Saturday, December 1, 2012

கோபம் பிறரையும் அழித்து, தன்னையும் அழிக்கும்

மகாவீரரின் சீடனான கோசாலன் வாய்துடுக்கானவன். அவன், வேசாயனர் என்ற ரிஷியின் வற்றிய உடம்பைக் கண்டு கேலி செய்தான். கோபத்தில் வெகுண்டெழுந்தார் ரிஷி. அவரை சாந்தப்படுத்திய மகாவீரர், தவவாழ்வுக்கு கோபம் கூடாது என உணர்த்தும் கதையைச் சொன்னார்.
""குணால தேசத்து ரிஷிகள் இருவர் காட்டுப்பகுதியில் தவத்தில் ஆழ்ந்திருந்தனர். மழை பெய்யாமல் அப்பகுதியில் பெரும் பஞ்சம் உண்டானது. மரம்,செடி, கொடிகள் வாடின. ஆடுமாடுகள் குடிப்பதற்கு நீர் கூட கிடைக்கவில்லை. ஆடுமேய்க்கும் சிறுவர்கள், ரிஷிகள் இருவர் காட்டில் தவம் செய்வதைக் கண்டனர். சரீரம் மெலிந்து வற்றிய வயிறோடு இருந்த இருவரையும் பார்த்ததும் சிரித்து விட்டனர். அவர்களில் ஒரு சிறுவன், ""ஏன் இவர்கள் இருவரும் இங்கு கடுந்தவம் செய்கிறார்கள்? இவர்கள் நினைத்தால் என்ன மழையா கொட்டப் போகுது?,'' என்று காதில் விழும்படி கேலி பேசினான்.
கிண்டல் மொழிகளைக் கேட்டதும் ரிஷிகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கண்விழித்த இருவரும் ஆத்திரத்துடன், ""விடாது இங்கே அடைமழை பெய்யட்டும்,'' என்று கத்தினார்கள். அவர்களின் தவசக்தியால் பதினைந்து நாட்கள் தொடர்ந்து இரவும்பகலும் அடைமழை கொட்டித் தீர்த்தது. எங்கும் தண்ணீர் சூழ்ந்து காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடியது. துரும்பு கூட மிஞ்சாமல் எல்லாம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தவத்தில் இருந்த இரண்டு ரிஷிகளையும் சேர்த்துத் தான்,'' என்று கதையை முடித்தார் மகாவீரர்.
கோபம் பிறரையும் அழித்து, தன்னையும் அழிக்கும் என்பது இக்கதையின் தத்துவம்.

No comments:

Post a Comment