ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை !
ராமாயணத்தில் ஒரு காட்சி...
யுத்தம் முடிந்துவிட்டது சீதையை சிறைபிடித்த ராவணனும் அவனுக்கு துணையாக நின்ற வீரர்களும் மாய்ந்துவிட்டார்கள் இலங்கை ராவவணனின் ஆட்சியிலிருந்து விடுபட்டு விட்டது. யுத்த பூமியில் பெருக்கெடுத்து ஓடிய குருதி ஆறு கூட காய துவங்கி விட்டது.
ராமனும் சீதாவும் அவர்களின் நிழல் போன்ற இளையபெருமானும் அயோத்திக்கு கிளம்ப சித்தமாகி விட்டார்கள் வானரவீரர்களுக்கு ஒரே சந்தோசம் கிஷ்கிந்தா என்ற தனது தாய்நாட்டை மீண்டும் காணபோகின்றோம் என்ற சந்தோசம் மட்டும் அவர்களுக்கு இல்லை உலக நாயகனான ராமபிரானின் துயரத்தை துடைக்க தோள்கொடுத்தோம் என்ற சந்தோசம் உயிரையும் துச்சமாக மதித்து ஈடுபட்ட போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற சந்தோசம் இதற்கெல்லாம் மேலாக பிரிந்திருந்த ராமபிரானும் சீதாப்பிராட்டியும் இணைந்துவிட்டார்கள் என்ற சந்தோசம்.
வானரர்களின் வெற்றிவிழா கொண்டாட்டம் இலங்கையிலேயே துவங்கி விட்டது. ஆடலும் பாடலுமென மகிழ்ச்சி மத்தாப்பு பளிச்பளிசென்று நாலாபுறமும் வெடித்து சிதறின வெற்றி களிப்பில் ஆடிகொண்டிருந்த ஒரு சில வாணர்களுக்கு கடலை தாண்டி இலங்கையை அடையும் போது தங்களோடு இருந்த இணைபிரியாத தோழர்கள் பலர் இப்போது இல்லை ராம சேவைக்காக தங்களது இன்னுயிரை அர்பணித்து விட்டார்கள். அவர்களின் மரணத்திற்கு கவலைபடாமல் ஆடி பாடி கூத்தடிப்பது நியாயமா என்று தோன்றியது.
கால் வண்ணத்தால் கல்லாகி கிடந்த அகலிகையை பெண்ணாக சமைத்த கருணை வடிவான ராமனின் சேவகர்கள் அல்லவா வானரர்கள் தனது தோழர்களின் வீர மரணத்திற்காக மட்டுமா வருந்துவார்கள் ராவணனுக்காக போர்புரிந்து உயிரை கொடுத்த லட்சோப லட்ச அசுர வீரர்களுக்காகவும் வருந்தினர். அண்ணனை இழந்து அருமை துணைவனை இழந்து பெற்ற தந்தையை இழந்து உதிரத்தில் சுமந்த மகனை இழந்து எத்தனை எத்தனை அசுர மாதர்கள் கண்ணீர் வடித்து கொண்டிருப்பார்கள். என்று அவர்களில் பலரின் சிந்தனையில் தோன்றியது உடனே ஆட்டமாடிய வானரங்கள் அனைத்தும் சோக மயமாக அமர்ந்துவிட்டன.
அப்படி அமர்ந்த வான வீரர்களில் ஒருவன் கேட்டான் நாம் அனைவரும் ராமனுக்காக சண்டை செய்தோம் முறைதவறி அன்னை சீதாவை கவர்ந்து சென்ற ராவணனின் ஆணவத்தை அடக்க போர் செய்தோம் அது தவறல்ல ஆயிரம் தான் தர்ம யுத்தமாக இது இருந்தாலும் எத்தனையோ உயிர்கள் நமது கைகளால் கொல்லபட்டனவே கடமைக்காக கொலை செய்தோம் என்றாலும் கொலை கொலைதானே? அது பாவம் தானே ஒரு உயிரை படைக்க நம்மால் முடியாத போது அதை பறிக்கும் உரிமை நமக்கு ஏது? நமது யுத்தத்திற்கான காரணம் நியாத்தொடு இருந்தாலும் கொலை செய்த பாவம் நம்மையும் நமது தலைமுறையினரையும் தாக்கும் அதிலிருந்து விடுபட என்னவழி
வானர வீரனின் வார்த்தைகள் ஒவ்வொரு வானரன் காதுகளிலும் எதிரொலித்தது ஆமாம் நான் நூறு பேரை கொன்றேன் நான் கொன்றதோ ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும். நான் செய்த கொலைக்கு கணக்கே இல்லை இதற்க்கெல்லாம் என்ன பரிகாரம் என்று எல்லா வானரங்களும் ஒரே குரலில் பேச ஆரம்பித்தன அமைதியான அந்த பிரேதேச முழுவதும் வானர குரல்கள் எதிரொலித்தன பெரும் சலசலப்பை அது உண்டுபண்ணியது பாசறையில் ஓய்வாக இருந்த ராமச்சந்திர மூர்த்தியின் காதுகளிலும் அந்த குரல்கள் வந்து விழுந்தன தம்பியை அழைத்து வீரர்களின் சலசலப்புக்கு காரணம் என்ன என்று அறிந்து வா என்று அனுப்பி வைத்தான்.
அண்ணனில் ஆணையை சிரமேற் கொண்ட இளையபெருமான் வானரவீரர்களிடம் சென்று விசாரித்தான் அவர்களும் தங்களது மனதிற்குள் ஓடிய கொந்தளிப்பை லஷ்மனனிடம் கொட்டி தீர்த்தார்கள். அண்ணணி வாக்கை மட்டுமே கேட்டு பழக்கப்பட்ட தம்பிக்கு பதில் சொல்ல தெரியவில்லை காரணம் இதுவரை அவன் அண்ணன் செய் என்று சொன்னால் செய்வான் நிறுத்து என்றால் நிறுத்துவான். அது பாவமா? புண்ணியமா? என்று எப்போதுமே நினைத்து கூட பார்த்ததில்லை அண்ணன் சொல்வது தர்மமாக மட்டுமே இருக்கும் என்பது அன்பு தம்பியின் அசைக்க முடியாத நம்பிக்கை அப்படியே வாழ பழகியவனுக்கு வீரர்களின் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியாதது விந்தை அல்ல.
அன்பான வீரர்களே இதுவரை நான் அண்ணின் வார்த்தையை மட்டுமே சத்திய பாதையாக கொண்டதனால் பாவ புண்ணியங்களை யோசித்ததில்லை அதனால் பரிகாரங்களை பற்றி எனக்கு தெரியாது. அறியாத விஷயத்தை அறிய செய்வது பெரியோரின் கடமை எனவே அசுர வீரர்களை கொன்ற பாவத்திற்கு என்ன பரிகாரமென்று அண்ணனிடமே சென்று அடிவணங்கி கேட்போம். வாருங்கள் என்று அனைவரையும் அழைத்து கொண்டு ராமன் முன்னால் வந்து நின்றான்.
தாமரை மலர் போன்ற ராமனின் வதனத்தை தரிசனம் செய்த வானர வீரர்கள் தங்களது நெஞ்சிக்குள் புகைந்து கொண்டிருந்த குமுறல் நெருப்பை அண்ணலின் திருப்பாத கமலங்களில் சமர்பித்தார்கள். ஐயா தசரத குமாரா நாம் செய்தது தர்ம யுத்தம் அதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. ஆணவம் கொண்ட ராவணனை வீழ்த்தியதற்காக நாங்கள் வருந்தவில்லை நாங்கள் அனைவருமே உங்கள்மீது கொண்ட அளவற்ற பக்தியால் இந்த யுத்தத்தை உத்வேகத்தோடு செய்தோம். அதனால் எங்களுக்கு காயங்கள் கூட வலிக்கவில்லை.
ஆனால் அசுர வீரர்கள் மகிழ்வோடு யுத்த களத்தில் குதிக்கவில்லை தங்கள் அரசன் செய்தது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு என்று அவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் அரச கட்டளைக்காக ஒரு வேலையாகத்தான் சண்டையில் பங்கு பெற்றார்கள். அவர்கள் அனைவருமே கொன்று தீர்த்து விட்டோம். உயிர்களை கொல்வது பாவமல்லவா? அந்த பாவத்தை தர்மத்திற்காக செய்தாலும் பாவம் பாவம் தான் அதிலிருந்து விடுபட என்ன வழி எங்கள் ஆத்மா கடைத்தேற என்ன பரிகாரம் என்று எங்களுக்கு தெரியவில்லை நீர் இருட்டை விரட்டும் ஞான சூரியன் எங்களது அஞ்ஞனம் என்னும் சந்தேக இருட்டை நீக்கி தெளிவை தாருங்கள் என்று வணங்கி நின்றார்கள்.
நாளை முதல் நீயே அரசன் என்ற போது எப்படி மலர்ந்து இருந்ததோ அப்படியே நாளை நீ காட்டுக்கு போ என்ற போது இருந்ததே அதே அழகிய ராமனின் வதனம் வானர வீரர்களின் கேள்வியை கேட்டவுடன் மலர்ந்தே இருந்தது. ஆனாலும் அந்த சந்திர முகத்தில் சிந்தனை மேகம் சூல்கொள்ள துவங்கியது. ராமன் அமைதியானான் ஆழமான சிந்தனை அவனை சுற்றி படர்ந்தது. வெகு நேர சிந்தனைக்கு பின் ராமனின் திருவாய் மலர்ந்து வார்த்தைகள் வந்தன.
தவிர்க்க முடியாத நிலையில் கொலை செய்தாலும் அந்த கொலைக்கான பாவ கணக்கில் எந்த ஜீவனும் தப்ப முடியாது. ஆனாலும் அந்த பாவ நெருப்பு முழுமையாக நம்மை சுட்டு விடாமல் இருக்க ஒரு வழி உண்டு மனம் கசிந்து இறைவனிடம் முறையிட்டால் பாவம் விலகும் இங்கே நடந்து முடிந்த சத்திய யுத்தத்தில் நீங்கள் பெற்ற பாவ சுமையை இறக்க வேண்டுமென்றால் கற்புக்கரசியான மண்டோதிரியின் திருநாமத்தை மந்திரம் போல் ஜெபித்து இறைவனிடம் முறையிடுங்கள் அதுவே சிறந்த வழி என்றான் ராமன்,
கேட்ட அனைவருக்கும் வியப்பு வந்தது மண்டோதிரி மாண்டு போன எதிரியின் மனைவி அவன் செய்த அத்தனை தவறுக்கும் சரிபங்கு பொறுப்பை ஏற்கும் சகதர்மிணி அப்படி பட்டவளின் பெயரை சொன்னால் பாவம் போகுமா? என்று அவர்களுக்கு தோன்றியது. அதனால் அதற்கான விளக்கத்தை தருமாறு ராமனிடம் முறையிட்டார்கள்.
மண்டோதிரியை இலங்கை அரசனின் மனைவியாக மட்டும் நீங்கள் பார்கீரீர்கள் நான் அவளை அப்படி பார்க்கவில்லை என் தாயாகவே அவளை கருதுகிறேன். அதற்கும் காரணமுண்டு தாய் மட்டுமே தன் மகனிடம் இல்லாத சிறப்புகள் இருப்பதாக மிகைபடுத்தி கூறுவாள் அது தான் தாய்மையின் சிறப்பு தாய்மையின் பாச வெகுளித்தனம் என்றும் சொல்லலாம். ராவணனின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஒவ்வொரு முறையும் அவள் என் சிறப்புகளை என் வீரத்தை புகழ்ந்தே பேசினாள் ராமனோடு சண்டை போடாதே அவன் அசகாய சூரன் ராமனோடு சமாதானமாக போ அவனே உன் ரச்சகன் அவன் மனைவியை கவர்ந்து வந்தது பாவத்திலும் பாவம் ஆனாலும் நீ மன்னிப்பு கேட்டால் கருணையோடு மன்னிப்பதில் ராமன் ஒரு இமையம் என்றெல்லாம் பேசினாள் ஒரு தாய் மட்டுமே இப்படி பேச முடியும்.
இவைகளால் மட்டும் மண்டோதிரி சிறந்தவள் என்று நான் கூறவரவில்லை அவள் பிறந்த போது அவளை தாய்தந்தையர் இருவரும் புறக்கணித்து அனாதையாக வனத்தில் விட்டு விட்டார்கள். அன்று துவங்கியது அவளின் துயரம் அனாதையாக திரிந்த மண்டோதிரியை இரக்கமே வடிவாக கொண்ட அசுரன் ஒருவன் தனது மகளாக போற்றி வளர்த்தான். அவளை ராவணன் கண்டு மணம் பேசிய பிறகு கணவன் செய்த ஒவ்வொரு தவறுகளையும் எண்ணி எண்ணி அழுதாள் அகங்காரமே வடிவாக கொண்ட தனது இல்லற நாயகன் என்றாவது ஒருநாள் சரியான தண்டனைக்கு உள்ளாவான் என்று ஒவ்வொரு வினாடியும் தனது மாங்கல்யம் பறிபோய்விடுமே என்றும் அழுது கொண்டே இருந்தாள்.
ராவணன் செய்த ஒவ்வொரு தவறுக்கும் அவன் பெற்ற ஒவ்வொரு சாபத்திற்கும் அவனை கரம்பிடித்தவள் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத பாவத்திற்கு தண்டனை சுமந்தாள். அவள் இருந்தது அரச மாளிகையாக இருக்கலாம் ஆனாலும் அது அவளுக்கு நெருப்பு மாளிகையாகதான் இருந்தது. கட்டிய கணவன் கண்கண்ட தெய்வம் அவன் செய்வது ஒவ்வொன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அதை தட்டி கேட்பது மனைவிக்கு அழகல்ல என்று அவள் எப்போதுமே கருதியதில்லை மனைவி மதி சொல்லும் மந்திரியும் கூட கணவனின் தவறை திருத்த சொல்வது தன் கடமை என்று எண்ணினாள் அதை தன் வாழ்நாளில் கடேசி வினாடி கூட கடைபிடித்தாள் ஆனாலும் கருத்து குருடனான கணவன் மனைவியின் அறிவுரையை மதிக்கவே இல்லை ராஜ மாளிகையில் அவள் ஒரு அலங்கார பதுமையாகவே ராவணனால் கருதபட்டாள். மனைவி உடலாக மட்டுமே கணவனோடு வாழ்வது மிகபெரிய துயரம் அந்த துயரம் அவளுக்கு சாகும்வரை நீங்கவே இல்லை.
அன்பர்களே இதையெல்லாம் விட பெரிய துயரத்தை மண்டோதிரி அனுபவித்தாள். அதற்காக அவள் மெளனமாக அழுத அழுகை அவளை சுற்றி உள்ள நான்கு சுவர்களே அறியும். ஒரு பெண்ணுக்கு மிக பெரிய துயரம் எது தெரியுமா? தான் உயிரோடு இருக்கும் போது தனது கணவன் இன்னொரு பெண் மீது மோகம் கொண்டு தன்னை புறக்கணித்து நிற்கிறானே என்ற துயரத்திற்கு ஈடு இணையே கிடையாது. அவன்தான் எல்லாம் என்று அர்பணித்து வாழும் மனைவியை விட்டு விட்டு மற்றொரு பெண்ணை நாடும் கணவனோடு வாழ்வதே பெரிய நரகம் அந்த நரகத்தில் மண்டோதிரி கிடந்தாள். இப்படி தனது வாழ்நாள் முழுவதும் துயரத்தை மட்டுமே கண்டறிந்த ஒரு ஆத்மாவால் தான் மற்றவர்களின் துயரத்தின் பாரம் என்னவென்று அறிய முடியும். துன்பபட்டவர்களுக்கு தான் மன்னிக்கும் தகுதி இருக்கிறது. அது மண்டோதிரியிடம் மட்டுமே மிகுதியாக இருக்கிறது. எனவே அவளை பிராத்தனை செய்யுங்கள் அது சிறந்த பரிகாரம் என்றான்.
இந்த ராமாயண கதை நமக்கு சொல்வது என்ன? கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் கோட்டான் மாதிரி கூத்தியாள் வைப்பான் என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு மலர்க்கு மலர் தாவும் வண்டுகளை போன்ற ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கட்டியவளை கண்ணீரில் தவிக்க விட்டு விட்டு கண்டவளோடு உல்லாசம் புரியும் ஆண்கள் என்றாவது ஒருநாள் ராவணனை போல் வீழ்ந்து கிடப்பார்கள். காரணம் மனைவிக்கு செய்த துரோகம் அதற்கான சம்பளம் மரணத்திற்கு பின் அல்ல வாழும் போதே கிடைக்கும். எனவே தான் தாவும் மனதை கட்டி போட வேண்டுமென்று ஆண்கள் எச்சரிக்க படுகிறார்கள்.
No comments:
Post a Comment