Thursday, November 20, 2014

பிடிவாதம்

பிடிவாதம்


பிடிவாதம்

எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அனைத்து அதிகாரங்களையும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வைத்திருந்தாலும் இறுதியில் அவர்களது அழிவு அவர்களது ‘பிடிவாத’ குணத்தால்தான் நிகழ்கிறது. காலம், சூழ்நிலை, தன்நிலை, பிறர்நிலை, அறிவு சார்ந்த ஆய்வு, மாற்றத்தைப் புரிந்துகொள்ளல், புரிந்ததை ஏற்றுக் கொள்ளல் போன்றவற்றில் கவனம் செலுத்தாதவர்கள் தோல்வியடைகிறார்கள். உலகச் சர்வாதிகாரிகள் அனைவரும் இந்தப் பட்டியலில் இடம் பிடிப்பவர்களாகவே இருப்பார்கள். ஹிட்லர், முசோலினி, இடி அமீன், சதாம் உசேன் போன்றவர்களை உதாரணங்களாகக் கூறலாம்.

ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் வென்ற ஹிட்லர், பிரிட்டனை ‘கோழிக்குஞ்சு’ என்று கூறிவிட்டு சோவியத் யூனியனை (ரஷ்யா) பிடித்தால் தான் என் ஆசை தீறும் என்ற ‘பிடிவாத’ குணத்தால் ரஷ்யாவின் மீது போர் தொடுத்தான். கால நிலைகளின் மாறுதல் அறியாமையாலும், அப்போதைய தன் படையின் பலவீனத்தாலும் ‘அவனது சவம்’ அங்கேயே புதைக்கப்பட்டது. பல நாடுகளின் தலைவனாக ஆட்சி செய்த ஹிட்லர் தனது ‘பிடிவாதத்தால்’ இறுதியில் தன்னையே இழந்தார்.

“தான் எடுத்த காரியத்தில் விடாமுயற்சியுடன், சிறதும் விட்டுக் கொடுக்காமல், எந்தத் துன்பம் வந்தாலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் போராடுவது பிடிவாதம் ஆகாது”.

“அதே சமயத்தில் எது எப்படி இருந்தாலும், எனது நிலையில் இருந்து பின்வாங்க மாட்டேன். அந்த நிலைப்பாடு தவறு என்று தெரிந்தாலும் மாற மாட்டேன் என்று இருப்பதுதான் பிடிவாதம்”.

நாம் பிறர் போற்றத்தக்க அல்லது மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் இப்படிப்பட்ட குணம் உடையவர்களைப் பற்றி நம்மூர் மக்கள் கூறுவது:
காட்டான். ஒரு விஷயமும் தெரியாது.
தான் பிடித்த பிடியிலேயே இருப்பான், புரிய வைக்கவும் முடியாது.
பணம் மட்டும் இருக்கிறது, அறிவு கிடையாது.
தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிப்பான்.
இலக்கியம் கூறுவது: மகாபாரதத்தில், துரியோதனனிடம் கிருஷ்ணர் கடைசியாகக் கேட்டது ஐந்து கிராமங்களையாவது பஞ்ச பாண்டவர்களுக்குத் தர வேண்டும் என்பதைத்தான். ஆனால், அதைக்கூடக் கொடுக்க முடியாது என்ற மூர்க்கத்தனமான பிடிவாதத்தால், துரியோதனன் அனைத்தையும் இழக்க வேண்டியதாயிற்று.

No comments:

Post a Comment