காட்டுப்பகுதியில் அழகான தண்ணீர் தடாகத்தைக் கண்டான். அங்கேயே அவன் வாசம் செய்ய ஆரம்பித்தான். ஒருநாள் சில தேவமாதர்கள் அந்த தடாகத்திற்கு வந்து ஸ்நானம் செய்தனர். பின்பு அனைவரும் அமர்ந்து பூஜை நடத்தினர். தேவமாதர்கள் பூஜை செய்வதைக்கண்ட சித்திரநேமி அவர்கள் அருகில் வந்து, தாய்மார்களே! நீங்கள் எதற்காக பூஜை செய்கிறீர்கள்? இந்த பூஜையில் நானும் கலந்துகொள்ளலாமா? நானும் பூஜை செய்யலாமா? பார்வதி தேவியின் கோபத்திற்கு ஆளாகி கொடிய குஷ்டரோகம் பிடித்து அலைகிறேன். எனது இந்த கொடிய நோய் தீர ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள், என்று பணிவுடன் கேட்டான். அந்த பெண்கள், இன்று வரலட்சுமி விரதம். மிகவும் திவ்வியமானது. கேட்கும் வரங்களைத் தரக்கூடிய அற்புதமான விரதம். எனவேதான் லட்சுமிதேவியை நினைத்து இவ்விரதத்தை நாங்கள் இவ்விடத்தில் துவங்கியுள்ளோம்.
சிராவண(ஆவணி) மாதம் சுக்லபட்சம் (வளர்பிறை) வெள்ளிக்கிழமையன்று இதைத் தொடங்க வேண்டும், என கூறினர். தேவமாதர்கள் செய்த வரலட்சுமி பூஜையை சித்திரநேமி பார்த்துக்கொண்டே இருந்தான். ஹோமப்புகையையும், நெய் தீபத்தின் வாசனையையும் நுகர்ந்ததாலும், பூஜையை கண்குளிர கண்டதாலும் அவனது நோய் அகன்றது. தேகம் பொன்னிறமாக மாறி, அழகானது. அந்த நிமிடமே அவனும் விரதத்தை துவக்கிவிட்டான். சாபம் நீங்கிவிட்டதால் சித்திரநேமி மீண்டும் தேவர் உலகம் சென்றான். இவ்விரதம் பற்றி தேவர்களுக்கு எடுத்துக்கூறினான். கைலாசம் சென்று பார்வதி பரமேஸ்வரரை வணங்கினான். வரலட்சுமியின் பேரருளால் தங்கள் திருவடி காணும் பாக்கியம் கிடைக்கப்பெற்றேன் என மனம் நெகிழ்ந்து கூறினான். ஆவணி வளர்பிறையில் துவங்கும் இந்த விரதத்தை எல்லா வளர்பிறை வெள்ளிக்கிழமைகளிலும் சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டும். இந்த விரதம் இருப்பதால் வாழ்நாள் முழுவதும் தனம், தான்யம், ஆரோக்கியம், சந்தான பாக்கியம் பெற்று சிறப்புடன் வாழலாம் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment