ருத்ராக்ஷத்தை அணியலாமா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க, அதை கையிலும் காலிலும் அணிவது தற்போதைய ஃபேஷன் ஆகி வருகிறது. இப்படி சரியான இடத்தில் ருத்ராக்ஷத்தை அணியாவிட்டால் என்னாகும்? சத்குருவின் பதில் இங்கே… கேள்வி நான் என்னுடைய கணுக்காலில் ருத்ராக்ஷம் அணிந்திருக்கிறேன், என் முழு உடலுமே புனிதமானது என நான் நினைக்கிறேன். நான் செய்தது சரிதானே? சத்குரு: ஓ, உங்கள் உடல் முழுவதுமே புனிதம்தானா? மிகவும் சந்தோஷம். ஆனால் நாளையிலிருந்து ஏன் நீங்கள் காது வழியாகவோ, மூக்கு வழியாகவோ அல்லது கண் வழியாகவோ சாப்பிட முயற்சிக்கக் கூடாது? முயற்சி செய்து பாருங்களேன். இந்த உடலானது ஒரு குறிப்பிட்ட வழியில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த உடல் புனிதமும் அல்ல, அசிங்கமும் அல்ல. ஒரு அற்புதமான இயந்திரம், அவ்வளவுதான். எப்படி இயக்கினால் அது அற்புதமாக இயங்குமோ, எப்படி இயக்கினால் அது முழுபலனைக் கொடுக்குமோ, அப்படிதான் அதை இயக்க வேண்டும். எனவே ருத்ராக்ஷத்தை தவறான இடத்தில் அணிந்தால், அது உங்களை தவறான வழியில் இட்டுச் செல்லலாம். அது உங்கள் கட்டமைப்பையே தவறாக மாற்றியமைத்து விடலாம். எனவேதான் எந்த மாதிரி மனிதர் எந்த மாதிரி இடங்களில் ருத்ராக்ஷத்தை அணியலாம் என்பதற்கு முழு விஞ்ஞானத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ருத்ராக்ஷம் அணிய சிறந்த இடம் கழுத்துதான். கேள்வி சிலவகை கற்களை அணிந்து கொண்டால் ஆன்மீகத்தில் சீக்கிரம் முன்னேறலாம் என்கிறார்களே, அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சத்குரு: ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அதிர்வு உண்டு. அதுபோல பல வகையான கற்களுக்கும் பல வகையான அதிர்வுகள் உண்டு. இப்படி ஒவ்வொன்றையும் ஆன்மீகத்திற்காக பயன்படுத்த நினைத்தால் கடைசியில் கை, கால், கழுத்து என்று எல்லா இடத்திலும் எதையெதையோ சுமந்து கொண்டிருப்பீர்கள். ஒருமுறை ஒரு பிரபல மனிதரைச் சந்தித்தேன். இந்திய அளவில் அவர் மிகவும் பிரபலமானவர். ஆன்மீகத்தில் இருக்கும் தன்னுடைய ஆர்வத்தை அவர் என்னிடம் வெளிப்படுத்த நினைத்தார். ஆனால் அவரைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம்தான் அதிகமானது. ஏனென்றால் அவர் வெளியே ஒரு கோட், உள்ளே ஒரு கோட், அதற்குள்ளே ஒரு கோட் என்று இறுக்கத்தில் இருந்தார். அவர் தன் துணிகளை எல்லாம் தாண்டி கைவிட்டு எதை எதையோ வெளியில் எடுத்தார். அவை எல்லாமே பல வகையான ருத்ராக்ஷ மாலைகள், ஸ்படிக மாலைகள், கல் பதித்த நகைகள். அவரைப் பொறுத்தவரை அதுதான் ஆன்மீகம். நான் ஒரு மாலை கூட அணியாதது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. “நீங்கள் ஒரு சிவ பக்தரா?” என்பதைப் போல என்னிடம் பேசினார். நான் சொல்ல வருவதெல்லாம், இந்தக் கற்களை உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்க விடாதீர்கள். ஏதோ சிறிது உதவியாக அதைப் பயன்படுத்தலாம். மற்றபடி அவை பற்றியே நினைத்து, அவற்றைத் தேடி சேகரித்துக் கொண்டேயிருப்பது ஆன்மீகம் ஆகாது.
No comments:
Post a Comment