Friday, June 10, 2011

தத்த அனகலட்சுமி தேவி பூஜை

த்திரி, ப்ருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு முனிவர்களையும் சப்த ரிஷிகள் என்று இந்து மதம் போற்றி வழிபடுகிறது. இவர்கள் சப்தரிஷி மண்டலம் எனப்படும் நட்சத்திரக் கூட்டமாக விளங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். சப்த ரிஷிகளில் முதன்மையானவரான அத்திரி மாமுனிவரின் மனைவி அனசூயா தேவி ஆவார். கர்த்தம பிரஜாபதி- தேஹூதி தம்பதிக்குப் பிறந் தவர் அனசூயா தேவி. "மற்றவர்கள்மீது கொஞ்சமும் பொறாமை இல்லாதவள்' என்ற பொருள் தரும் அனசூயா என்ற பெயர் கொண்ட இந்த ரிஷிபத்தினி கற்பிற் சிறந்த பதிவிரதையாகப் போற்றி வணங்கப்படுகிறாள். ஸ்ரீ இராமபிரான் சீதாதேவியோடு வனவாசம் சென்றபோது அத்திரி- அனசூயா ஆசிரமத் திற்குச் சென்று இருவரையும் வணங்கினராம். மேலும் அனசூயா தேவி சீதாதேவிக்கு பெண்களின் பல்வேறு கடமைகளைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறியதாக இராமாயணம் குறிப்பிடுகிறது.

ஒருமுறை மும்மூர்த்திகளும் அனசூயா தேவியின் கற்பினைச் சோதிக்கும் பொருட்டு அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து அவளுக்கு மிகவும் கடினமான ஒரு சோதனையை ஏற்படுத்த, அனசூயா தன் கற்பின் வலிமையால் மூவரையும் சிறு குழந்தைகளாக மாற்றிவிட்டதாகவும், பின்னர் மும்மூர்த்திகளின் தேவியர்கள் வேண்டுகோளுக் கிணங்க அவள் அவர்களை மன்னித்ததாகவும் புராணங் கள் குறிப்பிடுகின்றன. அனசூயா தேவி அந்த தெய்வீகக் குழந்தைகளை ஒன்று சேர்த்து எடுக்கவே, மூன்று முகங்கள், ஆறு கரங்களோடு தத்தாத்ரேயர் அவதரித்தார். மும்மூர்த்திகளின் அம்சமாகத் திகழுகின்ற தத்தாத் ரேயரின் ஆறு கரங்களில் மும்மூர்த்திகளுக்குரிய ஆயுதங் களும், அவருக்கு அருகில் நான்கு வேதங்கள் நான்கு நாய்களாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளதை நாம் படங்களில் பார்க்க முடியும்.

தத்தாத்ரேயர் அனைத்தையும் துறந்த அவதூத சந்நியாசிகளின் தெய்வமாக வழிபடப் படுகிறார். மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர மாநிலங்களில் தத்தாத்ரேயர் வழிபாடு மிகப் பிரபலமானது. தத்தாத்ரேயருக்கென்று ஆலயங்களும், பிற ஆலயங்களில் தத்தாத் ரேயரின் சந்நிதிகளையும் காண முடியும். ஆந்திர மாநிலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட தத்தாத்ரேயர் ஆலயங்கள் உள்ளன. இவர் அனக தத்தர், அனகசுவாமி என்ற பெயர்களில், அனகா தேவி என்ற தேவியோடு காட்சியளிப்பதையும் காண முடியும். அனகா என்ற சொல் "பாவமற்ற' என்ற பொருளைத் தரும். அனகசுவாமியும் மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் அவரது தேவியான அனகாதேவியும் நம் பாவங் களை முழுதாகக் களையும் கண்கண்ட தெய்வங் களாகப் போற்றி வணங்கப்படுகின்றனர். இருவரும் இணைபிரியாத தம்பதிகள் ஆவர்.

இந்த அனகாதேவியைக் குறித்த அனகதத்தா விரதத்தினை அனுஷ்டிப்பதன் மூலம் தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும். ஆண்டில் ஒருமுறை மட்டும் இதைச் செய்யலாம். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமியின் தத்த பீடம் மிகப் பிரசித்தமானது. அவர் வெளிநாடுகள் உட்பட பல இடங்களில் தத்தாத்ரேயர் மற்றும் அனக தத்தர் ஆலயங்களை எழுப்பி தத்தாத்ரேயர் வழிபாட்டினைப் பிரபலப்படுத்தியுள்ளார். மேலும் அனகாதேவி விரதம், பூஜை முறைகளையும் அவர் எளிமைப்படுத்தியுள்ளார்.

அவரது அறிவுரைப்படி இந்தியாவில் மட்டு மின்றி வெளிநாடுகளிலும் இந்த அனகாதேவி விரதம் தம்பதியரால் அனுஷ்டிக்கப்படுகிறது. ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப ஸ்ரீ நரசிம்ம சரசுவதி, ஸ்ரீஅக்கலக்கோட்ட ஸ்ரீ சாமி சாம்ராட், ஷீரடி சாயிபாபா போன்ற மகான்கள் தத்தாத்ரேயரின் அம்சமாகக் கருதப்படுகின்றனர்.

அனகலட்சுமி என்ற லட்சுமி தேவியின் அம்சமாகவும்; சிவபெருமானின் அம்சமாக நெற்றியில் மூன்றாவது கண், ஜடை, ருத்திராட்சங்கள் அணிந் தும் அனகாதேவி காணப் படுகிறாள். இரு புறங் களிலும் சங்கு, சக்கரம் உள்ளன. மேலும் சிரசில் சந்திரன், கங்கையைச் சூடியுள்ளாள். வலக்கை அபயம் காட்ட, இடக்கரம் திரிசூலம் ஏந்தியுள் ளது. வலது கால் மடக்கி இடக்காலை தொங்க விட்டு ஆதிசேஷன்மீது அமர்ந்துள்ளாள். பூவின்மீது வைத்துள்ள அவளது இடது பாதத்தின்கீழ் சிறிய நந்தி விக்ரகம் காட்டப் பட்டுள்ளது. இந்த அனகாதேவி மகாலட்சுமி மற்றும் மும்மூர்த்திகளின் அம்சமாகவும் வழி படப்படுகிறாள். ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரத்தில் கீழ்க்கண்ட 32-ஆவது நாமம் ஸ்ரீ அனகா தேவியைக் குறிக்கிறது.

"அனுக்ரஹ ப்ரதாம் புத்திம், அனகாம் ஹரிவல்லபாம்,
அசோகாம் அம்ருதாம், தீப்தாம், லோகசோக விநாசினீம்.'

மேலும்,

""யோனி முத்ரா, த்ரிகண்டேசி
த்ரிகுணாம்பா, த்ரிகோணகா' அனகா,
அத்புதசாரித்ரா, வாஞ்சிதார்த்த ப்ரதாயினி'

என்ற 180-ஆவது லலிதா ஸஹஸ்ரநாம சுலோகத் திலும் ஸ்ரீ அனகாதேவியைப் பற்றிய குறிப்பு உள்ளது. 987-ஆவது நாமமான அனகா என்ற சொல்லுக்கு பாபம், துக்கம் யாதொன்றும் அணுகாதவள்' என்பதே பொருள்.

ஆந்திர மாநிலம் குண்டூரிலுள்ள தத்தநாத க்ஷேத்திரத்தில் கணபதி, ராஜராஜேஸ்வரி, தத்தாத்ரேயர், அனகாதேவி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. புனேயில் உள்ள தத்த மந்திருக்கு டக்டூ ஹல்வாயி தத்த மந்திர் என்ற பெயர் உண்டு. இந்த ஆலயம் நூறாண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. தத்தாத்ரேயரின் உபாசகரான இந்தூர் மாதவநாத் என்பவரின் ஆணைப்படி டக்டூ ஹல்வாயி லட்சுமிபாய் என்பவரால் இந்த ஆயலம் கட்டப்பட்டுள்ளது.

அனகாதேவியைக் குறித்த விரதம் தத்த அனகலட்சுமி விரதம் என்றும்; அனகாஷ்டமி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதைத் துவக்கி வைத்தவர் ஸ்ரீபாத வல்லப சுவாமிகள் ஆவார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை (கிருஷ்ண பட்ச) அஷ்டமி நாட்களில் இந்த விரதத்தை அனுஷ்டித்து ஸ்ரீ அனகா தேவி பூஜை செய்வது சிறப் பானது. அல்லது ஓராண்டில் மாக (மாசி) மாதம் தேய் பிறை அஷ்டமி நாளன்று செய்யலாம். தம்பதியராக இந்தப் பூஜை செய்வது சிறந்தது. இந்த பூஜையைச் செய்வதன் மூலம் மணப் பேறு, மகப்பேறு, செல்வம், குடும்ப அமைதி, மனநலம், உடல்நலம் கிட்டும் என்று கூறப்படுகிறது. விரத நாள் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.

இந்த விரத பூஜை செய்ய நான்கு கால்கள் கொண்ட ஒரு சிறிய பீடத்தின்மீது கிழக்கு நோக்கி பச்சரிசி நிரப்பப்பட்ட கலசம் வைத்து அலங்கரித்து, பூஜைக்குரிய பொருட்களை சேகரித்துக் கொண்டு பூஜையைத் துவக்க வேண்டும். கலசத்தின்மீது தரையில் சிறிது பச்சரிசி பரப்பி, விநாயகர், தத்தர், மகாலட்சுமி சிலைகள் அல்லது படங்களை வைத்து ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும். விநாயகர் பூஜை, கலச பூஜை, ஆவாஹனம் (ஸ்ரீ அனக லட்சுமி சகித ஸ்ரீ அனக தத்தாய நமஹ- ப்ரம்ம விஷ்ணு மஹேஸ்வர சும்பன் த்ரிகுணாத்மக நமோஸ்துதே), குங்கும அர்ச்சனை செய்து தத்தாத்ரேயர், அனகா தேவி கதையைப் படிக்க வேண்டும்.

தத்த அனகலட்சுமி தேவி பூஜை செய்ய இயலாதவர்கள் தேவியைக் குறித்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி மனதார வழிபடலாம்.

"காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ
மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ
கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி
அனகாதேவீ நமோஸ்துதே.'

No comments:

Post a Comment