Wednesday, May 27, 2015

யாளி

யாளி
ஒரு விசித்திரமான மிருகம்..
இந்தியாவின் தென்னக கோயில்களில் மட்டுமே சிலைவடிவில் காணக்கிடைக்கின்ற மிருகம் அது. கோயில்களில் பெரும்பாலும் கல் தூண்களில் எழும்பி நின்ற கோலத்தில் காணப்பெறும். யானையுமல்ல. சிங்கமும் அல்ல. பறவையைப் போன்றும் தெரியவில்லை.
கண்கள் உருண்டு திரண்டும், நீண்ட துதிக்கையும், கோரப்பற்களும், யானையைப் போன்ற அகன்ற காதுகளாயில்லாமல் சிறிய காதுகளை உடைத்ததாயும், நான்ற வாயும், கால்கள் கனமாகவும் அவற்றில் வலிமையான நகங்களும், வாலும் காணப்படும். இந்த விசித்திர சிற்பங்களை உற்றுப் பார்த்திருக்கிறீர்களா? இவ்வகைத் தூண்களில் தன் முன்னிரு கால்களை தூக்கி எழுந்து நின்றிருக்கும் யாளிகளின் பிடியில் யானையும், சிங்கமும் சிக்கியிருக்கும்.
அதாவது, யானையை விட உருவத்தில் மிகப்பெரிதும், சிங்கத்தை விட உருவத்திலும் வலிமையிலும் மிகுந்து தெரிகின்றன இந்த யாளிகள்.
ஒரு வேளை அப்படியொரு விலங்கு இருந்திருந்தால்..அது எவ்வாறு நடந்திருக்கும்? ஓடியிருக்கும்? கத்தியிருக்கும்? அதன் கத்தலுக்கு யானைகளும் சிங்கங்களும் ஏனைய விலங்குககளும் எப்படி பயந்திருக்கும்? அதன் உணவு என்னவாக இருந்திருக்கக்கூடும்? சிங்கங்களையும் யானைகளையும் ஒரே அடியில் வீழ்த்திவிடும் போல் உள்ளதே அதன் தோற்றம் !!?. அந்தச்சிலைகளின் மீது ஒரு மனிதன் அமர்ந்து, கடிவாளம் கொண்டு அதை வழிநடத்துவது போன்றுள்ளதே!!? அப்படியென்றால், யானைகளைப் போல் அவை மனிதனுக்கு கட்டுப்பட்டனவா ?!!.
போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்டனவா?
மகாபாரதக் காலத்தில் கூட ரத, கஜ, துரக, பதாதிகளின் படை வரிசைகள் தானே குறிப்பிடப் பெற்றிருக்கின்றன !! ?.
டைனசர்கள் போன்ற இனங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களாய், அவற்றின் படிமங்கள் நமக்கு கிடைத்த பிறகே, அப்படிச் சில மிருகங்கள் வாழ்ந்திருக்குமென நாம் நம்பினோம். இல்லையா?
அதுபோல், நம் யாளிகள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. இல்லாமலா நம் நாட்டுச் சிற்பக்கலைஞர்கள் செதுக்கி வைத்தனர்? அல்லது யாளிகள் என்பன அச்சிற்பிகளின் அழகான கற்பனையா? இணையத்தில் தேடினால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 'லெமூரியா கண்டத்தில்' வாழ்ந்திருக்கலாம் என்று அநுமானமாய் சொல்கின்றன தகவல்கள். 
சரிங்க,
இவ்விலங்குகளுக்கு ஆதாரமாக திருமுறைகளுள் ஒன்றில் யாளியைப்பற்றிய வரிகள் வருகிறதே..!!
அந்தப்பாடல்...
"வகைதகு முத்தமிழ் ஆகரன் 
மறைபயில் திப்பிய வாசகன்
வலகலை வித்தகன் வானவில் மதிஅணை பொற்குவை மாளிகை
திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ் புக லிக்கர சாகிய
திருவளர் விப்ர சிகாமணி செழுமல யத்தமிழ்க் கேசரி
மிகமத வெற்றிகொள் வாரணம் மிடைவரு டைக்குலம் "யாளிகள்"
விரவிரு ளில்தனி நீள்நெறி வினைதுயர் மொய்த்துள வே மணி
நகைஎழி லிற்குற மா துன தருமை நினைக்கிலள் நீ இவள்
நசையின் முழுப்பழி ஆதல்முன் நணுகல் இனிக்கிரி வாணனே".
- பதினோராம் திருமுறை ( ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்)
மேலும் திருமுறைகளில் நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த திருஈங்கோய்மலைஎழுபது என்ற பாடல்களில்
"அரியும், உழுவையும், 'ஆளியுமே' ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் - சொரிய
எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே, கூற்றம்
திரியாமற் செற்றான் சிலம்பு".
"ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடுதொடரும் மாக்குறவர் - கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே, நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று".
இங்கு..முதல் பாடலில் அரி என்பது சிங்கத்தையும், உழுவை என்பது புலியையும் குறிக்கிறது. அதன் பின்னால் வரும் 'ஆளியுமே' என்பது எதைக்குறிக்கின்றது?
"ஆளி தொடர அரி தொடர" என்று துவங்கும் இரண்டாவது பாடலில் குறிக்கப்பெறும் ஆளி எது?
நம் மகாககவி சுப்ரமணிய பாரதி காளி மீது பாடிய தன் பாடல் ஒன்றில்...
" காளி மீது நெஞ்சம் என்றும் - கலந்து நிற்க வேண்டும், 
வேளை யொத்த விறலும் - பாரில் - வெந்த ரேத்து புகழும், 
யாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும், 
வாழி யீதல் வேண்டும் அன்னாய் - வாழ்க நின்றன் அருளே ".
( * பாரதியார் யாளியை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் திருமுறைகளிலும் சங்க இலக்கியங்களிலும் வருவது..!!? ).
இவற்றின் மூலம் நாம் அவ்விசித்திர விலங்கு வாழ்ந்து மடிந்த இனம் என்று கொள்ளலாகுமா?
உலகில் ஆங்காங்கே பல நாடுகளில் சில விசித்திர மிருகங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அவைகளில் சில....
' சீனாவின் பறக்கும் பாம்பு போன்றும் முதலையின் முகம் போன்றும் நான்கு அல்லது ஆறு கால்களுடனும் நெருப்பினை கக்குவதாயும் காணப்படும் (ட்ராகன்) " Dragon " ..இதையே ஜப்பானில் 'டாட்டஸ்' என்கின்றனர்.
' அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில்...நெருப்பில் இருந்து உயிர்த்து எழும் ( ஃபீனிக்ஸ் ) " phoenix " பறவை.
' ஒற்றைக் கொம்புடன் கூடிய தெய்வீக பறக்கும் குதிரை " Unicorn ".
' நம்நாட்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் பாலிலிருந்து நீரை தவிர்த்துவிட்டு பாலை மட்டும் பருகும் " அன்னப்பட்சி " இப்படியாக மேலும் சில மிருகங்கள், உயிரினங்கள்.
அந்த வரிசையில் நமது யாளிகள் அழகோ அழகு. அவற்றை அடித்துக்கொள்ள வேறெதுவும் இல்லையென்பது என் அபிப்ராயம்.
யாளிகளிலும் சில வகைகள் உள்ளன. 
* யானையைப் போன்ற துதிக்கையுடனுள்ள "யானை யாளி".
* ஆடு போன்ற முகம் கொண்ட " மகர யாளி " .
* சிங்கத்தின் முகத்தினைக் கொண்ட " சிம்ம யாளி " .
* நமது கடவுளர்களின் பிரபைகளில் காணப்படும் பறவைகள் போன்று இரண்டு கால்களுடன், அழகிய சிறு இறக்கைகள் மற்றும் தோகையுடனும் காணப்படுகின்றன சில வகைகள்.
* எலிகளைப் போன்று குள்ள அளவிலும் காணப்படும் யாளிகளும் உண்டு.

'யாளி' என்ற பெயரில் தமிழில் ஒரு நாவல் வெளிவந்துள்ளதாக கூட தெரிகிறது. சொல்ல முடியாது.. ஒருவேளை வருங்காலத்தில் யாளியின் படிமங்கள் இங்கே கிடைத்தன..அங்கே கிடைத்தன என்று தகவல்கள் தெரியவரும்போது...?
அதுவரை..கற்பனையோ.!...வாழ்ந்து காணாமல் போன மிருகமோ.. !....
காலகாலத்துக்கும் நாம்போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள் அந்தக் கற்சிலைகள். தெய்வீகங்கள் பொங்கி நிற்கும் கலைகள்.
அவையனைத்தும் அற்புதங்கள். ஆச்சரியங்கள்.

No comments:

Post a Comment