அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ..
குபேர சம்பத்துக்கள் மட்டுமின்றி... தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், தைர்யம், வைராக்யம், வெற்றி, மனச்சாந்தி அனைத்தையும் வழங்குபவள் மகாலட்சுமி. பொதுவாக, மகாலட்சுமி என்று சொன்னதுமே அவள் உலகியல் செல்வங்களை மட்டும் அருளும் தேவி என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். காலம் காலமாக இதை நம்பியே மகாலட்சுமியை வழிபடுகிறோம். வசதி படைத்து வாழ்கின்ற செல்வந்தர்களை லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள் என்று பாராட்டுகிறோம்.
அதனால்தான் மகாலட்சுமியை பூஜிக்கும்போது காசு, பணம், பொன் மற்றும் வெள்ளியை வைத்து வழிபடுகிறோம். அப்படிச் செய்தால் செல்வம் வளரும் என்றும் ஒரு நம்பிக்கை பலருக்கும் உள்ளது. இது சரிதானா? மகாலட்சுமிக்கு செல்வத்தை அள்ளித் தரும் சக்தி மட்டும்தான் உண்டா? இதைத் தெரிந்துகொள்ள மகாலட்சுமி அவதாரம் செய்த சம்பவத்தை இங்கே பார்ப்போம்.
தேவி பாகவதம் 9-வது காண்டத்தில், மகாலட்சுமியின் தோற்றம் பற்றிய விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிபராசக்தி தன்னிலிருந்து தன்னைப் போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். அவரது இட பாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி; வல பாகத்திலிருந்து தோன்றியவள் ராதாதேவி.
ரமா என்றாள் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமாதேவியை ஆதிபராசக்தி மகாலட்சுமி என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். மகாலட்சுமி அப்போது செல்வத்தின் நாயகியாகச் செயல்படுவாள் என்று தேவி பாகவதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவள் அன்பின் வடிவம் என்றும், விஷ்ணு பத்னி என்றும், விஷ்ணுவுக்கு சேவை செய்யும் தேவி என்றும்தான் தேவி பாகவதம் கூறுகிறது. மகாலட்சுமியின் தோற்றம் பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவலோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள்.
பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண்டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவமியற்றினார். தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத்தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர். காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி வரமளித்தார். நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்கு வழிகோல நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும். அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த சௌபாக்யங்களையும், செல்வங்களையும் பெற அருள்புரிவாள் என்று மகாவிஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார். பாற்கடலைக் கடைவது அத்தனை எளிதா? அதற்கும் மகாவிஷ்ணுவே வழி கூறினார். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பைக் கயிறாக்கி, தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் கயிறை இழுத்துப் பாற்கடலைக் கடைந்தால், மகாலட்சுமி தோன்றி அருள்பாலிப்பாள் என்று உறுதி கூறினார்.
பாற்கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில், ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும் ஜந்துக்களும் தோன்றின. முடிவில், ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர்களும் அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய வரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, என்னை அடைய வேண்டும் என்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என் தோறற்த்தைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன் என்று கூறினாள்.
அதன்படி, எதனாலும் பாதிக்கப்படாமல் யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். பிரம்ம வைவர்த்த புராணத்தில் மகாலட்சுமியின் பெருமை விளக்கப்படுகிறது. அவளைப் பற்றி பிரம்மதேவனே தேவர்களுக்கு இப்படிக் கூறுகிறார்... எந்தெந்த இடங்களில் தர்மம், நியாயம், நீதி, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவை நிலைத்திருக்கிறதோ, அங்கேல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே, தேவர்கள் தர்மத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி வாழ உறுதி பூண்டால், மகாலட்சுமி தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் அளிப்பாள் என்பது பிரம்மதேவனின் வாக்கு. மகாலட்சுமி திருப்தியையும், மனச்சாந்தியையும் வழங்கும். கருணைமிக்க தேவியாவாள். வெறும் பொருட்செல்வங்களை மட்டும் விரும்பி அவளை வழிபடுபவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள் என்று பிரம்மதேவன் தேவர்களிடம் கூறினார்.
மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க வட்சுமி தேவலோகத்தை மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. தேவர்கள் அவள் துதிப் பாடி மகிழ்ந்தனர். திசைக் காவல் புரியும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர் குபேரன். அவர் வடதிசைக் காவலன். சிறந்த சிவபக்தரும்கூட! தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாத்து, தகுதியானவர்களுக்குச் சரியான தருணத்தில் அந்தச் செல்வங்களை வழங்கும் அதிகாரம் அவருக்கு தரப்பட்டது. மகாலட்சுமி கடாட்சம் பெற்றவர்களுக்கு நவநிதியையும் வழங்குகிறார் குபேரன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் வழங்கும் செல்வங்கள் நவநிதியில் அடங்கும். மகாலட்சுமியின் அருட்பார்வை பெற்றவர்களுக்கு உலகியல் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார். பேராசையும் அதர்மமும் மிக்க மனிதர்கள் சிலருக்கு உலகியல் செல்வங்கள் இருக்கலாம். அது, அவர்கள் பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக இருக்கலாம். ஆனால், சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள்.
அஷ்டலட்சுமியாக அருள்பாலிக்கும் மகாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்களையும், அவள் வழங்கும் செல்வங்களையும் தெரிந்துகொள்வோமா?
ஆதி லட்சுமி: இவளுக்கு ரமணா என்ற பெயரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவள் இவள்.
தான்ய லட்சுமி: உயிர் வாழும் ஜந்துக்கள் அனைத்துக்கும் உணவு அவசியம். அந்த உணவை வழங்கும் பூமித்தாய்தான் இவள். விவசாயத்தை வளப்படுத்தும் இவளே, பசித்தவனுக்கு உணவு கிடைக்கச் செய்யும் கருணைத் தாயாகவும் திகழ்கிறாள்.
தனலட்சுமி: உணவுக்கு அடுத்தபடியாக மனித வாழ்க்கைக்குத் தேவையானது உடை, இருப்பிடம். இவற்றை அடைய வழி செய்வது தனம் எனப்படுகிறது. அந்த தனத்தைத் தந்தருளுபவள் இவள்.
சந்தான லட்சுமி: நல்ல குடும்பமும் நல்ல குழந்தைகளும் ஒருவனது வாழ்க்கையை வளமாக்கும் செல்வங்கள். எத்தனை பொருட்செல்வம் இருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையே என்று ஏங்கித் தவிப்பவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்த்து, குழந்தைச் செல்வத்தை அருளுபவள் இவள்.
கஜ லட்சுமி: லட்சுமிக்கு க்ஷீராப்தி தனயை என்ற பெயருண்டு. பாற்கடலில் தோன்றியவள் என்பது இதன் பொருள். பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியபோது இரண்டு யானைகள் தோன்றி, தங்கள் தும்பிக்கையில் தாங்கிய பொற்குடத்தால் தேவிக்குப் பாலாபிஷேகம் செய்தன. இருபுறங்களிலும் யானைகள் நின்றதால், அவள் கஜலட்சுமி எனப்பட்டாள். இன்றும் ஆலயங்களில் கர்ப்பக்கிரஹ வாயிலிலும், வீடுகளின் வாசற்படி நிலையிலும் கஜலட்சுமி சிற்பம் வைக்கப்படுவதைக் காணலாம். மனத் தூய்மையையும், மன அமைதியையும் தருபவள் இவள்.
வித்யாலட்சுமி: அறிவாற்றல் இல்லையென்றால், எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனிருக்காது. அறிவாற்றல் வளர ஆதாரமாக விளங்குபவள் வித்யாலட்சுமி. உயரிய ஞானத்தை அடைய வழி செய்பவளும் இவளே! இவள் சரஸ்வதியின் அம்சம்.
விஜய லட்சுமி: கடுமையான முயற்சியும் உழைப்பும் நிச்சயமாக வெற்றி தரும். அந்த உழைப்புக்குரிய சக்தியைத் தந்து வெற்றியோடு வாழ அருள்புரிபவள் விஜயலட்சுமி.
தைரிய லட்சுமி: கல்வியும் செல்வமும் இருந்துவிட்டால் போதுமா? தர்மநெறியில் நினைத்ததைச் செய்து முடிக்க மனோபலமும், உடல் பலமும், வைராக்யமும், தைரியமும் அவசியம் அல்லவா? அதைத் தருள்கின்றவள் தைரியலட்சுமி.
அஷ்ட லட்சுமிகளில் யாருடைய அனுக்ரஹம் மிகவும் முக்கியமானது என்பதை விளக்க ஒரு கதை உண்டு.
பணக்காரனான ஒருவனது வாழ்வில் திடீரெனத் துன்பங்கள் சூழ ஆரம்பித்தன. கிரகங்கள் பலமின்றி, அவன் கெட்ட காலம் நடந்துக்கொண்டிருந்தது. பணம், வீடு, வாசல், குடும்பம் ஆகியவற்றை அவன் ஒவ்வொன்றாய் இழக்க நேரிட்டது. நொந்துபோன அவன், தனது பிரமாண்டமான வீட்டின் வெளிவாசல் அருகே சிறிது நேரம் உட்கார்ந்தான். ஒவ்வொரு லட்சுமியாக அவன் வீட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். தான்ய தான்ய வட்சுமி வெளியேறினாள். வீட்டில் சாப்பிட ஏதுமில்லாமல் ஆயிற்று. அதன்பின், தனலட்சுமி வெளியேறினாள். வீட்டில் உள்ள பணமும், பொன்னும், பொருளும் போயின. சந்தானலட்சுமி வெளியேறியயதும் அவன் மனைவி மக்கள் அவனைத் தனியே விட்டுச் சென்றனர். தொடர்ந்து கஜலட்சுமி, விஜயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகியோரும் வெளியேறினர். அவர்கள் தன்னை விட்டுப் போவதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அந்தப் பணக்காரன். கடைசியாக தைரியலட்சுமி அவனை விட்டுக் கிளம்ப முற்பட்டாள். அவள் வெளியேறும்போது அவன் ஓடிச்சென்று அவள் பாதங்களில் விழுந்து, தாயே! தயவுசெய்து நீங்கள் மட்டும் என்னை விட்டுப் போய்விடாதீர்கள்! என்று கதறினான்.
அவனது வேண்டுகோளுக்கு இணங்க தைரியலட்சுமி வெளியேறாமல் மீண்டும் அவன் வீட்டுக்குள் சென்றாள். அதன்பின், வெளியே சென்ற மற்ற லட்சுமிகளும் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வந்தனர். இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றான் பணக்காரன். தர்மத்தைக் கடைபிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிபவார்கள் என்பது சாஸ்திரம் கூறும் உண்மை!
No comments:
Post a Comment