கேள்வி ஒரு ஆறு வயது சிறுவன் தனது முற்பிறவியைப் பற்றி எப்படி நினைவு கூர முடியும்? ஒரு குழந்தை தனது முற்பிறப்பில் யாராக இருந்தான், அவனுடைய பெற்றோர்கள் யார், அவனைக் கொன்றது யார், எங்கு எப்போது கொன்றார்கள் என்பதையெல்லாம் சொல்ல முடிந்திருக்கிறது. ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு இது அனைத்தும் அவனுக்கு மறந்துவிட்டது. இது எப்படி சாத்தியமாகும்? சத்குரு: அவன் எப்படி நினைவு கூர்ந்தான்? அவனுக்கு இதெல்லாம் நினைவு இருக்கக்கூடாது. பழைய நினைவுகள் இருக்கக்கூடாது என்றுதான் இந்த வாழ்க்கையை இயற்கை உங்களுக்கு கொடுத்திருக்கிறது. இத்தகைய பாதுகாப்பு சுவரே உங்களுக்கு பழைய நினைவுகள் வரக்கூடாது என்று தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்படி நினைவு வருமானால், நீங்கள் இப்போது இருக்கும் நிலையைவிட அதிகமான குழப்பத்தில் சிக்கிக் கொள்வீர்கள். இவ்வுலகில் பத்து, இருபது, முப்பது, அறுபது ஆண்டுகள் வாழ்கிறீர்கள். இந்த வருடங்களில் ஏற்பட்ட நினைவுகளே உங்களுக்கு பெரிய போராட்டத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. உண்மைதானே? இந்த சில ஆண்டு கால நினைவுகளுக்கே இவ்வளவு போராட்டமாக இருக்கிறது என்றால், இன்னும் முற்பிறவி நினைவுகள் வருமானால், உங்களுக்குள் எத்தகைய குழப்பமும் போராட்டமும் நிகழும் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பிறவியில் உங்களுக்கு இருக்கும் உறவுகளுடனேயே உங்களுக்குப் பெரும் போராட்டமாக இருக்கிறது. நேற்று நடந்ததையும் மறக்க முடியவில்லை, நாளை என்ன நடக்கப்போகிறதோ என்பதையும் விட முடியவில்லை. இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த சில ஆண்டு கால நினைவுகளுக்கே இவ்வளவு போராட்டமாக இருக்கிறது என்றால், இன்னும் முற்பிறவி நினைவுகள் வருமானால், உங்களுக்குள் எத்தகைய குழப்பமும் போராட்டமும் நிகழும் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு முற்பிறவி ஞாபகங்கள் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். இன்று உங்களுடைய அன்பு மகனாக இருப்பவர் முற்பிறவியில் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் செல்ல நாய்குட்டியாக இருந்தார் என்று உங்களுக்குத் தெரிய வருகிறது. இது நிஜம் என்று சொல்லவில்லை, அப்படி வைத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறேன் (சிரிக்கிறார்). எப்படியும் இன்று மனிதரைவிட நாய்களுக்குத் தான் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. அப்படித்தானே? இது உங்களுக்கும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கும் எத்தகைய பூதாகாரமான பிரச்சனைகளை உருவாக்கும் என்று தெரியுமா? (சிரிக்கிறார்) அந்த நாயின் வாழ்க்கையிலும் கூட இது சிக்கலை ஏற்படுத்தும். இதனால் யாருக்கும் எவ்வித நல்லதும் நடக்க வாய்ப்பில்லைதானே? அவர் இதற்கு முன்னர் உங்கள் மனைவியாக இருந்திருந்தாலும், தந்தையாக இருந்திருந்தாலும், உயிர் நண்பராகவே இருந்திருந்தாலும் கூட இப்போது அது உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்திருக்காது என்றால் இதெல்லாம் உங்களுக்குத் தெரிவது ஒன்றும் தவறல்ல. ஆனால், உங்களுடையது என்று நினைக்கக்கூடிய ஒவ்வொன்றுக்கும் நீங்கள் உணர்ச்சி வயப்படுபவர் என்றால், இது நிச்சயம் பிரச்சனை தான். பொதுவாகவே மக்கள் ‘என்னுடையது’ என்று எதைப்பற்றி நினைக்கிறார்களோ அதனுடன் தான் உணர்ச்சி அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இப்போது நீங்கள் உங்கள் அப்பாவையோ, அம்மாவையோ அல்லது உடன் பிறந்த இரட்டைச் சகோதரனையோ, சகோதரியையோ பிறப்பில் இருந்தே பார்த்ததில்லை என்று வைத்துக் கொள்வோம். இன்று நான் ஒருவரைக் காட்டி, இதோ பாருங்கள், இவர்தான் உங்கள் அம்மா என்று சொல்கிறேன். நீங்கள் அவரை இன்று வரை பார்த்ததில்லை. அவருடன் இன்று வரை உங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இருந்ததில்லை. அப்படியிருந்தாலும் கூட, இவர்தான் உங்கள் அம்மா என்று ஒருவர் சொல்லிவிட்டால் போதும், அவரைப் பார்த்தவுடன் உங்களுக்கு அப்படியே உணர்ச்சிகள் வெடித்துக் கிளம்பும். அது எங்கிருந்து வருகிறது? அவருடன் நீங்கள் இதுவரை பழகவில்லை. அவருடன் வாழ்ந்ததில்லை. ஆனால் யாரோ ஒருவர், “இவர்தான் உங்கள் அம்மா” என்று சொன்னவுடன் நீங்கள் உணர்ச்சிவயப்பட்டுப் போகிறீர்கள். அதாவது அவர் உங்களுக்குச் சொந்தம் என்று சொல்லிவிட்டார். அப்படித்தானே? “என்னுடையது” என்று நீங்கள் எப்போது நினைக்கிறீர்களோ, அப்போது அவற்றின் மீது உங்களுக்கு உணர்ச்சிகள் வெடித்துக்கொண்டு வெளிவருகின்றன. உங்களுக்கு ‘உங்களுடையதாக’ இருந்தால் மட்டும் தான் உணர்வுகளும் ஒட்டுதலும் இருக்க முடியும் என்ற பிரச்சினை இருக்கிறது என்றால், உங்கள் ஆசையை இன்னும் சற்று அதிகமாக்கி, எல்லாவற்றையுமே உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். பேராசை என்று ஆன பிறகு, அதில் கஞ்சத்தனம் எதற்கு? பேராசையை அதன் உச்சத்திற்கே எடுத்துச் சென்று, எல்லோரையுமே உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். அதில் என்ன பிரச்சினை? அதை யாராவது தடுப்பார்களா என்ன? (சிரிக்கிறார்). ஒன்று எல்லோருமே என்னுடையவர்கள் என்ற உச்சப் பேராசையில் இருங்கள், அல்லது, யாருமே என்னுடையவர்கள் அல்ல என்று விடுங்கள். ஆனால் “இதுதான் என்னுடையது, அது என்னுடையது அல்ல” என்றால் அது நிச்சயம் பிரச்சினைதான்.
Read more at : முற்பிறவி நினைவிற்கு வந்தால் என்னாகும்?
Read more at : முற்பிறவி நினைவிற்கு வந்தால் என்னாகும்?
No comments:
Post a Comment