Sunday, May 29, 2016

யார் அந்தணர்? (பிராமணர்)

யார் அந்தணர்? (பிராமணர்) படித்ததை பகிர்கிறேன்
****************************************************************************
தவறு இருந்தால் மன்னிக்கவும். சரியான விளக்கம் தெரிந்தால் சொல்லி கொடுக்கவும் தெரிந்துகொள்கிறேன்.
”அறம்புரி அருமறை நவின்ற நாவின்திறம்புரி கொள்கை அந்தணர்”-ஐங்குறுநூறு
மேற்காணும் பாடல் சங்க இலக்கியமான ஐங்குறுநூற்றில் இருந்து எடுக்கப்பட்டது. இப்பாடலின் பொருள்: “அறத்தைப் (தர்மத்தை) போற்றும் நான்மறை வேதங்களின்படி நடந்து பிறருக்கு நன்மைகள் செய்பவரே அந்தணர்.”
இதேபோல திருக்குறளிலும்,
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்”.
-திருக்குறள் 30
பொருள்: எல்லா உயிர்களையும் சமம் என்பதை உணர்ந்து எல்லாவுயிர்களிடமும் கலங்கமற்ற கருணையைக் காட்டும் தர்மநெறி உடையவரே அந்தணர் ஆவார்.
|| ஆறு தொழில்களை உடையவர் ||
****************************************************
”அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டு உளோர்”
–திருமந்திரம்
“அறுதொழிலோர்” –திருக்குறள் 560
அந்தணர்கள் அறுதொழிலோர் என்று அழைக்கப்படுகின்றனர். அந்தணர்களுக்கு ஆறு தொழில்கள் உள்ளன. அவை:
1) வேதங்களைக் கற்றல்,
2) வேதங்களை மற்றவர்களுக்குக் கற்று தருதல்,
3) முறையான வழிபாட்டில் ஈடுபடுதல்,
4) மற்றவர்களுக்கு முறையான வழிபாட்டு முறையைக் கற்றுத் தருதல்,
5) தர்மநெறியில் நடத்தல்,
6) மற்றவர்களுக்குத் தர்மநெறியைப் புகட்டுதல்.
|| அறவோரே அந்தணர் ||
**************************************
ஒரு பிராமணன் பிறப்பிக்கப்படுவதில்லை, அவன் பயில்விக்கப்படுகிறான். ஒரு மருத்துவ தந்தைக்குப் பிறந்தவன் மருத்துவனாகி விட இயலாது. அவனின் தந்தையிடம் இருந்து முறையான பயிற்சி பெற்றால் அவன் மருத்துவன் ஆகலாம். அதேபோல தான் அந்தணருக்குப் பிறந்தவன் பயிற்சியில்லாமல் அந்தணர் ஆகிவிட இயலாது. ஒரு பிராமணன் முறையான வழிகாட்டலினால் மட்டுமே உருவாக்கப்படுகின்றான். அப்படி உருவாகியவர்களே வால்மீகியும் வியாசரும். ஒருவன் முறையான ஒழுக்கங்களையும் நெறிகளையும் கடைப்பிடித்து சரியான ஆன்மிகப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டால் அவன் பிராமண நிலையை அடையலாம்.
ஒருவனின் செயல்களும் குணங்களும் தான் அவனின் தரத்தை பகுத்துக் காட்டுகின்றன. அதேபோல் பிராமண நிலையை அடைய கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கநெறிகளை பகவத் கீதை 18:42-இல் நாம் காணலாம். பெரும்பாலும் கோவிலில் பூஜை செய்யும் பூசாரி தான் பிராமணர் என்று நாம் கருதுகிறோம். ஆனால் அது உண்மையல்ல. பூசாரி (பூஜை செய்யும் ஆசாரியர்) என்பவர் கோவில்களில் தெய்வங்களுக்கு பூஜை மேற்கொள்ளும் ஒழுக்கநெறியுள்ள ஒருவர்.
ஆனால் பிராமணர் என்பது பரம்பொருளான இறைவனை உணர்ந்த ஒருவர். அவ்வாறு இறைவனை உணர்ந்த அரும்பெரும் ரிஷிகளே வேதங்களை நமக்கு அருளினர். அதேபோல எந்தவகையான மனிதராக இருந்தாலும் முறையான பயிற்சிகளை எடுத்துக் கொண்டால் அவரும் பிராமண நிலையை அடையலாம். பிராமண நிலை என்பது எல்லோரை விடவும் பெரிய பதவி என்று பொருள்படாது. உலக மக்களுக்கு நல்லறிவையும் நல்லொழுக்கத்தையும் புகட்ட தகுதியுடையவனாக்கும்.
|| ரிக்வேதம் ||
*******************
ரிக்வேதத்தின் புருஷ சூக்தம் அண்ட சராசரத்தின் இயல்பை நுணுக்கமான முறையில் ’உருவக அணி’யில் விவரிக்கின்றது. புருஷ சூக்தத்தில், “புருஷர்களின் வாயாக இருப்பது யார்?” என்று கேட்கப்படுகின்றது. புருஷர்கள் என்றால் மனிதர்கள் எனப் பொருள்படும். மனிதர்களின் வாயாக இருந்து அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் புகட்டுபவர்கள் அந்தணர்கள் என்று அடுத்த வரியில் சொல்லப்படுகின்றது.
வாய் என்பது அறிவைப் புகட்டும் கருவியாக சித்தரிக்கப்படுகின்றது. ஒரு மனித சமுதாயத்திற்கு நல்லறிவும் நல்லொழுக்கமும் இல்லாவிட்டால் அந்த சமுதாயத்தின் நிலை திசைமாறி போய்விடும். எனவே ஒவ்வொரு சமுதாயத்திலும் நல்லவறைப் புகட்டும் சான்றோர்கள் ஒரு கணிசமான எண்ணிக்கையில் இருக்கவேண்டும்.
|| உண்மையை அறிவோம் ||
*****************************************
சில பேருக்கு இதை அந்த இறைவனே வந்து சொன்னாலும் புரியாது. உலக மாயைகளில் ஒன்றான ’பிடிவாதத்தினால்’ உண்மைகளை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். ‘அசதோ மா சத் கமய’ எனும் மந்திரம் ‘உண்மையில்லாதவற்றிலிருந்து எம்மை நீக்கி உண்மையானவற்றிற்கு வழிகாட்டுவாயாக’ என்று இறைவனிடம் பிரார்த்தணை செய்துகொள்ளும் மந்திரமாகும். நம்முடைய பிறவியின் நோக்கமே எது உண்மையோ அதை அறிவதற்கு தான்.
பொய் கௌரவத்தினாலும் விடாபிடியான பிடிவாதத்தினாலும் உண்மையில்லாதவற்றை நம்பிக் கொண்டு நம்மை நாமே அறியாமை எனும் சிறையில் அடைத்து தண்டித்துக் கொள்ளக் கூடாது. உண்மை என்று அறிந்தவுடன் அதை ஏற்றுக் கொள்ள நிறைவான பக்குவத்தை நாம் கொண்டிருக்க வேண்டும். இறைவனின் அளவற்ற திருவருளைப் பெற நல்லொரு வழி இதுவே ஆகும்.

No comments:

Post a Comment