Tuesday, November 18, 2014

"பழமோ, பூவோ எதைக் கொடுத்தாலும் அன்போடு கொடுத்தால் அருள் தருவேன்'


கோகுலத்தில் கண்ணன் பலராமனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருவில், "பழம்! பழம்!'
என ஒரு பெண் கூவிச் செல்வது காதில் விழுந்தது. கண்ணனுக்கு பழம் வாங்க ஆசை. ஆனால், கையில் காசு இல்லை. பக்கத்து வீட்டில் திண்ணையில் குவித்து வைத்திருந்த தானியத்தை இரு குட்டிக்கைகளிலும் அள்ளிக் கொண்டு ஓடினான்.
ஓடும்போது தானியம் தெருவில் சிந்தியது. இருந்தாலும், கையில் இருப்பதை பழம் விற்கும் பெண்ணிடம் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக, "பழம் கொடு" என்று கேட்டான். கண்ணனின் வசீகர முகத்தைக் கண்ட அந்த பெண் தன்னையே மறந்து போனாள்.
""கிருஷ்ணா! உனக்கு வேண்டியதை தாராளமாக எடுத்துக் கொள்,'' என்று கூடையை இறக்கி வைத்தாள். கண்ணனும் இரு கைகளால் பழங்களை அள்ளிக் கொண்டு, மார்போடு அணைத்துக் கொண்டு புறப்பட்டான்.
அப்போது கூடையைக் கண்ட அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கண்ணன் கொடுத்த தானிய மணிகள் அவ்வளவும் நவரத்தின மணிகளாக மாறிக் கிடந்தன. அன்புடன் கொடுத்த கொஞ்சம் பழத்திற்கு ஈடாக, ஆயிரமாயிரம் மடங்கு லாபம் கிடைத்ததை எண்ணி அவள் மகிழ்ந்தாள். மனதில் கண்ணனை நினைத்தாள்.
அவனும் காலில் சதங்கை குலுங்க புன்னகை புரிந்தபடி அவள் முன் நின்றான். சின்ன கண்ணனைக் கண்டதும் இரு கைகளைக் குவித்து அவள் வணங்கினாள்.
இந்த சம்பவம் மூலம், "பழமோ, பூவோ எதைக் கொடுத்தாலும் அன்போடு கொடுத்தால் அருள் தருவேன்' என்று கீதையில் கொடுத்த வாக்கினை கண்ணன் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறான். கிருஷ்ண ஜெயந்தியன்று, மிகுந்த பக்தியுடன் உங்கள் காணிக்கையை அவனுக்குக் கொடுங்கள். உங்கள் இல்லத்திற்குள், அவனது பாதக்கொலுசுகள் கிண்கிணியென ஒலிஎழுப்புவதை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment