Saturday, December 1, 2012

எல்லாம் விதிப்படி நடக்கும் என்று முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது

சித்திலபுத்திரன் என்ற குயவன், ""வாழ்வில் மனிதன் முயற்சி செய்யத் தேவையில்லை. எல்லாம் விதிப்படி நடக்கும்'' என்று நம்பிக் கொண்டிருந்தான். அவனைத் திருத்தும் எண்ணம் கொண்டார் மகாவீரர்.
ஒருநாள் சித்திலபுத்திரன் மண்பானைகளைச் செய்து வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தான். அவனிடம் மகாவீரர்,""சித்திலபுத்திரா! எப்படியப்பா! இந்த பானைகளைச் செய்கிறாய்?,'' என்றார்.
""சுவாமி! என்ன இப்படி கேட்கிறீர்கள். களிமண்ணில் தண்ணீரைப் பிசைந்து தண்டச்சக்கரத்தில் சுற்றிய படி கையால் ஜாடி, பானை, குவளை என்று பாண்டங்களை வனைகிறேன். நீங்கள் அறியாததா?,'' என்றான் இயல்பாக.
""இதெல்லாம் சொந்த முயற்சி தானே! விதிப்படியா நடக்கிறது,'' என்றார் மகாவீரர்.
""எல்லாம் விதி வகுத்தபடி நடக்கும் என்றால் மண் தானாகவே பானையாக மாறிவிடுமே. முயற்சியே தேவையில்லை அல்லவா?'' என்றார்.
சற்று யோசித்த அவனிடம், ""சிரமப்பட்டு நீ செய்த பானையை ஒருவன் உடைத்து விட்டுச் சென்றால் எல்லாம் விதிப்படி நடக்கிறது என்று உன்னால் சும்மா இருக்க முடியுமா?'' என்றார் மகாவீரர்.""அதெப்படி சுவாமி முடியும்? கஷ்டப்பட்டு செய்ததை உடைக்க வந்தால் கோபம் வராதா?'' என்றான் வேகமாக.
மகாவீரர்,""சித்திலபுத்திரா! முயற்சி இல்லாமல் உலகில் ஒன்றை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. எல்லாம் விதிப்படி நடக்கும் என்று முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது. நல்லவழியில் ஆக்கபூர்வமாக மனித முயற்சி இருப்பது அவசியம்,'' என்றார்.

No comments:

Post a Comment