Wednesday, October 3, 2012
விளையாட்டாக கோயிலுக்குப் போனால் கூட அவர்களுக்கு கடவுள் கருணை காட்டுகிறார்.
ஒரு கிராமத்தில் முருகையா, தண்டபாணி என்ற நண்பர்கள் வசித்தனர். அவர்கள் அங்குள்ள முருகன் கோயில் முன்பு மாடு மேய்ப்பது வழக்கம். தண்டபாணி மட்டும் கோயிலுக்கு பிரசாதம் வாங்குவதற்காகப் போவான். முருகையாவோ அதைக் கூட செய்வதில்லை.
ஒரு புதன்கிழமை. கோயிலில் கூட்டமில்லை. முருகையா மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பசுக்கன்று திடீரென ஓடி விளையாட ஆரம்பித்தது. சாலையில் போகிற வண்டிகளில் போய் விழுந்து விட்டால், ஆபத்தாகி விடுமே என பயந்த முருகையா, அதைப் பிடித்துக் கட்ட எழுந்தான்.
அவனது நோக்கத்தைப் புரிந்து கொண்ட கன்று ஓட ஆரம்பித்தது. நேராக கோயிலுக்குள் போய் விட்டது. பிரசாதத்துக்காக கூட கோயிலுக்கு போகாத முருகையா, அன்று தான் முதன் முதலாக நுழைந்தான். கன்றைப் பிடிக்கப் பாய்ந்தான். அது பிரகாரத்தைச் சுற்றி நாலுகால் பாய்ச்சலில் ஓடியது. முருகையாவும் தன் பலத்தையெல்லாம் திரட்டிப் பாய்ந்தான்.
ஆனால், அது சிக்க வேண்டுமே! உஹும்...11 தடவை பிரகாரத்தைச் சுற்றி முடித்த கன்றைப் பிடிக்க முருகையா அருகில் நெருங்கவும், அது பாய்ந்தோடி கருவறைக்குள் ஓடி முருகனின் பின்னால் நின்று கொண்டது.
முருகையா முருகன் முன்னால் நின்றான். உள்ளே போக அவனால் முடியாதே! ஒரு வழியாக ஒளிந்து நின்று, கன்று வெளியே வரவும் அதைப் பிடித்து, நான்கு போடு போட்டு, மந்தைவெளிக்கு வந்து கட்டிப்போட்டான்.
இதற்குள் சர்க்கரைப் பொங்கலை ஒரு பிடி பிடித்த தண்டபாணி, கோயில் எதிரே உள்ள தீர்த்தக்குளத்தில் கையைக் கழுவினான். கையை உதறிய போது, அதிலுள்ள தீர்த்தம் அவன் தலையில் சிறிதளவு பட்டது.
இப்படியே காலமும் போய்விட்டது.
அவர்கள் மரணமடைந்தனர். தூதர்கள் எமன் முன்னால் அவர்களை நிறுத்தினர்.
சித்ரகுப்தன் அவர்களின் பாவ புண்ணியக்கணக்கைப் படித்தான்.
""தர்மராஜா! இந்த தண்டபாணி பிரசாதத்துக்காக மட்டுமே முருகன் கோயிலுக்குப் போனவன். அதோ, அந்த தடியன் முருகையா இருக்கிறானே! அவன் அதற்காகக் கூட அந்தப் பக்கம் போனதில்லை. இவர்கள் இருவரையும் நரகத்திற்கு அனுப்பி விடட்டுமா!'' என்றான்.
தர்மராஜா சிரித்தார்.
""சித்ரகுப்தா அவசரப்படாதே! இவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பும்படி முருகப்பெருமான் எனக்கு உத்தரவிட்டுள்ளார்''.
""ஆச்சரியமாக இருக்கிறதே! இவர்களுக்கா சொர்க்கம்!''
""ஆம் சித்ரகுப்தனே! இந்த முருகையா கோயிலுக்கு வழிபாட்டுக்கென வராவிட்டாலும், கன்றுக்குட்டியைப் பிடிக்கிற சாக்கில், 11 தடவை கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தான். கருவறை முன்னாலும் நின்று முருகனையே பார்த்துக் கொண்டிருந்தான். அதோ! அந்த தண்டபாணி இருக்கிறானே! அவன் தினமும் கோயில் குளத்தில் கைகழுவி விட்டு, கையை உதறும்போது தீர்த்தம் தலையில் பட்டதே! அறியாமல் செய்தாலும், அதுவும் புண்ணியச் செயல்களே! அதற்காக கருணாமூர்த்தியான கந்தன், அவர்களை சொர்க்கம் அனுப்பச் சொல்லியுள்ளார்,'' என்றார்.
பார்த்தீர்களா! விளையாட்டாக கோயிலுக்குப் போனால் கூட அவர்களுக்கு கடவுள் கருணை காட்டுகிறார். கிராமத்து கோயில்கள் நலிந்து விடக்கூடாது. கிராமமக்கள் தங்கள் ஊர் கோயிலுக்கு அடிக்கடி சென்று இரண்டு கால பூஜையாவது நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யுங்கள்.
No comments:
Post a Comment