செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விடும் இக்காலத்தில், பில்லியாவது சூன்யமாவது என்று அசட்டை செய்பவர்கள் பலர். யோகாவையும் இப்படித்தான் புறக்கணித்தார்கள்… ஆனால் இன்று திரும்பும் பக்கமெல்லாம் யோகாவைப் பற்றித்தான் பேச்சு. ‘அப்படியென்றால் பில்லி சூன்யமும் உண்மைதானா… அய்யோ!!’ என்று பதறுபவர்களுக்கு… சத்குருவின் பதில் இங்கே… சத்குரு: பிரபஞ்ச சக்தியின் செயல்பாடு… பிரபஞ்ச சக்தி பலவிதமாக செயல்படுகிறது. எதை நாம் உயிரென்று சொல்கிறோமோ, அதுவும் ஒருவித சக்திதான். இங்கு மரமாக, பறவையாக, எறும்பாக, ஏன் மனிதனாக இருப்பதுவும் கூட, அதே சக்திதான். அந்த சக்தி மிக உயர்ந்த நிலையில் இருந்தால், அதைக் கடவுள் என்கிறோம். மிக கீழ் நிலையில் இருந்தால் அதைக் கல் என்கிறோம். கல்லாக இருப்பதும், கடவுளாக இருப்பதும் அதே சக்திதான். என்ன, ஒன்று ஸ்தூல நிலையில் இருக்கிறது. மற்றொன்று மிகவும் சூட்சும நிலையில் இருக்கிறது. படைத்தலுக்கு அடிப்படையான இந்த சக்தி பல விதங்களில் செயல்பட்டிருக்கிறது. தியானத்தன்மை நமக்குள் வந்துவிட்டால், நம் நோக்கம் என்னவோ அதன்படி நம்மால் செயல்பட முடியும். இந்த அடிப்படையான உயிர்சக்தியை உபயோகித்து, மனிதனின் நன்மைக்காகவும், உலகின் நன்மைக்காகவும் ஒரு சக்தி வடிவத்தை நாம் உருவாக்க முடியும். இந்த அடிப்படையில்தான் கோயில்களைக் கட்டும் விஞ்ஞானம் பிறந்தது. அதே போல், இதே சக்தியைப் பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் வடிவங்களையும்கூட உருவாக்க முடியும். அதற்கு பில்லி சூனியம், ஏவல் என்பார்கள். எப்போது ஒரு சக்தியை நல்லவிதமாக மாற்ற முடியுமோ, அதே சக்தியை தீங்கு விளைவிக்கும் விதமாகவும் மாற்ற முடியும். நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதம் முழுவதும் இதை தான் விவரிக்கிறது. சக்தியை நல்லவிதமாகவும், தீங்கு விளைவிக்கும் விதமாகவும் மாற்றும் விஞ்ஞானம் இதில் உள்ளது. என்றாலும், ஒருவருக்கு நிகழும் கெடுதல்களில் 90 சதவிகிதம், அவர்கள் பயத்தால் தான் நேர்கிறது. உங்கள் மனதில் பயத்தை உருவாக்கி விட்டால் இன்னொரு எதிரி உங்களுக்குத் தேவையில்லை. சமூகத்தில் நிறைய மனிதர்கள் பயத்தால் பீடிக்கப் பட்டுள்ளார்கள். இந்த பயம் உங்களுக்குள் இல்லையென்றால், அதையே மூலதனமாகக் கொண்டுள்ள பலரின் தொழில் செழிக்காது. பலவிதமான பயங்களை உங்களுக்குள் உருவாக்கி, அவர்கள் தம் வியாபாரத்தைச் செழிப்பாக நடத்திக் கொள்கிறார்கள். எவ்விதமான சூழ்நிலையை நீங்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டாலும், அங்கே எத்தகைய சக்தி சூழல் நிலவினாலும், உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் நோக்கம் எப்படியிருந்தாலும், தியானத்தன்மை உங்களுக்குள் ஊடுருவிவிட்டால், இவையெதுவும் உங்களை எவ்விதத்திலும் பாதிக்காது. தியானத்தன்மை நமக்குள் வந்துவிட்டால், நம் நோக்கம் என்னவோ அதன்படி நம்மால் செயல்பட முடியும். அவர் என்ன சொன்னார், இவர் என்ன செய்தார் என்பதெல்லாம் நமக்கு ஒரு பொருட்டாய், இடையூறாய் இருக்காது. பூர்ணாவின் கதை… கௌதம புத்தரின் சீடர்களில், ‘பூர்ணா’ என்பவரும் ஒருவர். அவர் ‘ஸ்ரோண’ பகுதியில் வாழும் மக்களுக்கு புத்தரின் போதனைகளையும், செயல்முறைகளையும் கற்றுக் கொடுக்கப் போவதாக புத்தரிடம் வேண்டினார். ஸ்ரோணப் பகுதியில் வாழ்ந்த மக்களோ, காட்டுவாசிகள் போல் கொடூரமாக நடந்துகொள்ளக் கூடியவர்கள். ஆன்மீக வழிமுறைகள் எதையும் போதிக்க முடியாத இடம் அது. எனவே, மனிதநேயமற்ற ஸ்ரோணப் பகுதிக்குச் செல்வதாக பூர்ணா சொன்னவுடன், புத்தர், “அங்குள்ள மக்கள் மிகக் கடுமையானவர்கள். தவறான வார்த்தைகள், பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தி உன் மனதை நோகடித்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டார். அதற்கு பூர்ணா, “அவர்கள் மிக அன்பானவர்கள் என்று நினைத்துக் கொள்வேன். அவர்கள் என்னை அடிக்கவோ, என் மீது கல் எறியவோ முனையவில்லையே” என்றார். புத்தர், “ஒருவேளை உன்னை அடித்துவிட்டாலோ, உன் மீது கல்லை எறிந்துவிட்டாலோ, என்ன செய்வாய்?” என்று கேட்டார். பூர்ணா, “அப்போதும் அவர்கள் மிக அன்பானவர்கள் என்றே நினைத்துக் கொள்வேன். அவர்கள் தான் தடியோ, வேறு ஆயுதமோ பயன்படுத்தவில்லையே” என்றார். “ஒருவேளை ஆயுதம் பயன்படுத்தி உன்னை துன்புறுத்தினால்…”, “அப்போதும் அவர்கள் அன்பானவர்களே, அவர்கள் என்னை கொன்றுவிடவில்லையே”. “ஒருவேளை உன்னை கொன்றே விட்டால்…”. “அப்போதும் அவர்கள் அன்பானவர்களே, இந்த நிலையில்லா உடலில் இருந்து, பிரச்சினையின்றி என்னை விடுவித்து விட்டார்களே. நிலையற்ற இவ்வுடலை பொறுக்க முடியாமல் எத்தனையோ வழிகளில் தற்கொலை செய்து கொள்ளும் துறவிகள் இங்கு இருக்கிறார்கள். அவர்களின் நிலை எனக்கு ஏற்படாமல் என்னை இவர்கள் விடுவித்து விட்டார்களே”. அப்போது புத்தர், “இது போன்ற மென்மையும், பொறுமையும் இருந்தால் நீ எப்பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று இதை பரப்பலாம். செல்! ஸ்ரோணப் பகுதிக்குச் சென்று, உன்னைப் போல் சுதந்திரமாக வாழ அவர்களுக்கும் கற்றுக் கொடு” என்றாராம். மனிதனுக்குள் தியானத்தன்மை வந்துவிட்டால் யாருடைய கெட்ட எண்ணமும், செயலும், கெட்ட சக்திசூழலும் அவனை ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்குள் தியானத்தன்மை வந்துவிட்டால், பில்லி, சூனியம், ஏவல் போன்றவையும் உங்களை பாதிக்க வாய்ப்பில்லை.
?
?
No comments:
Post a Comment