ஒவ்வொரு நாளும் நாளைமுதல் வாக்கிங் போகலாம் என நினைத்துக்கொண்டு தூங்குபவர்கள் யாரும் வாக்கிங் செல்வதே இல்லை! அப்படியொருவர் சத்குருவிடம் தனது நிலைகுறித்து கூறி, அதற்கான தீர்வையும் கேட்கிறார். அதற்கு சத்குருவின் பதில் இங்கே! சத்குரு: பேய்களுக்கான “நாளைக்கு வா!” கர்நாடகத்தில் கிராமங்களில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. சூரியன் அஸ்தமித்த பிறகு, அந்தப் பகுதியில் இருக்கும் பேய்களும், பிசாசுகளும் வீடுகளுக்குள் நுழையப் பார்க்குமாம். நாளைக்கு என்று நினைப்பவர்கள் சொர்க்கத்துக்கு ஆசைப்படக்கூடாது… நரகம்தான் அவர்களுக்கு ஏற்ற இடம். இந்தப் பேய்களை விரட்டியடிக்கப் பார்த்தால், அவற்றுக்குக் கோபம் வந்து, படுமோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று அந்த மக்களுக்குப் பயம். அதனால், அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்வார்கள். பேய்களுக்கு ரத்தச் சிவப்பு நிறம் பிடிக்கும் என்பதால், அந்தச் சிவப்பு வண்ணத்தில் ஒவ்வொரு வீட்டுக் கதவிலும் ‘நாளைக்கு வா’ என்று எழுதி வைத்துவிடுவார்கள். கேட்டால், ‘பேய்கள், பிசாசுகள் எப்போது வந்தாலும், வாசலிலேயே இந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டுத் திரும்பி விடும்’ என்பார்கள். உங்களுக்குள் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் புகுந்து கொள்ளப் பார்க்கும் கோபம், வெறுப்பு, பொறாமை, சோம்பல் போன்ற பிசாசுகளுக்கு ‘நாளைக்கு வா’ என்று சொல்லி வைத்தீர்கள் என்றால், அர்த்தமிருக்கிறது. ஆனால், உங்கள் வாழ்க்கைக்கு முக்கியம் என்று நீங்கள் நினைப்பதற்கெல்லாம் இந்தத் தப்பான மந்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டீர்களே? இன்று என்றாலே, இப்போது என்றாலோ அதை உடனே சந்திக்க வேண்டிய அவசியம் வருகிறது. எந்த தினத்திலும், ‘நாளை’ என்பது வராத நாளாகத்தானே இருக்கிறது’ வெற்றியையும், ஆனந்தத்தையும் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானதையும் ‘நாளைக்கு வா’ என்று சொன்னால், ‘ஆளை விடப்பா!’ என அவை சந்தோஷமாக ஒதுங்கிப் போய்விடும். எச்சரிக்கையாக இருங்கள். இந்தியரின் தேசப்பற்று… மரணத்துக்குப் பின், ஓர் இந்தியரும், ஜப்பானியரும் நரகத்தின் வாசலில் போய் நின்றார்கள். காலை நான்கு மணிக்கே விழிப்பு வருமளவு குறைவாகச் சாப்பிட்டுப் பாருங்கள்… தானாக விழிப்பு வரும். சாத்தான் சொன்னது.. “இங்கே இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்றில் இந்தியர்களும், இன்னொன்றில் ஜப்பானியர்களும் இருக்கின்றனர். உங்களுக்கு விருப்பமான பகுதிக்குப் போகலாம்!” “இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டார், ஜப்பானியர். “இந்தியப் பகுதியில் தினமும் இரண்டு முறை எண்ணெய்க் கொப்பரையில் போட்டுக் பொரிப்பார்கள்..!” “ஜப்பானியப் பகுதியில்…?” “அங்கே தினம் ஒரு முறைதான் கொதிக்கும் எண்ணெயில் பொரிப்பார்கள்!” இந்தியர் அவசரமாக “நான் இந்தியப் பகுதிக்குப் போகிறேன்” என்றார். ஜப்பானியருக்கு ஆச்சர்யம். “தேசப் பற்று காரணமாக அதிக தண்டனையை ஏற்கத் தயாராகி விட்டீர்களா?” என்றார். இந்தியர் சிரித்தார்… “விஷயம் புரியாமல் பேசுகிறீர்கள். உங்கள் பகுதியில் தண்டனை நிச்சயம். எங்கள் பகுதியிலோ, நாளைக்கு அடுப்பை மூட்டலாம், அதற்கடுத்த நாள் எண்ணெய் ஊற்றலாம் என்று பேசிக் கொண்டே பொழுதைப் போக்கிவிடுவோம்!” இந்தியர்களைக் குறைத்து மதிப்பிடுவதற்காக இதைச் சொல்லவில்லை. நாளைக்கு என்று நினைப்பவர்கள் சொர்க்கத்துக்கு ஆசைப்படக்கூடாது… நரகம்தான் அவர்களுக்கு ஏற்ற இடம் என்பதற்காகத்தான் சொன்னேன். “நளைக்கு…” – சோம்பேறிகளின் தாரக மந்திரம் ‘நாளையிலிருந்து…’ என்பது மனதுக்குள் பேயாடுகிற மிக ஆழமான ஒரு தந்திரம். உங்கள் வாழ்க்கையில் பல கட்டங்களில் இந்த மாய தந்திரத்துக்கு நீங்களே இடம் கொடுத்துவிட்டீர்கள். நீங்கள் விரும்பியதைச் செய்யாமல் சோம்பி உட்கார்ந்து இருந்தால், ‘அதென்ன சோம்பலாய் உட்கார்ந்திருக்கிறாய்? எழுந்திரு!’ என்று உங்கள் மனமே குற்ற உணர்ச்சியில் உங்களை அதட்டும். ‘பொறுப்பில்லாமல் இருக்கிறேன்’ என்று ஒப்புக் கொள்ள உங்கள் அகங்காரம் ஒருபோதும் இடம் கொடுக்காது. ‘நான் ஒன்றும் சோம்பேறி இல்லை. நாளைக்கு ஆரம்பிப்பதாக இருக்கிறேன்’ என்று அகங்காரம் மனதை சமாதானம் செய்து ஏமாற்றிவிடும். செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பவர்களுக்கு, நாளைக்கு என்பதுதான் எப்போதுமே நல்ல நாள். நாளைக்கு என்று சொல்லிவிட்டால், பொறுப்பு முடிந்துவிட்டது. அப்படி இப்படி ஆரம்பித்து, வேலைகளை ஒத்திப் போடுவதுதான் தீர்வு என்று நாடாளுமன்றம் வரை பழக்கமாகிவிட்டதுதான் வேதனை. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்… நாளை என்பதை நாம் சந்திக்கப் போவதே இல்லை. நாளை என்பது நம் வாழ்வில் உணர்வுபூர்வமாக வரப் போவதே இல்லை. அது ‘இன்று’ என்றாகும்போதுதான் நம்மால் அதை எதிர்கொள்ள முடியும். பிரேக்கா? ஹாரனா? சங்கரன்பிள்ளை கார் மெக்கானிக்கிடம் சென்றார். “என் காரில் ஹாரன் இன்னும் உரத்து ஒலிக்கும்படி மாற்றித் தர முடியுமா?” என்று கேட்டார். அதைச் சோதித்துப் பார்த்த மெக்கானிக், “ஹாரன் ஒழுங்காக இருக்கிறதே?” என்றார் புரியாமல். “அதில்லை… பிரேக் பிடிக்கவில்லை. அதை ரிப்பேர் செய்வதைவிட, ஹாரன் ஒலியைக் கூட்ட குறைவான கட்டணம்தானே ஆகும்? அதனால் கேட்டேன்” என்றார், சங்கரன்பிள்ளை. ‘நாளைக்கு’ என்பது, பிரேக்கை சரி செய்வதைவிட்டு, ஹாரனை ஒலித்து ஆட்களை நகரச் சொல்வது போல! விபத்தை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க நேரலாம். இந்த நிலையை எப்படி மாற்றுவது? வீட்டு வேலையானாலும் சரி, ஒரு தொழில் நடத்துவதானாலும் சரி, நம் ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சியானாலும் சரி.. அதற்குச் சாதகமான சூழ்நிலையை முதலில் உருவாக்க வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல் வயிறு அடைக்கத் தோசை சாப்பிட்டீர்கள். காலையில் ஆறு, ஏழு மணிக்கு யோகா செய்ய வேண்டும். வாக் போக வேண்டும் என்றால், உங்கள் உடம்பு எப்படி ஒத்துழைக்கும்? காலை நான்கு மணிக்கே விழிப்பு வருமளவு குறைவாகச் சாப்பிட்டுப் பாருங்கள்… தானாக விழிப்பு வரும். யோகா பண்ணலாம், வாக் போகலாம் என்று உடல் சொல்லும். சில நாட்கள் தொடர்ந்து செய்தால், பலன் தெரியும். அதன்பின் உங்களுக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையிருக்காது. மனதில் ஓர் உறுதி, வெளியில் சரியான சூழ்நிலை இரண்டையும் உருவாக்கினால், ஆசைப்பட்டதைத் தள்ளிப்போடாமல் செய்து முடிக்கும் பலம் நமக்குத் தானாக வந்துவிடும். 607 Shares Facebook Twitter Pinterest Mail Pocket
No comments:
Post a Comment