Monday, August 24, 2015

ஒரு குறைந்த பட்ச சீற்றமும், எதிர்ப்பும் இல்லாமல் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது.

அந்த புத்த மடத்தில் இருந்த அழகான பெண், அன்பை வளர்த்துக் கொள்ளும் ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள். இதற்காக தியானம் உள்ளிட்ட வகுப்புகள் நடந்தன. மடத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கும் பொறுப்பும் அவளிடம் கொடுக்கப்பட்டிருந்தது. தினமும் காய்கறி வாங்க சந்தைக்குச் செல்வாள். பல சமயங்களில் அவளுடைய குருவும் அவளைப் பின் தொடர்ந்து செல்வார். இவள் யாரிடமாவது எரிந்து விழுகிறாளா! சுடுசொல் பேசுகிறாளா! என்று கூர்ந்து கவனித்து, பின் அறிவுரை வழங்குவார்.
இப்போது அந்தப் பெண்ணிற்கு ஒரு புதிய சோதனை வந்தது. காய்கறிக் கடையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளைஞன், இவள் அழகால் கவரப்பட்டு வாலாட்டத் தொடங்கினான்.
""நான் ஒரு துறவி; உன் மனதில் தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதே'' என்று பல முறை அவள் எச்சரித்தும் அவன் திருந்தவில்லை. கடையில் ஆள் இல்லை என்றால், அவளிடம் அதிகமாக வழிவான். தேவையில்லாமல் அவளைத் தொட்டுப் பேசுவான். அவளுக்கு கோபம் வரும்.
என்றாலும் இவன் மேலும் அன்பு காட்ட வேண்டும் என்ற தன் ஆன்மிகப் பயிற்சியை மனதில் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்து விடுவாள். அது மழைக்காலம். விடிந்து சிறிது நேரம்தான் ஆகியிருந்தது. அந்தப் பெண் கையில் குடையுடன் காய்கறி வாங்கப் 
புறப்பட்டாள். மழையால் சந்தையில் அதிக கூட்டம் இல்லை. இளைஞன் அவளிடம் காதல் மொழி பேசினான். அவள்கையைப் பற்றினான். "ஒரே ஒரு முத்தம் கொடுப்பாயா!' என்று அசடு வழிந்தான்.
அவளால் அதற்கு மேல் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அன்பாவது.. அவரைக்காயாவது.. என்று தன் கையில் இருந்த குடையால், அவனைத் தாக்க முற்பட்டாள். 
சாந்தஸ்வரூபியாக இருக்கும் இவள், இப்படி பத்திரகாளியாக மாறிவிட்டாளே என்று பயந்து போன இளைஞன் கடையிலிருந்து ஓட ஆரம்பித்தான். அவனைத் துரத்திக்கொண்டு அவளும் ஓடினாள்.
வழியில், தன் குரு இருப்பதைப் பார்த்து, அவள் திகைத்து நின்றுவிட்டாள். அவள் நின்றதைப் பார்த்த இளைஞனும் நின்றுவிட்டான்.
பல வருடங்களாகக் காத்து வரும் தனது அன்பு நெறியிலிருந்து விலகிச் சென்றதற்காக, தன் குருநாதர் தன்னைத் திட்டப் போகிறார் என்று நினைத்த அந்தப் பெண் தலை குனிந்து நின்றாள்.
சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை.
""குருதேவா நானும் எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டேன். என்னால் முடியவில்லை. இப்போது நான் என்ன செய்யவேண்டும்! 
சொல்லுங்கள்.''
குரு அமைதியாகச் சொன்னார்.
""உன் மனதை அன்பால் நிரப்பிக்கொள். பின், உன் பலத்தை எல்லாம் திரட்டி இந்தக் குடையால் அந்தக் கயவனின் மண்டையில் அடி.''
இது புரியாமல் திகைத்து நின்றவளிடம், விளக்கம் கொடுத்தார் குருதேவர்.
""அன்பின் பெயரால் எல்லா அநியாயங்களையும் நாம் எதிர்ப்புக் காட்டாமல் பொறுத்துக் கொள்ளக் கூடாது. பெண்ணே! உன் உடலும் உள்ளமும் இறைவன் கொடுத்தது. இறைவனின் சொத்து. அதனை ஒருவன் அசிங்கப்படுத்த நினைத்தால் தக்க தற்காப்பு நடவடிக்கை எடுக்கும் உரிமை உன்னிடம் இருக்கிறது. அது உரிமை மட்டும் இல்லை. கடமையும் கூட. மேலும் தாமதப்படுத்தாமல் அவனை அடித்துவிட்டு வா. பிறகு நம் பாடத்தைத் தொடரலாம்.''
அந்த இளைஞனை விளாசு விளாசு என்று விளாசி விட்டு வந்தாள் அந்தப் பெண்.
""இனிமேல் அவன் உன்னிடம் மட்டும் இல்லை, எந்தப் பெண்ணிடமும் வாலாட்ட மாட்டான். அவனை மேலும் தவறு செய்யவிடாமல் தடுத்துவிட்டாய். அவன்மேல் உண்மையான அன்பு காட்டிவிட்டாய். அவனுடைய தாய் செய்ய வேண்டிய வேலையை நீ செய்திருக்கிறாய். பாராட்டுக்கள்.''
அன்பாக இருப்பது என்றால், அடுத்தவர் செய்யும் அநியாயங்களைப் பொறுத்துக் கொள்வது என்று தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். யாரையும் எதற்காகவும் எதிர்க்கக் கூடாது என்பதை சிலர் வாழ்க்கைக் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். அது அன்பும் அல்ல. ஆன்மிகமும் அல்ல. அக்மார்க் கோழைத்தனம். 
கத்தியைக் காட்டி நகையைக் கொடு என்று கேட்டால் கொடுத்துவிடத்தான் வேண்டும். 
நகை போனால் வாங்கிக்கொள்ளலாம். அவன் கத்தியால் குத்திவிட்டால் - உயிர் போனாலும் பரவாயில்லை. ஏதாவது இசகுபிசகாகக் காயப்பட்டு மாதக்கணக்கில் மருத்துவமனையில் இருக்க நேர்ந்தால்... அது இன்னும் மோசம். 
அதற்காகப் பேருந்திலும், அலுவலகங்களிலும் வரம்பு மீறுபவர்களைப் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. பொங்கி எழ வேண்டும். மனதில் இருக்கும் அன்பு குறையாமல் அவர்களைச் சரியான முறையில் தண்டிக்க வேண்டும். 
இந்தத் தத்துவத்தை விளக்க ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு அழகான கதை சொல்வார்.
ஒரு ஊரில் வசித்த பாம்பு தீண்டியதில் பலர் உயிரிழந்தார்கள். ஊர் மக்கள், அதைக் கொல்ல எண்ணம் கொண்டு, ஒரு துறவியிடம் போய் கேட்டார்கள்.
""பாம்பைக் கொல்ல வேண்டாம். நான் நல்ல வார்த்தை சொல்லித் திருத்துகிறேன்.'' என்ற துறவி பாம்பைத் தேடி வந்தார்.
முதலில் அவரையே கொத்த பாம்பு சீறிக் கொண்டு வந்தது.. துறவிக்கு வசியக் கலை தெரியும். பாம்பின் மொழியும் தெரியும். 
அதைக் கேட்டதும், அவர் காலைச் சுற்றி வந்து வணங்கியது பாம்பு. 
""இனிமேல் விஷமும் வேண்டாம். வன்முறையும் வேண்டாம்.'' என்று அறிவுரை சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார் துறவி.,
பாம்பு மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. முதலில் சில சிறுவர்கள் அந்தப் பாம்பைப் பார்த்தார்கள். அதன்மேல் கல்லை விட்டு எறிந்தார்கள். துறவிக்காக அந்த அடியை வாங்கிக் கொண்டு தன் போக்கில் சென்றது பாம்பு. பாம்பு நம்மை இனிமேல் ஒன்றும் செய்யாது என்ற நினைப்பில் ஆளாளுக்கு அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பாம்பு வலியால் துடித்தது. துறவியை நினைத்துக் கண்ணீர் சிந்தியது.
துறவி அந்தப் பாம்பைப் பார்க்க வந்தார். அதன் நிலைமையைக் கண்டறிந்தார்.
""முட்டாள் பாம்பே! உன்னைக் கடிக்க வேண்டாம் என்றுதான் சொன்னேன். சீற வேண்டாமென்று சொல்லவில்லையே! உன்னை யாராவது துன்புறுத்தினால் சீறு. அவர்களைக் கொத்த வருவது போல் நடி. அப்போதுதான் அவர்கள் உன்னை நிம்மதியாக இருக்க விடுவார்கள். இறைவன் உனக்குக் கொடுத்த தற்காப்புக் கவசம் உன் சீற்றம். நீ கொத்தி விடுவாயோ என்ற பயம் இருக்கும்வரைதான் உன்னை நிம்மதியாக இருக்க விடுவார்கள்.''
பாம்பிற்கு யதார்த்தம் புரிந்தது. அதன்பின் அதனை யாராவது சீண்டினால் அது சீறத் தொடங்கியது. சீண்டியவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். பாம்பு நிம்மதியாக வாழத் தொடங்கியது.
ஒரு குறைந்த பட்ச சீற்றமும், எதிர்ப்பும் இல்லாமல் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. 
""உன் மனதை அன்பால் நிரப்பிக்கொள். பின் உன் பலத்தை எல்லாம் திரட்டி இந்தக் குடையால் அந்தக் கயவனின் மண்டையில் அடி,''என்ற துறவியின் வார்த்தைகள், மகிழ்ச்சி தரும் சிறந்த வாழ்வியல் தத்துவம்.

No comments:

Post a Comment