Thursday, May 28, 2015

மனசாட்சி என்றால் என்ன?

மனசாட்சி என்றால் என்ன? மனசாட்சி சொல்வதுபடிதான் நாம் வாழ்க்கையை நடத்திக்கொள்ள வேண்டுமா? சத்குரு: எல்லாம் பிரமாதமாக இருக்கிறது, ஆனால் ஏதோ ஒன்று மட்டும் உறுத்தலாக இருக்கிறது என்றால், அதைத்தான் மனசாட்சி என்கிறோம். குற்ற உணர்வு, சரி – தவறு இவையெல்லாம் சமூகம் சார்ந்த கருத்துக்கள்தான். இவை, சமூகநெறிகள் மூலம் உங்களுள் செலுத்தப்பட்டுள்ளது. ஒழுக்கநெறிகள் என்பவை சமூகத்தை சார்ந்ததாகவும், இனதிற்கு இனம் வித்தியாசமாகவும் இருக்கின்றன. வெவ்வேறு காலங்களில், பூமியில் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறான ஒழுக்கநெறிகள் இருந்தன. உங்கள் பாட்டி முற்றிலும் முறையற்றது என நினைத்ததை இன்று நீங்கள் வெட்கமில்லாமல் செய்கிறீர்கள். ஆதலால், காலம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒழுக்கநெறி என்பது நபருக்கு நபர் வேறுபடுகிறது. அதற்கு உண்மையுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை. ஆனால், மனிதநேயத்திற்கு உண்மையுடன் தொடர்புண்டு. காலம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒழுக்கநெறி என்பது நபருக்கு நபர் வேறுபடுகிறது. உங்களுக்குள் ஒவ்வொரு நொடியும், மனிதநேயம் உயிர்ப்புடன் இருந்தால், யாரோ ஒருவர், “இப்படி நடந்துகொள்ளுங்கள், அப்படி நடந்துகொள்ளுங்கள்” என்று உங்களுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இருக்காது. மக்கள் மனிதநேயத்துடன் இல்லாத காரணத்தினால்தான், சமுதாயம் ஒழுக்கநெறிகள் மூலம், இதை சரிசெய்ய முயற்சித்துள்ளது. ஒவ்வொருவரும், அவரவருக்கு வேண்டிய ஒழுக்கநெறியைப் பெற்றாலும், நம்மால், இந்த உலகை இன்னமும் சரிசெய்ய இயலவில்லை. போதனையால், உங்களை சுற்றி உள்ள மனிதர்களிடம் நீங்கள் நடிக்கக் கற்றுகொண்டதுதான் மிச்சம். உங்களுக்குள் அனைத்து முட்டாள்தனமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உங்களுடைய மனிதநேயம் முழுமையாக மலர்ந்திருந்தால், உங்களுக்கு ஒழுக்கநெறிகள் தேவையில்லை. உங்கள் தற்போதைய நிலையே நன்றாகத்தான் இருக்கும். விழிப்புணர்வும் மனசாட்சியும் ஒழுக்கநெறிகளால் மனசாட்சி வளருமே தவிர விழிப்புணர்வு வளராது. உங்களுடைய மனிதநேயம் முழுநேரமும் முழுமையாக மலர்ந்திருந்தால், உங்களுக்கு ஒழுக்கநெறி தேவையிருக்காது. மனிதத்தன்மையின் போலித்தனமே ஒழுக்கநெறிகள். சமூகத்தில், ஒரு சில விஷயங்களை ஒழுக்கநெறிகளால், சரிசெய்ய முடிந்தாலும், மனிதரின் உள்நிலையில் அது பேரழிவை ஏற்படுத்தும். ஆனால் மனிதநேயத்தினால், கட்டுப்பாடு இல்லாமல், தளர்வான வழியில், சமுதாயத்தில் ஒழுங்குமுறையை ஏற்படுத்த முடியும். அது மனிதனை இனிமையாக ஆக்கும். அதுதான் முக்கியமானது. மனிதநேயம் மலர்ந்து, வழிந்தோடினால், அடுத்த நிலையாக தெய்வீகமாவது இயல்பாக கைகூடும். உங்களுக்குள் மனிதநேயத்தை வழிந்தோட அனுமதித்தால்தான் தெய்வீகம் உங்களுள் மலரும். செழுமையான மனிதநேயம் இல்லாவிட்டால், நீங்கள் என்ன செய்தாலும் சரி, உங்களுள் தெய்வீகம் நிகழாது. “இதை தான் நீங்கள் செய்ய வேண்டும், இதை செய்யக் கூடாது” என்ற போதனைகள் எந்த கல்லிலும் செதுக்கப்படவில்லை. போதனையால், தெய்வீகம் நடக்காது. அவமானம், பயம், குற்ற உணர்வுதான் மிஞ்சும். ஏனென்றால், வகுக்கப்பட்ட ஒழுக்கநெறிகளை முழுமையாக நிறைவேற்றியவர் யாரும் இல்லை. உலகில் உள்ள முக்கிய மதங்கள் கூறும் பாவச் செயல்கள் எதெல்லாம் என்று பட்டியல் போட்டால், கடைசியில், நீங்கள் உயிருடன் இருப்பதே பாவம் என்றுதான் முடிவுக்கு வரவேண்டும். நீங்கள் என்ன செய்தாலும் பாவம்தான். நீங்கள் பிறந்ததே குற்றம். வாழ்க்கை செயல்முறையே பாவம் என்று ஆகிவிடுவதால், நீங்கள் எப்போதும், கலக்கத்துடனும், குற்றஉணர்வுடனும் இருக்கிறீர்கள். பாரத கலாச்சாரத்தில், நெறிமுறைகள் இல்லை. “இதை தான் நீங்கள் செய்ய வேண்டும், இதை செய்யக் கூடாது” என்ற போதனைகள் எந்த கல்லிலும் செதுக்கப்படவில்லை. நாம் ஒருபோதும் போதனையை சார்ந்து இருந்ததில்லை. ஏனெனில், மனிதநேயத்தை ஒரு பெரிய அளவில் தூண்டக்கூடிய சக்திவாய்ந்த மனிதர்களை நாம் உருவாக்கினோம். எனவே, ஒவ்வொரு தலைமுறையிலும் நீதிபோதனை மற்றும், ஒழுக்க விதிகளின் தேவை இல்லாமல் போயிற்று. மனிதநேயத்தின் மூன்று உயிர்நாடிகள்: மனிதத் தன்மையைத் தூண்டுவதற்கு மூன்று அடிப்படைக் கூறுகளை உருவாக்கினோம். முதலில், படைப்பின் மீது பேரார்வம். இந்த கலாச்சாரத்தில், பல்வேறு லட்சக்கணக்கான வழிகளில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாம், ஒரு நகரம் அல்லது பெருநகரை உருவாக்க வேண்டியபோது, முதலில் ஒரு பிரம்மாண்டமான கோயிலைத்தான் கட்டினோம். இந்தக் கோயிலை கட்டிய மக்கள் குடிசையில் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் கட்டிய கோயில் பிரம்மாண்டமாக இருந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் இதை நீங்கள் பார்க்க முடியும். அடுத்த இரண்டு அடிப்படைகளாக உங்களைச் சுற்றியுள்ள அனைத்து உயிர் மீதும் பரிவு, தனக்கு அதிக முக்கியத்துவம் தராத தன்மை. இம்மூன்றயும் நிலை நிறுத்தினால், மனிதநேயம் எப்போதும் உயிர்ப்போடு இருக்கும். இல்லையென்றால், நீங்கள் நிபந்தனைகளுக்குட்பட்ட போலியான மனிதராக நடிக்க வேண்டிவரும். இதனால் மனசாட்சி உருவாகும். 

Read more at : மனசாட்சி என்றால் என்ன? http://tamilblog.ishafoundation.org/manasatchi-endral-enna/

No comments:

Post a Comment