ராதையின் பக்தியை எடுத்துரைக்கும் ஒரு இனிமையான சம்பவம் இது. ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணர் காய்ச்சலில் அவதியுற்றார். இதை கண்டு அனைவரும் கவலை அடைந்தனர். நந்தன் (கிருஷ்ணனின் வளர்ப்பு தந்தை) உடனே மருத்துவரை வரவழைத்தான். மருத்துவர் வந்து எவ்வளவோ முயற்சி செய்தும் கிருஷ்ணனின் உடம்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இதை கண்டு அனைவரும் வருத்தமடைந்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
இது சமயம், ஒரு முனிவர் அந்த வழியில் செல்லவே, நந்தன் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து கிருஷ்ணனின் உடல் நிலையைப்பற்றி கூறினார். நந்தன் கூறிய அனைத்தையும் கேட்ட முனிவர், சிறிது நேரம் தியானத்தில் இருந்துவிட்டு பின்பு கிருஷ்ணனின் உடம்பு குணமாகும் வழியை கூறினார். அதாவது, கிருஷ்ணன் தன் மேல் உண்மையான பக்தி கொண்ட ஒருவர் தனது கால்களைக் கழுவி, அந்தப் பாதத்தில் பட்ட நீரை பருகினால் மட்டுமே அவரது உடம்பு குணமாகுமென்றும் அவ்வாறு உண்மையான பக்தனல்லாதவரின் பாத நீரை பருகினால் அவரது உடம்பு மேலும் மோசமாகும் என்றும் கூறினார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். யாராவது தங்கள் பாதத் துளியில் பட்ட நீரை கிருஷ்ணன் அருந்த கொடுப்பார்களா?
சில பேர், தான் பாத நீரை கொடுத்தாலும் அவர்களது பக்தி உண்மையாக இல்லாத பட்சத்தில் கிருஷ்ணனின் உடம்பு மோசமாகும் என்று பயந்து மறுத்திவிட்டனர். மற்றும் சில பேர், தங்களது பாத நீரை கிருஷ்ணனுக்கு பருக கொடுப்பது பெரும் பாவத்தை சேர்க்குமென்று அஞ்சி மறுத்துவிட்டனர். இன்னும் சில பேர் இத்தகைய செயல் நந்தனுக்கு பிடிக்குமோ என்ற சந்தேகத்தில் மறுத்துவிட்டனர்.
இந்த செய்தி ராதைக்கு எட்டிய மறு கணமே ராதை தனது பாதத்தை கழுவிய நீருடன் வந்தாள். அவள் எந்த ஒரு பின்விளைவையும் பற்றி யோசிக்கவில்லை. எந்த ஒரு பாவத்தை பற்றியும் நினைக்கவில்லை. அவளுடைய கவலையெல்லாம் கிருஷ்ணனின் உடம்பு குணமாக வேண்டுமென்பதே. அதனால் அவள் கொண்டு வந்த பாத நீரை அன்புடன் கிருஷ்ணனுக்கு கொடுத்தாள். கிருஷ்ணன் அதை பருகிய உடன் பூரண குணமடைந்தார். ராதை கிருஷ்ணன் மீது வைத்திருந்த அன்பானது தூய மற்றும் புனிதமானதாகும். அதில் எள்ளளவும் சுயநலமில்லை. அவளுக்கு வேண்டுவதெல்லாம் அவள் காதல் கொண்ட கிருஷ்ணனின் மகிழ்ச்சியே. வினோத் அகர்வால், 'நாம் கடவுள் மீது இத்தகைய சுயநலமற்ற அன்பை வைத்தோமானால் வாழ்வில் நாம் அடையக்கூடிய எல்லா பேற்றையும் பெறலாம்' என்று கூறுகிறார்.
No comments:
Post a Comment