குழந்தைகளை அடித்து, அதட்டி, மிரட்டினால்தான் தங்கள் சொல் பேச்சு கேட்பார்கள் என்று பல பெற்றோர்களும், ஆசிரியர்களும் நினைக்கிறார்கள். ஆனால் சத்குருவின் பள்ளி வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமோ மிகவும் சுவாரஸ்யமானது. அவரைத் திகைக்க வைத்த ஒரு ஆசிரியையைப் பற்றி இங்கே மனம் திறக்கிறார் சத்குரு… சத்குரு: ஆசிரியர்களின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் காரணமாகக் குழந்தைகள் இறந்ததாக வெளிவந்த சில செய்திகள் என்னை மிகவும் வருத்தின. குழந்தையை அடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தவர்களுக்குக்கூட இல்லை. வகுப்பில் தவறு செய்ததற்காக, ஒன்பது வயதுக் குழந்தை ஒன்றைக் கால்களால் உதைத்து, வெயிலில் முட்டி போட வைத்து, அதன் முதுகில் சில செங்கல்களை சுமத்தித் தண்டனை கொடுத்தார் ஓர் ஆசிரியை என்று செய்தித்தாளில் படித்தேன். அந்தச் செய்தி உண்மையாக இருந்தால், அந்த ஆசிரியை கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பது என் கருத்து. முதலாவதாக, குழந்தையை அடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தவர்களுக்குக்கூட இல்லை. அடித்து வளர்க்காவிட்டால், குழந்தைகள் ஒழுங்காக வளராது என்ற கிறுக்குத்தனமான நம்பிக்கையின் அடிப்படையில் தண்டனைகள் தரப்படுகின்றன. ஒரு குழந்தையை அடிப்பதற்கு நீங்கள் என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், என் பார்வையில் அதன் உண்மையான காரணம், அந்தக் குழந்தையால் அதே வேகத்தில் உங்களைத் திருப்பி அடிக்க முடியாது என்பதுதான். உங்களைவிட வலுவாக இருப்பவர் அதே தவற்றைச் செய்தால், அவரை அதே விதமாக உங்களால் தண்டிக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். தன்னைவிட அதிகாரத்தில் தாழ்ந்திருக்கும் ஒருவரை அடிப்பது குறித்துச் சொல்லும்போது, இங்கிலாந்தின் மாமன்னன் பீட்டர் நினைவுக்கு வருகிறார். அவர் ஒருமுறை கோபத்தில் தன் தோட்டத்து வேலைக்காரரைக் கைநீட்டி அடித்துவிட்டார். அந்தத் தோட்டக்காரன் தன்மானம் மிக்கவர். மற்றவர் முன்னிலையில் அரசரிடம் அடிவாங்கியது அவர் மனதை மிகவும் பாதித்துவிட்டது. தினம் தினம் மனம் புழுங்கினார். சில நாட்களிலேயே மரணப்படுக்கையிலும் வீழ்ந்தார். இதைக் கேள்விப்பட்ட மன்னர் பீட்டர் கலங்கினார். ‘இந்த உலகில் எத்தனையோ அரசர்களை அடக்கி வெற்றி கொள்ளத் தெரிந்த எனக்கு, என்னையே அடக்கி ஆளத் தெரியவில்லையே!’ என்று கண்ணீர் விட்டு அழுதார். அதோடு நிற்கவில்லை. ‘அடிமைகளையும் வேலை செய்பவர்களையும் யாரும் அடிக்கக்கூடாது. அப்படி அடிப்பவர்கள் பைத்தியக்காரர்களாகக் கருதப்பட வேண்டும்’ என்று 1722-ல் ஒரு சட்டமே இயற்றினார். உங்களைவிடப் பலம் குறைந்தவரிடமோ உங்களை எதிர்க்க முடியாதவர்களிடமோ உங்கள் பலத்தைப் பிரயோகிப்பதைவிட அருவருப்பான செயல் வேறு எதுவும் இல்லை. குறும்பு மாணவர்களை அடிக்காமல் எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று அந்த ஆசிரியையிடம் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்! அதே சமயம், மாணவர்கள் தண்டனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் நான் சொல்லவில்லை. முக்கியமாக, அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடங்களை வீட்டில் சொல்லித்தரவோ, அவர்களை ஒழுங்காக வழிநடத்தவோ பெற்றோர் தவறும்போது, பள்ளி ஆசிரியரின் பொறுப்பு அதிகமாகிறது. இதனால் மாணவர்களிடம் பொறுமை காட்டுவது குறைந்துபோகிறது. பள்ளிக்கூடத்தில் அடி வாஙகிய அனுபவம் எனக்கும் உண்டு. ஏழாம் வகுப்பு வரை ஏதாவது ஒரு தண்டனை பெறாமல் நான் பள்ளியில் இருந்து திரும்பியதே இல்லை. யாரையும் தாக்கியோ, திட்டியோ நான் அடி வாங்கியது இல்லை. என் குறும்புகளுக்குக் கிடைத்த தண்டனைகளே அதிகம். என்னை ஆசிரியர்கள் அடித்த போதிலும் என் சேட்டைகள் குறைந்ததே இல்லை. நான் சந்தித்த வித்தியாசமான ஆசிரியை ஒருவரைப் பற்றி இங்கே சொல்ல வேண்டும். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். பள்ளிக்கு சரஸ்வதி என்று ஒரு புதிய ஆசிரியை வந்து சேர்ந்தார். மேல்படிப்பை முடித்துவிட்டு, முதன்முறையாக ஆசிரியையாகப் பணி ஏற்றிருந்தார். முதல் நாளே எங்கள் வகுப்பில் வந்தா அவர் மாட்ட வேண்டும்? கஞ்சி போட்ட மொடமொடவென்று மிக நேர்த்தியாக இருந்த ஒரு பருத்திப் புடவையை அணிந்திருந்தார். மாணவர்களுடன் நட்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஓர் இடத்தில் நிற்காமல் வகுப்பில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடியே பாடத்தை நடத்தினார். ஒரு கட்டத்தில், என் இருக்கைக்கு அருகே சற்று நேரம் நின்றபடி அவர் பாடம் நடத்த, என் இங்க் பேனாவைத் திறந்து, அவர் புடவையின் ஒரு மடிப்பில் அதன் நிப்பைப் பொருத்தினேன். பருத்திப் புடவை பிளாட்டிங் காகிதம்போல் இங்க்கை உறிஞ்ச ஆரம்பித்தது. சற்று நேரத்தில் என் பேனாவில் இருந்த இங்க் முழுதும் அவர் புடவைக்கு மாறி, பெரிய திட்டாகப் பரவிவிட்டது. இதைக் கவனித்த சில பையன்கள் ‘குக்கூ குக்கூ’ என்று கூவி கலாட்டா செய்ததை அவர் பொருட்படுத்தவில்லை. தன் புடவையில் இங்க் கறை படிந்ததை அறியாமலேயே அவர் வகுப்பு எடுத்து முடித்தார். மதியம் அந்த ஆசிரியை என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். புடவைக் கறையை யாராவது சுட்டிக்காட்டி இருப்பார்கள். அது என் வேலைதான் என்று என் சக மாணவர்களில் யாரோ ஒருவர் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும் என்று புரிந்தது. ஆசிரியர்களின் அறையில் அவர் எனக்காகக் காத்திருந்தார். முட்டிப் போடச் சொல்லப் போகிறாரா அல்லது ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்யப் போகிறாரா அல்லது பள்ளியில் இருந்தே என்னை விரட்டப் போகிறார்களா என்று புரியாமல் போனேன். என்னைச் சந்தித்ததும், ஆசிரியை என் பேனாவைத் தரச் சொன்னார். உடைத்துப் போடப் போகிறார் என்று நினைத்துக் கொடுத்தேன். மேஜை இழுப்பறையில் இருந்து ஒரு இங்க் புட்டியை எடுத்தார். என் பேனாவில் இங்க்கை நிரப்பி என்னிடம் நீட்டினார். புன்னகைத்தார். வேறு ஒன்றுமே சொல்லவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து, ‘நன்றி மேடம்’ என்றேன். அந்தக் கணமே அந்த ஆசிரியைக்கும் எனக்கும் ஆழமான நட்பு பூத்துவிட்டது. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு, அதே பள்ளிக்கு விருந்தினராகப் போயிருந்தேன். அந்த ஆசிரியை அப்போது அங்கே தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அவருடைய முதல் நாள் வகுப்பில் நடந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தியபோது, அவர் முகத்தில் சிரிப்பு பொங்கியது. குறும்பு மாணவர்களை அடிக்காமல் எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று அந்த ஆசிரியையிடம் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்!
No comments:
Post a Comment