Sunday, April 26, 2015

ஸ்ரீமத் பகவத் கீதை சில தெரிந்த தெரியாத விவரங்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை சில தெரிந்த தெரியாத விவரங்கள்
பி.ஆர்.ஸுப்ரமணியன்
இந்து மதத்தின் மாபெரும் இதிகாசமாகக் கருதப்படும் மஹாபாரதக் கதையில், யுத்த காண்டத்தில் ஸ்ரீமத் பகவத் கீதை சொல்லப்பட்டிருக்கிறது என்பது நம் எல்லாருக்கும் தெரியும். எல்லா உபநிஷத்துகளிலும் விளக்கப்பட்டிருக்கும் வேதாந்த விஷயங்களின் சாரம் என்று இது கருதப்படுகிறது.
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே இராஜ்யத்தை ஆளும் உரிமையைக் குறித்தும், மற்ற காரணங்களாலும் மூண்ட இந்தப் போருக்கு ஆயத்தமாக இரு தரப்புப் படைகளும் யுத்தத்துக்குத் தயாராக நின்று கொண்டிருந்தன. அப்போது பாண்டவர்களில் சிறந்த வீரனான அர்ஜுனன், தன் தேரோட்டியான ஸ்ரீகிருஷ்ணனைத் தன்னுடைய தேரை இரண்டு படைகளுக்கும் நடுவே கொண்டு நிறுத்தும்படி சொன்னான். தேரோட்டியான ஸ்ரீகிருஷ்ணனும் அவ்வாறே செய்தான்.
கௌரவ சேனையில் தன் பாட்டனாரான பீஷ்மர், ஆசிரியரான துரோணர், மற்றும் தன் தாயாதி காரர்களான துரியோதனன், அவனுடைய தம்பிகள், மற்றும் பல உறவினர்களும், மதிப்பிற்குரிய பெரியவர்களும் இருப்பதை அர்ஜுனன் பார்த்தான். அதனால் அவனுடைய மனம் குழப்பமடைந்தது. ‘அத்தனை உறவினர்களையும், ஆசிரியர் முதலானோரையும் போரில் வென்று, கொன்று இராஜ்யத்தை அடைய வேண்டுமா? அப்படியே அடைந்தாலும் இராஜ்யத்தை ஆளுவதில் சந்தோஷம் ஏற்படுமா?’ என்ற சந்தேகம் அவன் மனத்தில் தோன்றியது.
தன் தோழனும், மைத்துனனும், தேரோட்டியுமான ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து, “இந்தப் போரே வேண்டாம். இராஜ்ஜியத்தை கௌரவர்களே ஆளட்டும், நான் மறுபடியும் காட்டுக்கே போய் வாழ்கிறேன்.” என்று சொல்லி, மனம் தளர்ந்து போனான் அர்ஜுனன். அந்த சமயத்தில் அவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? அவற்றை ஏன் செய்யவேண்டும்? என்பதையெல்லாம் ஸ்ரீகிருஷ்ணன் உபதேசம் செய்து அவனுடைய மனக் குழப்பங்களை நீக்கி, முழு மனத்துடன் யுத்தத்தில் ஈடுபடச் செய்தார். இப்படி ஸ்ரீகிருஷ்ணன், அர்ஜுனன் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலே “பகவத் கீதை” என்ற தனி வடிவத்தில் ஒரு சிறந்த வேதாந்த நூலாகத் திகழ்கிறது. அது 18 அத்தியாயங்களும் 700 ஸ்லோகங்களும் கொண்டது.
இந்த 700 ஸ்லோகங்களை மஹாபாரதத்தில் யுத்தகாண்டத்திலிருந்து தனியாக எடுத்து, ஒரு தனி வேதாந்த நூலாகப் படைத்தவர் ஆதிசங்கரர்தான். அவர் அதற்கு விஸ்தாரமான உரையும் எழுதியிருக்கிறார். அவருக்குப் பிறகு வந்த மத குருக்களான ஸ்ரீஇராமானுஜரும், ஸ்ரீமத்வாசாரியாரும், ஆதிசங்கரர் இவ்வாறு பகவத்கீதையைத் தனி நூலாகப் பிரித்ததை ஏற்றுக் கொண்டு, அவர்களும் அதற்கு உரை எழுதியிருக்கிறார்கள்.
பாண்டவ, கௌரவ சேனைகள் இரண்டும் போருக்கு ஆயத்தமாக நிற்கும்போது, இப்படி 18அத்தியாயங்களும், 700 சுலோகங்களும் கொண்ட விரிவான உபதேசத்தை ஸ்ரீகிருஷ்ணர் செய்திருக்க முடியுமா? என்று சில பண்டிதர்கள் வினவுகிறார்கள். அவர்களின் கருத்துப்படி, போர் ஆரம்பிக்கு முன் அர்ஜுனன் மனம் தளர்ந்து போய் “போரே வேண்டாம்” என்று சொல்லும் நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சிறிய அறிவுரை கூறி, அவனை ஊக்குவித்திருக்கலாம் என்றும், பின்னாளில் வேறொரு கவி இந்த இடத்தில் சிறந்த வேதாந்தக் கருத்துகளைப் புகுத்தியிருக்கலாம் என்றும் எண்ணுகின்றனர். இப்படி விளக்கமாக, விரிவான வேதாந்தக் கருத்துகளை ஆதி சங்கரரே இயற்றி, இந்த இடத்தில் இடைச்செருகல் செய்திருக்கலாம் என்றும் சில பண்டிதர்கள் எண்ணுகிறார்கள்.
மற்றுமொரு சிறந்த இதிகாசமான இராமாயணம், மகாபாரதத்தை விடத் தொன்மையானது. இராமாயணத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளும், மகாபாரத நிகழ்ச்சிகளுக்கு முன்னமேயே நிகழ்ந்திருக்கின்றன. இராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவரும், மகாபாரதத்தை எழுதிய வியாசமுனிவரும் அந்தந்த நிகழ்ச்சிகள் நடந்த காலத்திலேயே வாழ்ந்தவர்கள் ஆதலால், அவர்கள் தாங்கள் நேரில் கண்டவற்றையும், கேட்டுத் தெரிந்து கொண்ட நிகழ்ச்சிகளையுமே காவியமாக இயற்றியிருக்கிறார்கள் என்பது தெளிவு.
வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட இராமாயணத்தை “ஆதிகாவியம்” என்றும் அவரை “ஆதிகவி” என்றும் சான்றோர்கள் குறிப்பிடுவர். ஆனால் பழைமையாக இருந்த போதிலும், இராமாயணம், மகாபாரதத்தைவிட அதிகமான இலக்கியச் சிறப்பு உடையது என்று சான்றோரால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இராமாயணம் 24000 சுலோகங்களைக் கொண்டது. அது முழுவதும் செய்யுள் வடிவத்திலேயே இயற்றப்பட்டிருக்கிறது. காயத்ரி மந்திரம் 24அக்ஷரங்களைக் கொண்டது. இராமாயணத்தில் இந்த அக்ஷரங்களை வரிசையாக, ஒவ்வோர் ஆயிரம் சுலோகங்களுக்குப் பிறகும் உபயோகிக்கப்பட்டு சுலோகங்கள் இயற்றப் பட்டிருக்கின்றன. அதனால் இராமாயணத்தில் பின்னால் வந்த கவிகளால் இடைச் செருகல் ஏதும் செய்யப்படவில்லை என்று நம்பப்படுகிறது. ஆனால் உத்தர இராமாயணம் இடைச் செருகல் என்று கருதுவோரும் உண்டு.
ஆனால் மகாபாரதமோ உரைநடையும்,செய்யுள் வடிவும் சேர்ந்து இயற்றப்பட்டிருக்கிறது. “திருதராஷ்ட்ர உவாச” (திருதராஷ்டிரன் சொன்னான்) என்று உரைநடையில் ஆரம்பித்து, அவன் சொன்னது செய்யுள் வடிவில் இயற்றப்பட்டிருக்கிறது. அதைப் போலவே அந்தக் காவியம் முழுவதிலும், “அர்ஜுனன் சொன்னான்”, “ஸ்ரீபகவான் சொன்னார்” என்றெல்லாம் உரைநடை வரிகள், செய்யுள் வடிவத்துடன் கலந்தே இயற்றப்பட்டிருக்கின்றன. அதனால்தான் அது இலக்கியக் கண்ணோட்டத்தில் இராமாயணத்தை விடக் குறைவாக மதிக்கப்படுகிறது.
மகாபாரதத்தில் பகவத் கீதையைத் தவிர, பல இடைச் செருகல்கள் இருப்பதாகப் பண்டிதர்கள் எண்ணுகிறார்கள். ஒவ்வொரு கவிக்கும் அவருடைய நடை அல்லது பாணி அவருக்கே உரித்தானதாக இருக்கும். மகாபாரதத்தில் பல்வேறு பாணிகள் தென்படுவதால் அவை பிற்காலத்தில் வந்த கவிகளினால் இடைச்செருகலாக நுழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
இலக்கிய நடை அல்லது பாணி எப்படியிருந்தாலும், ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டிருக்கும் வேதாந்தக் கருத்துகள் மிக உயர்ந்தவை என்பதையோ, அவற்றைப் பின்பற்றி எந்த ஒரு மனிதனும் இறைவனுடன் ஐக்கிய நிலையை அடைய முடியும் என்பதைப் பற்றியோ, யாரும் துளி கூட சந்தேகிக்கவில்லை. பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கும் வேதாந்த உண்மைகள் இந்து மதத்தின் ஆணி வேரான கருத்துகளாக இருப்பதால் இந்நூலை பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு சேர்த்து “பிரஸ்தான த்ரயம்” (மூன்று அஸ்திவாரங்கள்) என்று அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.
* * * *
மஹாராஷ்டிர மாநிலத்தில் ஔரங்காபாத்துக்கு அருகே உள்ள பைடன் என்ற கிராமம் கோதாவரி நதிக்கரையில் உள்ளது. தற்சமயம் இங்கு ஒரு பெரிய அணைக்கட்டு இருக்கிறது. இந்தப் பைடன் கிராமத்தில் 1271ஆம் ஆண்டு ஸந்த்ஞானேஸ்வர் என்ற மகான் அவதாரம் செய்தார். இவர் பக்தி நெறியிலும், ஞானநெறியிலும் சிறந்து விளங்கினார்.
பகவத் கீதை ஸம்ஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டுள்ளதால், அதை நன்கு கற்றுத் தேர்ந்த பண்டிதர்கள் மாத்திரமே படித்து அறிய முடிகிறது. ஸம்ஸ்கிரத மொழி அறியாத சாதாரண மக்களும் இந்த உன்னதமான வேதாந்த நூலைப் படித்துப் பயனடைய வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், இவர் பகவத் கீதையை நடைமுறையில் உள்ள மொழியில் இயற்றினார். இது “ஞானேஸ்வரி” என்ற பெயருடன் இன்று வரையிலும் மராட்டிய மக்களால் வெகுவாகப் போற்றப்பட்டு வருகிறது.
தமிழில் பகவத் கீதையின் சாராம்சம் நாட்டுப் பாடல் வடிவில் திருநெல்வேலி மாவட்டத் தமிழில் இயற்றப்பட்டு, அதிகம் வெளியுலகத்துக்குத் தெரியாத ஒரு புத்தகம், “பாட்டி சொன்ன பகவத் கீதை” என்ற பெயரில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
பகவத் கீதையை சார்லஸ் வில்லியம்ஸ் என்பவர் 1785ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். இதற்குப் பல அறிஞர்கள் உறை எழுதியிருக்கிறார்கள். ஆதி சங்கரர், ஸ்ரீஇராமானுஜர் மாத்வாச்சாரியார் ஆகியோர்கள் உரை எழுதியிருப்பதை ஏற்கனவே பார்த்தோம். அவை தவிர இந்த நூலுக்கு உரை எழுதியவர்களில் முக்கியமாக ஸ்ரீஅரவிந்தர், அன்னிபெஸன்ட், மகாத்மா காந்தி, சுவாமி சிவானந்த சரஸ்வதி, சுவாமிசின்மயானந்தா ஆகியவர்களைக் குறிப்பிடலாம்.
* * * *
ஆங்கிலேய அரசுக்கு எதிராக இந்தியாவில் எழுந்த சுதந்தரப் போராட்டம் உச்ச நிலையை அடையும் தறுவாயில் பல தேசியத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தேசப் பிதா என்று கருதப்படும் மகாத்மா காந்தியின் முக்கிய சீடர்களில் ஒருவர் ஆசார்ய வினோபா பாவே. அரசியல் சுதந்தரம் பெற்ற நம் பாரதம் பொருளாதார சுதந்தரமும், ஆன்மிக உயர்வும் பெறுவதற்கென இம்மகான் நடத்தின பூதானப் பெரு வேள்வியைப் பற்றி நாம் அறிவோம். அவர் 1932இல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தூலியா என்ற ஊரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் தன் சக அரசியல் கைதிகளுக்கு பகவத் கீதையின் சாராம்சத்தை பதினெட்டு சொற்பொழிவுகள் மூலம் விளக்கினார். மராத்தி மொழியில் இருந்த அச் சொற்பொழிவுகள் பின்னர், “கீதா பிரவசனே” என்ற நூலாக வெளிவந்தன. இதன் தமிழ் மொழி பெயர்ப்பு “கீதைப் பேருரைகள்” என்ற பெயரில் மதுரையில் உள்ள காந்தி நினைவு நிதி மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது.
* * * *
மேற்கத்திய நாட்டவர்கள் கூட, குறிப்பாக ஜெர்மானியர்களும், ஆங்கிலேயர்களும் சம்ஸ்கிருத மொழியை வெகு ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, அதில் நல்ல பாண்டித்தியமும் அடைந்திருக்கிறார்கள். நம் நாட்டுச் சரித்திரத்திலும் வடக்கேயிருந்து ஆரியர்கள் படையெடுத்து வந்தார்கள் என்றும், அவர்கள் திராவிடர்களை வென்று அரசாட்சி செய்தார்கள் என்றும் நம்பப்படுகிறது. ஆரியர்களின் மொழியே சம்ஸ்கிருதம் என்று சிலர் எண்ணுகிறார்கள். சம்ஸ்கிருத மொழியின் பாதிப்பு ஆங்கிலம், ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் இருப்பதைக் காணமுடிகிறது. இதனாலேயே மாக்ஸ்முல்லர், லியோஸிலார்ட், ஜேம்ஸ் பிராங்க், ஸர் வில்லியம் ஜோன்ஸ் போன்ற பல ஐரோப்பியர்கள் சம்ஸ்கிருத மொழியைக் கற்றுக் கொண்டு அதில் நல்ல தேர்ச்சியும் பெற்றிருந்தனர். ஆனால் நம் இந்தியக் கலாசாரத்துக்கும், இந்து மதத்திற்கும் உயிர் மூச்சாக இருக்கும் சம்ஸ்கிருத மொழியைக் கற்றுக்கொள்வதில் நாம் ஊக்கம் காட்டாமல் இருப்பது வருத்தத்திற்குரியதே.
ஜெர்மானியர்கள் தங்களை ஆரிய வம்சத்தினராகக் கருதினர். அதுவே உலகிலுள்ள மற்ற எல்லா வம்சங்களையும் விட உயர்ந்தது என்றும் நம்பினர். இந்த நம்பிக்கை வெறியினால்தான் இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது, ஜெர்மானிய எதேச்சாதிகாரியான அடால்ப் ஹிட்லர், தாழ்ந்த ஜாதி என்று கருதப்பட்ட யூதர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்தான்.
இரண்டாவது உலக மகாயுத்தம் தொடங்குவதற்கு முன், அணு சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பௌதிக விஞ்ஞானிகள் அணுவைப் பிளப்பது சாத்தியம் என்றும், அப்படிச் செய்ய முடிந்தால் அதிலிருந்து மிகப் பெரும் சக்தி வெளிப்படும் என்பதையும் உணர்ந்திருந்தனர். ஆனால் அப்படி சிதைக்கப்பட்ட அணு (மீஜ்நீவீtமீபீ ஜீணீக்ஷீtவீநீறீமீs) தொடர்ந்து மற்ற அணுக்களைச் சங்கிலித் தொடர் போலப் பாதித்து (நீலீணீவீஸீ க்ஷீமீணீநீtவீஷீஸீ) இதைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்பதையும் அறிந்திருந்தனர். இவ்வாறு சிதைக்கப்பட்ட அணுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது அன்று இருந்த விஞ்ஞான வளர்ச்சியில் அறியப்படவில்லை. தற்சமயம் ஹெவிவாட்டர், கார்பன் பைல் (பிமீணீஸ்ஹ் ஷ்ணீtமீக்ஷீ சிணீக்ஷீதீஷீஸீ ஜீவீறீமீ) முதலியவற்றை உபயோகித்து இந்த சிதைக்கப்பட்ட அணுக்களை (மீஜ்நீவீtமீபீ ஜீணீக்ஷீtவீநீறீமீs) சமனம் செய்கிறார்கள் என்று உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கே கூடத் தெரியும்.
அணுவைப் பற்றிய ஆராய்ச்சி மேலே சொன்ன நிலை வரைக்கும் முன்னேறியிருந்த நேரத்தில் இரண்டாவது உலக மகாயுத்தம் தொடங்கியது. ஹிட்லரின் ஆதிக்கம் ஜெர்மனியில் மட்டுமில்லாமல் ஐரோப்பா முழுவதுமே பரவியது. அவனுடைய கொலை வெறியிலிருந்து தப்பித்துக் கொண்ட பல யூதர்கள் அமெரிக்காவில் சரணடைந்தார்கள். அப்படி அமெரிக்காவில் வந்து சேர்ந்த அணு விஞ்ஞானிகள், அணு ஆராய்ச்சியில் இன்னும் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் அணுகுண்டு தயாரித்துவிட முடியும் என்று நம்பினர். ஜெர்மனியில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அணு விஞ்ஞானிகள் இந்த முன்னேற்றத்தை முதலில் அடைந்து விடக்கூடாது என்று பயந்தனர். ஏனென்றால், கொலை வெறி பிடித்த ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியின் வசத்தில் இந்த ஆயுதம் இருந்தால் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்குமே பெரும் ஆபத்தாகிவிடும் என்று எண்ணினர்.
ஆகவே அவர்கள் அமெரிக்காவின் ஜனாதிபதியான பிராங்கிளின் ரூஸ்வெல்டை அணுகி அவரிடம் தங்கள் பயத்தைச் சொன்னார்கள். ஹிட்லரின் தலைமையில் உள்ள ஜெர்மானிய விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் முன்னேறுவதற்கு முன், அமெரிக்கா இதை அடைய வேண்டும். அப்படி அணுகுண்டு தயாரித்து, அதை வைத்து மிரட்டித்தான் ஹிட்லரை அடிபணிய வைக்க முடியும் என்று நம்பினார்கள். அமெரிக்க ஜனாதிபதியும் இந்த அணு விஞ்ஞானிகளின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு அதற்கான ஆராய்ச்சிகளுக்கு ஊக்கம் அளித்தார். “மன்ஹட்டன் பிராஜக்ட்” என்ற சங்கேதப் பெயருடன் ஒரு ரகசியத் திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்குத் தலைவராக ராபர்ட் ஆப்பென்ஹீமர் என்ற ஜெர்மானிய யூதர் நியமிக்கப்பட்டார். இவருடைய தலைமையில் பல விஞ்ஞானிகள் இரவும், பகலும் அயராது உழைத்து வெற்றியும் கண்டனர். அப்போது அவர்கள் தயாரித்த அணுகுண்டை தற்கால வளர்ச்சியை வைத்துக் கொண்டு மதிப்பிட்டால் ஒரு சுண்டைக்காய்தான். ஆனால் அன்றையத் தேதியில் அதுவே ராட்சத ஆயுதம்.
இப்படித் தயாரித்த அணுகுண்டைச் சோதித்துப் பார்ப்பதற்கு நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் அல்மோகார்டோ என்ற சோதனைத் தளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராபர்ட் ஆப்பென்ஹீமர் தன்னுடைய சக விஞ்ஞானிகளுடன் எட்டு கி.மீ. தொலைவில் பூமிக்கடியில் நிர்மாணிக்கப்பட்ட “பங்கரில்” இருந்து கொண்டு சோதனையைக் கண்காணிக்க ஆயத்தமானார்.
ஆப்பென்ஹீமருக்கு, இந்த அணுகுண்டின் வெடிப்பு இதுவரை உபயோகிக்கப்பட்ட எல்லாவித குண்டுகளையும் விட மிக மிக அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று தெரிந்திருந்தது. கற்பனைகளையெல்லாம் மிஞ்சக்கூடிய மிகப்பெரும் வெடிப்பை அவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
சோதனைக் குண்டு வெடித்ததும் அதனால் ஏற்பட்ட பிரகாசம் 95 கி.மீ. சுற்றளவுக்கு ஒரு பெரிய நெருப்புக் கோளமாகத் தென்பட்டது. இதன் பிரகாசம் ஆப்பென்ஹீமருக்கு, ஸ்ரீமத் பகவத்கீதையில் 11ஆவது அத்தியாயத்தில் உள்ள ஒரு சுலோகத்தை நினைவுபடுத்தியதாம். பதினோராவது அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டியதைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த விஸ்வரூபத்தின் பிரகாசம், ஒரே சமயத்தில் ஆகாயத்தில் ஆயிரம் சூரியர்கள் இருந்தால் என்ன பிரகாசம் இருக்குமோ, அதை விட அதிகமாக இருந்தது என்று “திவி சூர்ய ஸஹஸ்ரஸ்ய” என்று தொடங்கும் சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
விஞ்ஞான சம்பந்தமான சோதனை நடத்தும்போது ஜெர்மானிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஆப்பென்ஹீமருக்கு ஸ்ரீமத் பகவத் கீதையில் உள்ள சுலோகம் நினைவுக்கு வரவேண்டுமென்றால், அவருக்கு பகவத் கீதையிலும் சம்ஸ்கிருத மொழியிலும் எவ்வளவு தேர்ச்சி இருந்திருக்கும் என்பதை நாம் நன்கு ஊகிக்க முடிகிறது. இவ்வளவு அரிய பொக்கிஷமான ஸ்ரீமத் பகவத் கீதை வேதாந்த நூல்களில் தலையாயதொன்றாகக் கருதப்படுகிறது என்று தெரிந்திருந்தும், நம்மில் வெகு சிலரே இதைக் கற்க முற்படுகின்றனர். ஆப்பென்ஹீமர், மாக்ஸ் முல்லர் போன்ற வெளிநாட்டவர்கள் இதைக் கற்றுக் கொள்வதில் காண்பித்த ஆர்வம் நமக்கும் ஆர்வத்தை உண்டு பண்ணட்டும்.
* * * *
ஸ்ரீமத் பகவத் கீதையை சுருக்கமாக கீதை என்றும் குறிப்பிடுவர். ஆனால் கீதை என்ற பெயருடைய வேறு சில நூல்களும் உள்ளன. அவற்றைப் பற்றியும் பார்ப்போம்.
உத்தவ கீதா: உத்தவன் என்பவன் ஸ்ரீகிருஷ்ணனுடைய சினேகிதன். கோகுலத்திலிருந்து கிளம்பி கம்ஸனை வதம் செய்த பிறகு ஸ்ரீகிருஷ்ணன் மறுபடியும் பிருந்தாவனத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை. தன்னைப் பிரிந்து வாடும் நந்தகோபன், யசோதை, கோபியர், இடைக்குலத் தோழர்கள் ஆகியவர்களுக்கெல்லாம் ஆறுதல் அளிக்க, உத்தவன் மூலம் அவர்களுக்குச் சொல்லி அனுப்பும் உபதேசங்கள் “உத்தவ கீதா” என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீமத் பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்த மாதிரி, இந்த உத்தவ கீதையும் ஸ்ரீகிருஷ்ணனாலேயே உபதேசிக்கப்படுகிறது. ஆனால் இதைக் கேட்பவன் உத்தவன்.
அஷ்டவக்ர கீதா: இது மிதிலாபுரியின் அரசனான ஜனகருக்கு, உத்தம புருஷனான அஷ்டவக்கிர ரிஷி செய்த உபதேம் ஆகும். இதுவும் இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் வடிவத்தில் உள்ளது. இதை அஷ்டவக்கிர சம்ஹிதை என்றும் குறிப்பிடுவர். அத்வைத வேதாந்த உண்மைகளைப் பற்றி இதில் விளக்கப்பட்டிருக்கிறது.
கணேச கீதா: கணேச புராணத்தில் ஒரு பாகமாக கணேச கீதா விளங்குகிறது. இது பகவத் கீதையின் வடிவிலேயே இயற்றப்பட்டிருக்கிறது. இதில் ஸ்ரீகிருஷ்ணன் வகித்த தெய்விக நிலையில் கணேசரை வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசம் அர்ஜுனனுக்கு அளிக்கப்படுவது போல, இந்த நூலில் கணேசரின் உபதேசம் வரண்ய இராஜாவுக்கு அளிக்கப்படுகிறது. இதில் உள்ள சுலோகங்கள், பகவத் கீதையில் உள்ள சுலோகங்களைத் தழுவியே, சிறு மாற்றங்களுடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
வியாத கீதா: இது ஒரு கசாப்புக் கடைக்காரன் வேதாந்த உண்மையை ஒரு பிராமண சந்நியாசிக்கு உபதேசிப்பதாக இயற்றப்பட்டிருக்கிறது. அந்த பிராமண சந்நியாசி காட்டில் ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருந்த போது, அந்த மரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு கொக்கு அவன் மேல் எச்சம் இட்டு விட்டது. அதனால் தவம் கலைந்த அந்த சந்நியாசி கோபத்துடன் அந்தப் பறவையைப் பார்த்ததும், அது சாம்பலாகி விட்டது. இதைக் கண்டதும், தனக்கு தவத்தினால் எல்லாவித சித்திகளும் கிடைத்துவிட்டன என்று இறுமாப்பு அடைந்தான். பிறகு ஒரு கிராமத்தில் சந்நியாசிகளின் வழக்கப்படி பிட்சை எடுக்கச் சென்றான். அவன் பிட்சை கேட்ட வீட்டில் அந்த வீட்டுப் பெண்மணி தன் கணவருக்குப் பணிவிடைகள் செய்து விட்டு பிட்சை கொடுக்கத் தாமதமாக வந்தபடியால், சந்நியாசி அவளையும் கோபத்துடன் பார்த்தான். அந்த இல்லத்தரசியோ, சிறிதும் கவலையில்லாமல் அவனைப் பார்த்து, “என்னையும் கொக்கென்று எண்ணினாயோ?” என்று கேட்டாள். காட்டில் நடந்த நிகழ்ச்சி இவளுக்கு எப்படித் தெரிய வந்தது என்று ஆச்சரியப்பட்ட சந்நியாசி அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். அவளைத் தனக்கு உபதேசம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டான். அவளோ, அவனுக்கு உபதேசம் செய்ய வல்லவன் அடுத்த ஊரில் இருக்கும் கசாப்புக் கடைக்காரன்தான் என்று சொல்லி அனுப்பினாள். அந்தக் கசாப்புக் கடைக்காரன் பிராமண சந்நியாசிக்குச் செய்த உபதேசம் “வியாத கீதா” என்று அறியப்படுகிறது.

No comments:

Post a Comment