சத்குருவுடன் சேகர் கபூர் – பகுதி 16 “இறந்த பின் என்ன நடக்கிறது?” மிக சுவாரஸ்யமான இந்தக் கேள்வியை திரு. சேகர் கபூர் கேட்டபோது, பூத உடல் பற்றியும் அதற்கு அடிப்படையான சூட்சம் உடல் பற்றியும் இந்த வாரப் பகுதியில் பேசத் துவங்குகிறார் சத்குரு. சேகர்: நான் ஒரு முட்டாள்தனமான கேள்வி கேட்க அனுமதியுங்கள்… சத்குரு: கேளுங்கள், முட்டாள்தனமான கேள்விகள் எனக்கு பழக்கமானவைதான். இறப்பின்போது பூமிக்கு சொந்தமான இந்தப் பருவுடல் திரும்ப இந்த பூமியிடமே செல்கிறது. ஆனால் சூட்சும உடல் என்றும் ஒன்று அங்கிருக்கிறது. ஒரு சாரத்தின் மேல் கட்டிடம் எழுப்புவது போல நம் பருவுடலும், சாரம் போன்ற சூட்சும உடலின் மீதுதான் எழுப்பப்பட்டிருக்கிறது.சேகர்: இறந்தவுடன் அந்த உயிர்சக்திக்கு என்ன நடக்கிறது? அந்த சக்திக்கு நான் என்னும் அடையாளம் இருக்குமா? ஆத்மா உண்டா? மறுபிறப்பு உண்டா? உடலை போக விட்டாலும் அந்த ‘நான்’ என்பது மிஞ்சியிருந்து, பிறகு பிரபஞ்சத்துடன் கலந்து அடையாளமற்றுப் போகிறதா? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் மேற்கத்திய நாட்டு மக்களிடம் என்னால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. சத்குரு: முக்கியமாக மரணத்திற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள். ஒரு சிலவற்றை அனுபவத்தின் மூலமாகத்தான் நன்றாக அறிந்து கொள்ள முடியும். சேகர்: என்னை சிறிது கிண்டல் செய்யுங்கள், பரவாயில்லை. ஆனால் அதைப் பற்றியும் சிறிது பேசுவோம். சத்குரு: இப்போது, என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது நீங்களா அல்லது உங்களுடைய கண்களா? சேகர்: நான் உங்களை என்னுள் பார்க்கிறேன். சத்குரு: உங்களுடைய கண்களின் ஜன்னல் மூலமாக…. சேகர்: ஆம். சத்குரு: இந்த ஜன்னலை மூடினால் அப்போதும் நீங்கள் அங்கு இருப்பீர்களா? சேகர்: அப்போதும் இருப்பேன். சத்குரு: அதாவது கண்கள் மூலம் வெளிப்புறத்தை பார்க்கும் போதும் உங்கள் இருப்பை உணர்கிறீர்கள். கண்களை மூடிக்கொண்டாலும் உங்கள் இருப்பை உணர்கிறீர்கள். அதாவது கண்கள் ஜன்னலாகத்தான் இருக்கிறது. ஆனால் பார்ப்பது ‘நீங்கள்’தான். எனவே, “இந்த உடலைவிட ‘நான்’ மிகவும் உயர்ந்தவன்” என்று நீங்கள் தெளிவாகக் கூறுகிறீர்கள். சேகர்: ஆம். சத்குரு: இந்த உடல் நீங்கள் சிறிது சிறிதாக சேகரித்ததுதான். இந்த உடலை நீங்கள் பூமித்தாயிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் நேரம் வரும்போது ஒரு அணுவைக்கூட விடாமல் திரும்பப் பெறுவாள். ஆனால் மக்கள் அந்தக் கடனை எப்போதுமே திருப்பிக் கொடுக்க விரும்புவதில்லை. கடன் பெற்ற பெரும்பாலான மக்கள், அவர்களைக் கட்டாயப்படுத்த சட்டம் ஏதும் இல்லையென்றால், கடனை திருப்பிக் கொடுக்க விரும்புவதே இல்லை. இது பொதுவான சமூக இயல்பாக உலகில் உள்ளது. சேகர்: முற்றிலும் சரி. சத்குரு: எனவே, இந்த பூமிக்கிரகத்தில் இருந்து பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்கும் நேரம் வரும்போது மிகவும் நடு நடுங்கிப் போகிறார்கள். வாங்கிய கடனைத்தான் நீங்கள் திருப்பிக் கொடுக்கிறீர்கள். ஆனால் ஏன் இந்த போராட்டம் ஏற்படுகிறதென்றால், நீங்கள் ஒரு கடனை (உடல்) பெற்றீர்கள், சில நாட்களுக்குப் பின்னர், “அந்தக் கடன் (உடல்) தான் நான்” என்று நினைத்துக் கொண்டீர்கள். இது உண்மையாகவே முற்றிலும் ஒரு அபத்தமான சூழ்நிலை. (இருவரும் சிரிக்கிறார்கள்) சேகர்: ஆம்! சத்குரு: இப்போது, நான் என்னுடைய கையில் வைத்திருக்கும் கூழாங்கல்லை, “இது என்னுடைய கூழாங்கல். இதை நான் உங்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை,” என்று முதலில் சொல்கிறேன். சிறிது நேரத்திற்குப் பின், இதுவேதான் நான் என்று நினைக்கத் துவங்குகிறேன். நேரம் வரும்போது, எப்படியோ இந்த கூழாங்கல் என்னிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். அப்போது என்னையே எடுத்துக் கொள்வதாக எண்ணி நான் நடுங்கிப் போகிறேன். அது போலத்தான் இதுவும். நீங்கள் என்பது எடுத்துச் செல்லப்படவில்லை. எடுத்துச் செல்லப்படுவது நீங்கள் சேகரித்த உணவு மட்டுமே. இந்த உடலாக நீங்கள் சேகரித்த இந்த கிரகத்தின் ஒரு பகுதி மட்டுமே. அதை இந்த கிரகம் திரும்பக் கேட்கிறது. “இந்த உடல் நான் சேகரித்தது மட்டுமே” என்று, காரண அறிவில் மட்டுமில்லாமல், ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வோடு நீங்கள் இருந்தால், “இந்த உடலை நான் சேகரித்தேன், உபயோகிப்பேன், தேவைப்படும்போது விட்டு விடுவேன்”, என விழிப்புணர்வோடு வாழ்க்கை முழுவதும் இருந்தால், இறப்பு என்பது ஆடை மாற்றிக்கொள்வது போல்தான். நீங்கள் இறக்கும்போது எப்படியும் இந்த பூமிக்கு உங்கள் கடனைத் திருப்பி செலுத்தி விடுவீர்கள். ஆனால் இதை விருப்பத்துடன் செய்தீர்களா இல்லை விருப்பமின்றி செய்தீர்களா என்பதுதான் கேள்வி. கொடுத்த கடன் நிச்சயமாக திரும்ப எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் நீங்கள் ஒரு யோகியாக இருந்தால், இந்த உடல் திரும்பப் பெறப்படும்போது, ஆனந்தமாக கடனைத் திருப்பிக் கொடுப்பீர்கள். சேகர்: ஆம். சத்குரு: நீங்கள் அறியாமையில் இருப்பவராக இருந்தால், அவர்கள் உங்களுடைய உடைமைகளை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்து கொள்வார்கள். ஏனெனில், நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னும் சட்ட விரோதமாக இவற்றை வைத்துள்ளீர்கள் (சிரிக்கிறார்). எனவே, இறப்பின்போது பூமிக்கு சொந்தமான இந்தப் பருவுடல் திரும்ப இந்த பூமியிடமே செல்கிறது. ஆனால் சூட்சும உடல் என்றும் ஒன்று அங்கிருக்கிறது. ஒரு சாரத்தின் மேல் கட்டிடம் எழுப்புவது போல நம் பருவுடலும், சாரம் போன்ற சூட்சும உடலின் மீதுதான் எழுப்பப்பட்டிருக்கிறது. சூட்சும உடல் என்னும் சாரம் இருப்பதால்தான் உங்களால் இந்த பருவுடலை உருவாக்க முடிந்தது. நீங்கள் ஒரு வாழைப் பழத்தை சாப்பிட்டீர்கள், அது உடலாக மாறுகிறது; நீங்கள் ஒரு ரொட்டித் துண்டை சாப்பிட்டீர்கள், அது உடலாக மாறுகிறது. ஏனென்றால், சாரம் போன்று ஏற்கனவே ஒரு சூட்சும உடல் அங்கே இருந்ததால்தான் நீங்கள் பார்க்கும் இந்த பருவுடல், சூட்சும உடலைச் சுற்றி உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment