சில சமூகங்களில் ஆண்களுக்கு சிறு வயதில் பூணூல் அணிவிக்கப்படும் வழக்கம் இருக்கிறது. இது எதற்காக? ஏன் சிறு வயதிலேயே இது செய்யப்படுகிறது? சத்குரு: இந்தக் கலாச்சாரத்தில், பொதுவாக சிறுவர்கள் 11 அல்லது 12 வயது அடைந்தபிறகு, அவர்களுக்கு உபநயனம் என்று சொல்லப்படுகிற பிரம்ம பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போதும் கூட சில சமூகங்களில் இது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேத காலங்களில், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இருபாலருக்குமே இது செய்யப்பட்டது. ஆனால் மெதுவாக, இதிலிருந்து சிறுமிகள் விலக்கப்பட்டனர். நான்தான் பிரம்மன் என்பதை இரகசிய மந்திரத்தின் துணையுடன் உணரச் செய்வதே பிரம்மப் பிரதிஷ்டை. ஒரு சிறுவன், 11 அல்லது 12 வயது அடைந்தவுடன், தனக்குள் தெய்வீகத்தை உணர்வதற்காக பிரம்மப் பிரதிஷ்டை தீட்சை வழங்கப்படுகிறது. உண்மையில் ஒருவர் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் முன், இந்தப் புரிதலில் இருந்தே அந்த அனுபவத்துடன்தான், வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அத்தகைய வாய்ப்பு இப்போது இல்லாமல் போய்விட்டது. ஏனெனில், இப்போது மந்திரம் வழங்குபவருக்கும் அந்த மந்திரத்தைப் பற்றித் தெரியவில்லை. இந்த செயல்முறையைப் பெறும் குழந்தைக்கும் நிச்சயமாகத் தெரிய வாய்ப்பில்லை. தற்போது இது வெறும் சடங்காக, உடலைச் சுற்றி ஒரு நூலை மட்டும் அணிவிப்பதுடன் முடிந்து விடுகிறது. இந்தக் குறிப்பிட்ட வயதில் எதனால் இந்த முறை கடைபிடிக்கப்பட வேண்டும்? 13 அல்லது 14 வயதில் சிறுவர்கள் ஆண், பெண் உறவு பற்றி மெதுவாக தெரிந்து கொள்ள துவங்குகிறார்கள். அப்போது அவர்களுடைய மனம் பல திசைகளிலும் அலைபாய ஆரம்பிக்கிறது. அதனால் அந்த வயதிற்கு முன்பாகவே, அவர்கள் தாங்கள் யார் என்பதை உணர்ந்து கொண்டு விட்டால், பிறகு வாழ்க்கையின் எந்தப் பரிமாணத்திற்குள் அடியெடுத்து வைத்தாலும், அவர்களுடைய செயல்பாடுகள் சரியான கோணத்தில் இருக்கும். அதிகப் பேராசை அல்லது காமம் இவற்றால் பாதிக்கப்பட்டு செயல் செய்ய மாட்டார்கள். அவர்களுடைய செயல்களின் தன்மை முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். ஆண், பெண் என்ற இருமையில் சிக்கிக் கொள்ளாதிருக்கும்போது, தெய்வீகத்தை உணர்வது மிகவும் சுலபம். நீங்கள் ஆண், பெண் என்ற இருமையில் சிக்கிக் கொண்டுவிட்டால் பிறகு உங்கள் பால் அடையாளங்களை மறக்கடிக்க பல செயல்கள் செய்ய வேண்டியதிருக்கிறது. அப்படியும் அந்த உணர்வு உங்களுக்கு திரும்பத் திரும்ப வருகிறது. எனவே, தன்னை உணர்வதற்கான பரிமாணத்தில், 11, 12 வயதிலேயே ஈடுபடுத்தப்படும்போது, மிகவும் குறைந்த எதிர்ப்புணர்வுடன் சுலபமாக அவர்களால் அதில் ஈடுபட முடிகிறது. அதன்பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையை முற்றிலும் வேறுவிதமான பரிமாணத்தில் நடத்திச் செல்ல முடியும், ஆனால் இப்போது அந்தச் செயல்முறை உயிருடன் இல்லை. வெறும் சடங்காக மாறிவிட்டது.
No comments:
Post a Comment