Friday, April 24, 2015

கல்கி அவதாரம் எப்பொழுது எங்கு எதற்காக நிகழும் ? கலியுக முடிவில் உலகம் அழியுமா ? ஒரு தெளிவான பார்வை:*
'கல்கி அவதாரம்' குறித்து தவறான கருத்துகள் பலவும் நிலவி வருகிறது. புராணங்களின் துணை கொண்டு அவதார உண்மைகளை உணர்ந்து தெளிவு பெறுவோம்.
*
கலியுக முடிவிலேயே 'கல்கி அவதாரம்' நிகழும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. கலியுகம் 4,32,000 ஆண்டுகளைக் கொண்டது. தற்பொழுது 5,105 ஆண்டுகளே முடிவடைந்து உள்ளது. யுகம் நிறைவு பெற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது.
*
'சம்பளம்' என்னும் கிராமத்தில் 'விஷ்ணு யசஸூ' என்ற வேதியருடைய இல்லத்தில் பாற்கடல் வாசனான பரந்தாமன் கோடி சூர்ய பிரகாசமாய் கல்கி அவதாரம் எடுத்து அருளுவார் (ஆதாரம்: ஸ்ரீவிஷ்ணு புராணம்).
*
ஸ்ரீகல்கி, தர்மத்துக்கு விரோதமாக செயல்படும் அனைவரையும் சம்ஹரித்து, உலகம் முழுவதும் வேத தர்மத்தை நிலை பெறச் செய்தருளுவார். தர்மத்தை நிலை நிறுத்துவதே இறை அவதாரங்களின் நோக்கமே அன்றி, புவியை அழிப்பது அல்ல.
*
பிரளயம் கல்பத்தின் முடிவில் மட்டுமே நிகழும். ஒரு கல்பம் 14 மன்வந்திரங்களைக் கொண்டது. ஒரு மன்வந்திரம் 71 சதுர்யுகங்களைக் கொண்டது. நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம் (கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்).
*
தற்பொழுது நடைபெறுவது வைவசுவத (7ஆம்) மன்வந்திரம் - 28ஆவது சதுர்யுகத்தின் கலியுகம். இதன் முடிவில் 29ஆவது சதுர்யுகத்தின் முதல் யுகமான 'கிருத யுகம்' துவங்கும்.
*
தர்மவிரோத செயல்களைக் காணும் பொழுது 'கலி முற்றிவிட்டது' என்று பொதுவாகக் குறிப்பிடும் மரபு உள்ளது. உண்மையில் இவை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் அளவுக்கு கலிக் கொடுமைகள் முற்ற இன்னும் எண்ணற்ற ஆண்டுகள் மீதமுள்ளது.
*
தற்காலத்தில் தங்களையே 'கல்கி அவதாரம்' என்று அறிவித்துக் கொண்டு சில மூடாத்மாக்கள் களம் இறங்கியுள்ளனர். ஆணவத்தின் உச்சத்தில் செயல்பட்டு வரும் இத்தகு சுயநலவாதிகளிடம் அறியாமையால் மக்களும் சென்று சிக்கிக் கொள்கின்றனர். இதுவும் கலியின் கொடுமைகளுள் ஒன்று.
*
நடைபெறும் அதர்ம நிகழ்வுகளை, கலியின் மீது பழியை ஏற்றி வைத்து கண்டும் காணாது இருந்து விடாமல், ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு உட்பட்டு, இயன்ற அளவில் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தை நிலை நிறுத்த முயல வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment