மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம். சுப நிகழ்ச்சிகள் துவங்கும் போது பிள்ளையார் பிடிப்பதிலிருந்தே மஞ்சளின் உபயோகம் ஆரம்பித்து விடுகிறது. மஞ்சள் பயன்பாடு இவைகளுக்காக மட்டுமில்லை. மஞ்சள் நல்ல கிருமி நாசினி. அது இருக்கும் இடத்தில் பூச்சி பொட்டுகள் அவ்வளவு சீக்கிரம் அண்டாது.
அதனால் தான் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு வைக்கப்படும் அழைப்பிதழ்களின் ஓரங்களில் மஞ்சள் பூசப்படும். திருமண பத்திரிக்கைகள் சம்பிரதாயங்களுக்காக உள்ளது மட்டுமல்ல. அதில் மனிதனின் நிகழ்வுகளும் மறைந்து கிடக்கிறது. ஐம்பது வருடத்திற்கு முன்பு நடந்த திருமணத்தை அன்று அச்சடித்த அழைப்பிதழ்களை தொட்டு பார்த்தவுடனே நேராக அனுபவிப்பது போன்ற சுகம் கிடைக்கும்.
கறுப்பு இருட்டு அண்டிய இடங்கள் விரைவில் அழிந்து விடும். ஒரு அறையை வெகுநாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருந்தோமேயானால் அங்கே இருள் இருபத்தி நான்கு மணி நேரமும் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கும். சிறிது சிறிதாக சுவர்கள் ஈரமாகி கரையான்கள் அரித்து அறை யாருக்கும் பயன்படாதவாறு ஆகிவிடும்.
மரணம் என்பது மறக்கபட வேண்டிய நிகழ்வு. இறந்து போனவனையே நினைத்து கொண்டிருந்தால் வாழ்பவன் பிணமாகிவிடுவான். உயிர்கள் அணைத்து வாழ்விலும் சாவு என்பது தவிர்க்க முடியாதது என்றால் அதை எப்போதுமே நினைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் தான் மரணம் சம்மந்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் விரைவில் அழிந்து போகுமாறு உருவாக்குகிறோம். கருமாதி பத்திரிக்கையில் பூசப்படுகின்ற கறுப்பும் அந்த காகிதத்தை விரைவில் செல்லரிக்க வைத்துவிடும்.
No comments:
Post a Comment