பாம்பை பார்த்தாலே பயம் வருகிறது. அவை நம்மை கடித்துவிட்டால், நம் உயிர் கூட போய்விடும். ஆனால் நம் யோக மரபில் பாம்பை, குண்டலினிக்கு அறிகுறியாக வைத்துள்ளனர். இதே போல் உலகின் பல புராதன கலாச்சாரங்களிலும் பாம்பிற்கு முக்கிய இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறது. இது ஏன்? பல விலங்கினங்கள் இருக்க, பாம்பிற்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம்? சத்குரு: மத, கலாச்சார வேறுபாடின்றி ஆன்மீக அனுபவங்கள், ஆன்மீக செயல்முறைகள் எங்கு அதிகமாய் இருந்தாலும், அங்கு பாம்புகளின் ஆதிக்கமும் அதிகமாக இருக்கும். அது பாம்புகள் புழங்கும் இடமில்லை எனில், குறைந்தபட்சமாக, அவற்றின் ஆதிக்கம் குறியீட்டிலேனும் இருக்கும். ஆன்மீகம், மறைஞானம் செழித்து ஓங்கிய புராதன கலாச்சாரங்களான மெசபடோமியா, க்ரீஸ், எகிப்து, கம்போடியா, வியட்நாம் ஏன் நம் இந்தியாவிலும் கூட பாம்புகளுக்கு முக்கியத்துவம் அதிகம். மறைஞானமும் பாம்புகளும் பிரிக்க முடியாதவை. குண்டலினி எனும் பாம்பு இதன் ஒரு அம்சம் தான் குறியீடு. யோகத்தில் குண்டலினியை சுருண்டு படுத்திருக்கும் பாம்பாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த மரியாதை பாம்புகளுக்கு கிடைக்கக் காரணம், மனிதனிற்கு இயற்கையாய் இருப்பதை விட, அதிக விழிப்புணர்வும், திறனும் கொண்ட தெய்வீகத் தன்மை நிறைந்த உயிர்கள், இவ்வுலகில் ஓரு உயிரினமாய் தோன்ற நினைத்தால், அவர்கள் எப்போதுமே பாம்பாகத்தான் தோன்றியிருக்கிறார்கள். ஒலியை கேட்பதற்கு, பாம்பிற்குத் தனியாக காது கிடையாது, ஆனால் அது தன் முழு உடலையுமே காதாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பூமியின் எப்பகுதியில் வழங்கப்பட்ட புராணக்கதையாக இருந்தாலும், அதில் இந்த அனுபவம் தோய்ந்திருப்பதை காணலாம். உலகின் பெண் தெய்வங்களாக வழங்கப்படும் எந்த கலாச்சாரத்துக் கடவுளாக இருந்தாலும், மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு ஆப்பிரிக்கா, மெசபடோமியா, ஆசிய கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஐரோப்பா என எல்லா இடத்திலும் பெண் தெய்வங்கள், எப்போதுமே பாம்புகளுடன் சேர்த்துதான் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம், மனிதர்களிடம் கூட காணப்படாத அளவிற்கு உள்வாங்கும் நுண்ணுணர்வு பாம்புகளுக்கு உண்டு. ஒருவர் தியானநிலையை ஆழமாக உணரும்போது, அவரிடம் முதல்முதல் ஈர்க்கப்படும் உயிரினம், பாம்பு தான். இதனால்தான் புற்றுகள் சூழும் அளவிற்கு தியானநிலையில் ஆழ்ந்திட்ட ஞானிகள், யோகிகளை வரையும்போது, அப்படத்தில் எப்போதும் பாம்புகளும் இடம்பெறும். மனிதர்கள் உணரத் தவிக்கும் ஒருசில குறிப்பிட்ட பரிமாணங்களை தன் இயல்பிலேயே உணரும் நுண்ணுணர்வு மிக்க இந்த உயிரினத்திற்கு நாம் செலுத்தம் மரியாதை இது. ஒலியை கேட்பதற்கு, பாம்பிற்குத் தனியாக காது கிடையாது, ஆனால் அது தன் முழு உடலையுமே காதாகப் பயன்படுத்திக் கொள்கிறது. அதன் முழு உடலும் எப்போதும் தரையைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. அத்தோடு இப்பூமியில் நிகழும் சிற்சிறு அசைவையும் கூட உணர்ந்திடும் அளவிற்கு அதன் உள்வாங்கும் திறன் நுணுக்கமாகவும் கூர்மையாகவும் இருக்கிறது. இதனால் இப்புவியில் நிகழும் மிகச் சிறிய மாற்றங்களையும் அது அறிந்திடும். நாகலோக இரகசியம் இந்தியப் புராணங்கள், ஏன் உலகின் புராணங்கள் எதுவாகிலும் அதில் பாதாள உலகத்தை நாகலோகம் என்றும், அங்கு பாம்புகள் மட்டுமல்லாமல், ‘நாகா’ என்று வழங்கப்படும் மனிதர்களும் வசிப்பதாகக் குறிப்பிடுவார்கள். இந்த நாகர்கள், பாம்பு இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்நாட்டில் மட்டுமன்றி, உலகின் எல்லா கலாச்சாரத்திலும் மனித விழிப்புணர்வை மேம்படுத்துவதில் இவர்கள் முக்கிய பங்கு வகித்திருக்கின்றனர். இன்றும் கூட கம்போடிய நாட்டில் மிகப் பிரசித்தமாக இருக்கும் அங்கோர், அங்கோர் தோம், அங்கோர் வாட் (Angkor wat) ஆகிய கோவில்கள், ‘நாகா’ வம்சத்தவர் கட்டியது தான். இந்த நாகர்கள் இந்தியாவிலிருந்து அங்கு சென்று அந்நாட்டவரை மணந்து, அவர்களுடன் வாழ்ந்து, ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள். சிவனுடன் ஏன் பாம்பு? பாம்புகளுக்கு இந்த நுண்ணர்வு இயற்கையிலேயே இருப்பதால், என்றுமே ஆன்மீகத்தையும், பாம்பையும் பிரிக்க முடியாது. இதே காரணத்தால்தான், நுண்ணுணர்வின் உச்சத்தை, ஆழமான புரிதலை குறிக்கும் சிவனின் நெற்றிக் கண்ணிற்கு மேலே பாம்பை பிரதானமாக சித்தரித்துள்ளார்கள். ‘பாம்பு’ என்றால், அது தரையில் ஊர்ந்து கொண்டிருக்க வேண்டிய ஒன்று. ஆனால் அதற்கு சிவன் கொடுத்த இடமோ, தன் தலை மீது. அதாவது தன்னை விடவும் பாம்பு ஒரு சில வழிகளில் உயர்ந்தது என்று அவர் குறிக்கிறார்.
:
:
No comments:
Post a Comment