ஓர் இந்துவின் வாழ்க்கை குருவை சந்தித்த பிறகு தான் பூரணமடைகிறது. தான் யார்? தனது உண்மைத் தன்மை என்ன? போன்ற எதுவும் தெரியாத நிலையில், அறியாமையுடன், காலம் கொண்டு செல்கின்ற விதத்தில், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்கின்ற ஓர் இந்து, தான் நம்புகின்ற பூர்வஜென்மப் புண்ணிய வசத்தினால் தன் குருவைச் சந்திக்கிறான். அந்தச் சந்திப்பு இறையருளால் தான் நிகழ்கின்றது. குருவும் தானுமாக சந்திக்கின்ற அந்த நிகழ்வு அவனுக்கு வாழ்க்கையின் திருப்பமாக அமைகின்றது. இறைவனே தன் விருப்பத்தால் குருவாக அவதரித்துத் தன் படைப்பாகிய மனிதனைத் தன்னிடத்தில் சேர்க்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றான். இது ஒன்றும் ஒரு சாதாரணமான செயல் அல்ல. ஒரு பூ மலர்வதைப் போல், ஒரு விதை முளைவிடுவதைப் போல், ஒரு குழந்தை பூமியில் ஜனிப்பதைப்போல் அற்புதமான ஓர் இணைவு இது.
இவ்வகையில் யாராயிருந்தாலும் ஒருவனுக்குக் குரு மிக மிக அவசியமாகின்றார். பிற மதத்தினரை விட ஓர் இந்துவிற்குத்தான் இந்தத் தேடல் எளிதில் வாய்க்கின்றது. குரு கிடைப்பதும் அவனது வாழ்க்கைப் போக்கில் தான் சுலபமாக அமைகின்றது. ஏனெனில் அவனது வாழ்க்கையே அந்தப் போக்கில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment